Advertisement

நிலவு – 21
       “அவ தூங்கட்டும் கலை. யாரும் டிஸ்டர்ப் செய்யவேண்டாம். நாம அடுத்த ரூம்ல இருப்போம்…” என நடேசன் சொல்லவும் கலைவாணியின் மனமோ மகளைவிடு நகர்வேனா என்றது.
இந்த உண்மை தெரிந்ததில் இருந்து அவளின் முகமே மாறி இருக்க எப்படியாவது தங்களை புரியவைத்துவிடும் நோக்கில் பேச நினைத்துக்கொண்டிருக்க நடேசன் கிளம்ப சொல்லியதும் தவிப்புடன் வெண்மதியை பார்த்தார்.
அவள் யாரையும் பார்க்க பிடிக்காது கண்களை மூடியவண்ணமே இருக்க வழியின்றி கிளம்பினார். கதவடைத்து சென்ற சத்தம் கேட்கவும் தான் கண்ணை திறந்தவள் கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.
சத்தமில்லாமல் கதறியவளின் மனது அத்தனை ரணமாய் ரத்தம் வழிந்தது. இப்படி ஒருநாள் தன் வாழ்நாளில் வருமென எதிர்பார்த்திராதவள் தனக்கு யாருமில்லையோ என்ற பரிதவிப்புடன் கண்ணை மூட,
“ஏன் நானில்லையே பெண்ணே?” என முரளியின் பிம்பம் வந்து அழகாய் புன்னகைத்தது. 
“அந்த தகுதி இனி எனக்கில்லை. என் பெரியம்மா ஸாரி மங்களத்தம்மா சொல்லியபடி நான் கடனாளி” என நினைத்து நினைத்து தன்னை அநாதரவான ஒரு பெண்ணாகவே கருதினாள்.
இனி தன் வாழ்க்கைக்கான முடிவெதுவும் தன் கையில் இல்லை. அதே நேரம் என் வாழ்க்கையில் முரளியை தவிர வேறு ஒருவனுக்கு அந்த ஸ்தானம் இல்லவே இல்லை என்ற முடிவுடன் மெதுவாய் எழுந்தமர்ந்தாள்.
காலையில் இருந்தே முரளியுடன் பேச முடியாது தவித்தவள் அந்த நாளை வெகு சந்தோஷமாக அனுபவித்தவள் இப்படி முடியுமென கனவிலும் எதிர்பார்த்திருந்தாளா? 
காரில் ஏறி அமர்ந்ததும் பிரதான சாலை வழியாக வந்துகொண்டிருந்தனர். விரைவாக செல்லவேண்டும் என்ற பேச்சுக்களுடன் செல்ல சரியாக அந்த நேரம் வந்த அழைப்பு நடேசனின் அலைபேசிக்கு.
பேசி முடித்தவர் கோபத்துடன் வைத்துவிட முணுமுணுப்பாய் கலைவாணியின் காதில் விஷயத்தை சொல்ல அவரின் முகமும் யோசனைக்கு செல்ல,
“என்னாச்சுப்பா?…” என பார்த்தாள் வெண்மதி கலைவாணியின் மறுபுறத்தில் இருந்து.
“ஒண்ணுமில்லடா. இது வேற…” என சொல்லி முடித்தது தான் தாமதம் கண் திறந்தாள் மருத்துவமனையில் இருந்தாள் வெண்மதி.
காலிலும், கையிலும், தலையிலும் வலியின் பங்கு அதிகமாக இருக்க கண் திறக்கமுடியாது திணறினாள். அவளுக்கெதிரே இவளின் அசைவை பார்த்ததும் ஓடிவந்த கலைவாணி,
“என் பொண்ணு காணு முழிச்சுட்டா. இது போதும். எனக்கு என் பொண்ணு கிடைச்சுட்டா. அவ உயிரோட என் கூட இருந்தா போதும். போதும்…” என மகளின் இன்னொரு கையை பிடித்துக்கொண்டு பெரும் குரலெடுத்து அழ,
“ம்மா…” என்றால் தீனமான குரலில். சரியாக போனும் வர அதை நடுங்கும் விரலுடன் எடுத்து பார்த்த நடேசன் அழைப்பை ஏற்கவே பயந்தார். வேகமாய் அவரிடம் வந்த கலைவாணி அதனை பிடுங்கி அட்டென் செய்தவர்,
“நீயெல்லாம் மனுஷனாடா? எதுக்குடா இப்படி செஞ்ச? என் பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஆகிருந்தது…” என கத்த,
“உயிரோட தான இருக்கா? சாகலைல. சாவு வரைக்கும் போய்ட்டு வந்திருக்கா உன் பொண்ணு. அந்த முரளியை கல்யாணம் செய்யறதும் சாவறதும் ஒண்ணுன்னு இப்ப புரியுதா? லேசா தட்டி தூக்கன என்னால ஒரேடியா உங்க எல்லாருக்கும் வேற உலகத்த காண்பிக்க முடியாதா? ஜாக்கிரதை…” என, 
“இப்ப என்னடா உனக்கு? இந்த கல்யாணம் நடக்காது போதுமா? போதுமா? நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டடா…” என்று அழ மறுபுறம் அட்டகாசமான சிரிப்புடன் கலைவனையின் கண்ணீரை சட்டை செய்தவனாய் போனை வைத்துவிட இங்கே அதிர்ச்சியுடன் தாயை பார்த்தாள் வெண்மதி.
