Advertisement

“இனி உன்னை விடேன்” என்பதை செயலில் அவள் உணர்த்த அவளின் விரல்களை இவனும் பற்றிக்கொண்டான் இறுக்கமாய்.
“வெண்மதி நான்…”
“நான் இப்ப மிசஸ் வெண்மதி முரளிதரன். இந்த உரிமையா நீ வா போன்ற பேச்சு இருந்துச்சு தொலைச்சிடுவேன். காட் இட்…” என மிரட்ட,
“அது நேத்தில இருந்து தான். எனக்கு எப்பவுமே நீ பழைய வெண்மதி. நான் மீட் பண்ணினப்போ உன்னை கல்யாணம் ஆனா வெண்மதிய அனான் பார்க்கலை. அந்த வெண்மதி தான் இப்பவும் எனக்குள்ள இருக்கா…” விபீஷும் தன் ஏக்கங்களை தள்ளிவைத்தவனாய் அவளிடம் அழுத்தமாய் சொல்ல,
“அப்ப அவளை தேடி போய் பேசுங்க. இப்ப இந்த வெண்மதிக்கிட்ட பேச உங்களுக்கு எந்த ரைட்ஸும் கிடையாது மேன்…” என்று இவளும் அழுத்தமாய் சொல்ல,
“வெண்மதி…” என விபீஷும் கத்த,
“மிசஸ் வெண்மதி முரளிதரன். உங்களுக்கு நல்லாவே கேட்டிருக்குமே விபீஷ்? இனிமே என் மனைவிக்கு இப்படி சில்லியா கால் பண்ணி தொந்தரவு செஞ்சா நான் அமைதியா இருக்கமாட்டேன்…” முரளியின் குரல் சட்டென கேட்கவும் விபீஷின் காதல் எல்லாம் தொலைதூரம் செல்ல,
“டேய் கல்யாணம் ஆகிடுச்சுன்னு மிதப்புல பேசறியா? நல்லா அனுபவிப்படா நீ. அமைதியா இருக்கமாட்டியா? அமைதியா இருந்து தானே என் குடும்பத்தை கருவறுத்த. உன் அமைதி என்ன பண்ணும்னு எனக்கும் நல்லாவே தெரியும் முரளி. என்ன சொன்ன உன் மனைவியா? நான் விட்டுகுடுத்ததால தான் வெண்மதி இப்போ உன் மனைவி…”
தோல்வி தந்த ரணமும், வெண்மதியை இழந்த வலியும், விபீஷை  வெறிகொண்டவனாக மாற்றியிருக்க பதிலுக்கு பதில் எகிறினான் அவன். 
விபீஷ் சொல்லியதில் அதிர்வுடன் வெண்மதி முரளியை பார்க்க அவனின் முகமே வேதனையில் கசங்கி இருந்தது. சற்றுமுன் சந்தோஷித்த சுவடே இன்றி அப்பட்டமான வருத்தமும், வலியும் அவனின் முகத்தில்.
வெண்மதிக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும் இருவருக்குமான பிரச்சனையின் ஆழம் மிக அபாயமானது என்றுமட்டும் புரிந்தது.
“விபீஷ் எல்லையை மீறி பேசறீங்க. கொஞ்சம் நிதானமா நீங்க யோசிச்சாலே நான் எதுக்கும் காரணமில்லைன்னு உங்களுக்கே புரியும். இனியாவது உங்க வாழ்க்கையை அமைதியா அமைச்சுக்காங்க…”
“அப்படித்தான்டா பேசுவேன். நான் முதமுதல்ல ஆசைப்பட்டவடா வெண்மதி. இப்ப இழந்துட்டு நிக்கறேன். அதுவும் உன்கிட்ட உன்கிட்ட தோத்துப்போய் நிக்கறேன். இந்த ஜென்மத்துல உனக்கு குடும்பமே அமையக்கூடாதுன்னு நினைச்சேன். நான் ஆசைப்பட்ட பொண்ணை கல்யானம செஞ்சு உன் முன்னால வாழ்ந்து காண்பிக்கணும்னு நினைச்சேன். ரெண்டுலயும் தோத்துட்டேன்…”
“டேய் முரளி நல்லா ஞாபகம் வச்சுக்கோ. உன்னை ஜெயிக்கனும்னா உன்னை கொன்னுட்டு கூட வெண்மதியை நான் கூட்டிப்பேன். செய்வேன்டா. செஞ்சு காட்டறேன்னா இல்லையான்னு பாருடா…” என கத்திக்கொண்டே இருக்க சட்டென அழைப்பை துண்டித்த வெண்மதி கண்ணில் நீருடன் முகத்தை மூடிக்கொண்டாள். 
“ஹேய் என்ன இது? கண்ணீரெல்லாம்?…” என பதறி அவளின் முகத்தை நிமிர்த்தி கைகளை விடுத்து கண்ணீரை துடைத்தவன்,
“பயந்துட்டீங்களா?…” என்றான் மெல்லிய புன்னகையுடன்.
