Advertisement

நிலவு – 20
              அவனை கண்டு புன்னகைத்தவள் மனதில் இதமான சாரல். சில நொடிகள் ஒருவரை ஒருவர் பார்வையால் உரசியபடி நிற்க வேன்மதிதான் இவன் ஆரம்பிக்க மாட்டான் என பேச்சை துவங்கினாள்.
“பேசனும், புரியனும்னு வந்தீங்க? இப்போ இவ்வளோ சைலன்ட்? ஆளுங்க இருந்தா தான் பேச்சு வருமோ?…” என கிண்டலாய் அவள் பேச இன்னுமொரு அழகான புன்னகை அவன் முகத்தில்.
“அப்படின்னு இல்லை…” என்றவன் முடிக்க கூட இல்லை. 
“என்னைப்பத்தி ஒன்னும் தெரியாது. ஆனாலும் எவ்வளவு தைரியமா மேரேஜ் பார்மாலிட்டீஸ் ஆரம்பிக்க சொல்லிட்டீங்க? மேற்படி விஷயம் பேசனும், ரெண்டு வீட்டுக்கும் ஒத்துப்போகனும். நான் இன்னும் உங்களை பிடிச்சிருக்குன்னே சொல்லலையே…”
“சொல்லவே வேண்டாம். எதுவும் சொல்லிட்டா அந்த பீலிங் முடிஞ்சிடும். சொல்லாம இருந்தா தான் அதோட எதிர்பார்ப்பு அதிகமாகும். எப்ப சொல்வீங்கன்னு எனக்குள்ள ஒரு ஏக்கம் இருந்துட்டே இருக்கனும். ஐ லவ் இட். எனக்கு உங்களோட வார்த்தை தேவையில்லை…” என்றவன் வெண்மதியை இன்னும் நெருங்கி நின்று அவளின் விழிகளை சுட்டிக்காண்பித்து,
“இந்த கண்கள் சொல்லுது. இதை விட ஒரு உணர்வை உங்க வார்த்தை குடுத்திடுமா என்ன?. சொல்ல வேண்டாம்…” என சொல்லி அவளருகே சுவற்றில் சாய்ந்து நின்று மார்பின் குறுக்கே கை கட்டி பேச அவனின் பேச்சில் ஸ்தம்பித்து பார்த்தவள் மனதினுள் அவனின் நேசம் வாசம் வீச அதை ஆழ அனுபவித்து முகர்ந்து அதனுள் முகிழ்ந்தாள்.
இருவருக்கு என்னவோ காலம் காலமாய் வாழ்ந்த ஒரு உணர்வு. எந்தவித தயக்கங்களும் இன்றி அவனிடம் வார்த்தையாட முடிந்தது அவளால். 
அவனுக்குமே அவள் தனக்கு புதிது என்னும் எண்ணம் வரவே இல்லை. ஏதோ காலங்காலமாய் உயிருக்குயிராய் பழகிய ஒரு தோற்றம் தான் உள்ளுக்குள் தான் ஆர்ப்பரித்தது.
அதன் பொருட்டே இருவரும் சரளமாக பேச ஆரம்பித்தனர். இதுதான் தன் குடும்பம் என முடிவு செய்த நிலையில் தன் மனம் கொள்ளைகொண்ட அந்த உள்ளங்களை காதல் என்னும் உணர்வு ஆட்கொண்டது அவ்விடம்.
“என்கிட்ட வேற ஏதாவது கேட்க, என்னை தெரிஞ்சுக்கனுமா?…”
“என்னை பத்தி தான் முதல்ல நீங்க தெரிஞ்சுக்கனும். நான் கொஞ்சம் லேசி. எல்லாத்துக்கும் லேட் பண்ணுவேன். எனக்கு…” என்றவள் அவன் அடக்கப்பட்ட புன்னகையை பார்த்து முறைத்தவள்,
“என்ன?…” என,
“ஓரளவுக்கு தெரியும் தான். இன்னும் தெரிஞ்சுக்கலாம். டைம் இருக்கு…” இன்னும் சாவகாசமாய்.
