Advertisement

“யாரு இவங்களா வாழ்த்துவாங்க? இந்நேரம் எப்படிடா இதுன்னு குமைஞ்சிட்டு இருப்பானுங்க. நல்ல மனசுன்னு ஒன்னு இருந்தா இத்தனை நல நம்மளை போட்டு அரையா அரைச்சிருப்பாங்களா? இல்ல நமக்கு ஆறுதலா பேசியிருப்பாங்களா? யார்க்கிட்ட எதை எதிர்பார்க்கனுமோ அதை தான் எதிர்பார்க்கனும். மனசார வாழ்த்த மனசுன்னு ஒன்னு வேணும்…” 
ஆனந்தன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவர் எந்தளவிற்கு காயப்பட்டிருக்கிறார் என்பதை காட்ட, இந்த நேரத்தில் எதுவும் பேசி அவரை இன்னும் கோபப்படுத்த வேண்டாம் என்று சுகன்யா ஒன்றும் பேசவில்லை.
வெண்மதியின் வீட்டினர் இன்னமும் வந்து சேராமல் இருக்க முரளிக்கு மனது அடித்துக்கொண்டது. கிளம்பிவிட்டோம், வந்துகொண்டிருக்கிறோம்  என்ற நடேசனின் தகவலை தாண்டி மீண்டும் அழைக்க அழைக்க ஒருவரும் எடுக்கவில்லை.
“என்ன முரளி இது? முகூர்த்த நேரமே வந்திருச்சு, இன்னும் காணோம்?. கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஆக போகுது. கூட வரவங்களுக்கு கூட கூப்பிடேன்…” சுகன்யா பதற,
“ம்மா, வெண்மதி, அவங்க பேரன்ட்ஸ், அவங்க பெரியம்மா தவிர கூட யாருமில்லை. யாருமே எடுக்கலை…” என்றதுமே பதற்றம் தொற்றியது அவர்களிடத்தில்.
“என்ன ஆச்சு முரளி?…” என ஆனந்தன் வந்து நிற்க அதற்குள் ஈஸ்வரியின் தந்தை மூலமாக வெண்மதி வந்த கார் விபத்து என்று தெரியவர அது மண்டபம் முழுவதும் சலசலப்பை உண்டுபண்ணியது.
முரளிக்கு எதுவுமே தோன்றவில்லை. அவனின் எண்ணம் முழுவது வெண்மதியே. அவளை அப்பொழுதே பார்க்க வேண்டும் என நினைத்தவனுக்கு ஏன் அவர்கள் இதை தங்களிடம் சொல்லாமல் ஏஎஸ்வரியிந் தந்தை மூலம் சொல்லியிருக்கின்றனர் என யோசிக்க மறந்தான்.
உடனடியாக எங்கே எந்த ஹாஸ்பிட்டல் என்று விசாரித்து கிளம்பினார்கள். அவனை காரை எடுக்கவேண்டாம் என சொல்லி ட்ரைவரை வைத்து கிளம்பினார்கள். அதற்கு முன் வெண்மதி எப்படி இருக்கிறாள் என்று கேட்க அழைத்தவனின் அழைப்பு எடுக்கப்படாமலே இருக்க,
“முரளி சும்மா கூப்பிட்டுட்டே இருக்காத. அங்க என்ன டென்ஷனோ?…” என சுகன்யா அவனை சமாளிக்க முரளியின் முகம் பதற்றத்தை விடவில்லை. 
ஒருமணிநேர பயணம். அதை கடப்பதற்குள் தவித்துப்போனான் அவன். அவளுக்கு பெரிதாய் எதுவுமோ? அதனால் தான் எடுக்கவில்லையோ என்று. ஆனால் அதை விட பெரிதாய் ஒன்று காத்திருக்கிறது என அறியாமல் போனான்.
வெண்மதி அனுமதிக்கப்படிருந்த அறைக்குள் நுழைந்ததுமே உயிரெல்லாம் உறைந்துபோனான். 
காலில் பலமாய் கட்டு போடப்பட்டிருக்க தலையிலும் கட்டு. இடது கை பலமாய் வீங்கி இருக்க அதில் எதுவோ பூசப்பட்டிருந்தது.
