Advertisement

“எனக்கு ஓகேப்பா. நீங்க வர சொல்லுங்க. நேர்ல பார்த்து முடிவெடுக்கலாம்…” என்று சம்மதம் சொல்லிவிட்டாள். 
அவளுக்கு முரளியையும், சுகன்யாவையும் பார்த்த ஞாபகம் சுத்தமாக இல்லை. கலைவாணிக்கு கூட எங்கோ பார்த்த நினைவு தான். சரியாக ஞாபகம் வரவில்லை.
எந்தவித பாசாங்கும் இன்றி பட்டென தன் மனதில் பட்டதை சொல்லிவிட்டு ஈஸ்வரியிடம் பென்ட்ரைவ் நீட்ட அதை வாங்கிக்கொண்டவள் நடேசனிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப அவளின் பின்னால் வந்த வெண்மதி,
“ஈஸ் மூஞ்சி என்ன இப்படி வச்சிட்டு போற?…”
“ஏன் கேட்கமாட்ட? மாப்பிள்ளை பார்க்காங்கன்னு சொன்னாலே நார்மலாவே பொண்ணுங்களுக்கு கொஞ்சம் பயம் இருக்கும். வெக்கம் இருக்கும். இப்போ எனக்கு எதுக்கு கல்யாணம்? உங்களை விட்டு பிரியமாட்டேன் அப்படி இப்படின்னு சில செண்டிமெண்ட் சீன்ஸ் கூட வரும்…”
“ஏன் எங்க வீட்ல கூட அம்மா எனக்கு வரன் பார்க்கனும்னு சொன்னப்ப அத்தனை ரகளை பண்ணினேன் நானு. நீ என்னடான்னா ஒரு நிமிஷத்துல ஓகே சொல்லிட்ட. அதான் நீ என்ன பீஸ்ன்னு யோசிக்கிறேன்…” ஈஸ்வரி சொல்லவும் வாய்விட்டு சிரித்த வெண்மதி,
“லூஸு ஈஸு. ஆணோ பொண்ணோ ஒரு கட்டத்தில கல்யாணம் செஞ்சுதான் ஆகனும். பெத்தவங்களுக்கு அவங்க வாழ்க்கை நிறைவை எட்டும் காலம்னு வந்தா  அது பிள்ளைங்களோட திருமண வாழ்க்கை ஆரம்பிக்கிற இடத்தில தான். அடுத்து பிள்ளைங்க எதிர்கால சுபிட்சமா அமைஞ்சு சந்தோஷமா குழந்தை குட்டிகளோட வாழறதை பார்த்ததும் பெத்தவங்க வாழ்க்கை முழுமை அடைந்திடும்…”
“நான் வேண்டாம்னு சொன்னா எனக்கு கல்யாணமே பண்ணி வைக்காமலா இருப்பாங்க. எப்படியும் என்னை பேசி சம்மதிக்க வைப்பாங்க. நடக்க போற ஒண்ணு. அதுக்கு எதுக்கு அத்தனை வருத்தம், கெஞ்சல், கொஞ்சல், சமாதானம். ப்ராக்டிக்கலா பார்க்கனும்…”
“உனக்கு இத்தனை வயசுல இதை எல்லாம் செய்யனும்னு பார்த்து பார்த்து பண்ணினவங்களுக்கு கல்யாணம் எப்ப பண்ணனும்னு பார்க்க தெரியாதா? அதை எதுக்கு நாம தடுக்கனும்? இப்ப உடனே மாப்பிள்ளை பார்த்து உடனே நான் கல்யாணம் பண்ணிட்டு போய்ட போறதில்லையே…”
“பொண்ணு பார்க்கனும், எனக்கு அவங்களையும் அவங்களுக்கு என்னையும், என் குடும்பத்தையும் பிடிக்கனும். பேச்சுவார்த்தை ஒத்துவரனும். பிடிச்சா நாள் குறிக்க அது இதுன்னு இன்னும் எவ்வளோ பார்மாலிட்டீஸ். பார்த்துக்கலாம். ஆரம்பத்திலேயே எதுக்கு தடங்கல் சொல்லனும்?…”
வெகு யதார்த்தமாக வெண்மதி பேச பேச போதும் என்பதை போல கை நீட்டி தடுத்த ஈஸ்வரி,
“ஊருக்கெல்லாம் ஒரு வழின்னா உனக்கு தனி வழி. உன்னை தெரிஞ்சும் உன்ட்ட போய் ஏன் எதுக்குன்னு கேட்டேன் பாரு. எனக்கு தேவை தான். பாவமே புள்ளையை அதுக்குள்ளே இஸ்திரி ஆக்கி துரத்துறாங்களே, அப்பாம்மாவ பிரிஞ்சு தவிக்குமேன்னு நினைச்சேன் பாரு…”
