Advertisement

நிலவு – 25
                 விபீஷ் சிரமத்துடன் கண் விழித்து பார்க்க ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.  விழித்ததுமே வெண்மதியை தேட அவனருகே அமர்ந்திருந்த சீமா,
“என்னங்க…” என அருகே வரவும் அவளின் கையை பிடித்தவன்,
“வெண்மதி, வெண்மதி எங்க? எப்படி இருக்கா? வெண்மதிக்கு ஒண்ணுமில்லையே? அவ குழந்தை, குழந்தைக்கு…” என்று இவன் பதற பதற சீமாவின் மனது விண்டுபோனது.
“இப்பொழுது கூட வெண்மதி? அப்போ நான்?” என்னும் வேதனை சுரக்க அவனை பார்த்தவள்,
“வெண்மதி வேற வார்ட்ல இருக்காங்க. நீங்க ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க…” என,
“நோ, இப்பவே நான் பார்க்கனும்…” என்றவன் எழுந்துகொள்ள அவனுடன் வந்தவள் வெண்மதி இருக்கும் அறையை காட்ட வேகமாய் உள்ளே நுழைந்தவன்,
“வெண்மதி, ஆர் யூ ஆல்ரைட்…” என்றபடி அவளை நெருங்க அப்பொழுது தான் வெண்மதியுமே மயக்கம் தெளிந்தாள். அவளுக்கும் நெற்றியில் காயம் தான். 
இவனின் வருகையை கண்ட முரளி கோபமாய் அவனருகே சென்று விபீஷின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தவன் அவனின் சட்டையை பற்றி,
“மனுஷனாடா நீ? உன்னை போய் நான் விட்டு வச்சென் பாரு. என்னைக்கு என் முன்னாடியே நீ வெண்மதியை பேசினியோ அப்பவே உன்னை நான் கவனிச்சிருக்கனும். அப்படி என்னடா நான் பண்ணேன்?…” என்று மீண்டும் அடிக்க,
“முரளி அண்ணா ப்ளீஸ். அவரும் உயிர் பிழைச்சு தான் வந்திருக்கார்…” என சீமா கை கூப்பி கேட்க கொஞ்சம் கோபம் தளர்ந்தவன்,
“சொல்லுங்க சீமா, நான் எந்த தப்பும் பண்ணலைங்க. எல்லாம் இவர் தங்கச்சியால. அதுக்கு நான், வெண்மதி…” என்று பேசியவன் மீண்டும் மனைவியின் அருகே சென்று நிற்க அவளோ அவனை முறைத்தாள்.
“என்ன வெண்ணிலா?…” என்றான் அருகே குனிந்து.
“ஆனாலும் உங்க நன்றி இருக்கே. என்னை கடத்திட்டு போய் உங்களை மிரட்டிருக்கான். இவ்வளோ தானா உங்க ரியாக்ஷன்?…” என கோபம் போல கேட்க விபீஷும் சீமாவும் திகைத்தனர்.
“இவள் என்ன இன்னும் அடிக்க சொல்கிறாளா?” என்று பார்த்து நிற்க,
“சாரி முரளி தப்பு என் பேர்ல தான். அதுவும் வெண்மதி இப்படி இருக்கும் நேரத்துல அவ…” என்றதும் முரளி பார்த்த பார்வையில் உடனே, 
“ஸாரி, அவங்க அம்மாவாகப்போற இந்த சூழ்நிலையில் நான் அப்படி பண்ணியிருக்க கூடாது. தப்புதான்…” என மன்னிப்பை வேண்ட முரளி ஸ்தம்பித்து போனான். 
அடிபட்டதில் விபீஷிற்கு எதுவுமாகிவிட்டதோ என பார்க்க வெண்மதிக்கு சிரிப்பு பீறிட்டது முரளியின் முகபாவனையில். விபீஷோ விடாது,
“வெண்மதி உங்களுக்கு ஸ்கேன் பண்ணி பார்த்தாங்களா? குழந்தைக்கு எதுவும் பிரச்சனை இல்லை தானே?  எனக்கு ரொம்ப கில்டியா இருந்தது. நான் தப்பு பண்ணிட்டேன்…” என புலம்ப,
“கண்டிப்பா தப்பு தான். கொறைச்சு சாப்டுங்க. என்னால உங்களை கார்ல இருந்து இறக்கவே முடியலை. எனக்கு அடிபட்டு மயக்கம் வர மாதிரி ஆகிடுச்சு. அதோட உங்களை கீழே இறக்கி வழில வந்து இன்னொரு வண்டில ஹெல்ப் கேட்டு. அப்பப்பா…” என்று அலுப்பாய் சொல்ல சீமாவின் முகத்தில் புன்னகை.