“அப்போ போலாம்…” 
“ஏன்?…”
“வெளில வெய்ட் பண்ணுவாங்க…” வெண்மதி தான் அதையும் சொல்ல,
“பேச தானே அனுப்பினாங்க…” என்றான் பதிலாய்.
“யாரு அவங்க அனுப்பினாங்களா?…” என இவள் குறும்பாய் பார்க்க பதிலின்றி அவன் பார்க்க அது உள்ளுக்குள் அவளை படபடக்க செய்தாலும் காண்பித்து கொள்ளாமல் இயல்பாய் இருப்பதை போல பார்த்து என்னவென்று புருவம் உயர்த்தினாள்.
“நீங்க ரொம்ப கஷ்டப்படறீங்க வெண்ணிலா…” அடக்கப்பட்ட புன்னகையுடன் அவன் சொல்ல,
“என்ன? என்ன கஷ்டம்? புரியலை…”
“இந்த சுட்சுவேஷனுக்கான வெட்கம், படபடப்பு எல்லாமே உங்க முகத்துல தெரியுது. ஆனாலும் அதை மறைக்க நீங்க சிரமப்படறீங்க. நீங்க எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே தான்…” என கிண்டல் பேசி கள்ளப்புன்னகை புரிய அவனை முறைக்க,
“உண்மையை சொல்லிட்டேனா?…” என மீண்டும் வம்பு பேச,
“எல்லாமே என் முகத்தை பார்த்து நீங்களே முடிவு பண்ணி சொன்னா நான் எதுக்காம்?…” என்றவளை இன்னும் நெருங்கி அணைத்தது போல நிற்க சட்டென கண்களை மூடியவள்,
“தள்ளி நின்னு பேசுங்க…” என சொல்லும் பொழுதே அவனின் மூச்சுக்காற்றின் சூட்டை உணர்ந்தாள்.
“உங்களை பார்த்தா இப்படின்னு தெரியலை. ஆனா இப்ப இப்படி பன்றீங்க?…” என முணுமுணுத்தவள் அவனை விலகி நிற்கவும் இல்லை, கோபப்படவும் இல்லை. இதை உணர்ந்தவனின் மனதில் சொல்லொண்ணா உணர்வு பொங்கி பாய்ந்தது.
“இவளை அடையத்தான இத்தனை சோதனைகளும், வேதனைக்களுமா?” என மனதில் தோன்ற வெண்மதியின் முகத்தை விழிமூடாது ரசித்தவன்,
“நீங்க தான் கேட்டீங்களே. சொல்லிட்டே போறேன்…”
“தெரியாம கேட்டுட்டேன். பின்னாடி போங்க…” என்றால் ஒற்றை கண் மட்டும் திறந்து.
“நீங்களே தள்ளிவிடுங்க. கை இருக்கு தானே?…” என விடாது அவளை சீண்ட,
“போங்க…” என்றால் இப்பொழுது நன்றாக பார்த்து முறைப்புடன். ஆனாலும் விழிகள் மின்னியது.   
“நீங்க எதுக்குன்னு நீங்க கேட்டீங்கள்ள. அதை சொல்லிட்டு…” என்றவனை கையெடுத்து கும்பிட்டு,
“எனக்கு இப்போ தெரிஞ்சுக்க வேண்டாம்…” என்றதும் சிரித்துக்கொண்டே பின்னால் வந்தவன், 
“இப்போ நாங்க கிளம்பட்டுமா?…”என்றதும் வெண்மதி தலையசைக்க,
“ஸீ யூ சூன்…” என சொல்லி அறையிலிருந்து கிளம்பிவிட்டான். ஆனால் இன்னமும் அவன் அங்கேயே நிறைந்து இருப்பதை போன்ற ஒரு உணர்வை அவளிடம் விட்டுத்தான் சென்றான். இதழ்களில் நெளியும் புன்னகையுடன் கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.
