Advertisement

நிலவு – 16
    வெண்மதியின் இந்த அழுகையை அவளிடம் எதிர்பார்க்கவில்லை. அதிலும் சத்தம் கூட எங்கே வெளியில் இருப்பவர்கள் வந்துவிடுவார்களோ என பயந்துபோனவன் அவளை தன்ன அணைப்பினுள்ளே வைத்துக்கொண்டே மெல்ல நகர்ந்து கதவை தாழ் போட்டுவிட்டு வெண்மதியை கட்டிலுக்கு அழைத்துவந்து அமரச்செய்தான்.
அவளின் கண்ணீரை துடைத்தவன் குடிக்க நீர் எடுத்து வந்து தர அவள் வாங்காமல் கரைய அவனே புகட்டினான்.
“இங்க பாருங்க வெண்மதி, இப்ப நீங்க இப்படி அழறது வெளில கேட்டா தேவையில்லாம மனகஷ்டமும் பிரச்சனையும் ஆகும். இந்த விஷயம் என்னோட பேரண்ட்ஸ்க்கு தெரியவரும். அதை நான் விரும்பலை…” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“அப்போ இது உங்களுக்கு எதுவுமே இல்லையா? நான் மறைச்சுட்டேன் இதை சொல்லாம. இப்ப வரைக்கும் கூட. இப்போ பெரியம்மா வந்து பேசாம இருந்திருந்தா இன்னும் காலத்துக்கும் இதை பற்றி உங்கட்ட சொல்லிருப்பேனான்னா நிச்சயம் மாட்டேன்…”
முகம் கன்ற உண்மையை அவனிடம் ஒப்புவித்தவளை மனம் கனிய பார்த்தான். அவனிதழ்களில் குறுநகை தவழ,
“இந்த உண்மையால இப்போ என்ன மாறிடுச்சு? எதுவுமில்லை தானே? இனியும் மாறாது. முதல்ல நாம கிளம்புவோம். இங்க இருக்க இருக்க உங்க முகம் காட்டிகுடுத்துடும். கிளம்பும் போது பெரியவங்களுக்கு சங்கடத்தை குடுக்க வேண்டாம். ஏற்கனவே நீங்க கிளம்பற வருத்தத்துல இருப்பாங்க. இப்ப எனக்கும் தெரிஞ்சதுன்னு தெரிஞ்சதுன்னா நல்லா இருக்காது. புரியுது தானே?…”  
சிறுபிள்ளைக்கு எடுத்து சொல்வதை போல அவளுக்கு மெதுவாய் சொல்ல தலையசைத்தாள் வெண்மதி. 
“தட்ஸ் மை கேர்ள்…” என அவளின் தலையை பிடித்து ஆட்டியவனின் மனது கனமாய் இருந்தது.
இவளின் நிலை புரியாது சிலநாள் தவறாக நினைத்து கோபத்துடன் இருந்துவிட்டோமே என நினைத்து வருந்தியவன் அவளை கிளப்பி முகம் கழுவ அனுப்பினான்.
“இப்பவே கிளம்பினா அம்மா என்னன்னு கேட்பாங்க…” முகம் துடைத்துக்கொண்டே அவனிடம் சொல்ல,
“லஞ்ச் முடிச்சுட்டோம். ஈவ்னிங் கிளம்பறதுக்கு இப்பவே கிளம்பறோம் அவ்வளோ தான். இன்னொரு நாள் இங்க ஸ்டே பன்ற மாதிரி வருவோம். சரியா? அத்தை, மாமாக்கிட்ட நான் பேசிக்கறேன்…” என்று வெளியே சென்று என்ன பேசினானோ கலைவாணி உள்ளே வந்துவிட்டார்.
