Advertisement

நிலவு – 18
            ஒரு மாதம் கடந்திருந்தது முரளியின் திருமணம் நின்று. கேட்பவர்களிடம் பதில் சொல்லி மாளவில்லை. 
அதை விட கொடுமையிலும் கொடுமை முரளியின் உடல் நிலை பற்றி பொதுவெளியில் கடை பரப்பப்பட்டது. ஆளாளுக்கு செல்லுமிடமெல்லாம் விவாதித்தனர். அனுதாபமாக விசாரிக்கவும் செய்தனர். 
முரளிக்கு முதலில் சலிப்பாக இருந்தாலும் ஒருகட்டத்தில் அதனை கடக்க பழகி இருந்தான். ஆனால் சுகன்யாவும், ஆனந்தனும் தான் வெகுவாய் பயந்துபோய் இருந்தனர் மகனின் எதிர்காலத்தை நினைத்து.
“யாரோ ஒரு பொண்ணுக்காக இவன் ஏன் இதெல்லாம் பன்றான்? இப்ப பாரு போற வாரவன்லாம் கேலி பேசறான். நக்கல் பன்றான்…”  ஆனந்தன் புலம்ப முரளி அதை கண்டுகொள்ளாமல் இருந்தான்.
அப்பொழுது கூட விபீஷிற்கு முரளி மேல் கோபமே தவிர பகை உணர்வு, வெறுப்போ இல்லை. மறைத்துவிட்டானே என்கிற ஆதங்கம் முரளியின் மீதான நன்மதிப்பைக்கொண்டு யோசிக்க வைத்தது.
இப்பொழுது இருக்கும் மருத்துவ வளர்ச்சியில் இது ஒரு விஷயமில்லை என்று ஒதுக்கமுடியாவிட்டாலும் அத்தனை பெரிய விஷயமில்லை என அவனின் மூளைக்கு எட்டி நின்றாலும் தந்தையின் பதட்டமும், அந்த நேரத்தில் வினயா செய்த ஆர்ப்பாட்டமும் தான் அவனை அப்படி ஒரு முடிவெடுக்க செய்தது.
“கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோன்னு தோணுதும்மா. அன்னைக்கு அத்தனை பேர் முன்னால வினயாக்குட்டி அழவும் அப்பாவும் எமோஷனல் ஆகவும் யோசிக்காம நடந்துக்கிட்டேன். இப்ப நினைக்கறப்போ தப்பு பண்ணிட்டோமோன்னு தோணுது…”
“நீயா விபீஷ் இப்படி பேசற? நல்லா யோசிச்சியா?…”
“நல்லா யோசிச்சு தான்ம்மா சொல்றேன். முரளி பண்ணின தப்பு நம்மக்கிட்ட அந்த உண்மையை சொல்லாம மறைச்சது தான். இப்போ இது ரொம்ப ஈஸியா நடக்கற விஷயம் தான். ரொம்ப எக்ஸ்ட்ரீம்க்கு போய்ட்டோம்…” 
“அதுக்காக இப்ப என்ன செய்யனும்ன்னு நினைக்கற? என்னதான் இருந்தாலும் இது முதல்ல தெரிஞ்சிருந்தா இந்த கல்யாணத்தை நான் நடத்த விட்டிருக்க மாட்டேன். என் பொண்ணு வாழ்க்கையில நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்….” வசுந்தரா உறுதியாய் சொல்ல அமைதியாய் இருந்தான். 
“விபீஷ் சீமா…” என வசுந்தரா தயக்கமாய் ஆரம்பிக்க,
“சீமாவுக்கென்ன?…” என்றான் விட்டேற்றியாக. தனக்காய் காத்திருக்கும் அவளின் அருமை அப்பொழுதிருந்தே அவனுக்கு புரியவில்லை.
