Advertisement

“வெண்மதி போதும். என்ன தெரியும் என் தங்கச்சி பத்தி?…” 
“உங்களை விட உண்மை என்னன்னு எனக்கு தெரியும். எதையும் கண்ணை மூடிட்டு நம்பிட்டு போற முட்டாள் அதாவது உங்களை மாதிரி அடிமுட்டாள் நான் இல்லை. எமோஷன்ஸ் இருக்க வேண்டியது தான். உங்களோட இந்த பாசத்துக்கு உங்க தங்கச்சி தகுதி கிடையாதுன்றது தான் உண்மை. முரளியை குறை சொல்ற தகுதி உங்களுக்கும் கிடையாதுன்றது தான் நூத்துக்கு நூறு உண்மை…”
“தப்பா பேசாத வெண்மதி…”
“பேசுவேன். இப்பவும் நான் பேசலைன்னா உங்களுக்கு புத்தின்னு ஒன்னு தெளியவே தெளியாது. நான் பேசாம வேற யாரும் பேச போறதில்லை…”
“இதுல இருந்தே உனக்கு புரியலையா யாரும் பேச முடியாதுன்னு. அவங்களுக்கே தெரியும் தப்பு அவங்க மேலன்னு…” விபீஷ் இளக்காரமாய் பேச,
“தப்பா? அப்படின்னு நீ நினைக்க வேண்டியது தான் மேன். அதுக்கு பேரு நன்றி உணர்வு. அதுவும், உங்கம்மாவோட வேண்டுகோளும் மட்டுமே உன்னை இப்படி விட்டு வச்சிருக்கு. அதுமட்டுமில்லை உன்னை போனா போகுதுன்னு முரளி விட்டுவச்சிருக்காங்க. உன்னை மாதிரி சில்லியான ரீசனுக்கெல்லாம் பெருசா ரியாக்ட் பன்ற கேரெக்டர் கிடையாது முரளி…”
“இது உனக்கு சில்லியா? என் தங்கச்சியை கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொல்லி எங்களை நம்பவச்சு கல்யாணத்தன்னைக்கு என் தங்கச்சி யாரோ சொன்னதை நம்பி கல்யாணம் வேண்டாம்னு சொன்னதும் அதை மறுக்காம நிறுத்திட்டான். இது எவ்வளோ பெரிய துரோகம்?…”
“எது துரோகம்? நீங்க கட்டிக்க போற பொண்ணு உங்க கண்ணுமுன்னாடி இன்னொருத்தனோட நெருக்கமா இருந்தா உங்களால அதை ஏத்துக்க முடியுமா?…”
“இல்லை இது பொய், என் தங்கச்சி அப்பாவி. ரொம்ப பயந்த சுபாவம். என் வினிக்குட்டி இவனால தான் வேற ஒருத்தன் பேச்சை கேட்டு கடைசில அவ இல்லாமலே போய்ட்டா…” 
“இதுதான் லூசுத்தனம்னு சொல்றேன். அதெப்டி கல்யாணம் நின்ன கொஞ்ச நாள்ல இன்னொருத்தன் கூட ஓடிப்போற அளவுக்கா உங்க தங்கச்சி தைரியசாலி? இது நம்பர மாதிரி இருக்கா?…” என்றதும் துணுக்குற்று அவளை பார்த்தான்.
இந்த விதத்தில் அவன் யோசிக்கவே இல்லை. அப்படி இருக்காது என்ற தங்கையின் மீதான நம்பிக்கை தான் அவனை யோசிக்க விடவில்லை. அவனின் பேச்சற்ற மௌனம் வெண்மதிக்கு பலத்தை கூட்டியது.
“விடாத மதி, இவன் அழுக்குபுடிச்ச மண்டையை நல்ல கழுவிடு” என புத்தி எடுத்துரைத்தது.
“முரளி சொன்ன மாதிரி தான் நடந்திருக்கு. கல்யாணத்தன்னைக்கு முதல் நாள் உன் தங்கச்சி தான் முரளி காலை புடிச்சுட்டு அழுதிருக்கா. வேற ஒருத்தனை விரும்பறேன்னு. எப்படி முரளியால அதை தவிர்க்க முடியும்?…” என்றவள்,
“ஆனா ஒரு விஷயம் உண்மை. நீயும் உன் தங்கச்சியும் ஒரே குட்டையில ஊறின மட்டைங்க. உன் தங்கச்சி அவ சுயநலத்துக்காக முரளியை பலி குடுத்தா. நீ உன் வெறிக்காக இன்னொருத்தர விரும்பார பொண்ணை கட்டாயப்படுத்தர. ரெண்டு பெரும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்லை…” என வேண்டுமென்றே பேச,
“வெண்மதி போதும்…” என காதை பொத்தியவன்,
“உண்மையில் உன்னை மிரட்டி இந்த கல்யாணத்தை நிறுத்த தான் பார்த்தேன். ஆனா நிஜமா உன்னை நான்…” என்று அதனை சொல்ல கூட இப்பொழுது தயங்கினான். அவனை பார்த்து இதழ்களுக்குள் புன்னகைத்தவள்,
“இதுதான் எனக்கும் வேண்டும்” என்பதை போல பார்த்தாள்.