“கொஞ்சம் கொலஸ்ட்ரால் குறைவா பத்திய சாப்பாடா போடுங்க சிஸ்டர். அப்போ தான் புத்தி வளரும். உடம்பு குறையும்…” என்று வேறு கிண்டல் பேச,
“இனிமே பண்ணிடலாம். இங்க தான் வெண்மதி பேச்சுக்கு மறு பேச்சு இல்லையே…” என்றாள் சீமா.
விபீஷின் தவிப்பு எதனால் என்று தெரிந்துகொண்டவளுக்கு அது சற்று ஆறுதலை தர வெண்மதியிடம் இயல்பாய் பேச விபீஷ் தான் கூனி குறுகி நின்றான்.
முரளிக்கு தான் ஒன்றும் புரியவில்லை. அதிலும் வெண்மதி தாயாக போகிறாளா? எப்படி? என்று அவளை பார்க்க அவளோ கண்ணடித்தாள்.
“இனியாவது தேவையில்லாத கோபத்தை வளர்த்துக்காம உங்க வாழ்க்கையை நீங்க பாருங்க. போய் புள்ளைகுட்டியை படிக்க வைக்க பாருங்க…” என விபீஷை பார்த்து சொல்லி சீமாவிடம் கண்சிமிட்ட புரிந்தது என்பதை போல அவளும் புன்னகைத்தாள்.
“புள்ளைகுட்டியா?…” என அவனும் கேட்க,
“உங்கட்ட போய் சொன்னேன் பாருங்க. சீமாவுக்கு புரிஞ்சிருக்கும். போங்க முதல்ல…” என சொல்ல ஏனோ இன்னும் முரளியை பார்த்து இலகுவாய் பேச அவனுக்கு வரவில்லை. அவனின் சங்கடம் உணர்ந்தவன் போல,
“நடந்ததை மறந்துடுங்க விபீஷ். இப்பவும் சொல்றேன் உங்களுக்கு புரியலைன்னு தான் எனக்கு வருத்தமே…” என அவனிடம் சொல்ல,
“நல்லது செய்யறது தப்பில்லை முரளிண்ணா, அதை சந்தர்ப்பவாதிங்களுக்கு செய்ய கூடாது. வினிக்கு நீங்க செஞ்ச நல்லதை அவ நன்மைக்கு பயன்படுத்திக்கலை. அவளுக்கு உதவறேன்னு பெரிய எதிரியை நீங்களே உருவாக்கி விட்டுட்டீங்க. அதுதான் நீங்க செஞ்ச ஒரே தப்பு. அதை புரிஞ்சுக்கற அளவுக்கு இந்த குடும்பத்துல யாருக்கும் அறிவு இல்லை.பொறுமையும் இல்லை. இப்ப தகுதியும் இல்லை….”
சீமா தன் மனதில் உறுத்திக்கொண்டிருந்ததை அன்று போட்டு உடைக்க விபீஷின் மனது தான் நொறுங்கி போனது. 
“இனி இவளின் நேசத்தை நான் எவ்வாறு மீட்டெடுப்பேன்?” என தொய்ந்து நின்றான்.
“விடுங்கம்மா, பேசி பேசி நம்ம மனசை நாமலே கஷ்டப்படுத்திக்க வேண்டாம்…” என்றதும் இருவரிடமும் விடைபெற்று விபீஷ் சீமா கிளம்பினார்கள். 
விபீஷின் மனதில் ஆயிரம் வருத்தங்களும் குற்றவுணர்வும் இருந்தாலும் இன்னும் மனம் விட்டு மன்னிப்பை கூட யாசிக்க முடியாதளவிற்கு உடைந்துபோய் இருந்தான்.
அவனின் மனதை உணர்ந்தவள் போல சீமா அவனின் கையை ஆறுதலாய் பற்றிகொண்டாள். உடனடியாக இல்லை என்றாலும் மனக்காயங்கள் ஆறும் சமயம் என்றேனும் இருவரும் ஒருவராய் வாழ ஆரம்பிப்பார்கள்.