“வெண்ணிலா…” என்ற அழைப்புடன் தன் உயிர் துடிக்க பார்த்தான் அவளை.
முரளியை பார்த்த மாத்திரம் விம்மிய மனதை அடக்கியவள் அவனை ஒட்டாத பார்வை பார்த்து முகம் திருப்பிகொண்டாள். 
அவளின் செயல் அவனின் புத்தியில் உறைக்கவே இல்லை. வலியில் அப்பை இருக்கிறாளோ என தான் நினைத்தான். ஆனால் சுகன்யா கண்டுகொண்டார். யோசனையுடன் கலைவாணியை பார்க்க அவரின் அக்கா ஒரு படுக்கையில் படுத்திருக்க, அவர்களுக்கும் சிறு சிறு காயங்களுடன் படுக்கையில் அமர்ந்திருந்தார்.
நடேசனை காணவில்லை. அவருக்கு என்னவாகிற்று என்றும் தெரியவில்லை. ஏற்கனவே அவருக்கு காலில் பாதிப்பு. மீண்டும் எதுவுமோ என்று தேடினார்கள். 
உண்மையில் அடிபட்ட காலில் மீண்டும் அடிபட்டிருக்க அவருக்கு ஸ்கேன் செய்ய அழைத்து சென்றிருந்தனர்.
“ஏன் சம்பந்தி இதை பத்தி சொல்லலை? அப்பவே தகவல் கொடுத்திருந்தா வந்திருப்போமே…” என சுகன்யா கலைவாணியின் கையை பிடிக்க கலைவாணியோ மகளை அழுத்தமாய் பார்த்தார்.
“என்ன நடந்தது சம்பந்தி?…” என சுகன்யா கேட்க முரளியின் முகம் இப்பொழுது வெண்மதியின் முக மாறுதலை அவதானித்தது.
“வெண்மதி என்னை பாருங்க….” என்றான் அழுத்தமாய்.
“உங்கள யாரு இங்க வர சொன்னா? நாங்க வரமுடியாது, ஆஸ்பத்திரில இருக்கோம். இந்த நிச்சயத்த நிறுத்துங்கன்னு சொல்லைத்தான அந்த பூசாரிக்கிட்ட சொன்னோம். உடனே கிளம்பி வந்தா என்ன அர்த்தம்?…” என கலைவாணியின் அக்கா மங்களம் வாயை திறக்க,
“பெரியம்மா நீங்க பேசாம இருங்க…” என அவரை அதட்டியவள் கலைவாணியை பார்க்க அவரோ பேசு என்பதை போல தலையாட்ட அழுகை முட்டியது வெண்மதிக்கு. 
கெஞ்சுவதை போல பார்த்தவள் கலைவாணியின் கூர்மையான பார்வையில் மனதை தேற்றி அதன் பின்னால் முரளியை பார்த்தாள்.
“ஸாரி முரளி இந்த ப்ரப்போசல் இதோட ஸ்டாப் பண்ணிக்குவோம். இது சரிப்பட்டு வராது. வேண்டாம்…” என இறுக்கமான குரலுடன் வெண்மதி சொல்ல ஒரு கணம் உலகமே இருண்டு விட்டது முரளிக்கு.
“வாட்?…” என்றவனை முந்திக்கொண்டு வேகமாய் வந்தார் ஆனந்தன்.
“ஏமா என்னம்மா பேசற? இல்ல என்ன பேசறன்னு கேட்கறேன். புத்திகித்தி மழுங்கி போச்சா? சுத்த அறிவுகெட்டத்தனமால இருக்கு…” என்று வேகமாய் வந்து வெண்மதி முன்னால் கோபமாய் பேச,
“என்னங்க இருங்க, என்ன நடந்ததுன்னு கேட்போம். கேட்டுட்டு முடிவு பண்ணுவோம். அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீங்க…” சுகன்யா இப்போழ்து கணவனின் கையை வந்து பிடித்துக்கொள்ள முரளியின் பார்வை வெண்மதியை அளவெடுத்தது.
நிச்சயதார்த்தத்திற்கு கிளம்பிவந்த அலங்காரம் எதுவுமில்லாமல் அங்கிருக்கும் உடையில் அவள் இருக்க அவள் வந்து வெகுநேரம் ஆகியிருக்கவேண்டும் என தோன்றியது அவனுக்கு.