“அங்க மாப்பிள்ளை கிளம்பனும்ன்றாரு, நீ என்னன்னா மசமசன்னு நிக்கற? பலகாரம் வேற இன்னும் வந்து சேரலை. நாளைக்கு இருப்பீங்கன்னு நினைச்சோம். ஓகே, அதை நாங்க நாளைக்கு கொண்டு வரோம். உன்னை பார்த்த மாதிரியும் இருக்கும்…” பேசிக்கொண்டே அவளுக்கு எடுத்துவைக்க உதவினார்.
“ம்மா…” வெண்மதி அழைக்க,
“அட இரு மதி. இதை கொண்டு போய் ஹால்ல வை. நான் இன்னொரு பேகை எடுத்துவரேன்…” என நிமிராமல் எடுத்துவைக்க,
“ம்மா…” என பிடித்து திருப்பியவள் அவரின் முகம் பார்க்க கலங்கிப்போய் இருந்தது.
“அழறீங்களா?…” என கேட்ட மகளுக்கும் குரல் தடுமாற,
“இல்லடா. நீ வாழபோற சந்தோஷம். அதான். என் பொண்ணோட வாழ்க்கை இனி நல்லாயிருக்கும். அந்த நிறைவு. உன் மனசுக்கு பிடிச்ச ஒரு வாழ்க்கையே அமைஞ்சிருச்சு. அது போதும் எனக்கு. நான் பண்ணின பாவத்துக்கு…” 
“ம்மா….” என அவரின் வாயை மூடியவளை அணைத்துக்கொண்டவர்,
“இல்லைம்மா, என் உரிமையை சொல்லி தான உன் வாழ்க்கையை தட்டிக்கழிச்சேன். இப்ப அது உன்னை திரும்பவும் தேடி வந்துருச்சு. போதும்டா. நீ அங்க நிம்மதியா உன் புருஷனோட சந்தோஷமா இருந்தா அதுவே போதும். எங்களுக்கு வேற எதுவும் வேணா மதி…” 
“என்னம்மா நீங்க இப்படியெல்லாம் பேசறீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…”
“மதிம்மா, அப்பாவையும் அம்மாவையும் மறந்துட மாட்ட தானே?. எங்களுக்கு வேற யாருமில்லடா…” என நடுங்கும் குரலில் அவர் கெஞ்சலாய் சொல்ல உடைந்துபோனாள் வெண்மதி.  
“இப்படி பேசினா நா போகவே மாட்டேன். நான் இங்கயே இருந்துடுவேன்…” என்று மதியும் அழ இருவருமே உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருக்க,
“வெண்மதி…” என வெளியில் இருந்து முரளியின் குரல் கேட்கவும் பதறிய கலைவாணி,
“நான் ஒருத்தி உன்னையும் அழ வச்சுட்டேன். லூசுமாதிரி பேசிட்டேன்…” என தன்னையே கடிந்து சொன்னவர் மகளின் கண்ணீரை துடைத்துவிட்டு,
“அழாம கிளம்பனும். நீ சந்தோஷமா கிளம்பினா தான் எங்க மனசு நிம்மதியா இருக்கும். இங்க தான இருக்கோம். அடிக்கடி நாங்களே வந்து பார்த்துக்கறோம்…” என அவளுக்கும் தனக்கும் சேர்த்தே சமாதானம் சொல்லியவர்,
“அங்க போய் இங்க இருக்க மாதிரி இருக்க கூடாது மதி. உன் அசால்ட்டை எல்லாம் இங்கயே மூட்டைகட்டி வச்சிட்டு போ. ஏற்கனவே உன் மாமனார் முகமே சரியில்ல. அங்க போய் அவர் எதுவும் சொல்ற மாதிரி நடந்துக்காத. முக்கியமா உன் புருஷன் மனசு கோணாம பார்த்துக்கோ…”
“கோணாம பாக்கனும்னா அப்பப்ப வெல்டிங் தான் வைக்கனும் நான். போங்கம்மா…” என வழக்கமாக பேசிவிட்டு அவரின் முறைப்பையும் வாங்கிக்கொண்டவள் சிரித்தபடி வெளியே வந்தாள்.