“விபீஷ் புள்ளைகுட்டிய படிக்கவைக்க கிளம்பியாச்சு போல?…” என குறும்புடன் வெண்மதி சொல்ல,
“என்னங்க சொல்லி வச்சீங்க நீங்க? விபீஷ் ரொம்ப பதறிட்டார்…” என சொல்லும் பொழுதே வெண்மதி மீண்டும் மயக்கமாக,
“வெண்ணிலா, வெண்ணிலா…” என்ற அலறலுடன் அவளின் கன்னத்தை தட்டியவன்,
“டாக்டர்…” என்று இரைந்துவிட்டு,
“வெண்ணிலா இங்க பாரு. வெண்ணிலா, என்னாச்சு உனக்கு? வெண்ணிலா பாருன்றேன்ல. வெண்ணிலா. கண்ணை திற…” என அவளை உலுக்க அதற்குள் நர்ஸ் வேறு வந்து என்னவென பார்க்க மெதுவாய் கண் திறந்தாள்.
“ஒண்ணுமில்லை சிஸ்டர், நீங்க போங்க…” என்றவள் மெதுவாய் எழுந்தமர்ந்து முரளியை முறைக்க,
“ரொம்ப பயந்துட்டேங்க…” என்றதும் அவனை இழுத்துவைத்து வெண்மதி மொத்த,
“என்னங்க என்னனு சொல்லுங்க…” என்றான் அடியை வாங்கிக்கொண்டே,
“அதான் வா போன்னு சொல்ல வருதுல. இன்னும் என்னவாம்? அப்ப நான்  மூச்சு பேச்சு இல்லாம கிடந்தா தான் சொல்லுவ நீ? அப்படித்தானே?…” என இன்னுமின்னும் சாத்த,
“சொல்லலை சொல்லலை நான் இனிமே சொல்லலை. விடும்மா…” என்ற அவனின் கெஞ்சலுக்கு பின்னே தான் அடிப்பதை நிறுத்தினாள்.
“அததுக்கு சரியான ட்ரீட்மென்ட் இருந்தா தான் சொன்ன பேச்சை கேட்கறது…” என்றவள் அவனை அப்படியே திருப்பி தன் மடியில் சாய்த்துக்கொள்ள முரளியோ எழுந்துகொள்ள பார்க்க,
“மரியாதையா அப்படியே இருக்கனும்…” அப்பட்டமான மிரட்டல் குரல் அவளது.
“யாராச்சும் வந்திருவாங்க வெண்ணிலா…” 
“அப்ப போய் டோர் லாக் பண்ணிட்டு வாங்க…” என்று கண்ணடிக்க அதை கண்டு வாய் பிளந்தவன்,
“அது இன்னும் தப்பு…” என்றான்.
“ப்ச், சொல்றதை செய்ய முடியுமா இல்லையா?…” என்றவளின் விழிகள் மின்ன அவளின் தலையோடு முட்டியவன்,
“இப்போ தான் நான் பர்ஸ்ட் டைம் மீட் பண்ணின வெண்ணிலாவை பார்க்கறேன்…”
“அப்ப இத்தனை நாளா பார்த்தது?…” என கேட்டு கொக்கிபோட,
“தெரியாம சொல்லிட்டேன் விடேன்…”
“விட்டா எப்படி புள்ளைகுட்டியை படிக்க வைக்கிறதாம்?…” என்று கண்சிமிட்டி சிரிக்க,
“இன்னைக்கு நீ சரியில்லை….” என்றான்.
“என்ன பண்ண? வாய்ச்சது சரியான மங்குனி அமைச்சர். வேற வழி? ஒரு உடன்படிக்கைக்கும் ஆகறதில்லை….” 
“ஆமாம் நீ அமெரிக்கா, நான் ஆப்ரிக்கா உடன்படிக்கை ஆகாம போச்சு…” முரளி அவளின் காதை திருக்க,
“சம் ஹேக்கர்ஸ் மட்டும் மூக்கை நுழைக்காம இருந்திருந்தா உடன்படிக்கை செவ்வனே தினப்படிக்கையா மாறியிருக்கும்…” என அவனை இன்னுமே அதிரவைத்தாள் வெண்மதி.