“இவன் இவனை உங்களுக்கு…” என்றவள் சட்டென தனக்கு விபீஷ் அனுப்பிய செய்திகளை அவனுக்கு காண்பிக்க கேட்டவனின் கை முஷ்டி இறுகியது. 
அத்தனை பிதற்றல்கள். கணவனாய் அதை கேட்க கேட்க முரளியின் கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது. அவனின் முகமாற்றங்களை கவனித்துக்கொண்டே வெண்மதி இருக்க சட்டென சுதாரித்த முரளி,
“இதை டெலிட் செய்யாம ஏன் வச்சிருக்கீங்க? அப்பவே டெலிட் செஞ்சிருக்கலாமே?…” என இலகுவாய் கேட்க,
“முதல்ல டெக்ஸ்ட் பண்ணிட்டே இருந்தான். நான் கண்டுக்கலை. உடனே வாய்ஸ் மெசேஜ் அனுப்பவும் கொஞ்சம் உதறலா இருந்தது. யாருக்கும் சொல்லவும் பயமா…”
“இதுக்கெல்லாம் பயப்படுவாங்களா?…” என்றான் அவளை சமாதானம் செய்யும் விதமாக.
“அதோட உங்களுக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனைன்னு தெரியலை எனக்கு. அவன் பேசினதை முதல்ல கேட்க பதட்டமா இருந்தது. அதையே இன்னொருக்க திரும்ப திரும்ப கேட்கும் போது அவன் சொல்றதுல என்ன விஷயம்ன்னு தெளிவா தெரிஞ்சுக்கலாமேன்னு தான் டெலிட் செய்யலை. இது நீங்க சம்பந்தப்பட்டது. உங்களுக்கும் தெரியனும்னு நினைச்சேன்…”
வெண்மதி தெளிவாய் சொல்ல அவளை பார்த்து புன்னகைத்தவன் அவளின் தலையை வருடி,
“ஏன் இவன் கல பன்றான்னு என்கிட்டே முன்னாடியே சொல்லலை?…”
“பிரச்சனை என்னன்னு தெரியலை. கல்யாணத்தை வச்சுட்டு கோபத்துல அவனை ஏதாவது பண்ண போய் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்து கல்யாணமும் நின்னுடுமோன்னு தான் சொல்லலை…” என்றதும் அவனிதழ்களில் அகன்ற புன்னகை.
“என்ன ஈஈஈஈஈஈ? இப்ப என்ன கண்டுபிடிச்சீங்க?…” என்றன் அவனின் சிரிப்பை பார்த்து.
“அப்பா இந்த மேரேஜ் நடக்கனும்னு உங்களுக்கும் ஆசை இருந்திருக்கு இல்லையா வெண்ணிலா?…” என்றான் தலைசாய்த்து புன்னகைமுகமாய்.
அவனிடம் மாட்டிக்கொண்ட தினுசில் இவள் விழிக்க அவனின் புன்னகை இன்னமும் அதிகமாக,
“சிரிச்சவாயன், சிரிச்சவாயன்…” என அவனை திட்டியவள்,
“இவன் எதுக்காக உங்கமேல கோபமா இருக்கான்?…” என்றால் மீண்டும் அதே இடத்தில் வந்து நின்று.
முரளிக்கு சொல்வதிலொன்றும் பயமில்லை. ஆனால் இத்தனை நாள் இத்தனை விஷயங்களை மறைத்து வைத்தாயா என்று கேட்டால் என்ன செய்வது என யோசித்தான்.
அவன் சொல்லாமல் விட்டதற்கு முதல் காரணம் முதல்முறை திருமணம் பேசும் பொழுது இதை சொல்ல தேவையிருக்கவில்லை. அதன் பின்னால் சொல்லாமல் இருந்ததன் காரணம் அதனை வைத்தே மீண்டும் திருமணத்தை வெண்மதி நிறுத்த கூடுமோ என அஞ்சி தான்.
சொல்லிவிடலாம் தான். ஆனால் இன்றே இப்பொழுதே சொல்லி இந்த நேர இனிமையை கலைக்க வேண்டுமா என பார்த்தான். அவன் வாய் திறப்பதற்குள் சுகன்யா கதவை தட்டும் ஓசை கேட்க,
“நீங்க போய் டோர் ஓபன் பண்ணுங்க. நான் ஷர்ட் போட்டுட்டு வரேன்…” என்றவனை அப்பொழுது தான் கவனித்தாள் வெறும் உள் பனியனுடன் அவனிடம் இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம் என்று.
“என்ன வெண்ணிலா?…” என்றான் அவளின் முகம் போன போக்கை பார்த்து.
“ஹாங் நத்திங்…” என்றவள் வேகமாய் கதவை திறக்க விரிந்த கூந்தலுடன் அவள் வந்ததும் பார்த்த சுகன்யா,
“இன்னும் நீங்க ரெடி ஆகலையா?…” என்றார்.