வெளியே வழக்கமான பேச்சுக்கள் முடிந்து திருமணம் அடுத்த மூன்று மாதத்தில் என்றும் நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் வைத்துக்கொள்ளலாம் என்றும் ஈஸ்வரியின் தந்தை ஜாதகம் பார்த்து சொல்லிவிட,
“ஏன் அவ்வளவு நாள் தள்ளி வைக்கனும்? அடுத்த மாதமே நல்ல நாள் இருந்தா…” என சுகன்யா சொல்ல அவரின் பேச்சுக்கான காரணம் புரிந்தவர்கள் அமைதியாக பார்க்க,
“இல்லைங்கம்மா வெண்மதி ஜாதகப்படியும், பொண்ணு மாப்பிள்ளைக்கான ராசிப்படியும் இதுதான் நல்ல நாள். இல்லைன்னா. அதை விடுங்க. இது தான் சரியா இருக்கும். அவங்க எதிர்கால வாழ்க்கையும் சுபிட்சமா இருக்கும்…” என்றுவிட அனைவருக்கும் சரி என்று பட்டது.
முரளி சுகன்யாவின் கையை அழுத்திக்கொடுத்தவன் கண்களால் ஆறுதல்படுத்தினான். 
அதன் பின்னர் மறைக்க திருமண வேலைகளை அப்படி பார்ப்பது என்று பேசி கிளம்பிவிட ஆனந்தனின் பார்வை முழுவதும் மகனிடம் தான். இதுநாள் வரை இப்படி அவனை பார்த்ததில்லை என்பதால் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தார் அவனின் மகிழ்ச்சியான பூரித்த முகத்தை.
வீடு வந்து சேர்ந்ததும் பொறுத்து பொறுத்து பார்த்தவர் ஒருவழியாய் இரவு சுகன்யாவிடம் கேட்டேவிட்டார்.
“முரளி அந்த பொண்ணை லவ் பன்றானா?…” என பட்டென கேட்கவும்,
“ஏன் திடீர்ன்னு?…” என்றார் சுகன்யா.
“இத்தனை வருஷத்துல நாம எத்தனை பொண்ணு பார்த்திருப்போம். எதையும் காதுகுடுத்து கேட்டுக்கலை. போனா போ, வந்தா வான்னு இருந்தான். எந்த பொண்ணையும் பார்க்க நம்மோட வந்ததில்லை. கல்யாணம்னு சொன்னாலே முகமே மாறிடும்…”
“அதுக்கும் நீங்க கேட்டதுக்கும் என்ன சம்பந்தம்?…” கூடவே முகத்தில் ஒரு கேலி புன்னகை.
“தெரிஞ்சே கேட்கற நீ. அந்த பொன்னை புடிச்சிருக்குன்னு நேரடியா என்கிட்டே சொல்றான். பொண்ணு பார்க்க கூட வந்தான். நாம மத்த விஷயங்கள் பேச முன்னமே அவனே சம்பந்தி, அத்தைன்னு உரிமை பேச்சை ஆரம்பிச்சான். பொண்ணுக்கிட்ட தனியா பேச போனான். இதுவே தெரியலையா?…”
“சரி அப்படியே வச்சுக்கிட்டா என்ன? விரும்பறதாவே இருக்கட்டுமே. இதைத்தானே நாமளும் விரும்பினோம்…”
“அவன் விரும்பறான். எனக்கும் சந்தோஷம் தான். இதை முதல்லையே சொல்லியிருந்தா நான் அப்பவே சரின்னு சொல்லிருப்பேன்…” என்றவரை முரைத்த சுகன்யா,
“உங்களுக்கு இப்ப ஏதோ முனி புடிச்சு ஆட்டுது. அதான் இப்படி இருக்கேங்க…”
“அதைவிட்டு, அவங்க வீட்ல சம்மதிச்சு நிச்சயம் வரை வந்தாச்சு. இப்ப விபீஷ் மூலமா தேவையில்லாத பிரச்சனை கிளம்பறதுக்குள்ள நாமலே நடந்ததை சொல்லிடலாம்ன்னு நினைக்கேன்…”
“அவங்களுக்கு தெரியாமலா பொண்ணு பார்க்க வர சொல்லியிருப்பாங்க?…” 
“அவங்களுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ? நாம போய் தெளிவா பேசிடுவோம். இன்னொருக்க மணமேடை வரை வந்து என் பையன் கல்யாணம் நிக்க வேண்டாம். அதுவும் அவனா விரும்பி தேர்ந்தெடுத்த வாழ்க்கை. அவனுக்கு நல்லபடியா கிடைக்கனும்…” கண்கலங்க அவர் சொல்ல கலங்கி போனார் சுகன்யா.