“அந்த பொண்ணு என்ன பண்ணுச்சு? அட்லீஸ்ட் உங்க கல்யாணம் மட்டுமாச்சும் நடந்திருந்தா கூட எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்திருக்கும்…”
“ம்மா, என்ன பேசறீங்க? என் தங்கச்சி வாழ்க்கை போச்சு. அங்க நான் அவளோட கண்ணீர்ல என் வாழ்க்கையை ஆரம்பிச்சா நான் என்ன அண்ணன்?…”
“அதுக்கில்லைப்பா, இப்ப நம்ம குடும்பத்தால அவங்களுக்கும் கஷ்டம் தானே? சீமா உன் மேல…”
“ம்மா, அவங்களுக்கு கஷ்டம்ன்னா வேற மாப்பிள்ளை பார்க்க சொல்லுங்க. எனக்கொண்ணும் அப்ஜெக்ஷன் இல்லை…”
“என்ன பேச்சு இது விபீஷ்? உனக்கு தெரியாதா சீமாவுக்கு உன் மேல எவ்வளோ ப்ரியம்ன்னு?…” என கண்டிக்க,
“இடையில் வந்ததால தானேம்மா? இந்த ப்ரப்போசலுக்கு முன்னால சீமாவுக்கு நான் யாருமில்லை தானே?…”
“ரொம்ப ஈசியா பேசற நீ. ஆனா சீமா மனசை மாத்திக்கமாட்டா. அவங்க வீட்ல இது பத்தி பேசிருக்காங்க போல. அப்பவும் அவ உனக்காக வெய்ட் பண்ண போறதா தான் சொல்லியிருக்கா…”
“அப்போ வெய்ட் செய்யட்டும். எனக்கு என் தங்கச்சி கல்யாணம் தான் முக்கியம். அவளுக்கொரு நல்ல வாழ்க்கை அமையாம நான் அமைச்சுக்க மாட்டேன். அதுவரை வெய்ட் பன்றதுன்னா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. புரியுதா?…” என சொல்லி எழுந்து சென்றான். 
இதை கவனித்துக்கொண்டிருந்த வினயாவின் மனதில் பயப்பந்து உருள ஆரம்பித்தது.
எங்கே மீண்டும் முரளியிடம் பேசி விஷயத்தை தெரிந்துகொண்டு விடுவானோ என்று வேறு பயந்து இருக்க அதற்குள் அவளின் தந்தை அடுத்த குண்டோடு வந்தார்.
“வசு, நம்ம வினிக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லியிருந்தேன்ல…”
“இப்ப ஏன் அவசரப்படறீங்க?…” வசுந்தரா சத்தம் போட,
“நம்ம சொந்தக்காரனுங்களே பேசறானுங்க, மணமேடை வரைக்கும் வந்து நின்ன கல்யாணம் இனி நடக்க வாய்ப்பில்லைன்னு. அதுமட்டுமில்ல நம்ம பொண்ணை ராசியில்லன்னு வேற. ப்ச், இதுக்கே நான் சீக்கிரம் என் பொண்ணுக்கு கல்யாணத்தை பண்ணனும். முடிச்சு காட்டறேன். அதுக்குதான் நான் அலைஞ்சிட்டு இருக்கேன்…”
மகள் மீதான பாசம் அவரை அப்படி பேச வைக்க வசுந்தராவிற்கும் கவலையானது. தாயும் அமைதியாய் இருக்க வினயாவிற்கு தான் இருப்பு கொள்ளவில்லை.
இதை இப்படியே விட்டால் மீண்டும் முரளியிடம் பேசியோ? அல்லது வேறு யாரையாவதோ பார்த்து மாப்பிள்ளையாக கொண்டுவந்துவிட்டாலோ எதுவும் செய்ய முடியாது என நினைத்தவள் பதட்டமாக அவனுக்கு உடனே அழைத்தாள்.
சிறிது நாள் பொறுமையாக இரு என்ற அவனின் அறிவுறுத்தலின் பெயரில் சற்று அமைதியாக இருந்தாலும் வீட்டில் நடப்பவற்றை கண்காணித்துக்கொண்டே தான் இருந்தாள்.
முரளியை தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொண்டது அவளுக்கு குற்றமாகவே படவில்லை.