“மாப்பிள்ளை சீரு நாங்க நாளைக்கு எடுத்துட்டு வந்துடறோம்…” நடேசன் தன்மையாக சொல்ல,
“பரவாயில்லைங்க மாமா. உங்க தோதுப்படி பார்த்துக்கோங்க. அடிக்கடி நீங்களும் வீட்டுக்கு வரனும். நாங்க தங்கலையேன்னு நினைக்காதீங்க. கண்டிப்பா இன்னொருநாள் வந்து தங்கறோம்…” என முரளி சொல்லவும் நடேசனுக்கு திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
“நீ தான் இனி பொறுப்பா இருக்கனும் மதி. முடிஞ்சளவு கோபப்படாம இருக்கனும். அங்க போய் எங்கயும் கிளம்ப நாலுமணி நேரம் ஆக்கக்கூடாது. இனி உன்னோட பொறுப்புகள் நிறையவே இருக்குடா. பார்த்துக்கோடா…”
கலைவாணியின் அன்பில் கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. தான் அழுதால் இன்னும் அவர் கலங்கிவிடுவார் என தன்னை கட்டுக்குள் வைத்தாள்.  
“நான் பார்த்துக்கறேன்மா. நீங்க உங்களையும் அப்பாவையும் பார்த்துக்கோங்க…” என்று சொல்லவும் மகளை அணைத்துக்கொண்டார்.
அவளை பிரியும் வேதனை தான். ஆனாலும் அவள் வாழப்போகிறாளே சந்தோசம் பெருக்கெடுக்க ஆனந்த கண்ணீரோடு அவளை வழி அனுப்பி வைத்தனர்.
கிளம்பியதிலிருந்து கலக்கம் மறைந்து முரளியிடம் மறைத்துவிட்ட குற்றவுணர்வு இன்னும் அதிகமாய் தலைதூக்க கொஞ்சமே வெளிவந்திருந்தவளின் மனநிலை மீண்டும் சுருண்டுகொண்டது.
என்னதான் தெரிந்த விஷயத்தில் முரளி அந்தளவுக்கு பாதிப்பில்லை என காட்டிக்கொண்டாலும் அவனின் பெருந்தன்மையும், ஆதரவும், அரவணைப்புமே அவனுக்கு தான் தகுதியில்லை என்னும் அளவிற்கு அவளை சிந்திக்க செய்தது.
மூளை பலவாறு அவளுக்கும், முரளிக்கும் எதிராக கூக்குரல் எழுப்பிக்கொண்டே இருக்க தலை வலிக்க ஆரம்பித்தது. 
“தான் சரியில்லை, அவனை ஒவ்வொரு முறையும் அவமதித்து வலிக்க செய்துகொண்டே தான் இருக்கிறேன். அவனின் பரிசுத்தமான காதலுக்கு முற்றிலும் நான் சரியானவளே கிடையாது” என எண்ணி எண்ணி மருகிக்கொண்டிருந்தாள்.
அவளின் மனதின் போராட்டத்தை ஓரளவு யூகித்தவனின் மனதில் கவலை பிறக்க அவளின் மனநிலையை மாற்றவென அவளை கலகலப்பாக்கும் பொருட்டு பேச ஆரம்பித்தான்.
காரில் மௌனமாக வந்துகொண்டிருந்த வெண்மதியிடம் என்ன பேசியும் முரளியால் பதில் வாங்க முடியவில்லை.
விளையாட்டாய், குறும்பாய் கேலியும் கிண்டலுமாய் என்ன பேசினாலும் முகத்தில் எந்த உணர்வினையும் பிரதிபலிக்காமல் அமைதியாய் வரும் மனைவியை எப்படி திசைதிருப்ப என யோசித்து யோசித்து சலித்தவன்,
“ப்ச் வெண்ணிலா பேசுவீங்களா மாட்டீங்களா?…” என்று கேட்க அவளோ ‘என்னை கொஞ்சம் விடேன்’ என கெஞ்சுதலாய் அவனை திரும்பி பார்த்த ஒற்றை பார்வையில் மொத்தமாய் சரணடைந்தேவிட்டான்.