வெண்மதியின் அருகே கட்டிலில் அமர்ந்தவன் அவளைவே பார்க்க அவனின் பார்வை வீச்சை எதிர்கொள்ளமுடியாது தலைகுனிந்தவள் மௌனம் அவனை கொன்றது.
“வெண்மதி என்ன நடந்தது? ஏன் இந்த கல்யாணம் வேண்டாம்? எனக்கு நீங்க விளக்கமா சொல்லனும். எனக்கு தெரியனும். இத்தனை ஏற்பாடுகள் எதுவுமே உங்களுக்கு பிடிக்காம நடக்கலையே…”
“இப்ப பிடிக்கலை. சுத்தமா பிடிக்கலை…” என்றால் பட்டென்று. மனதோ சென்றுவிடேன் என அவனின் காலடியில் கதறியது.
“இதையும் தாண்டி என் மனசு நான் உங்களை. வெண்மதி நான் சொல்ல வரத்து புரியுதா உங்களுக்கு?…” என்றான் அவளின் பார்வையை தன் புறம் திருப்பும் பொருட்டு.
அவனிடம் எப்போதடா கேட்போம் என எங்கும் அந்த வார்த்தை. அவனின் மனதை சொல்லும் இந்த நேரம் செத்துதான் போனாள். 
“சொல்லிவிடாதே. சத்தியமாய் இறந்துபோவேன். அதன் பின்னால் என்னால் வாழவும் முடியாது, உன்னோடு வாழவும் முடியாது” என மனதினுள் அரற்ற இப்படியே விட்டால் சரிவராது என்று முடிவெடுத்தவள், 
“நான் என்னைக்குமே உங்களை விரும்பினதில்லை முரளி. உங்க ஆட்டிடியூட் எனக்கு புடிக்கும். ப்ரெண்ட்லியா தான் உங்களோட பேசினேன். ஆனா இந்த நிச்சயதார்த்தம். இப்ப என் மனசுக்கு ஒத்துக்கலை. இதுக்கு மேல என் பேரன்ட்ஸ்க்காக இந்த மேரேஜ் பண்ணிக்க நான் தயாரா இல்லை…” 
நெஞ்சறிய பொய்யுரைத்தாள் அவள். வெண்மதியின் முகம் ஓன்று சொல்ல கண்ணீர் அவனை நகரவிடாமல் வேறொன்று சொல்லியது. இதில் வேறெதுவோ இருக்கிறது என மனம் அடித்து சொல்ல வார்த்தைகள் வராமல் திணறினான்.
கஷ்டப்பட்ட காலத்திலேயே யாரிடத்திலும் கெஞ்சுவதென்பது அவனுக்கு வரவே வராத ஓன்று. அப்படியிருக்க காதலை கெஞ்சிப்பெறவேண்டுமா?  ஆனாலும் வெண்மதியை விடமுடியவில்லை.
நெஞ்சம் முழுவதும் அவளை சுமந்துகொண்டு எதிர்கால மனைவியாகப்போகும் அவளுடன் கனவில் வாழ்ந்துகொண்டிருப்பவனுக்கு இந்த பேச்சும் முடிவும் வேரோடு சாய்த்தது.
“வெண்மதி…” என மீண்டும் அவளிடம் பேச,
“நீ என்னடா கெஞ்சிட்டு இருக்க? எவ்வளவு திண்ணக்கம் இவளுக்கு? இருக்கப்பட்ட நம்மட்டையே இம்புட்டு ஆட்டம் காட்டுறாளா? எந்த கோடீஸ்வரன் இவளை கட்ட தயாரா இருக்கானாம் இவளுக்கு என் மகன் கசக்குதாம்?…” என்று ஆனந்தன் பொரிந்து தள்ளினார். தாளமுடியவில்லை அவரால்.