“என் அண்ணன் காட்டிய எதிர்காலம், அதற்கு நன்றிகடனாய் ஒரு உதவி. அவ்வளவே” என திமிராய் நினைக்க வாழ்க்கை அவளின் திமிருக்கும் அகம்பாவத்திற்கும், ஏமாற்றுதலுக்கும் அதிகமாகவே வஞ்சித்தது.
அன்று நாகராஜனின் செக்கப்பிற்காக விபீஷ் ஹாஸ்பிட்டல் வந்திருக்க அதே ஹாஸ்பிட்டலில் ஆனந்தனும் தனது உடல்நிலைக்காக வந்திருந்தார். அவரை எதிர்பார்க்காத விபீஷ் கண்டுகொள்ளாமல் இருந்துவிட ஆனந்தன் கவனிக்கவில்லை அவர்களை.
ஆனந்தன் கிளம்பிய பின்பு அவரின் தளர்வான நடையில் அவரை கவலையுடன் பார்த்தவன் நாகாராஜனுடன் உள்ளே சென்றான். அவரின் ரிப்போர்ட்ஸ் அனைத்தையும் பார்வையிட்டு அவர்களுக்கான விளக்கங்களை சொல்லி முடிக்கவும்,
“டாக்டர் இஃப் யூ டோன்ட் மைண்ட். நான் கேட்க கூடாது தான் இருந்தாலும் கேட்கறேன். மிஸ்டர் ஆனந்தனுக்கு இப்போ ஹெல்த் எப்படி இருக்கு?…” என அக்கறையுடன் கேட்க,
“இது நமக்கு தேவையா?” என்னும் கண்டனப்பார்வையுடன் நாகராஜன் மகனை முறைக்க, 
“எவ்ரிதிங் ஆல்ரைட். மனசளவுல ரொம்ப ஸ்ட்ரெஸா பீல் பன்றார். அது அவர் உடலையும் பாதிக்குது. எப்பவும் அவர் பையனோட தான் வருவார். இன்னைக்கு தான் தனியா வந்தார்…”
“ஓஹ், ஓகே டாக்டர். கிட்னி பெயிலியர். மாத்தியிருக்காங்க. அதுதான். நான் மத்தத்தை அவர்க்கிட்ட கேட்டுக்கறேன். இங்க தான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கறாங்களா?…”
“ஆமாம் விபீஷ். அப்போ ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க. இப்ப நல்லா இருக்காங்க…” என்றதும் தலையசைத்து கிளம்ப எழ,
“விபீஷ் இதை சொல்லலாமான்னு எனக்கு தெரியலை. ஆனா சொல்லாமலும் இருக்க முடியலை. உங்க சிஸ்டர் மேரேஜ்க்கு என் வொய்ப் வந்திருந்தாங்க. கல்யாணம் நின்னு போனதை  பத்தி அவங்க சொல்லித்தான் தெரியும்…” என்றதும் முகம் இறுக விபீஷ் பார்த்தான்.
“இப்பவும் நான் சொல்லியிருக்கமாட்டேன். ஆனா நீங்க இத்தனை அக்கறையோடு முரளி ஃபாதர் பத்தி கேட்கறதால சொல்லிடறேன்…”
“என்ன விஷயம்?…” என விபீஷ் கேட்க, வினயா தந்தைக்கு சரியாய் அந்த நேரம் அழைக்க,
“வினிக்குட்டி இதோ கிளம்பிட்டோம்டா…” என்றவர் கடுப்பில் அழைப்பை துண்டிக்காமலே மொபைலை பாக்கெட்டில் போட்டவர்,
“முடிஞ்சு போனதை பத்தி நமக்கெதுக்கு? கிளம்புவோம்…” நாகராஜன் எரிச்சலாக,
“நீங்க சொல்லுங்க டாக்டர்…” என்றான் விபீஷ்.
