Advertisement

நிலவு – 14
             விடியலில் கண்விழித்த முரளி தன்னருகே திரும்பி பார்த்தான். வெண்மதியின் முகத்தில் ஏதோ சில யோசனைகளுடன் ஆழ்ந்த உறக்கமின்றி சுழிந்த புருவங்களுடன் உறங்கிக்கொண்டிருந்தாள்.
“சம்திங் ராங். விபீஷ் தலையீடு இருக்குமோ?” என்ற சிந்தனையுடன் அவளை நெருங்கி படுத்தவன் விரல் கொண்டு முகன் வருட அவனின் மென்மையான தீண்டலிலேயே சட்டென கண்விழித்தாள் அவனின் நாயகி.
பெண்ணவள் விழி மலர்ந்ததும் அவள் மன்னவனின் முகம் விரிந்த புன்னகையுடன். கனவென்று எண்ணினாளோ என்னவோ அரை மயக்கத்துடன் அவனின் மார்போடு ஒண்டியவள் அவனின் வாசத்தை ஆழந்து சுவாசித்தாள்.
சுவாசக்கிடங்குகள் முழுவதும் அவனின் வாசம் நிரம்ப தன் கன்னத்தை அவனின் நெஞ்சத்தில் பசைபோட்டதை போல ஒட்டியவள்,
“போய்டாத முரளி. ப்ளீஸ் ஹக் மீ. என்னை டைட்டா கட்டிக்கோ. கண்ணை திறக்கவே மாட்டேன். நீ போய்டாதே. இந்த தூக்கம் எனக்கு கலையவே கூடாது முரளி…” என்று இன்னமும் அவனோடு ஒண்ட முரளிக்கு தான் பேரவஸ்தை உண்டானது.
அதிலும் வெண்மதியின் பிதற்றல் இத்தனை நாட்களின் ஏமாற்றமும் ஏக்கமுமாய் பிரதிபலிக்க இதை எதிர்பாராதவன் சற்றும் யோசியாது அவளை தன் இறுகிய அணைப்பிற்குள் கொண்டுவந்தான்.
தன் மீசை முட்கள் அவளின் கன்னத்தில் அழுத்த முத்தமிட்டான். மீண்டும் ஒரு முத்தத்தை பதிக்க முதலில் என்ன இது என்று நினைத்தவள் மறுமுத்தத்தில் சுயபெற்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
வெண்மதியின் பார்வையில் முரளியின் புன்னகை அதிகரிக்க அவனின் கொள்ளைகொள்ளும் புன்னகை அவளை வாரி சுருட்ட ஒரு நொடி ஒன்றுமே விளங்கவில்லை.
“டைட் ஹக் & dடர்ட்டி கிஸ் மார்னிங் வெண்ணிலா…” என்றவன் மீண்டும் ஒரு முத்தத்தை நெற்றியில் பதிக்க அப்பொழுது தான் தான் இருக்கும் நிலை அவளுக்கு உரைத்தது.
இரவு உடை கூட மாற்றாமல் அப்படியே புடவையோடு படுத்தது இப்பொழுது அவனின் அணைப்பில் சற்று நெகிழ்ந்து போய் இருக்க வெட்கமும், அதிர்ச்சியும் அவளை பிடித்துக்கொள்ள,
“விடுங்க முரளி…” என அவனை உதற பார்த்தாள்.
“இதென்னடாங்க வம்பா இருக்கு? நீங்களே கட்டிப்பீங்க. இப்ப நீங்களே ஷாக்காகுவீங்க. நல்ல ரியாக்ஷன் தான். முரளி அப்பாவிங்க. இப்படி வில்லனை பார்க்கறது போல பார்க்காதீங்க…”
பேச்சில் கேலியும் கிண்டலும் தெரிந்தாலும் அவனின் முகம் அவளின் அருகாமையில் விகசித்தது.
அந்த சூழ்நிலையை அவன் இழக்கவும், அவளை விட்டு விலகவும் விரும்பவில்லை என்பதை இன்னமும் இளகாத அவனின் அணைப்பே உணர்த்தியது அவளுக்கு.