“ஐயோ போதும் ஏன் இப்படி?…” என்றவன் வெட்கப்பட அதை பார்த்து சிரித்தவள் வாய் திறக்க போக நடேசனும், கலைவாணியும் வந்துவிட்டனர். கலைவாணி ஒரு மூச்சு அழுது தீர்க்க நடேசன் நடந்ததை விசாரித்துக்கொண்டிருந்தார்.
அதன் பின்னர் உடல்நிலை சரியாகும் வரை தங்களுடன் வந்து இருக்குமாறு சொல்ல அவர்கள் பேச்சை தட்டாமல் செய்தனர் சுகன்யா ஆனந்தனிடம் சொல்லிவிட்டுதான் அவர்களின் சம்மதத்துடன் தான் சென்றனர்.
ஆனந்தனுக்கு உடல்நல குறைவென்பதால் அவரை விட்டுவிட்டு சுகன்யாவால் வரமுடியவில்லை. அதனால கலைவாணி இருப்பதல கொஞ்சம் மனதை தேற்றிகொண்டார் சுகன்யா. ஆனந்தனுமே முன்பிற்கு இப்பொழுது பரவாயில்லை. பேசினார் நடேசனிடம்.
பிறந்தவீட்டுக்கு வந்ததில் பெற்றோர்கள் அவளை சீராட்ட பழைய கசடுகள் அனைத்தையும் மறந்து வெண்மதி அவர்களின் அன்பில் திளைத்துக்கொண்டிருந்தாள்.
அங்கே வெண்மதியை பார்க்கவென மங்களம் வர அவரை பார்த்ததுமே முரளியின் முகம் மாறிவிட்டது. அவரை வாங்க என்று கூட அழைக்காமல் வெளியேறிவிட்டான்.
“ம்க்கும், பார்த்தியா கலை உன் மருமவன? மரியாதை கூட தெரியலை…” என்று வந்ததும் பேச,
“அக்கா சும்மா இருக்கமாட்டியா நீ?…” என கலைவாணி சத்தமிட நடேசனுக்கு கோபம் தான். ஆனால் பேசினால் இன்னும் பேசுவாரே என்று தான் பொறுமையாக இருந்தார்.
“என்னம்மா புதுபொண்ணு. என்னவோ கல்யாணமே வேண்டாம்னு இருந்த. இப்ப என்னன்னா கட்டிக்கிட்டு போனதோட உன்ன வளர்த்தவங்களை கை கழுவிட்ட. இதுக்குத்தான்…” என்றவரை இடைமறித்தவள்,
“இப்ப என்ன சொல்ல வரீங்க?…” என்றாள் மிதப்பா.
“கலை இங்க பாரேன் இவ பார்வையை…” என தங்கையை உடன் அழைத்தவர்,
“என்ன சொல்லனுமா? கட்டிக்கிட்டு போனா பெத்தவங்க வீட்ல என்ன பன்றாங்க, எது பன்றாங்கன்னு விசாரிக்க மாட்டியா? வந்து வீட்ல என்ன இருக்கு எது இருக்குன்னு பாக்க மாட்டியா?…”
“அதுக்கென்ன அவசியம்? அதுதான் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தேவையானதை அவங்க வாங்கிக்கறாங்களே? போதாதா?…” 
“என்னத்தை வாங்கறா உன்ன வளத்தவ? ரெண்டு பேருக்குன்னு சுருக்க வாங்கிவச்சுக்கறா. நீ இருக்கறப்ப உனக்குன்னு எத்தனை வாங்கிபோட்டிருந்தா? அதுமாதிரி நீ பாத்துக்க வேண்டாமா? என்னானாலும் உன்னை வளர்த்தவங்கள?…” என்றவர் வார்த்தைக்கு வார்த்தை வெண்மதியை குத்திக்காட்டிவிட்டு,
“இவ பாக்க மாட்டா கலை. இவ உன்னை கை கழுவிட்டா. இப்ப ஏதோ முடியலைன்னு தான் வந்து இருக்கா. இவ எங்க பார்த்துக்க போறா? கவனிக்க போறா? உன்னை நினைச்சா மனசு ஆறவே இல்லை…” என்று வராத கண்ணீரை துடைத்துக்கொள்ள அவரை தீர்க்கமாய் பார்த்தவள்,
“இவ்வளோ கஷ்டப்பட்டு உங்க தங்கச்சியையும் தங்கச்சி புருஷனையும் வாழவைக்க நினைக்கறவங்க எதுக்கு என்னை எதிர்பார்க்கறீங்க? உங்களுக்கு பென்ஷன் வருது, அப்பார்மென்ட்ல இருந்து வாடகை பணம் வருது. பேசாம இவங்களை கூட்டிட்டு போய் நீங்களே பார்த்துக்கோங்க….” என போட்டுத்தாக்க,
“என்ன? என்ன சொல்ற? என்னை பார்த்துக்க சொல்றியா?…” என அதிர,
“அதான் நான் பார்த்துக்க மாட்டேன்னு நீங்களே வாய்க்கு வாய் சொல்லிட்டே இருக்கீங்க. நான் எதுக்கு பார்த்துக்கனும்? உங்களுக்கு தான் இவங்க மேல ரொம்ப அக்கறை, பாசம் இருக்கே. நீங்களும் வசதியா தான இருக்கீங்க….” என சொல்ல மங்களத்தால் வாயை திறக்கமுடியவில்லை.