“முரளி ரொம்ப நல்ல பையன். நீங்க நினைக்கற மாதிரி அவர் அவங்கப்பாவுக்கு கிட்னி கொடுக்கலை. அவர் ப்ளட் க்ரூப்க்கு வேற கிட்னி கிடைக்கலைன்றதால முரளி குடுக்க தயாரா இருந்தார் அதுக்கான ப்ராசஸ் எல்லாமே நடந்து செக்கப் முடிஞ்சு, பிக்ஸ் ஆகிட்டாலும் கடைசி நிமிஷத்துல டோனர் கிடைச்சுட்டாங்க. அதனால அவங்கம்மா முரளியை குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க…”
டாக்டர் சொல்லியதும் இருவரும் அதிர்ச்சியுடன் எழுந்து நிற்க கேட்டுக்கொண்டிருந்த வினயாவின் இதயம் எகிறியது.
“நீங்க நிஜமாவா சொல்றீங்க?…” என விபீஷ் குழப்பமாக கேட்க,
“நான் பொய் சொல்ல அவசியமே இல்லை. என் மனைவிக்கு தெரியாது. நான் வந்திருந்தா அப்பவே நான் க்ளியர் பண்ணியிருப்பேன். யாரோ உங்களுக்கு வேண்டாதவங்க பண்ணின வேலை போல. ஆனா முரளி ஏன் இதை ஒத்துக்கிட்டு கிளம்பினார்ன்னு தான் புரியலை…”
“எனக்கு ஒரே குழப்பமா இருக்கு டாக்டர்…” என விபீஷ் தலையில் தட்ட,,
“அவசரப்பட்டு முரளியை அடிச்சுட்டோமோ? அதான் அவனும் கோபத்துல ஆமான்னு சொல்லிட்டு கிளம்பியிருப்பானோ?…”
நாகராஜன் வேறு பேச, அவருக்கு தெரியவில்லை தான் எப்படி பேசியிருந்தாலும் அன்று முரளி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டிருக்க மாட்டான் என்று.
“அப்பா ப்ளீஸ், இதுக்குத்தான் அன்னைக்கே பொறுமையா இருங்கன்னேன். ப்ச், இது முரளிக்கிட்ட கேட்டா தான் தெரியும். நாளைக்கு முரளியை பார்த்து பேசிடறேன்…” என்ற விபீஷ்,
“ஓகே டாக்டர், தேங்க் யூ. அட்லீஸ்ட் இப்பவாவது உண்மையை சொன்னீங்களே?…” என சொல்லிவிட்டு தந்தையுடன் கிளம்ப வினயா அடுத்து செய்யவேண்டியவற்றை கணக்கு போட்டாள்.
இனியும் தாமதிக்க முடியாது என நினைத்தவள் பரபரவென செயல்படலானாள். காதலனை அழைத்தவள் விவரம் சொல்லி தன் திட்டத்தை சொல்ல அவனும் சம்மதிக்க அடுத்த ஒருமணிநேரத்தில் வீட்டைவிட்டு வெளியேறி இருந்தாள் வினயா.
வீட்டிற்கு வந்த விபீஷ் வசுந்தராவை தேட அவரோ சீமாவின் வீட்டிற்கு சென்றிருக்க தந்தைக்கு தேவையான மருந்துகளை எடுத்து பிரித்துவைத்தவன் தங்கையை காணாது தேடினான்.
தாங்கள் வந்து இத்தனை நேரமாகியும் அவள் வராதிருக்க ஒருவேளை உறங்குகிறாளோ என மாடியேற போக வசுந்தரா வந்துவிட்டார்.
“என்ன விபீஷ் செக்கப் முடிஞ்சதா?…” 
“முடிஞ்சதும்மா. அப்பா ரெஸ்ட் எடுக்காங்க. நீங்க எங்க போய்ட்டீங்க?…” 
“சீமா பேரண்ட்ஸ் பார்க்க…” என்றவரை கேள்வியுடன் இவன் நோக்க,
“அவங்களை கன்வின்ஸ் பண்ணிட்டு வரேன். சீக்கிரமே இந்த கல்யாணம் நடக்கும்ன்னு…”
“அதுக்கு  நீங்க போய் கெஞ்சிட்டு வந்தீங்களாக்கும்? போறாங்க விட்டுத்தள்ளுங்கம்மா…” என்றான் அசால்ட்டாய்.