கண்களை உருட்டிக்கொண்டு வெண்மதியை பார்த்து பேச பேச அவளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“நான் ஏன் தவிக்க போறேன்? பையன் இதே ஊராம். நினைச்சப்போ வந்து பார்த்துப்பேன். வர வர உன் களவாணி என்னை கண்டுக்கறதே இல்லை. கல்யாணம் ஆகிட்டா மாப்பிள்ளைக்காக, நானும் அடுத்த வீட்டுக்கு போய்ட்டேனேன்னு நினைச்சு இன்னும் கொஞ்சம் கவனிப்பு அதிகமா கிடைக்கும்ல. என்ஜாய் பண்ணனும் ஈஸ்…”கண்ணடித்து வெண்மதி சொல்ல,
“அடிப்பாவி. இந்த வரன் தான்னு முடிவே பண்ணிட்டியா? சரியான ஆளு நீ. உன்னை துரத்துறதுல தப்பே இல்லை…” என்று சொல்லி வெண்மதியின் தோளில் அடித்தவள்,
“உனக்கு பிடிச்சிருக்கா?…” என,
“ஹ்ம்ம், பார்க்க ஓகே மார்க் தான். அப்பாவோட ஓவர் புகழ்ச்சியை பார்த்தா பர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் போல. மிஸ்டர் பெர்பெக்ஷன். முதல்ல அவனுக்கு என்னை பிடிக்குமோ என்னவோ? ஏதோ ஒரு இன்டென்ஷன் சொல்லுது ஓகே ஆகும்னு. நேர்ல பேசிப்பார்ப்போம். என் பேச்சுல ஓடாம இருந்தா சரி…” 
விளையாட்டாய் சொல்லியவள் உண்மையில் அவனை அவள் தான் வேண்டாமென மறுத்து ஓட வைத்தாள். 
அந்த வாரத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து முரளிதரன் குடும்பம் வர பெண் பார்க்கும் படலத்திற்கென கலைவாணியின் கைவண்ணத்தில் பட்டுரோஜாவர்ண புடவையில் அழகாய் இருந்தாள் வெண்மதி. 
பின்னால் மற்றவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம் என. அதன் போலவே முரளி குடும்பமும், வெண்மதியின் குடும்பமும், உடன் ஈஸ்வரியின் தந்தை மட்டும்.
சுகன்யாவை பார்த்ததுமே கலைவாணிக்கு சற்று பிடிபட்டுவிட்டது. யோசித்தவர் சுகன்யாவிடம் தங்களை தெரிந்திருக்கிறதா என தேட அதை புரிந்துகொண்டதை போல,
“எனக்கு உங்களை நல்லாவே ஞாபகம் இருக்கு. நீங்க சங்கடப்பட வேண்டாம். பீச்ல பார்க்கறதுக்கு ரெண்டு நாள் முன்ன தான் உங்க பொண்ணு ப்ரபோஸல் எங்களுக்கு வந்தது. பீச்ல பார்த்ததும் பிடிச்சும் போச்சு. இருந்தாலும் நல்ல நாள் பார்த்து வரனும்னு தான் வெய்ட் பண்ணினோம்…”
சுகன்யா அவரை இலகுவாக்க இயல்பாகவே அவருடன் ஒட்டிக்கொண்டார் கலைவாணி. 
“கலை போய் மதியை கூட்டிட்டு வா…” என்று நடேசன் சொல்லவும் சுகன்யா சென்று முரளியின் பக்கத்தில் அமர்ந்துகொள்ள ஆனந்தன் முகத்தை சாதாரணமாக வைக்க படாதபாடு பட்டார்.
“கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருங்களேன்…” சுகன்யா காதில் கிசுகிசுக்க,
“வீடு ரொம்ப சின்னதா இருக்கு…” என அசூயையுடன் சொல்ல,
“நம்ம கல்யாணத்தப்போ இதை விட சின்ன வீட்ல தான் நாம இருந்தோம், மறந்துட்டீங்களா?. அதுவும் சொந்த வீடு கூட கிடையாது…” என சுகன்யா பட்டென சொல்ல ஆனந்தன் முகம் விழுந்துவிட்டது.