“இதோ அத்தை. தலை வாரனும்…” என சொல்லவும் அவளை பார்த்து புன்னகைத்தவர்,
“தலை பின்னிட்டு இந்த பூவை வச்சுக்கோமா. எல்லாரும் உங்களுக்காக தான் வெய்ட்டிங்…” என சொல்லி செல்ல மீண்டும் கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்தவளுக்கு அப்பொழுது தான் பசிக்கும் உணர்வே.
சுற்றிலும் பார்த்தவள் தண்ணீர் ஜக்கை வாய்க்குள் சரித்துக்கொண்டாள். முதல்நாள் வைக்கப்பட்டிருந்த பழங்கள் தட்டில் இருக்க அதில் இரண்டு வாழைப்பழத்தை எடுத்து வேகமாய் சாப்பிட அவளை பார்த்தவனின் முகம் மென்மையானது.
“பசிக்குதா?…” என்றான் சட்டையின் பட்டன்களை போட்டபடி.
“இங்க காலையில காபி, டீ, பிஸ்கட் இப்டி எல்லாம் கிடையாதா?…” என கேட்டுக்கொண்டே வந்து தலையை வார,
“ம்ஹூம் சாப்பிட்ட பின்னால தான் காபி குடிப்போம். நோ பெட்காபி. இது தான் பழக்கம். இனி உங்களுக்கு காலையில காபி கொண்டுவர சொல்லிடறேன்…”
“அச்சச்சோ போதும் சாமி. சும்மாவே உங்கப்பா என்னை வேற்றுகிரகவாசியை வீட்டுக்குள்ள விட்டதாட்டம் உர்ர்ருன்னு இருக்காங்க. இதுல நான் பெட்காபி கேட்டேன்னு தெரிஞ்சது முடிஞ்சது. கலைவாணி சாபம் பலிச்சிருச்சு…” என நொந்துகொண்டே பின்னலை முடித்தவள் முகத்திற்கு பொட்டு வைத்துவிட்டு பூவை எடுக்க அதை வந்து வாங்கினான்.
நான்காய் சரம் தொடுத்து அதை வெண்மதியின் தலையில் சூட்டி பின் செய்ய கண்களை மூடியவளின் காதுக்குள் விபீஷின் குரல். சட்டென தூக்கிபோட்டது வெண்மதிக்கு.
அவளை திருப்பி அவளின் வகிட்டில் குங்குமத்தை வைத்தவன் முகத்தில் பார்வையை நிலைக்கவிட்டவள் அவனை விடுத்து வேகமாய் அறையை விட்டு வெளியேறிவிட யோசனையுடன் தேங்கி நின்றான் முரளிதரன்.
——————————————————-
ஹாஸ்பிடலுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர் சீமாவும் விபீஷும். காரில் மௌனமே பிரதானமாய். எப்பொழுதும் தன்னிடம் பேசுபவள் இன்றும் வாயடைத்து இருப்பதன் காரணம் புரிந்தவனின் இதழ்களில் வன்மமான புன்னகை.
காலை ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் விபீஷின் முகம் நிலைகொள்ளாமல் தவித்தபடி இருந்ததை பார்த்துக்கொண்டுதான் இருந்தால் சீமா. 
நாகராஜிற்கு ஆப்பரேஷன் நல்லவிதமாய் நடந்து முடிந்திருக்க வசுந்தராவிற்கு மாற்றுடையும் வேறு சில பொருட்களையும் எடுத்துசெல்ல விபீஷுடன் வீட்டிற்கு வந்திருந்தாள்.
வந்த சிறிது நேரத்திலேயே விபீஷ் தனது அலைபேசியில் வெண்மதியிடம் பேச அதிலும் இந்த விதமாக பேச இதை எதிர்பார்க்காதவளின் முகமோ வெறுமை பூசியது.
பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அழைப்பு துண்டிக்கப்பட மீண்டும் அழைப்புவிடுக்க போனவன் கடுப்பாய் நிமிர்ந்து பார்க்க அங்கே சீமாவின் அதிர்ந்த பார்வையில் ஒரு நொடி ஸ்தம்பித்தவன் மீண்டும் கோபமாகி அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
நெஞ்சில் உறவாடிக்கொண்டிருந்த மஞ்சள்கயிற்றை அழுத்தமாய் பற்றியபடி சீமாவின் முகத்தில் சொல்லொண்ணா வேதனை.
அங்கிருந்து எப்படி கிளம்பினாளோ? இயந்திரத்தன்மை மட்டுமே மொத்தமாய் அவளிடத்தில். பேசுவாள் என்று பார்க்க எந்த உணர்வும் இல்லை அவள் முகத்தில். விபீஷின் மனது என்னவோ செய்தது அவளின் சலனமில்லாத முகம்.

Advertisement