“விபீஷ். சீமா தான் இந்த வீட்டு மருமக. இதை நீ மாத்தனும்னு நினைக்காத…” என்றார் கண்டிப்புடன். அவரை கண்டு புன்னகைத்தவன்,
“ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான் நீங்க. உங்க விருப்பத்துக்கு நான் ஏன் மறுக்க போறேன்? அவங்க ஓவரா பிகு பண்ணினா நாம இறங்கி போகனும்னு இல்லை. விடுங்கன்னு சொல்றேன். வேற பொண்ணை பாருங்க. மாட்டேன்னு சொல்லமாட்டேன்…” என மேலும் சீண்ட,
“விபீஷ்…” 
“ஓகே ஓகே. இப்ப உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லனும்மா. அதுக்குத்தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்…” என்றவன் டாக்டர் சொல்லியவற்றை பகிர அதிர்வுடன் மகனை பார்த்தார் வசுந்தரா.
“கிட்னி குடுக்காமலே ஏன் ஆமான்னு சொல்லனும் விபீஷ்? எனக்கு புரியலை…”
“எனக்கும் அதுதான் குழப்பமா இருக்கு…” 
“விபீஷ் ஒரு வேலை முரளிக்கு நம்ம வினியை பிடிக்காம இதுதான் சான்ஸ்ன்னு வேண்டாம்னு முரளி இப்படி சொல்லியிருந்தா?…” 
யூகத்தில் தான் அப்படி சொன்னார் வசுந்தரா. வேண்டுமென்று இல்லை. ஆனால் அதுவே பிரச்சனையின் வேராய் மாறிவிட்டது. வசுந்தராவிற்கு தான் ஆரம்பித்து வைத்ததன் வீரியம் அப்பொழுது புரியவில்லை.
“ம்மா…” 
“மேரேஜ் பிக்ஸ் பண்ணினதுல இருந்து ரெண்டு பேரும் அப்படி ஒன்னும் பேசிக்கிட்டதில்லை. நானும் சரியாகிடும்னு கண்டுக்கலை. எனக்கு தெரிஞ்சு முரளி கொஞ்சம் ஷை டைப். நம்ம வினியும் ரொம்ப சாப்ட் நேச்சர். அமைதியும் கூட. அதனால அப்படி இருக்காங்கன்னு நினைச்சேன்…”
“ம்மா முரளி இஷ்டம் இல்லைன்னா சொல்லியிருப்பானேம்மா முதல்லையே…”
“நாம அதுக்கு சான்ஸ் குடுத்தோமா?…”
“ம்மா?…”
“நீ சொன்னதால நாமளும் குடும்பத்தோட பேசினதால மறுக்கமுடியாம கூட அப்போ வேற வழியில்லாம சரின்னு சொல்லிட்டு வாய்ப்பு கிடைச்சு பிரச்சனை ஆகவும் கழண்டு…”
“அப்படி மட்டும் செஞ்சிருக்கட்டும்…” என்று கை முஷ்டி இறுக கோபத்துடன் விபீஷ் சொல்ல,
“ப்ச், விடு விபீஷ். இது நல்லதுக்குன்னு நினைச்சுக்குவோம். ஏனா நம்ம மேலையும் தப்பிருக்கு. அவங்களை வற்புறுத்தின மாதிரி செஞ்சிருக்கோம். விட்டுடு. இதை  திரும்ப திரும்ப பேசி ஒன்னும் ஆகப்போறதில்லை. எனக்கு விருப்பமும் இல்லை. இனி வினிக்கு நல்ல இடமா பார்த்து சிறப்பா செய்யலாம்…”
தாயின் கூற்றில் மனம் தெளிந்தவன் சற்றே இலகுவாய் அமர்ந்தான். ஆனாலும் மனதில் முள்ளாய் உறுத்திக்கொண்டு தான் இருந்தது முரளியின் நினைப்பு.
