Advertisement

“போலாம் முரளி. கண்டிப்பா…” என ஆனந்தனை பார்க்க அவரும் தலையசைத்தார். பேசிக்கொண்டே சாப்பிட முரளியின் செல்போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தவனின் முகம் யோசனையில் சுருங்க,
“யாருன்னு பேசு முரளி…” ஆனந்தன் சொல்ல,
“விபீஷ்…” என்றான் மகன்.
“வேண்டாம்ப்பா. விட்டுடு. நிச்சயம் நின்னுபோனதை சொல்லி கிண்டல் பேசுவான்…” சுகன்யா சொல்ல,
“பயப்பட சொல்றீங்களாம்மா?…” என்றவன் அட்டன் செய்துவிட,
“எப்படி இருக்க முரளி? உனக்கு எங்கேஜ்மென்ட்டாமே? எனக்கெல்லாம் இன்விடேஷன் இல்லையா?…” என எள்ளலாய் கேட்க,
“தெரிஞ்சே பேசறீங்க. பேசுங்க…” என்றான் விட்டேற்றியாக.
“உன் இன்னும் கொழுப்பு அடங்கலைல.  ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்டா என்னை பத்தின யோசனையே இல்லாம ஜோரா கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சிருக்க பாரேன். என்னை அவ்வளவு ஈஸியா எடை போட்டுட்டல…” 
“இப்போ என்ன உங்களுக்கு? இனிமே நான் குறைக்காம எடை போடறேன். போதுமா?…”
“நக்கலு? இதுக்குத்தான்டா இதுக்குத்தான் அவளை தூக்க சொன்னேன்…”
“விபீஷ்…” என்ற கத்தலுடன் அவன் எழுந்துவிட அவனின் பெற்றோர் அதிர்ந்து பார்த்தனர்.
“கோவம் வருதா? அதுதான் எனக்கும் வேணும். துடிக்கிறத நேர்ல பாக்கனும் போல இருக்கே முரளி.  நூத்துல ஒண்ணா இந்த சம்பந்தத்தையும் தட்டிவிடத்தான் பார்த்தேன். ஆனா பொண்ணு பார்க்க நீயும் போகவும் தான் கொஞ்சம் யோசிச்சேன். நீயே போயிருக்கன்னா உனக்கு எவ்வளவு பிடிச்சிருக்கும்னு. கொஞ்சநாள் கல்யாண கனவுல நீயும் வாழ்ந்து பார்த்து அந்த கனவு கலைஞ்சா உனக்கு எப்படி இருக்கும்னு தோணுச்சு…”
“எனக்கும் சும்மா சும்மா இந்த விளையாட்டை விளையாட போரடிக்குது. உன் வீட்ல பொண்ணு பார்க்கறதும், நான் அதை தடுக்கறதும்ன்னு. இனி உனக்கே தோணாது தானே? …”
“தப்பு பண்ணிட்டீங்க விபீஷ். கொலை செய்யற அளவுக்கு…” முரளி பல்லை கடிக்க,
“செய்வேன்டா. அதுக்கு மேலையும் போவேன். எங்க வினிக்குட்டிய உன்னால எந்த நிலமையில அவளை பார்த்தோம் தெரியுமா?…” என குரல் கரகரக்க சொல்லிய விபீஷ்,
“ரொம்ப பிடிச்சதோ அந்த பொண்ணை. வலிக்கட்டும். போனா போகுதுன்னு விட்டிருக்கேன். இனி இதையும் நினைச்சு நினைச்சு காலம் முழுக்க அழு. இப்ப நான் சந்தோஷமா வைக்கறேன்…” என்ற ஏகத்தாள சிரிப்புடன் வைத்துவிட வேகமாய் கிளம்பினான் முரளி.
முரளி முரளி என்று அழைத்துக்கொண்டே அவனின் பின்னால் ஆனந்தனும் சுகன்யாவும் வர அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் காரை எடுத்தவன் புயல் வேகத்தில் விபீஷின் வீட்டை நோக்கி செல்ல அதை புரிந்தவர்கள் அவனின் பின்னே சுகன்யாவின் ஸ்கூட்டியில் சென்றனர்.
“அவனுக்கு முன்னாடியே போகனும்ங்க. இதுதான் சாக்குன்னு அந்த விபீஷ் கோபத்துல எதுவேணா செய்வான்…” என சுகன்யா பதற,
“நான் போய்டுவேன். நீ நல்லா புடிச்சுக்கோ…” என்றார்.
ஆனந்தன் விபீஷின் வீட்டிற்கு வெளியே செல்ல சரியாக அவருக்கு முன்னே முரளி காரை கேட்டில் இடித்து நிறுத்தி இறங்கி உள்ளே சென்றான்.