“மதி…” என்றபடி சக்கர நாற்காலியில் நடேசன் வர, அவருடன் வெண்மதியின் கல்லூரி தோழன் தருணும் உடன் வந்தான். அதுவரை தடுமாறி தத்தளித்துக்கொண்டிருந்தவளுக்கு ஒரு வழி கிடைத்ததை போல பார்த்தவள்,
“நானும் தருணும் லவ் பன்றோம். வீட்ல சொன்னாங்கன்னு தான் நான் மேறேஜ்க்கு ஒத்துக்கிட்டேன். இப்ப தருண் வீட்ல ஓகே சொல்லிட்டாங்க. இதுக்கு மேல நான் யாருக்காகவும் மனசை மாத்திக்க மாட்டேன். இந்த ஆக்ஸிடென்ட் நடந்ததும் நல்லதுக்கு தான். சகுனம் சரியில்லன்னு எங்க வீட்லயும் இந்த மேரேஜை நிப்பாட்டிடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க…” 
முழுமூச்சாக நீளமாக அவள் சொல்லி முடிக்க வெண்மதியை அடிக்கவே பாய்ந்துவிட்டார் ஆனந்தன். அவரை வேகமாய் தடுத்து நிறுத்திய முரளி வெண்மதியை மீண்டும் ஆராயும் பார்வை தான் பார்த்தான்.
“யாரு ஏற்பாடு செஞ்சாத யாரு மாத்தறது? உன் இஷ்டத்துக்கு முடிவு பண்ணுவியா? நான் நினைச்சா நடுத்தெருவுல நிப்பாட்டிருவேன் உன்னையும் உன் குடும்பத்தையும். விளையாட்டா காட்டறீங்க?…” என எகிற,
“வேண்டாம்னு சொன்னா போகவேண்டியது தானே? என் பொண்ணு ஆசை தான் எங்களுக்கு முக்கியம். நீங்க இந்த குதி குதிக்கறத பாத்தா என்னவோ உங்கபக்கம் என்னவோ தப்பு இருக்கற மாதிரில தெரியுது? யாரு கண்டா நிஜமாவே கிட்னிய குடுத்துட்டு காச குடுத்து டாக்டர எங்கட்ட  மாத்தி சொல்ல சொல்லிருப்பீங்கன்னு சந்தேகமா இருக்கு…”
கலைவாணி வேண்டுமென்றே பேச வெண்மதி மீண்டும் கெஞ்சலாய் பார்த்தாள் அவரை.
“கிளம்புங்கன்னு சொல்றேன்ல. கல்யாணம் நின்னு போறதென்ன உங்களுக்கு புதுசா? இது நிச்சயதார்த்தம் தானே? இத்தோட முடிச்சுக்குவோம். நான் வேற ஒருத்தரை விரும்பறேன். என்கிட்டே வந்து லூசுத்தனமா லவ் பண்ணேன் அது இதுன்னு புலம்பி மனசை மாத்த பார்க்காதீங்க….” என கடுமையாக சொல்லியவள் கண்ணை மூடி சாய்ந்துகொள்ள,
“வாடா நீ முரளி. போதும்ப்பா இவளும் அந்த வினயா மாதிரி தான். இப்பவாச்சும் இவ புத்தி தெரிஞ்சதே. இந்த மாதிரி பொண்ணெல்லாம் நம்ப முடியாது. யாரு கண்ட அகல்யானம் ஆனா பின்னால இப்படி…” 
“அப்பா….” என மருத்துவமனையே கிடுகிடுக்கும் விதமாய் இரைந்தான் முரளி.
என்றுமே இத்தனை சத்தம் முரளி பேசமாட்டான். மென்மையே உருவான மகனின் இந்த குரல் ஆனந்தனை வாயடைக்க செய்ய தந்தையை எச்சரிக்கும் பார்வை பார்த்தவன் விரல் நீட்டி பேச கூடாது என எச்சரித்தான்.
மீண்டும் வெண்மதியை பார்க்க அவளோ மூடிய கண்களை திறக்கவே இல்லை. அழுகையை அடக்கும் விதமாய் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தது. 
எத்தனை யோசித்தும் வினயாவோடு வெண்மதியை ஒப்பிட மனம் ஒப்பவே இல்லை காதல் சுமந்த நெஞ்சம் அவளை விட்டுகொடுக்கவும் முடியாமல் தவிக்க அங்கே நிற்க பிடிக்காது கிளம்ப திரும்ப அந்த அறையின் வாசலில் கண்ணீருடன் அமர்ந்திருந்தார் சுகன்யா.