இதே நாள் இதே நாள் என் வாழ்வில் தொடர்ந்திட வேண்டும் 
இதே போல் இதே போல் உன்னோடு நடந்திட வேண்டும் 
நீ வாங்கும் காற்றோடு நான் காற்றாகி உயிர் சேர்ந்திட வேண்டும் 
தன் ஒட்டுமொத்த காதல் உணர்வை, தவிப்பை, காத்திருப்பை ஒட்டுமொத்தமாய் குழைத்து கரைத்த குரலில் கள்ளப்புன்னகையோடு முரளி பாட பாட அந்த பாடலுள் மூழ்கி போனாள் வெண்மதி.
அவனின் தோள் சாய்ந்துவிட தவித்த தன் உணர்வுகளை கட்டுக்கொள் கொண்டுவந்தவள் விழிமூடி சாய்ந்துகொண்டாள். ஆனாலும் உள்ளுக்குள் அவனின் வசீகரிக்கும் குரலை, பாடலை அனுபவித்துக்கொண்டே.
வெண்மதியின் இதழோரம் அவளறியா புன்னகைசாரல் மெலிதாய் தூற அதை கண்டுகொண்டவனின் உள்ளம் துள்ளியது.
“பாராட்டனும்னா வாயை திறந்து சொல்லலாம். இப்படி மனசுக்குள்ள ரசிச்சுட்டு வெளில முறைச்சா கள்ளாட்டம்…” என்று வம்பிழுக்க அவனை மீண்டும் முறைத்தவள் கண்களை மூடிக்கொண்டாள்.
சற்று முன் இருந்த மனநிலை இப்பொழுது லேசானதை போல உணர்ந்தாலும் நெஞ்சின் ஓரம் சிறு வலியை தந்துகொண்டே தான் இருந்தது. அதை புரிந்துகொண்டவனின் மௌனத்தின் பின்னே இருக்கும் புரிந்துணர்வின் தன்மை தான் அவளை வெகுவாய் அசைத்துப்பார்த்தது.
இரண்டுவாரங்கள் கடந்திருந்தது திருமணம் முடிந்து. ஓரளவிற்கு அந்த வீட்டில் பழகி இருந்தாள்.
சுகன்யாவும், ஆனந்தனும் இப்போது இங்கே இருப்பதில்லை. ஆனந்தன் சுகன்யாவோடு அவர்களின் எஸ்டேட்டிற்கு சென்றுவிட்டார். 
முன்பெல்லாம் எப்பொழுதாவது அங்கு சென்று இரண்டு மூன்று நாட்கள் போல இல்லை ஒரு வாரம் போல இருந்து வருவார்கள் குடும்பத்துடன். 
இப்பொழுது முரளியின் திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் ஆனந்தன் கிளம்பவேண்டும் என்று பிடிவாதமாய் சொல்ல சுகன்யா தான் நிலைமையை கையிலெடுத்து சமாளித்தார். 
இருவருக்குமான தனிமையை கொடுப்பதாகவும், வெண்மதிக்கு முரளியுடனான ஒட்டுதலுக்காகவும், ஆனந்தனின் மனநிம்மதிக்காகவும் என பல்வேறு காரணங்களை சொல்லிவிட்டு சமாளித்து கிளம்ப ஆனந்தனின் ஒதுக்கம் தரும் சங்கடத்திலிருந்து தப்பித்த நிம்மதி வெண்மதிக்கு.