“விபீஷ்…” என்ற கத்தலுடன் வீட்டிற்குள் நுழைந்த முரளியை பார்த்து வெளியே அழுத முகத்துடன் வந்த  வசுந்தரா,
“இங்க எதுக்காகப்பா வந்து கத்திட்டு இருக்க?…” என கேட்டாலும் கண்ணீர் சுமந்த கண்களும் அவரின் சோகமான முகமும் அவனை கொஞ்சம் நிதானமாக்கியது.
“என்னங்கம்மா பிரச்சனை உங்க பையனுக்கு? நான் தான வினயா விஷயத்துல என்ன நடந்ததுன்னு சொல்லிட்டேன் தானே? ஏன் இப்படி எங்களை சித்தரவதை பன்றீங்க?…”
“முரளி நாங்களே இங்க நொந்து போய் இருக்கோம். நே வேற ஏன்?…” வசுந்தரா பேச சுகன்யாவும் ஆனந்தனும் கூட உள்ளே வந்துவிட்டனர்.
“உங்க பொண்ணுக்கு என்னை பிடிக்கலை. வேற ஒருத்தனை விரும்பறேன்னு சொல்லவும் தான் நான் விலகினேன். என்னை பிடிக்காத, யாரையோ விரும்பார பொண்ணுக்கு நான் எப்படி தாலி கட்ட முடியும்?…” 
“இதை சொல்லத்தான் வந்தியா முரளி?…” வசுந்தரா ஒய்ந்துபோனவராக பேச,
“இதை எதையுமே புரிஞ்சுக்காம தேவையில்லாம என் மேல உள்ள கோபத்துல எனக்கு நிச்சயம் பண்ணிருக்கற பொண்ணுக்கு ஆக்ஸிடென்ட் பண்ணிருக்காரு. அந்த பொண்ணு உயிர் பிழைச்சுட்டாலும் கொலை செய்யா முயற்சி செஞ்சது செஞ்சது தானே?…”
“என்ன கொலையா?…” என வாயடைத்துபோய் வசுந்தரா நிற்கமுடியாமல் தள்ளாட அவரை பிடித்த முரளி அமரவைத்தான்.
“ம்மா, தண்ணி கொண்டுவாங்க…”
“முரளி இங்க என்ன சேவகம் பண்ணவா வந்திருக்கோம்?  முதல்ல போலீஸ்க்கு போவோம். அவனை இதுக்கு மேலையும் நான் சும்மா விடமாட்டேன்…” என ஆனந்தன் குதிக்க சுகன்யா நீர் கொண்டுவந்து வசுந்தராவிற்கு கொடுத்தார். 
சில நொடி ஆசுவாசத்திற்கு பின்னர் முரளி நடந்ததை சொல்ல வேதனையுடன் கண்ணை மூடியவர்,
“என் பொண்ணும் போய்ட்டா, விபீஷ் அப்பாவுக்கும் ரொம்ப முடியலை. நேத்து தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆனோம். இப்ப இவன் வேற இப்படி செஞ்சு என் பிள்ளையும் எனக்கு இல்லாம போக போறான்…” என அழ வேதனையுடன் பார்த்தபடி நின்றான் முரளி.
“எனக்கு எத்தனையோ தடங்கள் செஞ்சாங்க. அப்போவும் நான் அமைதியா போய்ட்டு தான் இருந்தேன். இப்ப இன்னொரு பொண்ணு வாழவேண்டிய பொண்ணு ஏதாவது ஒண்ணுகிடக்க ஆகி குடும்பத்தோட. ப்ச், அதுவும் என்னாலன்றப்போ இதை என்னை சும்மா விட சொல்றீங்களா?…”
இப்படி ஒரு கோபத்தையும் அதனை  கட்டுப்படுத்தியபடி முரளி அவருக்கு முற்றிலும் புதிது. ஏன் அவனின் பெற்றோருக்கே இந்த முரளி பரிட்சயமற்றவன்.
அவர்களை பொறுத்தவரை முரளி என்றால் நிதானம். முரளி என்றால் பொறுமை. முரளி என்றால் புன்னகை. இவை மட்டுமே அவர்களின் மகன். இந்த ரௌத்திரம் முற்றிலும் புது பரிமாணம்.
“முரளி ப்ளீஸ், நாம போகலாம்…” சுகன்யா பயந்துபோனார்.