“முரளி ப்ளீஸ்…” வெண்மதி அவனின் அருகாமையில் திணற,
“நீங்க தான் சொன்னீங்க வெண்ணிலா தூக்கம் கலையாம இப்படி எனக்குள்ளையே இருக்கனும்னு நீங்க தான் ஆசைப்பட்டீங்க. இப்போ கூட ஒண்ணுமில்லை. உங்களை நான் தூங்கவைக்கறேன். பண்ணட்டுமா?…” 
“அடப்பாவி” என்பதை போல அவள் லுக் விட அட்டகாசமாய் சிரித்தவன்,
“தூங்கறீங்களா?…” என கேட்டுக்கொண்டே அவளின் முகத்தை இன்னொரு கையால் பற்ற,
“ஆணியே புடுங்க வேண்டாம். போயா…” என ஒரே தள்ளாக தள்ளிவிட்டு எழுந்தவள் தன்னை சரிபார்த்துக்கொள்ள முரளியின் முகத்தில் குறும்பு புன்னகை.
“அப்பா கனவு கனவுன்னு கனவுலையே பேபீஸை ஸ்கூல் வரைக்கும் கூட்டிட்டு போய்ருக்கீங்கன்னு நினைக்கறேன். கரெக்ட்டா?…” என கள்ளப்புன்னகையுடன் கேட்க தலையணையை எடுத்து அவனை மொத்தினாள் வெண்மதி.
அதை விட தன் முகத்தில் பூத்திருந்த வெட்க குமிழ்களை மறைக்கத்தான் படாதபாடுபட்டுப்போனாள்.
“பார்க்க அம்பியாட்டம் இருந்துட்டு பேச்சை பாரு. உங்களை போய் நல்லவன்னு நம்பிட்டேன்…”
“நல்லவன் பட்டம் வாங்கி நான் என்ன பண்ண போறேன்? தூங்கவச்சாவது அப்பா ஆகிடுவேன்…” என்று வேறு சொல்லி இன்னும் வாங்கிக்கட்டிக்கொள்ள,
“யூ யூ…” என வார்த்தைகள் வராமல் அவனை கழுத்தை பிடிப்பதை போல கையை கொண்டு செல்ல அவளையே அசையாமல் பார்த்திருந்தவனின் விழிகள் மொழிந்த ஜாலங்களில் தன்னை பின்னிழுத்துக்கொண்டாள்.
“வெண்ணிலா போய் குளிச்சுட்டு வாங்க. போகலாம்…” என்றான் மாறா புன்னகையோடு.
பதிலின்றி தனக்கு தேவையான உடைகளுடன் பாத்ரூமினுள் சென்று புகுந்துகொள்ள அவனின் புன்னகை முகம் இன்னமும் மலர்ந்தே இருந்தது.
இப்படி ஒரு காலை நித்தமும் தனக்கு வேண்டும் என பிராத்தனையோடு எழுந்தமர்ந்தவன் படுக்கையை சரிசெய்து அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தான். 
வெண்மதி குளித்து உடைமாற்றி வருவதற்குள் இவன் அனைத்தையும் முடித்திருக்க வேறு படுக்கைவிரிப்பு மாற்றப்பட்டிருப்பதை கண்டவள்,
“என்கிட்டே சொல்லியிருக்கலாமே?…” என வந்து நிற்க,
“எனக்கு இது பழக்கம் தான். இனி ரெண்டு பேரும் சேர்ந்தே செய்யலாம். சரிதானே?…” என்றுவிட்டு அவளின் உடையை பார்க்க ஈரம் இன்னமும் அங்குமிங்கும் இருந்தது.
“உள்ள ஈரத்தோட புடவை மாத்திருக்கனுமா? ஒரு நைட்டியோ சுடிதாரோ எடுத்துட்டு போயிருக்கலாமே? நான் உள்ள போகவும் நீங்க ரூம்ல மாத்தியிருக்கலாம். அந்தளவுக்கா என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லை?…” என வருத்தம் போல கேட்டாலும் அவனின் முகத்தில் குறும்புகள் கொட்டிக்கிடந்தன.