திருமணத்திற்கென போட்டிருந்த லீவ் இன்னும் மிச்சமிருக்க வீட்டில் நன்றாக தூங்கி எழுந்து பொழுதை கழித்தாள். ஒரு வருடம் தூக்கம் இன்றி அல்லாடியவள் வீடு சேர்ந்த உணர்வில் நிம்மதியான உறக்கம் தழுவினாலும் ஒருவித ஒட்டாத தன்மையும் அவ்வப்போது எட்டிப்பார்த்தது.
நித்தமும் வம்பும் குறும்புமாய் பொழுதுகள் கழிய இதழோரம் எப்பொழுதும் புன்னகை உறைந்தே கிடந்தது வெண்மதிக்கு. பிடித்தாலும் வெளியில் முறைப்பாகவே காட்டிக்கொண்டிருந்தாள்.
அதை விட விபீஷிடமிருந்து எந்த அழைப்புகளும் இல்லாததால் ஒரு விடுதலை உணர்வு சற்றே அவளின் சிறகை கட்டுக்குள் இருந்து மெல்ல மெல்ல பிரித்தது.
ஆனாலும் பழைய நினைவுகள் இன்னமும் மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டே தான் இருந்தது. அதனாலேயே முரளியோடு ஒன்றவும் முடியாமல் மொத்தமாய் விலகவும் தடுமாறிக்கொண்டிருந்தாள்.
அன்று ஹாலுக்கும் வாசலுக்கும் அலைந்துகொண்டிருந்த வெண்மதியை பார்த்தபடி லேப்டாப்பில் வேலையாய் இருந்த முரளி பொறுமை இழந்து,
“வெண்ணிலா…” என அழைக்க உள்ளே வந்தவள் முகம் வாடி இருந்தது.
“என்னாச்சு? ஏன் இந்நேரம் எக்ஸர்சைஸ்?. மார்னிங் செய்ங்க…” என கேலிசெய்ய கோபத்தில் மூக்கு விடைத்தது வெண்மதிக்கு.
“நீங்க பார்த்தீங்களா நான் எக்ஸர்சைஸ் தான் பண்ணேன்னு? சும்மா என்னை கடுப்பேத்தாதீங்க…” சுட்டுவிரல் நீட்டி எச்சரிக்க அதை கப்பென பற்றியவன்,
“எதுக்குன்னு சொல்லிட்டு நடக்க வேண்டியது தானே?…” 
“ப்ச், இன்னும் கனகா அக்கா வரலை. அவசர வேலை வீட்டுக்கு போய்ட்டு ஒருமணி நேரத்துல வந்துடுவேன்னு சொன்னாங்க. ஆனா…”
“அதான் மேட்டரா? எனக்கு கால் பண்ணிட்டாங்க. இன்னைக்கு வரமாட்டாங்க. அவங்க வீட்ல ஏதோ ப்ராப்ளம் போல. முடிஞ்சா நாளைக்கு வருவாங்க…”
முரளி சொன்னதும் வெண்மதியின் முகம் பேயறைந்ததை போலானது. திருதிருவென விழிக்க அதைக்கண்டு வாய்க்குள்ளேயே சிரித்தவன்,
“சோ வாட் வெண்ணிலா?…” புன்னகையை மென்றபடி கேட்க, செய்வதறியாது கையை பிசைந்தவள்,
“அப்போ நைட் டின்னருக்கு என்ன பன்றது?…” 
“நீங்கதான் சமைக்கனும்…” அசராது குண்டை எறிந்தான் அவள் கணவன்.
“என்ன? நான் சமைக்கவா? அதுக்கு வேற ஆளைப்பாருங்க…” என்று வெடித்தவள்,
“நான் கனகாக்கவுக்கு ட்ரை பன்றேன்…” என மொபைலை எடுத்து அழைக்க ஸ்விட்ச் ஆப் என வர தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.