“என்னை மன்னிச்சுடுப்பா. நானும் உன் மேல ரொம்ப கோபத்தில தான் இருந்தேன். சீமா எடுத்து சொல்லவும் தான் கொஞ்சம் தெளிவாச்சு. உன் மேல தப்பிருக்காதுன்னு தோணுச்சு. ஆனா இதெல்லாம் எனக்கு தெரியாது முரளி…” என வசுந்தரா கை கூப்ப,
“முரளி போகலாம்…” தந்தையின் அழைப்பில் திரும்பியவனின் கையை பிடித்தவர்,
“நீ போள்ஸ் ஸ்டேஷன் போறன்னு தெரியும். எனக்கு என் மகனும் இல்லாம ஆகிட கூடாது முரளி. உன்கிட்ட இதை கேட்கலாமான்னு தெரியலை. ஆனா எனக்காக உன் அம்மாவ மாதிரி நினைச்சு இந்த முறை விபீஷை விட்டுடுப்பா. ப்ளீஸ்…” என்று அழுதவரின் கண்ணீர் அவனின் மனதை கலங்கத்தான் செய்தது.
“என்னால முடியாதுன்னு ஒரு மனசு சொல்லுதும்மா. ஆனா உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கேன். அந்த காரணத்துக்காக தான இத்தனை நாள் பொறுமையா இருந்தேன். இனி என் வாழ்க்கையில் என இருக்குன்னு தெரியலை. இருந்தாலும் உங்களுக்கு வாக்கு குடுக்கறேன். ஆனா என் வெண்மதிக்கு விபீஷால திரும்ப பிரச்சனைன்னா எந்த வாக்கும் என்னை நிறுத்தி வைக்காது…”
படபடவென சொல்லிவிட்டு வேகமாய் அங்கிருந்து கிளம்பிவிட்டான் முரளி. அவனின் மனமெங்கும் வெண்மதியே நிறைந்திருந்தாள். நடந்த விபத்திற்கு யார் காரணம் என்பது தெரிந்துவிட்டது. ஆனால் அவளின் கோபமும் பேச்சும் ஏன் எதனால் என்று தான் இன்னமும் புரியவில்லை. 
வேறொருவனை விரும்புகிறேன் என்று சொல்லிய வினயாவை விட்டு சட்டென்று விலகிய முரளியால் வெண்மதியை அப்படி நினைக்க முடியவில்லை. அவளின் கண்களில் தான் பார்த்த காதல் நிச்சயம் பொய்யில்லை என்பதை அறிந்திருந்தான்.
இப்பொழுது அவளிடமோ, இல்லை தன் வீட்டிலோ பேச முடியாது என மௌனம் காத்து அவளின் மனம் திறக்கும் நாளுக்காய் காத்திருக்க ஆரம்பித்தான் முரளி.
——————————————————
நடந்த நிகழ்வுகளில் தாக்கம் மனதை சுழற்றியடிக்க நள்ளிரவின் பொழுது தான் இருவருக்குமே கண்ணுறக்கம் அண்டியது. விடிந்தும் வெகுநேரம் வரை இருவருமே ஒருவரை ஒருவர் அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
ஜன்னல் திரைகள் இழுத்து மூடப்பட்டிருப்பதால் வெளிச்சம் கூட அறைக்குள் நுழையமுடியாமல் இருக்க இருள் இன்னமும் அறையை சூழ்ந்திருந்தது. 
தூக்கம் கலைந்து முதலில் வெண்மதி தான் கண் விழித்தாள். முரளியின் உறக்கம் கலையாமல் மெல்ல எழுந்தவள் குளித்து முடித்து வந்து மணியை பார்க்க அதுவோ பதினொன்று என்றது.
“போச்சு அதான் இப்பவே பசிக்க ஆரம்பிச்சுடுச்சு…” என்றபடி கீழே வந்தவள் பாலை காய்ச்சிவிட்டு இன்னொரு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து பிரட் ஆம்லேட் தயாரித்தாள்.
“பசின்னு வந்தா மட்டும் தான் மேடம்க்கு சமைக்கனும்னே தோணும் போல?…” என்றபடி சமையலறைக்குள் ஈரத்தலையுடன் நுழைந்தான் முரளி.
“தலையை துவட்டிட்டு வரதுக்கென்ன?…” என அவனை கடிந்துகொண்டே அவனுக்கும் தயாரிக்க சமையல் மேடையில் அமர்ந்தான். 
அவளை பார்த்துக்கொண்டே குடித்துவிட்டு மிச்சம் வைத்திருந்த பாலை எடுத்து பருக அதனை கண்டும் காணாதது போல வேலையில் கவனமாய் இருப்பதை போல தடுமாற ஆரம்பித்தாள். அவளின் தடுமாற்றத்தில் குறும்பாய் புன்னகைத்தவன்,
“உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் வெண்ணிலா…” என்க அவனை என்னவென்று நிமிர்ந்து பார்த்தாள் வெண்மதி.

Advertisement