Advertisement

நிலவு – 19
                 “முரளி நான் அப்பாக்கிட்ட பேச முடியாது. நீ தான் சொல்லனும்…” சுகன்யா அவனை கணவனின் முன் நிறுத்த முரளி அவரை என்ன இது என்பதை போல பார்த்தான்.
“இத்தனை நாள் நாங்க கெஞ்சினோம். நீ கேட்டியா?…” 
“என்ன ரிவெஞ்சா?…”
“அப்படியும் சொல்லலாம். அப்படி இல்லைன்னும் சொல்லலாம்…” சுகன்யா சிரிக்க,
“ம்மா…” 
“உனக்கு தெரியுமே முரளி. வெண்மதி போட்டோவை பார்த்து ஓகே சொன்னவர் அவங்க பேமிலி பேக்ரவுண்ட் பார்த்துட்டு வேண்டாம்னு சொல்றார். இப்ப உனக்கு அந்த பொண்ணை பீச்ல பார்த்து புடிச்சு போச்சு. திரும்ப அந்த பேச்சை எடுத்தா குதிப்பார்…”
“ம்மா, இது ரொம்ப அநியாயம். நாம எப்படி இருந்தோம், எந்த ஒரு சூழ்நிலையில் இருந்து வந்தோம்ன்னு நினைக்கனும். பழசை மறக்க கூடாது. அதோட இப்போ அவங்க வீட்ல சம்மதிப்பாங்களான்னே தெரியாம அதுக்குள்ளே நாமளா பேச கூடாது…”
முரளி சொல்லிக்கொண்டிருக்க அதை கேட்டுகொண்டே வந்தார் ஆனந்தன். மகனின் பேச்சை எப்படி தட்டிக்கழிப்பது என்ற யோசனையுடன் வந்து அமைதியாக அமர சுகன்யா முரளியை பேசு என்று சொல்லும் முன்னே அவனே ஆரம்பித்துவிட்டான்.
“அப்பா எனக்கு வெண்மதியை புடிச்சிருக்கு…” என சொல்ல,
“யார் வெண்மதி?…” என்றார் தெரிந்துகொண்டே.
“தெரிஞ்சுட்டே தெரியாதமாதிரி பேச வேண்டாம்ப்பா. இது உங்களுக்கு செட் ஆகலை. இப்பலாம் நீங்க நினைக்கிறது நல்லா இல்லை…” என்றான் பட்டென்று.
“நம்ம தகுதிக்கு ஏத்தமாதிரி பொண்ணு தேடறது உனக்கு தப்பா தெரியுதா?…” என்றார் அவரும் வேகமாய்.
“தப்பு தான்ப்பா. எது தகுதி? கொஞ்சம் வருஷம் முன்ன வரைக்கும் நம்ம தகுதி என்னன்னு உங்களுக்கு நல்லாவே தெரியுமே. தெரிஞ்சும் இப்படி பேசறது…” என அவன் நிறுத்த தந்தையின் முகம் கன்றி போனது.
“முரளி…”
“நான் தப்பா எதுவும் பேசலைப்பா. உண்மையை தானே சொன்னேன். விபீஷ் மட்டும் நமக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலைனா இன்னைக்கு நாம இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டோம். ஏதோ ஒரு மாச சம்பளத்துல நான் இருந்திருப்பேன்…”
“அப்ப அப்படி இருந்தா இப்பவும் அதையே நினைச்சுட்டு அதே மாதிரி இருக்கனுமா? நீ சொல்றது நடக்கற விஷயமா? காலத்துக்கும் இருப்புக்கும் தகுந்தா மாதிரி நாம தான் நம்மளை மாத்திக்கனும்…”
“மனுஷ குணம் மாறாம இருக்கனும்ப்பா…”
“ஒண்ணுமில்லாத இடத்துல இருந்து பொண்ணெடுத்தா நம்ம சொந்தக்காரனுங்க யாரும் நம்மளை மதிக்கமாட்டானுங்க. இருக்கப்பட்டவங்க இருக்கப்பட்டவங்க கூட தான் சம்பந்தம் வச்சுக்கனும்…”
“அந்த சொந்தம் நாம கஷ்டப்படறப்போ வந்து நிக்கலப்பா. நீங்க ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ செலவுக்கு என்ன பன்றோம்னே கேட்காம வந்து துக்கம் விசாரிச்சுட்டு போனவங்க. என் கல்யாணம் நின்னப்போ வசதி வந்துச்சுன்னு ஆடினாங்கள்ள, இது வேணும்னு எள்ளலா பேசினவங்க. இவங்க மதிப்பு என்னன்னு நமக்கு அவசியமாப்பா?…” 
“அவசியம் தான். இன்னிக்கு அந்த பொண்ணை சம்பந்தம் செஞ்சா என்னவோ நாம இப்ப இருக்கற வசதில இருந்து இறங்கிட்டோம். அதனால தான் இப்படி ஒரு இடத்துல பெண்ணெடுத்து இருக்கோம்ன்னு கேலி பேசுவாங்க முரளி…”
“அப்போ உங்களுக்கு என் லைப் முக்கியமில்லை. என் மனசு, என் விருப்பம் முக்கியமில்லை. என் ஆசை உங்களுக்கு ஒரு விஷயமே இல்லை. அப்படித்தானே?…”என மகன் கேட்கவும் தடுமாறிப்போனார் ஆனந்தன்.