கனகா முரளியின் வீட்டு சமையல்கார பெண். சுகன்யா சிலசமயம் இப்படி எஸ்டேட் சென்று தங்கிவிடுவதால் முரளிக்கென்று சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டவள் தான் கனகா. முரளிக்கு அந்தளவிற்கு வெளி உணவுகள் பிடிக்காதென்பதால் இந்த ஏற்பாடு.
சுகன்யா இருக்கும்பட்சத்தில் கனகாவிற்கு மேல்வேலைகள் தான். அவரில்லாத நேரங்களில் சமையலும் கூட.
“டைம் ஆச்சு வெண்ணிலா. பசிக்குது. சீக்கிரம் டின்னர் ரெடி பண்ணுங்க…” லேப்டாப்பிலிருந்து பார்வையை அகற்றாமல் சொல்ல,
“என்ன? எனக்கு சமைக்க தெரியாதுன்னு உங்களுக்கு தெரியும்ல. என்னால முடியாது. ஆடர் பண்ணுங்க. சாப்பிடலாம்…” 
“வாட்? ஹோட்டல் ஃபுட்? நோ வே வெண்ணிலா. நீங்கதான் சமைக்கனும். சமைக்கறீங்க…” 
“மாட்டேன். நான் ஆடர் தான் பண்ணுவேன்…”
“அப்போ எனக்கு வேண்டாம். நீங்க சாப்பிடுங்க…” என்று முடித்துக்கொண்டான்.
முதலிலேயே வெண்மதி சரி ஏதாவது செய்கிறேன் என்று சொல்லியிருந்தால் கூட வேண்டாம் என்று மறுத்திருப்பான் தான். ஆனால் அவள் தாம் தூம் என குதிக்கவும் தான் அவளிடம் வம்பு செய்ய நினைத்தான்.
‘என்னதான் செய்றாங்கன்னு பார்ப்போம்’ என்று நினைத்து அவளையே குறுகுறுவென பார்க்க,
“கண்டிப்பா மாட்டேன்…” அவள் வீம்பாய் மறுக்க,
“நீங்க செஞ்சுதான் ஆகனும். ஏற்கனவே கொஞ்சம் ஸ்டமக் அப்செட் போல இருக்கு. ஹோட்டல் ஃபுட் எடுத்துக்கிட்டா ஒத்துக்காது. வீட்லயே செய்ங்க சும்மா லைட்டா…” பாவம் போல கண்டிப்பாய் சொல்ல வெண்மதிக்கு மறுக்க தோன்றவில்லை. ஆனாலும் கோபம் தான்.
“எனக்கு உப்மா தான் செய்ய வரும்…” அவனுக்கு பிடிக்காததை சொல்ல,
‘ரொம்ப தப்பும்மா’ என நினைத்தவன்,
“நோ ப்ராப்ளம். தாராளமா செய்ங்க. ஆனா சாப்பிடறது மாதிரி செய்யனும். இல்லைனா நீங்கதான் ஃபுல்லா சாப்பிடனும். சாப்பிட வைப்பேன்…” என கூறிவிட்டு லேப்டாப்பில் முகத்தை மறைத்துக்கொண்டவனுக்கு சிரிப்பு பீறிட்டது.
ஏற்கனவே முரளியின் ஆசைக்கிணங்கி ஒருநாள் சமைக்கிறேன் பேர்வழி என வேறு வழியின்றி ஏனோதானோவென சமைக்க முரளியோ அதை அவளையே வம்படியாய் சாப்பிடவைக்க நொந்துபோனாள் வெண்மதி.
‘அந்த நாள் கண்ணு முன்னால வந்துபோகுமில்லையா’ என நினைத்தவனுக்கு சிரிப்பு பொங்கியது.
சிரித்தால் பத்திரகாளி உக்கிரகாளியாக மாறிவிடுவாள் என அடக்கிக்கொண்டான். சிறிது நேரம் அவனையே முறைத்துப்பார்த்துவிட்டு எழுந்து கிட்சனுக்குள் சென்று மறைந்தாள்.