“என்னால இப்பவும் நம்ப முடியலை. வினிக்குட்டி சாகறப்பவும் கூட…”
“அதுதான் சொல்றேன். சாகறப்ப எல்லாருக்கும் புத்தி தெளியும். செஞ்ச தப்புக்கு வருந்துவாங்க. ஆனா உன் தங்கச்சி அப்போ கூட தன்னோட சுயநலத்தை தான் பார்த்திருக்காளே தவிர முரளி செஞ்ச உதவி அவளுக்கு தெரியலை. நன்றிகடனுக்காக அந்த பலியை சுமக்கற முரளி எங்க, கொஞ்சமும் நன்றியே இல்லாம தான் தப்பிச்சா போதும்னு நினைச்ச உன் தங்கச்சி எங்க?…”
“மேன்மக்களா இருக்கறது பிறப்புல ரத்தத்துல ஊறி இருக்கனும். அது மனசு சம்பந்தப்பட்டது. நேர்மை சம்பந்தப்பட்டது. உங்களை மாதிரி ஆட்களுக்கு அது புரியாது. நீங்கல்லாம் பணத்தை கொண்டு எல்லாத்தையும் பார்க்கறவங்க…” அவள் பேசிய ஒவ்வொன்று விபீஷை சுட்டது.
பாசத்திற்கும் உண்மைக்கும் நடுவில் தடுமாறி நின்றான் முதன் முறையாக. முரளி ஆயிரம் முறை இதைப்பற்றி பேச வந்த பொழுதெல்லாம் அலட்சியமாய் அதனை தவிர்த்தவனுக்கு இப்பொழுது வெண்மதியின் பேச்சை தவிர்க்க முடியவில்லை. அவள் மீதான அபிப்ராயம் அவளின் சொல்லை கேட்க வைத்தது.
“இங்க பாருங்க விபீஷ், எல்லாருக்குமே உண்மை தெரியறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இப்ப அந்த வாய்ப்பா இதை நீங்க எடுத்துக்கோங்க. நீங்களும் நல்லவங்களா தான் இருந்திருக்கீங்க. உங்க தங்கச்சி முதல்ல பழி வாங்கினது உங்களை தான். உங்களோட நல்ல குணங்களை தான். புரிஞ்சுக்கோங்க…”
“வெண்மதி வினிக்குட்டி நாங்க பார்த்தவரைக்கும் நல்ல பொண்ணுதான்.அவ எப்படி?…” 
“நல்ல பொண்ணுனு எதை வச்சு சொல்றீங்க விபீஷ். அமைதியா வீட்ல நீங்க சொல்றதை எல்லாம் கேட்டுட்டு எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு இருந்தா நல்ல பொண்ணா? அப்போ நான் எல்லாம் கெட்ட பொண்ணு போல. எனக்கு பிடிச்சதை கேட்டு என் வீட்ல சண்டை போடுவேன்…” என நக்கலாய் சொல்ல,
“வெண்மதி என்னை ரொம்ப நோகடிக்கிற…” என்றான் வேதனையுடன்.
“வேதனைன்னா என்னனு உங்களுக்கு தெரியுமா மிஸ்டர்? ப்ச், இப்போ அத சொல்லி எதுவும் ஆகபோறதில்லை. படிச்சவர் தானே? அட்லீஸ்ட் உங்க சிஸ்டர் டெத்க்கு பின்னால முரளி மூலமா உண்மை தெரிஞ்ச பின்னாலையாச்சும் அதை பத்தி ஆராயனும்னு ஏன் உங்களுக்கு தோணாம போச்சு?…”
“அது வந்து…” அவன் திணற,
“நம்பிக்கை, இருக்க வேண்டியது தான். ஆனா அதுக்காக ஒரு குடும்பத்தை என்ன பாடு படுத்தியிருக்கீங்க?…”  என்றவள்,
“உங்க தங்கச்சி செத்துருவேன்னு கெஞ்சினதால தான் முரளி அந்த கிட்னி விஷயத்தை சொல்லி அவளுக்கு ஹெல்ப் பன்றதா சொல்லியிருக்கார். அதுவும் உங்களுக்காக மட்டும்னு தான்…” 
“இத தான் சொல்றேன். முரளி என் தங்கச்சி மனசை மாத்த…”
“மண்ணாங்கட்டி, ஒரு கல்யாணம் நிக்கறதும் நடக்கறதும் உங்களுக்கு வேணா சாதாரணமா இருக்கலாம். ஆனா முரளி மாதிரி ஒரு ஆளுக்கு? அவங்க பேமிலிக்கு. உண்மையிலேயே கிட்னி குடுத்திருந்தா கூட யாரு அதை சொல்லி மேரேஜை நிறுத்த விரும்ப மாட்டாங்க. நாங்கலாம் மிடில் க்ளாஸ் பேமிலீஸ். எங்களுக்கு குடும்ப கௌரவம் அத்தனை முக்கியம்…” 