“அதெல்லாம் எதுவும் ஆகாது. நல்லபடியா இந்த கல்யாணம் நடக்கும். நாளைக்கே நீங்க சொன்ன மாதிரி போய் பேசிட்டு வந்திருவோம்…” என்றவர் மறுநாள் முரளியிடம் இதை சொல்ல அவனும் ஆமோதித்தான்.
அன்றே ஹாஸ்பிட்டல் சம்பந்தமான அனைத்தையும் அள்ளிக்கொண்டு வெண்மதியின் வீட்டிற்கு செல்ல முதலில் இதை எல்லாம் கேட்டவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
வெண்மதியும் அனைத்தையும் பார்த்து தான் நின்றாள். மகளின் தெளிவு நடேசனுக்கு இருக்க அவர் தெளிவான மனதுடன் ஆனந்தன், சுகன்யாவின் பேச்சுக்களை ஏற்றார். கலைவாணிக்கு தான் நெருடலாய் இருந்தது. அதையும் நடேசன் சொல்லி சமாளிக்க ஒருவித தயக்க மனநிலையுடனே தான் அடுத்த வேலைகளை பார்த்தார்.
வெண்மதி குடும்பத்தினரின் பெருந்தன்மையும், புரிந்துணர்வுமே அவர்களின் மேலான மதிப்பை விதைத்தது ஆனந்தனுக்கு. அந்தஸ்து என்னும் வேலியை விட்டு வெளியில் வந்து முழுமனதுடன் பழக ஆரம்பித்தார் அவர்களுடன்.
அதன் பின்னான நாட்கள் வேகமாய் நகர முரளியும், வெண்மதியும் ஒருவரை ஒருவர் ஓரளவிற்கு நன்றாகவே அறிந்துகொண்டனர். 
முரளியாகவே எப்பொழுதும் அழைப்பான். வெண்மதி எதாவது விஷயம் இருந்தாலே ஒழிய அவனுக்கு அழைக்கமாட்டாள். அவனாக அழைத்தாலும் அதிகமாய் பேசாமல் அளவோடு நிறுத்திக்கொள்வாள். அது கூட கலைவாணியின் கண்டிப்பினால் தான்.