“உப்மா வேணுமாம் உப்மா. பழிவாங்கலாம்னு சொன்னா எனக்கே ரிவென்ஜ் ஆகிடுச்சே. ஆப்பை வைச்சு நானே அதுல உட்கார்ந்துட்டேன். அவ்வளோ டேஸ்டா பன்ற அம்மாவோட உப்மாவையே அவ்வளோ பேசுவேன். எனக்கு இது தேவைதான்…”
வாய்விட்டு புலம்பியபடி கலைவாணிக்கு வீடியோ கால் செய்தவள் உப்மா செய்ய ஆரம்பித்தாள். அனைத்தையும் பார்த்தபடி நின்ற முரளிக்கு முகம் கொள்ளா புன்னகை.
அவளின் செயலில் அப்படியே அள்ளி அணைத்துக்கொள்ளலாம் என்ற வேகம் பிறக்க தன்னை கட்டுப்படுத்தினான். ‘இன்னும் எத்தனை நாளைக்கு நான் தள்ளி நிற்கனுமோ?’ என்ற ஏக்க பெருமூச்சு அவ்விடம் முழுவதும் அனல்காற்றாய் உருவெடுத்து அவனையே சுட்டது.
“கண்ட்ரோல் முரளி. இந்த நினைப்பு மேடம்க்கு தெரிஞ்சது. உப்மாவுக்கு வச்ச பாத்திரத்துல உன்னை தூக்கிப்போட்டு கிண்டிடுவாங்க…” தனக்கே சொல்லிக்கொண்டவன் மீண்டும் வந்து நல்லபிள்ளையாய் அமர்ந்துகொண்டான்.
உப்மாவும் தேங்காய் சட்னியும் செய்து அவனை உண்ண அழைத்தவள் அவனின் முகத்தை ‘என்ன சொல்ல போகிறானோ?’ என பார்த்திருக்க அவனோ மௌனமாய் உண்டுவிட்டு எழுந்துகொண்டான். 
சப்பென்று ஆனது வெண்மதிக்கு. ‘பரவாயில்லாம செஞ்சிருக்கேன். நல்லதாய் நாலுவார்த்தை சொன்னா என்னவாம்? நல்லாதான் இருக்குன்னு எனக்கே தெரியுதே?’ மனதோடு புலம்பியவள் தானும் உண்டுமுடித்து உறங்க வர இவளுக்காக முரளி விழித்திருந்தான்.
‘ஏதோ பேசத்தான் வெய்ட்டிங் போல’ என பார்த்தவள் கோபமாய் அவனை கண்டுகொள்ளாமல் வந்து படுத்துக்கொள்ள அவளின் செயலில் சிரிப்புடன் முரளியும் அருகில் படுத்து கண்களை மூடிக்கொண்டான்.
‘பேசனும்னு இருந்துட்டு நான் படுத்ததும் ஒண்ணும் பேசாம படுத்துட்டானே. என்னன்னு தெரியாம தூக்கம் வேற வரமாட்டிக்கே. இவன் என்னதான் நினைச்சிட்டு இருக்கான்?’ 
உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவளுக்கு கோபம் கோபமாய் பொங்கியது. அவளின் தவிப்பு புரிந்தாலும் முரளி அசையவே இல்லை. அவனுமே உறங்கவில்லை. சில நேரம் பொறுத்திருந்து பொறுமையிழந்து முரளியை பிடித்து உலுக்கியவள், 
“எழுந்திரிங்க. முரளி முதல்ல எழுந்திரிங்க. என்ன பேசனும்னு இருந்தீங்க? அதை சொல்லுங்க…” என அவனை எழுப்பி உட்காரவே வைத்துவிட்டாள். 