“அம்மா…” என அழைத்தவளின் குரலுக்கு செவி சாய்க்காமல் நடேசனிடம் திரும்பி போனை நீட்டியவர்,
“நான் சொன்னது நிஜமா தான். இந்த சம்பந்தம் நமக்கு வேண்டாம். இந்த கல்யாணம் நடந்தா நம்ம பொண்ணு நமக்கில்லை. அந்த குடும்பம் இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு நம்மக்கிட்ட சொன்னப்பவே எனக்கு உறுத்துச்சு. ஆனாலும் பொண்ணோட ஆசைக்காக சம்மதிச்சேன்…”
“இப்ப என்னன்னா இப்ப பேசுனவன் கொலைக்கும் அஞ்சாத பாவிய இருப்பான் போல. அப்பா அந்தளவுக்கு அந்த குடும்பம் என்னவ பெருசா பண்ணிருக்காங்க தானே?…” என கேட்டதும் நடேசன் பதிலில்லாமல் இருக்க,
“என் தங்கச்சி சொல்றது தான் எனக்கும் சரின்னு படுது. பார்த்து பார்த்து வளர்த்துட்டு இப்படி பலி குடுக்கவா?…” என மங்களம் வேறு தன் பங்கிற்கு பேச,
“என்ன பேசிட்டு இருக்கீங்க? முதல்ல என் போனை குடுங்க, நான் முரளிக்கு சொல்லனும். இன்னும் நாம போகலையேன்னு பதறிட்டு இருப்பாங்க. விஷயத்தை சொல்லவேண்டாமா?…” என கேட்க,
“வேண்டாம்னு சொல்றேன்ல. என் பேச்சை நீ கேட்டு தான் ஆகனும். கேளு…” என்றார் கண்ணீரை துடைத்துவிட்டு அதிகாரமாய். இந்த கலைவாணி வெண்மதிக்கு புதிது.
“ஏற்கனவே கல்யாணம் வரைக்கும் போய் நின்று இத்தனை வருடங்கள் அனுபவித்த வேதனைகள் போதாதென்று தன் பங்கிற்கு தன் மனம் கவர்ந்தவனை உயிரோடு கொல்ல வேண்டுமா?” என மருகியவள் தாயை எதிர்க்கமுடியாத அளவிற்கு உடலில் பலமில்லாமல் துவண்டு போனாள்.