“அம்மா…” என ஓடிச்சென்று அவரை தூக்க,
“உன் கல்யாணத்தை பாக்காமலே கண்ணா மூடிடுவேனோ முரளி…” என்றவரை கட்டிக்கொண்டவன்,
“இங்க இருக்க வேண்டாம்மா. போகலாம்…” என்றவன் தந்தையையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் வீட்டிற்கு.
“அப்பா மண்டபத்துக்கு கால் பண்ணி எங்கேஜ்மென்ட் நின்னுடுச்சுன்னு சொல்லிடுங்க…” என்று சொல்லிவிட்டு தாயுடன் பின்னால் அமர்ந்துகொண்டான்.
முரளி சென்ற நொடியில் இருந்து வெண்மதியின் கண்களில் கண்ணீர் கரையுடைக்க அவளின் தோழன்,
“என்ன பண்ணிவச்சிருக்க மதி? அறிவில்ல?…” என்று கத்த,
“தம்பி ப்ளீஸ் உங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்க இதுல தலையிடாதீங்க…” என கலைவாணி அழுகையுடன் சொல்ல,
“தருண் எனக்கொரு ஹெல்ப் பண்ணுடா. இப்போதைக்கு இதையே நீ மெய்டேய்ன் பண்ணு…”
“அவர் எங்க வீட்ல வந்து கேட்டா?…”
“அவர் முரளி. சத்தியமா அப்படி ஒரு காரியத்தை செய்யவே மாட்டார்…” என்றதும் கோபத்துடன் அங்கிருந்து கிளம்பினான் தருண். அடுத்த சில நிமிடத்தில் கலைவாணிக்கு அழைப்பு வர,
“சண்டாளா நீயெல்லாம் விளங்கவே மாட்டடா. இப்ப உனக்கு சந்தோஷமா?…”
“குட், இனி உன் பொண்ணுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இனி அந்த முரளி சம்பந்தமா சம்பந்தம் வச்சுக்க பார்த்தீங்க அன்னைக்கு தான் உன் பொண்ணுக்கு இந்த உலகத்த பார்க்கிற கடைசி நாள்…”
“யார்டா நீ? இப்படி நல்லகாரியத்துக்கு கிளம்பின எங்களை ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சுட்ட?…”
“உன் பொண்ணு மட்டும் மண்டபத்துல கால் வச்சிருந்தா உன் பொண்ணுக்கு கடைசி காரியம் அதுவா தான் இருந்திருக்கும். இந்த ஆக்ஸிடென்ட் ஒரு சாம்பிள் தான். தப்பிச்சுட்டான்னு சந்தோஷப்படு…” என சொல்லி அந்த குரல் தொடர்பற்று போக தலையில் அடித்துக்கொண்டு அழுதார் கலைவாணி.
“எதுக்கு அழுவுற கலை? அதான் கல்யாணம் நின்னுடுச்சே. இவளை வளர்த்து ஆளாக்கி படிக்கவச்சதுக்கு பலனா கடைசி காலத்துல உனக்கு மகளா இருக்கத்தான் வேணும் இவ. கடனாளி மாதிரி தான். நீ ஒன்னு சொல்லி மாட்டேன்னு சொல்லிடுவாளா?…” என மங்களம் விஷத்தை கக்க வெண்மதி மனதளவில் மரித்துக்கொண்டு இருந்தாள்.
“அக்கா போதும், அவ என் பொண்ணுதான். நான் பெத்துக்கலைன்னாலும் அவ என் பொண்ணு தான். தயவு செஞ்சு இப்படி சொல்லாத. அவ முகத்த பாக்க முடியல…”
“சொல்லனும்த்தா. அப்பத்தான் அவளுக்கும் மனசுல பதியும். அவளை சோறுபோட்டு வளத்த கடமைக்கு அவளுக்கும் உங்கள பார்த்துக்கற கடமை இருக்குல. இப்படி பாதில தூக்கிகுடுக்கவா வளர்த்த?…” என மீண்டும் மீண்டும் மங்களம் தான் பாடியதையே திருப்பி திருப்பி பாட வெண்மதி கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள்.

Advertisement