சுகன்யாவிற்கு அத்தனை வருத்தம் கணவரின் மாறுதலை நினைத்து. எத்தனை நல்ல மனிதர் புகழ், வசதி போதையில் இப்படி மாறிப்போனாரே என வேதனையுடன் பார்த்தார் ஆனந்தனை.
மனைவியின் பார்வையில் துணுக்குற்ற மனிதர் தலைகுனிந்து கொண்டார். அவருக்கே தன் போக்கு சில நேரம் அதிகம் என்று தோன்றினாலும் தவறென்ன என்று தான் நினைத்துக்கொள்வார்.
நடேசன் பேச்சில் அவரை இழுக்க ஏனோ சுகன்யாவின் வேதனையான பார்வை கொஞ்சமேனும் நடேசனுடன் சகஜமாக பேசவைத்தது. 
வெண்மதியை அழைக்க வந்த கலைவாணி அலங்காரத்துடன் நின்ற மகளை பார்த்து புன்னகைத்தவர் சட்டென்று,
“மதி வந்திருக்கறது யாருன்னு தெரியுமா?…” என்று சொல்ல வேன்மதிக்குமே ஆச்சர்யம்.
“நிஜமாவாம்மா?…” என,
“அது விஷயமில்லை. நீ கொஞ்சம் அவங்கட்ட பதமா பேசுடி. முதல் முதல்லையே அந்த தம்பிய அடிச்சு தண்ணில தள்ளிருக்க. எனக்கு உன்ன நினைச்சா தான் பக்குன்னு இருக்கு…” என கெஞ்சலும், மிரட்டலுமாய் பேசிய தாயை கண்டு சிரித்தவள்,
“ம்மா, இது ஒரு மிஸ்அண்டர்ஸ்டேண்டிங். இதுக்கு போய் இப்படி பயப்படறீங்க?…” என இலகுவாய் சொல்லியவள்,
“போலாமா?…” எனவும் தான் கலைவாணி முகம் தெளிந்தார்.
சபையில் கை கூப்பி வந்து நின்றவளை பார்த்ததும் பசுமரத்தாணி போல் மனதினுள் ஒட்டிக்கொண்டவளை ஒருவித உரிமையோடு தான் பார்த்தான் முரளிதரன். 
போட்டோவில் பார்த்ததும் பிடித்தது தான். அவளை பற்றி அறிந்துகொண்டு அவளுக்கு தெரியாமல் இரண்டுமுறை அலுவலகம் செல்லும் போது வெளியில் வைத்தும் பார்த்திருந்தான் தான். ஓரளவிற்கு அவளை பற்றி தெரிந்தும் கொண்டான்.
ஆனால் இப்பொழுது தனக்காக முடிவு செய்து தன் எதிர்காலமாய் வந்து நிற்பவளை அகம் மலர்ந்து பார்த்தான். அதிலும் வெண்மதியின் பெற்றோரின் பேச்சிலேயே அவர்களுக்கு இந்த சம்பந்தத்தில் மூ சம்மதம் என்று அப்பட்டமாய் தெரிந்துபோனதில் இன்னும் உற்சாகமானான்.
அவனின் பார்வை வெண்மதிக்குள் புது உணர்வொன்றை பிறப்பிக்க மிதமான புன்னகையுடன் தலை குனிந்துகொண்டாள். அவனை நேரில் பார்க்காதவரை கூட எதுவும் தோன்றவில்லை.
சற்று முன் தாய் சொல்லியதில் முதல் சந்திப்பு நினைவு வந்த பொழுதும் பார்த்திருக்கிறோம் என்கிற எண்ணம் தான். ஆனால் அனைவரின் முன்பும் வந்து கைகூப்பி வணங்கி அவனை பார்த்த அந்த நொடி அவனின் பார்வையிலும், புன்னகையிலும் கொஞ்சம் தடுமாறித்தான் போனாள்.
அதிலும் அவனின் உரிமை பார்வையும், குரலும் வேறு அவளை அவன் பால் ஈர்க்க பிடித்துத்தான் போனது. 