“ம்மா, நான் சொல்றதை நீங்க கேளுங்க. முரளிக்கிட்ட இப்படின்னு சொன்னா என்ன பண்ணலாம்னு அவர் பார்த்துப்பார். என் பேச்சை நீங்க கேளுங்க. தயவு செஞ்சு போனை குடுங்கம்மா…” 
“கேட்கமாட்ட? என் பேச்சை கேட்க மாட்டியா? அப்போ என்னை விட இங்க உன் மேல உயிரையே வச்சிருக்கற எங்களை விட உனக்கு அவன் பெருசா போய்ட்டானா?…” 
“ஐயோ நான் அப்படி சொல்லலை. ம்மா, முரளிக்கிட்ட சொல்லுவோம்மா. ப்ளீஸ், அவர் அங்க மண்டபத்துல நமக்காக வெய்ட் பண்ணிட்டிருப்பார்…”
“நல்லா பண்ணட்டும். இப்படி ஒருத்தன் கொலைவெறியோட சுத்தறான்னு நம்மக்கிட்ட சொல்லவே இல்லையே. இந்த மாதிரி பிரச்சனை கல்யாணம் நின்னுச்சு, அந்த குடும்பம் கோவமா இருக்குன்னு மேம்போக்கா சொல்லி நம்மளை ஏமாத்திட்டாங்க…”
“ம்மா, முரளியை அப்படி பேசாதீங்க. அவரும் அவர் குடும்பமும் அப்படிப்பட்டவங்க இல்லை. புரிஞ்சுக்கோங்கம்மா. முரளி என் மேல உயிரையே வச்சிருக்கார். உங்களுக்கு தெரியும் தானே? அவங்க நம்ம குடும்பத்து மேல வச்சிருக்கற அன்பும், பாசமும். ஏன்மா?…” என்றவள்,
“அப்பா நீங்களாவது சொல்லுங்கப்பா. பேசுங்க ப்ளீஸ்…” என தந்தையை துணைக்கழைக்க,
“எனக்கு நீதான்டா முக்கியம். வேற யாருமில்லை. அம்மா சொல்றதை கேளு…” என்று கைவிட்டுவிட,
“அய்யோ ஏன் யாருமே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க? அங்க ஒரு குடும்பமே காத்திட்டிருக்கு. ஊரையெல்லாம் கூட்டிவச்சு நாம வந்திருவோம்னு நினைச்சு இருப்பாங்க…” என அழ,
“நிக்கட்டும். இப்ப நீ ரெஸ்ட் எடு. உன்னை அலட்டிக்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. நான் அப்பா கூட போய்ட்டு வரேன். அவருக்கு ஸ்கேன் செய்யனும்னு சொல்லியிருக்காங்க…” என கலைவாணி பிடிவாதமாய் சொல்ல,
“ம்மா, நீங்க போங்க. முதல்ல என் போனை குடுக்க போறீங்களா இல்லையா? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? எவனோ ஒருத்தன் மிரட்டினதும் பயந்து இப்படி முட்டாள்த்தனமா முடிவு செய்யறீங்க? என்னை கேட்கனும்னு தோணாம? குடுங்க போனை…” என தன் சக்தியெல்லாம் திரட்டி மிரட்டலாய் அவள் கேட்க, 
“பார்த்தியா கலை, இவ தான் உனக்கும் உன் புருஷனுக்கும் கடைசி காலத்துல காஞ்சி ஊத்த போறாளா? சாகற நேரம் ஒரு பிடிப்பு இருக்கனும், உனக்குன்னு ஒரு சொந்தம் இருக்கனும்னு எடுத்து வளர்க்க ஆரம்பிச்சல. இதுவே நீ பெத்திருந்தா உன் பேச்சை கேட்டு அடங்கி இருக்கும்…” என மங்களம் சொல்லிவிட,
“அக்கா…” என கத்தியேவிட்டார் கலைவாணி.
“இப்ப ஏன் என் வாயை அடைக்குற? தெரிஞ்சு தான் சொன்னேன். நாளைப்பின்ன இவ பாட்டுக்கு அவன் பின்னால போய்ட்டா? நீ வளர்த்ததுக்கு கொஞ்சமாச்சும் நன்றி விசுவாசம் இருந்தா அடங்கி கிட்டப்பா…” என்றவர்,
“என்னடி சரிதான? இத்தனை வருஷம் உப்புப்போட்டு வளர்த்தாள, அந்த நன்றிக்காச்சும் அவ பேச்சை கேளு…” 
அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று மங்களம் தன் பாட்டுக்கு பேசிக்கொண்டே இருக்க ஆணியடித்ததை போல நிலைகுத்திய பார்வையுடன் கலைவாணியை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வெண்மதி.
அதிலும் கலைவாணியும் நடேசனும் அழுதுகொண்டே இருந்தனரே தவிர மங்களத்தை மறுத்தோ கண்டித்தோ எதுவுமே பேசவில்லை. அதுவே சொல்லியது உண்மை என்று.
“உன்னை கைகுழந்தையா ஒரு ஆசிரமத்துல இருந்து தான் எடுத்துட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சா. இன்னை வரைக்கும் சொந்த பொண்ணா தான் வளர்த்து வரா. இவ ஒன்னு கேட்டு நீ மாட்டேன்னு நிக்கற? என்ன பொண்ணோ?…” 
“அக்கா போதும். அவளை பேசி பேசியே நோகடிக்காத. உன்னை யாரு இதையெல்லாம் சொல்ல சொன்னா?…” என அழுதவர் வெண்மதியை பார்க்க,
“அம்மா…” என்றாள் சத்தம் வராமல். உதட்டோடு உள்ளமும் சேர்ந்து துடிக்க அன்றைய நாளில் இன்னும் எத்தனையை தாங்கவிருக்கிறாளோ? 