“எங்க இந்த பொண்ணு. சாப்ட்டாளான்னு தெரியலையே?…” என்றவாறு எழுந்தவர் கிட்சனுக்கு செல்ல விபீஷ் தங்கையின் அறைக்கு சென்றான் அவளை பார்க்க.
அங்கே இல்லாமல் மற்ற அறைகளிலும் தேடியவன் அவளின் மொபைலுக்கு அழைக்க அதை ஹாலில் இருந்த வசுந்தரா தான் அட்டன் செய்தார்.
“ஹலோ வினி…” 
“விபீஷ் போன் கீழே இருக்குப்பா. வினிக்குட்டி இல்லையா?…”
“ம்மா…” விபீஷின் மனதிற்கு எதுவோ தவறாக பட மீண்டும் அவளறைக்கு ஓடினான். அங்கே மேஜையில் ஒரு காகிதம் அவளின் கையெழுத்தில் இருக்க படபடப்புடன் அதனை வாசிக்க ஆரம்பித்தான்.
“என் குடும்பத்தினருக்கு, அண்ணா நீயும், அப்பாவும் என்னால பட்ட கஷ்டம் போதும். நம்ம சொந்தங்காரங்க எல்லாம் என்னோட கல்யாணம் நின்னதை பத்தி ரொம்ப தப்பா பேசியிருக்காங்க. அப்பாவும் எப்படியாவது எனக்கு கல்யாணம் செய்யனும்னு முடிவோட இருக்காங்க. ஆனா அதுக்கு வாய்ப்பில்லையே. எனக்கு கல்யாணமே ஆகாதுன்னு நினைச்சு நீங்க கவலைப்படறதை பார்க்கறப்போ எனக்கு வாழவே புடிக்கலை…” என்று எழுதி இருக்க ஐயோவென்று தலையில் கைவைத்தவன் அம்மா என அலறினான்.
“மேடை வரைக்கும் போய் கல்யாணம் நின்னதால என்னோட எதிர்காலம் அவ்வளோதான்னு பேசிருக்காங்க அப்பாக்கிட்டையே. என் காலேஜ்ல என்கூட படிச்ச பையன் என் மேல உயிரையே வச்சிருக்கான். இப்பவும் என்னை ஏத்துக்க அவன் தயாரா இருக்கான். என்னால நீங்க பட்ட கஷ்டம் போதும். நான் போறேன். எனக்கான ஒரு நல்ல வாழ்க்கையை தேடி போறேன். என்னை மன்னிச்சிடுங்க. இனியாவது நீங்க நல்லா இருக்கனும்…”
இப்படி அவள் உருக்கமாய் எழுதி இருக்க படித்த வசுந்தரா மயங்கி விழுந்தார். தாயை தேற்றும் அவசியத்தை உணர்ந்தவன் தங்கையை தேட தன்னுடைய நெருங்கிய இரு நண்பர்களுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி வசுந்தராவை தூக்கி சென்று தண்ணீர் தெளித்து எழுப்ப அவர் அழுத அழுகையில் நாகராஜனே வந்துவிட்டார். 
“எவ்வளவு வேதனைப்பட்டிருந்தா என் பொண்ணு இந்த முடிவுக்குவந்திருப்பா. இதுக்கு காரணமான அந்த முரளியை நான் சும்மா விடமாட்டேன்டா. கழுத்தறுத்துட்டானே…” என்று ஆத்திரம் கொள்ள விபீஷிற்கும் மூளை மரத்தது.
பாசம் கண்ணை மறைக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஒரு குடும்பம் மொத்தமும் முரளியை அவ்விடத்தில் குற்றவாளியாய் நிறுத்திவைத்தனர்.
அதிலும் விபீஷ் வசுந்தரா சற்று முன் சொல்லிய யூகத்தை கொண்டு உண்மை அதுதான் என முற்றிலுமாய் நம்ப ஆரம்பித்தான். 
“அந்த முரளிக்கு இருக்குப்பா. என்கிட்டையே ஆட்டம் காட்டிட்டான்ல்ல. நான் யாருன்னு இனி தான் பார்க்க போறான்…” என கோபத்தில் கத்தினான்.