“மாப்பிள்ளை பேசறாரேன்னு லொட லொடன்னு வாயாடாத. நாம கொஞ்சம் கட்டுதிட்டா இருந்தா தான் நல்லது. கல்யாணத்துக்கு பின்னால யார் கேட்க போறா உங்களை. ஆனா அதுக்கு முன்னால அளவா பேசு. அவரே பேசினாலும் நீ கொஞ்சம் வாயடக்கி பேசு…”
“எதுக்கு கலை அவளை பேச வேண்டாம்னு சொல்ற?…” நடேசன் கூட கேட்க,
“அதுதாங்க நமக்கு மதிப்பு. மாப்பிள்ளைனா அவர் மட்டுமா பேசுவாரு? அவங்க அம்மாவும், அப்பாவும் கூடதான் பேசுவாங்க. இவ பாட்டுக்கு ஆள் கிடைச்சிருக்குன்னு பேச அவங்க என்ன பொண்ணை வளர்த்து வச்சிருக்காங்க? இப்பவே இப்படி பேசுதேன்னு ஒரு நினைப்பு வந்துட்டா அது நம்ம பொண்ணை மட்டுமில்ல நம்மளையும் பாதிக்குமில்ல…”
“கல்யாணமாகி போகப்போற பொண்ணு புகுந்த வீடு போகும் போதே மனசுக்கு நறுவிசா இருந்தா அவ அடுத்து பேசினாலும் உரிமையோட பேசுதுன்ற மாதிரி போய்டும். நமக்கும் அதுதான் மரியாதை. அதுக்குத்தான் சொல்றேன்…”  
மற்ற நேரமாக இருந்தால் கேட்டிருக்க மாட்டாளோ என்னவோ? வளர்ப்பு, குடும்ப மரியாதை என்ற வார்த்தைகள் அவளை அதிகமாகவே கவனிக்க செய்தது. கவனத்தோடு தான் நடந்துகொண்டாள்.
என்ன தான் அவனிடம் அளவாக பேசினாலும் அவன் மேலான காதல் அவளுக்குள் விஷமென பரவிக்கிடந்தது. 
ஆம், அணுவணுவாய் அவளை வதைக்கும் விஷம். உயிர் வாங்கும் விஷம். அவனுக்கும் அதுபோல உணர்வுகள் இருக்குமா என நினைக்க தோன்றாத விஷம். அமிர்தமென அருந்தும் காதல் விஷம். 
நிச்சயதார்த்தம் வரை விபீஷின் தொந்தரவோ எந்தவித எகத்தாள பேச்சுக்களோ எதுவும் முரளியை வந்தடையவே இல்லை. அதுவே ஒருசந்தேகத்தை கிளப்பி இருக்க மேலும் சிந்திக்கமுடியாதவாறு அடுத்த வேலைகள் அவனை ஆக்கிரமித்துக்கொண்டன.
வெண்மதியின் வீட்டில் அனைத்து உண்மையும் புரிந்துகொண்ட காரணத்தினால் நிச்சயதார்த்ததையே மிக பிரமாண்டமாய் ஏற்பாடு செய்திருந்தார் ஆனந்தன்.
“பார் என்மகனின் திருமண நிச்சயத்தை பார்” என உறவுகளுக்கும் ஊருக்கும் சொல்லிக்கொள்வதை போலவும்,  உன்னால் முடிந்தால் நிறுத்தி பார் என விபீஷிற்கு சவால் விடுவதை போலவும் இருந்தது. 
“இவரா திருமணத்தில் பிடித்தமில்லாமல் இருந்தது?” என தாயும் மகனும் வியக்கும் வண்ணம் இருந்தது ஆனந்தனின் செய்கை.
விபீஷிற்கு இது எதுவும் தெரியாமல் இல்லை. அனைத்தையும் ஒருவித வஞ்சக புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்த நாளும் நேரமும் கூட வந்துவிட்டது.
வெண்மதியின் சொந்தங்கள் அனைவரும் ஒருவித பிரமிப்புடன் மண்டபத்திற்கு செல்ல முரளியின் சொந்தங்கள் கேலியுடனும், இதுவாவது நடகுமா என்னும் விஷமத்துடனும் சென்றனர்.
சுகன்யாவிற்கு இது எதுவும் தெரியாமல் இல்லை. ஆனாலும் கண்டுகொள்ளவில்லை. பேசுபவர்கள் பேசத்தான் செய்வார்கள் என்ற நினைப்புடன் கிளம்ப ஆயத்தமானார்.