அவருக்கு மகனை விட இந்த உலகத்தில் எதுவுமில்லை தான். ஆனால் சிலகாலமாக அந்தஸ்து என்னும் போதை வஸ்துவின் பிடியில் சிகிக்கொண்டிருப்பவரின் மனது மகனுக்காக வேணும் இறங்க மறுத்து சண்டித்தனம் செய்தது.
“ஓகேப்பா. உங்க விருப்பம். ஆனா ஒன்னு எனக்கு வேற எந்த பொண்ணையும் பிடிக்கும்னு நம்பிக்கை இல்லை…”  என விட்டேற்றியாக அவன் சொல்லி செல்ல சுகன்யா திகைத்து போய் பார்த்தார்.
“என்ன இது முரளி, இங்க பாரு…” அவனின் பின்னே தாய் ஓட ஆனந்தன் தான் தனித்து இருக்கவேண்டியதாகி போனது.
மகனின் பின்னால் போகவும் முடியாமல், தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வரவும் முடியாமல்  யோசனையுடன் அமர்ந்துவிட்டார்.
முரளி பிடிவாதமாய் சண்டையிட்டு இருந்தால் கூட அவர் இறங்க மறுத்திருப்பாரோ என்னவோ அவனின் அமைதியும், உங்கள் விருப்பம் என்று விட்டுக்கொடுத்து சென்ற பாங்கும் அசைத்தது.
இரண்டு நாட்கள் வீடே அமைதியாக இருக்க அவரிடம் மனைவி கூட எண்ணி எண்ணி பேச முரளியோ என்றைக்கும் போல பேசினான். எதுவும் நடக்காததை போல இயல்பாய் இருப்பதை போல அவன் நடந்துகொள்வதை பார்க்க பார்க்க ஆனந்தனின் நெஞ்சை குற்ற உணர்வு பிடித்து அறுத்தது.
சுகன்யாவிடம் அவர் பேச நினைக்க அவரோ அலட்சியம் செய்துகொண்டே இருக்க பொறுக்கமாட்டாமல் இழுத்துப்பிடித்து நிறுத்தினார்.
“அவனே நான் சொன்னது சரின்னு புரிஞ்சுப்பான் போல. நீ தான் ரொம்ப பன்ற…” என்று எகிற,
“வாழ்ந்து முடிச்சவங்களுக்கு வாழ போற குருத்தோட எதிர்காலம் முக்கியமில்லை. என்ன வாழ்க்கையோ? இதுக்கு இந்த வசதி வாய்ப்பு நமக்கு இல்லாமலே இருந்திருக்கலாம். இந்த பணம் தான் எத்தனை மாற்றத்தை கொண்டுவருது. பணம் இருக்கு, ஆனா நிம்மதி இருக்கா? அந்த விபீஷால என் மகன் நித்தமும் போராட்டத்தை அனுபவிக்கறான்…” 
“என்னை குத்தி காண்பிக்கற நீ. அதோட இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்?…” என மனைவியிடம் எரிந்து விழ,
“இருந்திருந்து என் மகன் இத்தனை வருஷம் கழிச்சு முழுமனசோட ஒருத்திய பிடிச்சிருக்குன்னு நிக்கறான். அவனோட ஆசை முக்கியமில்லை. உங்களை இந்த நிலைமைல அவன் நிறுத்தி பாக்கனும்ன்னு ஆசைப்பட்டவனுக்கு அவன் விரும்பின வாழ்க்கையை கொடுக்க மனசில்லை உங்களுக்கு. இனி பேச என்ன இருக்கு?. என் மகன் விருப்பம் இங்க செல்லாகாசாகிடுச்சு. அம்மான்னு நான் இருந்து என்ன?. இதுக்கு நான் போய் சேரலாம்…” 
சுகன்யா சொல்லி நகரவும் அதிர்ந்து போய் நின்றார் ஆனந்தன். இத்தனை வருட தாம்பத்திய வாழ்க்கையில் இப்படியான பேச்சுக்கள் என்றுமே இல்லை. ஆனால் இப்பொழுது?