அவனுக்கு தங்கை இப்படி செய்துவிட்டாளே என்கிற கோபத்தை தாண்டி அவள் நல்லவிதமாய் இருக்கிறாளா? எங்கே இருக்கிறாள் என்று தெரியவேண்டிருந்தது.
“என் பொண்ணு என்கிட்டே சொல்லியிருந்தா பையன் நல்லவனா என்னன்னு பார்த்து நானே நல்லபடியா கல்யாணம் செஞ்சிவச்சிருப்பேனே? இப்படி பண்ணிட்டாளே? நான் சம்மதிக்க மாட்டேன்னு நினைச்சிருப்பாளோ?…” என நெஞ்சில் அடித்துக்கொண்டு நாகராஜன் அழ வசுந்தரா தான் அவரை தேற்றவேண்டி இருந்தது.  
சீமா மட்டுமே ஆறுதலாய் அவர்களுக்கு இருந்தாள். அந்த விதத்தில் விபீஷிற்கு அது அவள் மீதான நல்ல அபிமானத்தை ஆழமாக்கியது. 
ஆனால் முரளி என்பவனை மன்னிக்க அவன் தயாராய் இல்லை. தங்கையின் இந்த அவசர முடிவிற்கு அவனே காரணம் என நம்பினான்.
தங்கை கிடைத்த பின்னர் அவனை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தான். இப்பொழுதே போய் கேட்டுவிட்டால் எங்கே விஷயம் வெளியில் தெரிந்துவிடுமோ என்ற எண்ணமே காரணம்.
இப்பொழுது ஆத்திரப்படுவதை கோபத்தை தள்ளிவைத்து தங்கையை தேட அவனின் தேடல் பலனளிக்காமலே போனது. முடிந்தளவு விஷயம் வெளியில் கசியாமலே தேட பத்து நாட்களுக்கு பின்னர் ஒரு  விபத்தின் மூலம் தங்கை இருக்குமிடம் தெரிந்தது.
பாண்டிச்சேரி ஹைவேயில் குடித்துவிட்டு கார் ஓட்டியதால் நிகழ்ந்த பயங்கரத்தில் காரில் இருந்த நால்வரில் வினயா மட்டுமே உயிருக்கு போராடிக்கொண்டிருக்க உடன் இருந்த அவளின் காதலன் உட்பட மற்ற மூவரும் உயிரை விட்டிருந்தனர் மிக கோரமாய்.
ஹாஸ்பிடலில் இருந்து அழைப்பு வரவுமே உயிரை பிடித்துக்கொண்டு ஓடினார்கள் விபீஷும் அவனின் குடும்பத்தினரும்.
ஹாஸ்பிட்டலில் ஆளே அடையாளம் இழந்து அலங்கோலமாய் வினயா. பார்த்தவர்களின் மனம் பதறியது.
“என்னடா என்னடா ஆச்சு உனக்கு? ஏன்டா இப்படி? ஐயோ நான் என்ன செய்வேன்? என் பொண்ணை இப்படியா நான் பாக்கனும்?…” என மகளை பிடித்துக்கொண்டு தாய் அழ அவரின் தொடுகை கூட அத்தனை வேதனையை இருந்தது வினயாவிற்கு. அந்தளவிற்கு உடல் ரணமாய் இருந்தது.
“என்னடா ஆச்சு? நீ எப்படி கார்ல?…” விபீஷ் பேச முடியாமல் திணற,
“மன்னிச்சிடுண்ணே, நான் அவசரப்பட்டு தப்பான முடிவுக்கு போய்ட்டேன். ஒரு தப்பான ஆளை நம்பி பெரிய கும்பல்கிட்ட மாட்டிக்கிட்டேன். அவன் என்னை உண்மையா விரும்பவே இல்லைண்ணே. என்னை என்ன பண்ணினாங்க தெரியுமா?…” என கண்ணீருடன் அவள் சொல்ல சொல்ல இறந்தவன்களை மீண்டும் கொன்றுபோடும் ஆத்திரம் கிளம்பியது விபீஷிற்கு.