“முரளி எல்லாரும் கிளம்பியாச்சு. நாம மட்டும் தான். இப்போ கிளம்பினா சரியா இருக்கும்…”
“வெண்மதி வீட்ல நாம போன் பண்ணவும் கிளம்புவாங்க. இப்பவே பண்ணிடட்டுமா?…” என்றான் அவளிடம் பேசவேண்டும் என்கிற ஆசையுடன். 
அன்று முழுவதும் வெண்மதியும் பேசவில்லை அவனிடம். அவள் ஈட்டில் பேசுவதற்கான சூழ்நிலை இல்லாது கூட்டமாய் இருக்க இவன் அழைக்கும் நேரம் கூட எடுக்கமுடியவில்லை.
இப்பொழுது வெண்மதியிடம் இதை சொல்வதற்காகவாவது பேசுவோம் என்று நினைத்திருந்தான். 
“முதல்ல அதை செய் முரளி. நமக்கு பக்கம். ஆனா அவங்களுக்கு கூட பதினைஞ்சு நிமிஷம் எடுக்கும். இப்ப அவங்க கிளம்பினா தான் நாம போன கொஞ்சம் நேரத்துல அவங்களும் வர சரியா இருக்கும்…” என ஆனந்தன் துரிதப்படுத்த,
“நீங்க முதல்ல போய் கிளம்புங்க. ட்ரெஸ் எடுத்துட்டு போய் அங்க மண்டபத்துல இருந்தபடியே கிளம்பி அங்கயே இருக்க வேண்டியது தானே? நானாவந்து முன்னாடி போய்ருப்பேன். கேட்டா தானே?…”
“நல்லா இருக்கே உன் கதை? அங்கயே கிளம்பி அங்கயே உங்க ரெண்டு போரையும் வரவேற்கனுமா? மூணு பெரும் போய் அத்தனை பேர் முன்னாடியும் இறங்கின அதானே கெத்தா இருக்கும்…” என்று சொல்லவும் முரளியும், சுகன்யாவும் புன்னகைக்க,
“நான் போய் வேற ட்ரெஸ் மாத்திட்டு வரேன். நீங்க சாமி கும்பிட ஆரம்பிங்க…” என உள்ளே ஓடினார். நடையில் சிறுபிள்ளையின் துள்ளல். எதையோ சாதித்த உணர்வு அவரிடம்.
“ஒன்னு ஓவரா கொஞ்சறது. இல்ல ஓவரா கெஞ்ச விடறது. உங்கப்பாவுக்கு எல்லாமே எல்லை கோட்ட தாண்டி தான். நீ வா…” என பூஜையறைக்கு செல்ல முரளி வெண்மதிக்கு அழைத்துவிட்டு அவள் எடுக்காமல் போக நடேசனுக்கு அழைத்து கிளம்பிவிட சொல்லிவிட்டு சாமி கும்பிட சென்றான்.
பின் மூவரும் கிளம்பி மண்டபத்திற்கு வந்து சேர மற்றவர்களின் பார்வையில் ஆனந்தன் பெருமையாக, நிமிர்வுடன் குடும்பம் சகிதமாக உள்ளே சென்றார்.
“கொஞ்சம் நார்மலா தான் இருங்களேன். இத்தனை கர்வம் ஆகாது…” சுகன்யா சொல்லியும்,
“இது பெருமையா இருக்கவேண்டிய நேரம். என் மகனுக்கு கல்யாணம். நம்மள பேசினவங்க எல்லாரும் இன்னைக்கு வயித்தெரிச்சல்ல வாய பிளக்கனும்…”
“என்ன பேச்சு இது? வந்தவங்க மனசார வாழ்த்தனும்னு நினைங்க. அது போதும். நம்ம மகன் வாழ்க்கையை ஆரம்பிக்க போற நேரம் இது ஆசிர்வாதத்தோட ஆரம்பிக்கட்டும். அப்போ தான் நல்லது…” தாயாய் பதறி சொல்ல,

Advertisement