மகன், மனைவிக்காக என பெரிய மனது கொண்டு வெண்மதியை பெண்பார்க்க செல்ல ஒப்புகொண்டார் ஆனந்தன். 
இதனை கொண்டு தன்னை வீட்டில் பெருமிதமாக பார்ப்பார்கள் என்று நினைத்து வளம் வர அவர்களோ அதனையும் கண்டுகொள்ளவில்லை. மகனோ ஆனந்த கூத்தாடுவான் என்று நினைக்க அவன் சாதாரணமாக அப்படியா என்று சொல்ல மனம் சுணங்கியது.
“என்ன இது நான் உங்களுக்காக, முரளிக்காக என் மனசை மாத்தி சம்மதிச்சிருக்கேன். உங்களுக்கு பெரிய விஷயமா தெரியலையா?…” என கேட்க,
“நீங்க என்னவோ யாருக்கோ வாழ்க்கை அமைச்சு குடுக்கற உங்கள பெரியாளா பாக்கனும்னு நினைக்கறீங்க? அடுத்தவரா நீங்க? உங்க மகனுக்கு கல்யாணம் பண்ண போறோம். இது உலகத்துல நடக்காத விஷயம் இல்லையே? எல்லா பெத்தவங்களுக்கு செய்யற கடமை. இதுக்கு உங்களுக்கு அவார்டா குடுப்பாங்க?…”
“என்ன பேசற நீ? நான் என்ன சொல்ல வந்தேன்னா?…”
“நீங்க சொன்ன வரைக்கும் போதும். இன்னொரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கங்க. அந்த பொண்ணும் ஒன்னும் குறைஞ்சவ கிடையாது. அங்க போய் பெரியமனுஷன்னு வசதி அது இதுன்னு பேச கூடாது. முரளிக்கு கல்யாணம் ஆகனும்னு நினைச்சா அமைதியா வாங்க. இல்லை நமக்கு பந்தம் பிடிக்க பேரப்பிள்ளை இல்லாமலே போய்டும்…”
சுகன்யா மிரட்டி செல்ல முரளி இதனை கேட்டாலும் ஒரு நமுட்டு சிரிப்போடு நகர்ந்துவிட்டான். ஆனந்தன் தான் உள்ளுக்குள் பயந்து போனார். ஆனாலும் வெளியில் எதையும் காட்டிக்கொள்ளாமல் விரைப்பாய் இருந்தார்.
“என்னவோ அந்த பொண்ணு வீட்லயும் சம்மதிச்சு நாள் குறிச்சுட்ட மாதிரிதான் பேசற. முதல்ல பார்ப்போம். பிறகு பேரப்பிள்ளையை பேசுவோம்…” என வேண்டுமென்றே சொல்லி செல்ல,
“இவரை திருத்தவே முடியாது…” என முரளியிடம் அவர் தலையில் அடித்தார்.
“அவர் சரியா தான் சொல்லிட்டு போறார். வெண்மதிக்கு என்னை பிடிக்கனுமே?…” 
“முரளி அதெப்படி பிடிக்காம போகும்?…” என சுகன்யா சொல்லிவிட்டாலும் மனதினோரம் ஒரு பயம் விபீஷை நினைத்து. கூடவே கோபமும்.
“அதெப்டிம்மா ஈசியா சொல்றீங்க?…” என்று புன்னகைத்தவன்,
“ஆனாலும் மனசு சொல்லுது வெண்மதிக்கு என்னை பிடிக்கும்னு. என் மனைவி அவங்கதான்னு. பார்க்கலாம்…” என்று சொல்லவும்,
“முரளி வெண்மதி வீட்டில பேச சொல்லி உன் போட்டோவை அனுப்பிருக்கேன். எப்படியும் இன்னும் ரெண்டு மூணு நாள்ல சொல்லிடுவாங்க…” என சொல்லவும் ஒரு மந்தகாச புன்னகையுடன் தலையசைத்து செல்ல தாயின் வயிறு குளிர்ந்து போனது அப்புன்னகை முகத்தில்.
——————————————————————
வழக்கம் போல அலுவலகம் சென்று ஈஸ்வரியுடன் வீடு வந்து சேர்ந்த வெண்மதியை ஒருவித எதிர்பார்ப்போடு பார்த்தனர் கலைவாணியும் நடேசனும்.