“எனக்கு யாருமில்லை…” என கண்ணீர் வழிய சொல்ல,
“எங்களுக்கும் நீ மட்டும் தான்டா மதி. அம்மாடி அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கூட நீ மட்டும் தான். எங்களுக்கும் யாருமில்லைடா. நாங்களும் என்ன செய்வோம்? அந்த குடும்பம் வேண்டாம்டா…” என்று வெண்மதியின் அருகே அமர்ந்து கதற தாயின் கண்ணீரை துடைத்தவள்,
“முரளியை நான் பேசிக்கறேன். ஆனா நீங்க யாரும் ஒரு வார்த்தை ஒரு வார்த்தை அவரை மரியாதை இல்லாம பேசக்கூடாது. ம்ஹூம், பேசவே கூடாது. எதுவுமே பேசவே கூடாது…” என்றாள் இறுகிய குரலில்.
உணர்வற்ற அவளின் பார்வையும், பேச்சும் வளர்த்தவர்களை உலுக்க,
“இப்பவாச்சும் புத்தி வந்துச்சே…” என நொடித்தார் மங்களம்.
நினைக்க நினைக்க நெஞ்சை அறுத்தது வெண்மதிக்கு. யாருமில்லை, முரளியும் இல்லை, அவன் காதலும் இல்லை. உண்மையில் அந்த நொடி தன்னை அனாதையாக உணர்ந்தாள் வெண்மதி.
முரளி வீடு வந்து சேர்ந்த பின்னரும் சுகன்யா அமைதியாக இருக்க அவர்களுக்கு மாற்றி மாற்றி யாராவது போன் செய்துகொண்டே இருந்தனர். எடுத்து பதில் சொல்ல சொல்ல ஆனந்தனின் கோபம் கரையை கடக்க ஆரம்பித்தது.
அதிலும் சில நெருங்கிய சொந்தங்கள் வீட்டிற்கே வந்துவிட்டனர் திட்டிவிட்டு செல்ல.
“எங்களையெல்லாம் பார்த்தா விளையாட்டா தெரியுதா உங்களுக்கு? பத்திரிக்கை அடிக்கிறதும், அழைக்கிறதும்ன்னு எங்களை அலைகழிக்கறீங்க. அவ்வளவோ தூரத்துல இருந்து இதுக்குன்னு கிளம்பிவர நாங்க என்ன வெளிய வெட்டி இல்லாதவங்களா? கல்யாண ராசி இல்லன்னா புரிஞ்சுக்கிட்டு ஓரமா இருக்கனும்…” என சிலரும், 
“டாம்பீகமா நிச்சயம் செய்யறப்பவே நினச்சேன். இதுதான் அர்த்தராத்திரில குடைபிடிக்கறதுன்றது. இனி கல்யாணம் காட்சின்னு பத்திரிக்கையை தூக்கிட்டு வந்துடாதீங்க…” என சிலரும் வந்து பேசிவிட்டு செல்ல வீட்டில் ஒருவரும் பதில் பேசவில்லை.
சுகன்யாவிற்கு முரளியின் முகம் பார்க்கவே முடியவில்லை. எத்தனை ஆசை ஆசையா கிளம்பி இருந்தான் என நினைத்து நினைத்து அழுதார். அவரின் கண்ணீர் ஆனந்தனை இன்னும் வெண்மதியின் மேல் வெறுப்பை வளர்த்தது.
பத்து நாட்கள் சென்ற பின்னரும் நடந்தவைகளின் கணம் குறையாமலே வீட்டில் நடமாடினார்கள் மௌனமாய்.
முரளியின் மனதெங்கும் வெண்மதியின் நினைவுகள். குறுகிய காலமென்றாலும் உயிரோடு கலந்துவிட்டவளை நெஞ்சோரத்தில் ஒதுக்கிவைக்க முடியாமல் தவித்தான்.
அன்று அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தவன் சாப்பிட வர மூவருக்குமே உணவை எடுத்துவைத்தார் சுகன்யா.
“ம்மா, இன்னைக்கு லஞ்ச்க்கு வீட்டுக்கு வந்திருவேன். ஈவ்னிங் வெளில எங்கையாவது போகலாம்…” என அவனாகவே பேச்சை ஆரம்பிக்க வியப்பாய் பார்த்தார் மகனை.
“எனக்கே போகனும்னு தோணுதும்மா. போவோமா?…” என கேட்டதும் புரிந்தது இது தனக்கானது என்று.

Advertisement