“தேவையா உனக்கு” என்பதை போல கலைவாணியும் நடேசனும் மங்களத்தை பார்த்தனர்.
“நானே முடியாம இருக்கேன். நான் எப்படி இவங்களை பார்த்துக்க முடியும்? இங்கைக்கும் அங்கைக்கும் அலைய முடியுமா இவங்களால? என்ன பேச்சு பேசற நீ?…” என்று படபடக்க,
“எதுக்கு அலையனும்? வர வாடகைல கொஞ்சமும், பென்ஷன்ல கொஞ்சமும் கொடுத்துட்டு பேசாம இங்கயே இருந்துடுங்க நீங்க. அம்மா உங்களை பார்த்துப்பாங்க…” என இன்னமும் அவரின் வயிற்றில் புளியை கரைத்தாள்.
விட்டால் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு அங்கேயே இருக்க வைத்துவிடுவாளோ என்று பயந்த மங்களம்,
“இதெல்லாம் சரிப்பட்டு வராது. எனக்கு அங்கயே பழகிபோய்டுச்சு. நீ சும்மா அளக்காத…” என்றவர்,
“கலை இந்த மாசம் மசால் சரக்கு அரைச்சிருப்பேல. அதுல மூணு டப்பால போட்டு எடுத்து குடு. அப்படியே கொஞ்சம் சர்க்கரையும் வேணும்…” என்று தங்கையிடம் ஏவியவர்,
“எனக்கு ஒரு கார் புக் பண்ணுங்க தம்பி, இதை எல்லாம் தூக்கிட்டு போக வசதியா இருக்கும். உங்களுக்கே தெரியும் எனக்கு ஆட்டோனா குலுங்கும்…” என்று வேறு சொல்ல வெண்மதி கலைவாணியை முறைத்த முறைப்பில் அவர் மௌனமாய் நிற்க,
“சின்னவெங்காயம் அங்க கொள்ளை விலை சொல்றான். நீ தான் இங்க வழக்கமா வாங்கறவன்ட்ட நல்லதா வாங்கி வச்சிருப்பியே. அதையும் ஒரு பைல எடுத்து போடு. அடுத்த மாசம் சாமான் அரைக்கும் போது கரம்மசாலா கூட ரெண்டு டப்பா சேர்த்து அரைச்சு வை. என் பொண்ணு கேட்டா. அவளுக்கு தீர்ந்துடுச்சுன்னு…”
வரிசையாக லிஸ்ட் போட்டுக்கொண்டே செல்ல வெண்மதியின் கோபம் கரையுடைக்க பார்த்தது.
மங்களம் எச்சில் கையால் காக்கை விரட்டமாட்டார். அதிலும் அவரின் சம்பாத்தியத்தில் யாருக்கும் ஒரு பைசா தரமாட்டார். அவரின் பிள்ளைகள் பேரன்கள் வந்தாலும் அதற்கும் சேர்த்து கலைவாணி தான் படியளக்க வேண்டும். அத்தனை நாள் அதனை பாசமென்றே நினைத்திருந்தாள் வெண்மதி.
முதலில் எல்லாம் வெண்மதிக்கு புரியவே இல்லை. ஏன் மங்களம் இங்கே வந்து ஒவ்வொரு மாதமும் தன் வீட்டிற்கு தேவையான பொருட்களை எல்லாம் இங்கிருந்து வாங்கி செல்கிறார் என்று. 

Advertisement