அவர்களின் முகமே அத்தனை நிறைவோடும் பொலிவோடும் ஜொலிக்க கண்களில் கனவு மிதந்தது.
“என்ன இன்னைக்கு உன் அம்மாவும் அப்பாவும் ரொம்ப சந்தோஷ மூட்ல இருக்காங்க? களவானிக்கு நான் வந்தது கூட தெரியலை. கண்டுக்காம இருக்காங்க?…” ஈஸ்வரி வெண்மதியின் காதில் கிசுகிசுக்க,
“நான் வேணா உன்னை ஏன் கண்டுக்கலைன்னு அம்மாட்ட கேட்டு சொல்லட்டுமா?…” 
“ஆணியே புடுங்க வேண்டாம்…” கையெடுத்து கும்பிட்ட ஈஸ்வரி வீட்டிற்கு கிளம்ப,
“இரு பென்ட்ரைவ்  வாங்கத்தான வந்த. எடுத்துட்டு வரேன்…” என்றவள்,
“அம்மா ரெண்டு காபி. ஈஸ்க்கும் சேர்த்து…” என சொல்லி உள்ளே சென்றுவிட அப்போதுதான் கலைவாணி ஈஸ்வரியை பார்த்தார்.
‘ஆஹா சிங்கிளா சிங்கத்தோட செல்லுல அடைச்சிட்டு போறாளே கிராதகி. நல்லவேளை அங்கிள் இருக்காங்க’ கலைவாணியை பார்க்காமல் நடேசன் அருகில் சென்று அமர கலைவாணி காபி எடுத்துவர உள்ளே சென்றுவிட்டார்.
‘ஹப்பா’ என்றபடி நடேசனிடம் பேசிக்கொண்டிருக்க வெண்மதியும் வந்துவிட கலைவாணியும் காபியோடு கொறிக்க பலகாரத்தோடும் வந்து ஈஸ்வரிக்கும் வெண்மதிக்கும்  நீட்ட ஆச்சர்யத்தோடு வாங்கிக்கொண்ட ஈஸ்வரி வெண்மதி முகத்தை பார்க்க,
“என்னப்பா எதுவும் பேசனுமா?…” நேரடியாக கேட்ட மகளை பார்த்தவர் தன்னிடம் இருந்த ஒரு கவரை நீட்ட கலைவாணியும் அவளருகில் வந்து அமர்ந்துகொண்டார்.
“என்னப்பா ஏதும் மாப்பிள்ளை போட்டோவா?…” என ஈஸ்வரி ஒருவித யூகத்தோடு கேட்க அவளை ஒரு பார்வை பார்த்த வெண்மதி அதை பிரித்து பார்த்தாள்.
“ஹ்ம்ம் குட்…” அவளின் மனதில் தோன்றியது இது ஒன்று தான்.
“சொல்லுங்கப்பா…” போட்டோவை ஈஸ்வரியிடம் கொடுத்துவிட்டு நடேசனை பார்க்க,
“மதி இவர் பேர் முரளிதரன். அம்மா பேர் சுகன்யா. அப்பா ஆனந்தன். ஒரே பையன். படிப்பை முடிச்சிட்டு சொந்தமா பிஸ்னஸ் வச்சிருக்காங்க. நல்ல இடம். நல்ல குடும்பமும் கூட…” என்று எதிர்பார்ப்பை தேக்கியபடி அவளை பார்க்க,
“அவங்க அம்மாப்பாவும் ரொம்ப நல்லவிதம்ன்னு சொல்றாங்க. மாப்பிள்ளைக்கு எந்த கெட்டபழக்கமும் இல்லையாம். பொருத்தம் கூட அத்தனையும் பொருந்தி வருது. உன்னையும் அவங்களுக்கு பிடிச்சிருக்கு. பார்க்க வரனும்னு கேட்கறாங்க…”
கலைவாணியும் தன் பங்குக்கு எடுத்து சொல்ல ஈஸ்வரிக்கு போட்டோவில் முரளியை பார்த்ததும் ஒப்புக்கொள்ளலாம் போலத்தான் தோன்றியது. வெண்மதி என்ன சொல்வாளென பார்க்க வெண்மதியோ முரளியை இன்னும் அழுத்தமாய் ஊன்றி பார்த்தாள்.
“என்ன மதி?…” என கலைவாணி கேட்க,
“இவரை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கேன்னு பார்த்தேன்…” என்றவள், 

Advertisement