மகளின் இந்த நிலையை ஜீரணிக்கமுடியாது வசுந்தரா தலையில் அடித்து அழ நாகராஜன் நெஞ்சை பிடித்தார்.
“நான் போயிருக்கவே கூடாது. நம்பி போனேன். நீங்க அமைச்சுக்குடுக்க இருந்த வாழ்க்கை தான் எனக்கு அமையலை. முரளி அப்படி பண்ணுவார்ன்னு நான் நினைக்கல. நானாவது வாழ்ந்து காண்பிக்கணும்னு போனேன். அதுவும் இப்படி ஒரு இடத்தில என்னை நிறுத்திருச்சு. இவனுங்கட்ட இருந்து தப்பிக்க முடியாதோன்னு நினைச்சேன்…” என்று அழுது அழுது மயங்க நாகராஜன் நெஞ்சை பிடித்துக்கொண்டு தடாலென விழுந்தார்.
அவரை அவசரசிகிச்சைக்கு அனுமதித்து பார்த்தனர். மகளை பார்க்கவா இல்லை கணவனை பார்க்கவா என தெரியாமல் திண்டாடி போனார் வசுந்தரா.
வினயா எங்கே தன்னுடைய திட்டத்தால் தான் முரளி அப்படி சொன்னான் என்று சொல்லிவிட்டால் தன் வீட்டில் தன்னுடைய மதிப்பு குறைந்துவிடுமோ என பயந்துகொண்டு அந்த நிமிடமும் கூட தன்னுடைய சுயநலத்தோடு பேச மயக்கத்தில் இருந்தவளின் மரணம் உறக்கத்திலேயே நிகழ்ந்தது.
என்றுமே அவளின் சுயரூபம் அவர்கள் குடும்பத்திற்கு தெரியவே இல்லை. கடைசிவரை அவளை அப்பாவி என்றே நினைத்து மடத்தனமாய் இருந்தது தான் அவர்கள் செய்த முதல் தவறு. 
அதன் பின்னான முரளியின் போராட்டம் விபீஷிடமிருந்து தன்னுடைய தொழிலை காப்பதிலே தான் இருந்தது.
இனியும் மறைக்க எதுவுமில்லை என்று எத்தனை சொல்லியும் விபீஷின் குடும்பம் நம்புவதாக இல்லை. அவனின் பேச்சு அங்கே எடுபடவும் இல்லை.
விபீஷ் மொத்தமாய் மாறிப்போனான். பழி ஒன்றே தீர்வு. முரளியின் சரிவு ஒன்றே குறிக்கோள் என அவனின் தொழிலில் சிக்கல்களை ஏற்படுத்த ஆரம்பித்தான்.
முரளிக்கு சிம்மசொப்பனமாக நின்று அவனை நகரவிடாமல் மூச்சடைக்க வைத்தான். அதையும் சிரமத்துடன் தாண்டி வந்தான் முரளி.
ஆனால் தொழிலில் சிறப்பாக செயல்பட்டவனால் தன்னுடைய திருமண பேச்சுவார்த்தைகளில் அப்படி நடக்க முடியவில்லை.
சுகன்யா ஒரு வருடம் கடந்த பின்னர் முரளிக்கு வேறு பெண்களை தேட, எதை வைத்து வினயாவுடனான திருமணம் நின்றதோ அதையும், தன் பலத்தையும் வைத்து அவனுக்கு திருமண வாழ்வே அமையக்கூடாது என்று தெளிவாய் செயல்பட்டான் விபீஷ்.
அவனின் காய் நகர்த்துதல் வெண்மதியை முரளிக்கு பெண் பார்க்கும் வரை நன்றாய் தான் சென்றது.
விபீஷிற்கு ஒன்று புரியவில்லை. அதுவரை பார்த்த பெண்கள் யாரையும் முரளியும் கவரவில்லை. யாரும் முரளியையும் கவரவில்லை.
இவை இரண்டுமே நிகழ்ந்தது வெண்மதியிடம் மட்டுமே. 

Advertisement