“நானும் எங்க நிச்சயத்தை நிறுத்தினேன் தான். அது உங்களை மாதிரி உங்க மிரட்டலுக்கு பயந்து இல்லை. என் பேரன்ட்ஸ் சொன்னதுக்காக. இல்லைனா நீங்க என்ன யாரா இருந்தாலும் அப்பவே நடந்திருக்கும்…”
“எனக்கு குழப்பமா இருக்கு வெண்மதி…” என அவன் தலையை பிடித்துக்கொள்ள,
“இதுக்கே இப்படியா? அன்னைக்கு சரியான நேரத்துக்கு அந்த பேப்பர்ஸை கொண்டு வந்தது யாருன்னு நினைச்சீங்க? உங்க வினிக்குட்டியோட ப்ரெண்ட் தான். அதுவும் உங்க தங்கச்சி சொல்லி. உங்க தங்கச்சி மெயிலை செக் பண்ண முடிஞ்சா பண்ணி பாருங்க…”
“என்ன?…” என விபீஷ் பார்க்க,
“முரளிக்கிட்ட ஹெல்ப் கேட்கவும் அவர் இதை சொல்லி உங்க தங்கச்சி மெயிலுக்கு அந்த டீட்டெய்ல்ஸ் எல்லாம் அனுப்பியிருக்கார். அதை அவ ப்ரெண்ட்க்கு உங்க வினி அனுப்பி அது தான் டைமிங்ல வந்துச்சு மணமேடைக்கு. இப்போ புரியுதா மாஸ்டர் ப்ளான் யாரோடதுன்னு…”
“வெண்மதி…” என நா உலர்ந்த நிலையில் விபீஷ் பார்க்க பரிதாபமாய் இருந்தது வெண்மதிக்கு.
“இதை கேட்க கஷ்டமா தான் இருக்கும். முதல்ல வீட்டு பொண்ணுங்க மேல நம்பிக்கை வைக்க வேண்டியது தான். அதே நேரம் அவங்களோட பாதுகபபுக்காக சில எச்சரிக்கைகளோடவும் இருக்கவேண்டியது அவசியம் விபீஷ். வினி மாதிரி பொண்ணுங்க எதுக்காகவும் யாரையும் பழி சொல்லிருவாங்க…”
“நாங்க அப்படி வளர்க்கலை வெண்மதி…” கலங்கிவிட்ட கண்களுடன் அவன் சொல்ல,
“யாரும் அப்படி ஆகிடுமோ இப்படி ஆகிடுமோன்னு வளர்க்கறது இல்லை. அதிகமான கண்மூடித்தனமான நம்பிக்கையும் தப்பு. சுத்தமா நம்பாம சந்தேகப்படறதும் தப்பு. இதுதான் இவங்க சுபாவம்ன்னு நினைச்சு நாமளா ஆவங்களுக்கொரு வடிவம் கொடுத்துடறோம். அவங்க இப்படித்தான் இருப்பாங்கன்னு. இது நாம பன்ற தப்பு…”
“நீங்க நான் சொல்றதை நம்பனும்னு இல்லை. அட்லீஸ்ட் இதை எல்லாம் ஒரு காமன்ஹ்யூமன் கூட யோசிக்கும். நீங்க ஏன் பண்ணலை? அதுதான். இப்பவும் நீங்க செக் பண்ணிட்டு கூட நம்பலாம். ஆனா நம்புவீங்க. நான் அடிச்சு சொல்றேன் உங்க தங்கச்சியோட சோஷியல் நெட்வொர்க் செக் பண்ணினா கண்டிப்பா உங்களுக்கு தெரியாத விஷயங்கள் தெரியவரும்…” 
“இப்போ என்னை கொண்டுபோய் முரளிட்ட விட்டுடறீங்களா?…” என கேட்க இன்னும் குழம்பிய மனநிலையிலேயே இருந்தவன் லேசான தலையசைப்புடன் காரை கிளப்பினான்.
கிளப்பியவன் பின் வரும் வாகனத்தை கவனியாமல் வண்டியை யூடர்ன் அடிக்க தூரத்தில் வந்துகொண்டிருந்த லாரியை பார்த்ததும் பதறியவன் சட்டென செயல்பட முயன்று பதட்டத்தில் முடியாமல் போக காரை மீண்டும் திருப்பும் முன்னர் அந்த லாரி வேறு லேசாய் உரசி தள்ள நிலைதடுமாறி கார் ஒரு மரத்தில் சென்று இடித்து நின்றது.
“ஸாரி வெண்மதி, உங்க குழந்தை, குழந்தை…” என சொல்லியபடியே விபீஷ் அடிபட்ட தலையுடன் மயங்கி சரிந்தான்.

Advertisement