பெரியவர்கள் பொதுவான சம்பிரதாய பேச்சுக்களை துவங்க முரளிக்கு இருப்புக்கொள்ளவில்லை. வெண்மதியிடம் பேச ஆவல்கொண்டவன் கேட்டேவிட்டான்.
“பொண்ணுக்கிட்ட தனியா பேசனும்…” அவனின் குரல் முரளியின் வெண்மதியின் மனதை அசைத்துப்பார்த்தது. ஏற்கனவே ஒருவித ஈர்ப்பு அவனிடம் இருந்தது. இப்பொழுது மேலும் அவன் புறம் அந்த குரல் இழுத்தது.
‘வெண்மதி குரலையும், ஆளையும் பார்த்து கவுந்திடாதே. வந்து பேசட்டும்’ தனக்கு சொல்லிக்கொண்டே நடேசனை பார்க்க,
“அழைச்சிட்டு போம்மா…” என்றவர் அவர்களோடு பேச ஆரம்பித்தார். கலைவாணி தான் அவளறைக்கு அழைத்து செல்ல முரளியும் எழுந்தான்.
“வெண்ணிலா…” ஜன்னல் புறம் திரும்பி உள்ளே செல்ல நின்றிருந்தவளை அழைக்க அவனின் அழைப்பும் பார்வையும் முற்றிலும் அவளை புரட்டித்தான் போட்டது.
என்ன இது இப்படி இவனிடம் மயங்கி நிற்கிறேன்? என திகைத்து அவனை விழிவிரித்து பார்க்க அவன் பின் நின்ற கலைவாணியோ,
“தம்பி அவ பேரு வெண்மதி. நீங்க…” 
“இல்லை அத்தை எனக்கும் தெரியும். ஆனா இவங்க எனக்கு வெண்ணிலா தான்…” என சொல்லி அவளை பார்க்க இன்னமும் வியந்துதான் பார்த்தாள்.
‘அடப்பாவி பிக்ஸ் பண்ணிட்டானே?’ அவளை திரும்பி பார்த்தவன்,
“நான் பேசப்போறது அவங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு கேட்க இல்லை. எங்களை பத்தி புரிஞ்சுக்க. வெண்ணிலாவுக்கும் என்னை பிடிச்சுதான் இருக்கு. சோ நீங்க அடுத்து ஆகவேண்டியதை என் பேரண்ட்ஸ்ட்ட ஸாரி உங்க சம்பந்திங்கட்ட பேசுங்க…”
முரளி சொல்லவும் அனைவருமே என்ன என்று தான் பார்த்தபடி இருந்தனர். சுகன்யாவிற்கு தான் புன்னகை பொங்கியது.
“படவா, எங்க வேலையை நாங்க பார்க்கிறோம். உங்க வேலையை சரியா பாருங்கன்னு எங்களை பாயின்ட் அவுட் பன்றயா?…” என்று கேட்க,
“இதை புரிஞ்சுக்க உங்களுக்கு இவ்வளவு நேரம்…” அதே புன்னகையோடு சொல்லியவன் கலைவாணியை பார்க்க அவர் என்ன சொல்வதென புரியாமல் விழித்தார். 
சந்தோஷம் ஒருபக்கம் என்றாலும் இத்தனை வேகம், இவ்வளவு உரிமை, சட்டென்று சொந்தம்கொண்டாடிய விதம் என்று பயந்து பார்த்தார்.
“உங்க சம்பந்தி கூப்பிடறாங்க. நீங்க இன்னும் இங்கயே நிக்கறீங்க?…” என முரளி கேட்டதும் உறக்கத்திலிருந்து விழிப்பதை போல பார்த்தவர் ஒருவித நிறைவோடு மற்றவர்களோடு சென்று அமர்ந்துகொண்டார்.
நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்த வெண்மதி அறைக்குள் நுழைந்தவனை பார்த்தபடியே நின்றாள்.
“வெண்ணிலா…” மீண்டும் அதே அழைப்பு அவளை மீட்டெடுக்க,
“வெண்மதி…” என்றாள் சிறு முறைப்போடு.
“இருக்கட்டுமே. எனக்கு வெண்ணிலான்னு தான் கூப்பிட தோணுது. ஒரே அர்த்தம் தானே…” ஒரு விரிந்த புன்னகையோடு சொல்ல அவன் தன் மனதினுள் ஆழ ஆழ சென்றுகொண்டிருப்பதை உணர்ந்தாள்.
 

Advertisement