“உங்களுக்கு தூக்கம் வந்திருச்சே. நாளைக்கு பேசலாம் வெண்ணிலா…” உறக்கத்திலிருப்பவனை போல கண்கள் சொருகி பேச,
“இல்லை, எனக்கு தூக்கமே வரலை. இப்ப சொல்லுங்க. எனக்கு தெரிஞ்சுக்கனும்…” பிடிவாதமாய் கேட்க விளையாட்டை கைவிட்டு அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“கேட்டா மட்டும்? ஒண்ணும் ஆகப்போறதில்லை. தூங்கலாம்…” மீண்டும் படுக்க,
“இல்லை, எனக்கு சொல்லுங்க. ஆகறதா இல்லையான்னு நான்தான் முடிவெடுக்கனும். சொல்லுங்க…” அவனின் தோள்களை பற்றிக்கொண்டு கேட்க அவளின் விழிகளுக்குள் பார்த்தவன்,
“ஹனிமூன் போறதை பத்தி பேசலாம்னுதான் வெய்ட் பண்ணேன். போகலாமா?…”
முரளி கேட்டதும் பக்கென்று ஆனது வெண்மதிக்கு. கேட்டிருக்கவே வேண்டாமோ என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே கண்களில் மழுக்கென்று கண்ணீர் பொங்கிவிட்டது.
“ப்ச் என்ன இது சின்னப்பிள்ளை மாதிரி அழுகை. சண்டை போடுவீங்கன்னு பார்த்தா இப்படி அழறீங்க?…” அவளின் விழியில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே பேசியவன்,
“இதுக்குத்தான் நான் யோசிச்சேன். வேண்டாம்னு படுத்தேன்…” அவளின் கண்ணீர் அந்தளவிற்கு பாதித்தது முரளியை. அவளை நெருங்கி தோள் சாய்த்துக்கொண்டவன், 
“ப்ளீஸ் வெண்ணிலா, அழாதீங்க. வீட்ல அம்மாவும் அப்பாவும் பேசினாங்க. உங்க லீவ் முடியறதுக்குள்ள சின்னதா ஒரு ட்ரிப் போய்ட்டு வாங்கன்னு. உங்கட்ட எப்படி சொல்லன்னுதான் தயங்கினேன்…” 
அவனின் ஆறுதலான அணைப்பும் பேச்சும் வெண்மதியை மேலும் குன்ற செய்தது.
‘என் சுயநலத்திற்காய் அன்று இவனை மறுத்தேன். இன்றும் என் சுயநலத்திற்காய், மனநிம்மதிக்காய் இவனை விலக்குகிறேன். என்ன பெண் நான்?’ என்ற எண்ணம் அழுத்தமாய் மேலோங்கியது.  
இத்திருமண வாழ்வு எப்படியெல்லாம் அமைந்திருக்க வேண்டியது. இப்படி ஆகிவிட்டதே? தானும் வருந்தி அவனையும் வருத்தி. இதற்குத்தான் வேண்டாம் என்று சொன்னேன். கேட்டானா?
நினைத்து நினைத்து மருகியவள் அவனின் பார்வையில் உடைந்துதான் போனாள். 
“வெண்மதி?…” அழுத்தமாய் அவன் அழைக்க கண்ணீர் மட்டும் மட்டுப்படவே இல்லை. ஆயிரம் சமாதானங்கள் எதுவும் காதில் விழவில்லை. அவனின் அருகாமையின் நெருக்கம்கூட போதவில்லை.
சிறிது நேரத்தில் வெண்மதி கண்ணயர்ந்துவிட தானும் உறங்க ஆரம்பித்தான் அவளிடம் சொல்லியிருக்க கூடாதோ என்னும் வருத்தத்துடன்.
நேரம் சென்று முரளி உறங்கிவிட்டாலும் அவனின் ஆழ்மனம் விழித்துக்கொண்டு தான் இருந்தது. தங்கள் வாழ்க்கையின் நிகழ்வுகளில் தாக்கம் சுழன்றுகொண்டே தான் இருந்தது வெண்மதிக்குமே. 

Advertisement