பதறிப்போய் வனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் முகத்தில் இருந்த சீண்டளிலும் சிரிப்பிலும் முறைக்க,
“பாருங்க காலையில கூட நான் நல்லபிள்ளையா தான் இருந்தேன், நீங்க தான் என்னை…” என மீண்டும் ஆரம்பிக்க அவனின் இதழ்களை தன் விரல் கொண்டு மூடியவள்,
“மூச். சும்மா சும்மா இதையே எத்தனைவாட்டி சொல்லுவீங்க. இன்னொருக்க சொன்னீங்க சொல்ல வாய் இருக்காது. ஜாக்கிரதை…” என கண்களால் மிரட்ட முரளி  அவளின் விரலுக்குள் எதுவோ சொல்ல புரியாமல் கையை இவள் விலக்க,
“வாய் இருக்காதுன்னா?…” என்றான் சிரிப்புடன்.
“ஈஸ்வரா, என்ன வாய் உங்களோடது. போய் குளிங்க முதல்ல. நாளையில இருந்து நீங்க சொல்ற மாதிரி மாத்திக்கறேன்…” என கையெடுத்து கும்பிட்டு அவனை அனுப்ப சிரிப்பில் உடல் குலுங்க  பாத்ரூம் சென்றான் முரளி.
அவன் செய்த அலும்பில் வெண்மதியின் முகம் புன்னகை பூசியிருக்க இனிமையான மனநிலையுடன் தலையை உலர்த்தியவள் பின் தனது புடவையை பார்த்து முகத்தை சுருக்கிக்கொண்டு,
“கொஞ்சம் அதிகமாவே தான் நனைஞ்சிருக்கு. மாத்திடலாமா?” என கேட்டுகொண்டே பாத்ரூமை பார்த்தாள். 
சட்டென்று ஓடிச்சென்று வெளியில் தாழ்பாள் போட்டவள் வேகவேகமாய் வேறுடைக்கு மாறினாள்.
“இன்னைக்கு அம்மாவுக்கு தெரிஞ்சது ஆச்சர்யத்துல வாயடைச்சு போய்ருவாங்க. இவ்வளவு சீக்கிரம் குளிச்சு கிளம்பிருக்கேன். இதுதான் மஞ்சள் கயிறு மேஜிக்கோ? பரவாயில்லை எனக்கும் கூட பொறுப்பு பருப்பு வேக ஆரம்பிச்சிருச்சே?” என தன்னையே வியந்தவளாக தோளில் தட்டிக்கொடுக்க,
“வெண்ணிலா…” என உள்ளே இருந்து முரளி கதவை தட்ட அப்பொழுதான் அவனை உள்ளே வைத்து பூட்டியது நியாபகம் வந்தது. தலையில் தட்டிக்கொண்டவள் வேகமாய் வந்து அவனை விடுதலை செய்ய வெளியே வந்தவனின் முகமோ அவளை ஒரு மார்க்கமாய் பார்த்தது.
“என்ன?…” என அவனின் பார்வையில் தடுமாறி கேட்க,
“நத்திங்…” என்று தோளை குலுக்கிக்கொண்டவன் இதழ்களுக்குள்ளேயே சிரிப்பை மென்றான்.
“நத்திங்காம். இத கேட்க தான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணேனாக்கும்? தத்தி, தத்தி. இதுக்கு பேசாம அந்த புடவையிலேயே இருந்திருக்கலாம். ப்ச்…” என உதடுகளுக்குள் முணுமுணுத்தவள் இதழசைப்பில் என்ன பேசுகிறாள் என்று உணர்ந்துகொண்டவன் அவள் புறம் திரும்பி,
“எதாச்சும் சொன்னீங்களா?…” என்றான் வெகு சாதாரணமாய்.
“இனி சொல்ல என்ன இருக்கு? கிளம்பனும்…” என்று கடுப்புடன் சொல்லி அவனை தாண்டிக்கொண்டு அவள் கண்ணாடி முன்பு நின்று ஈர தலையுடன் தலைவார ஆரம்பித்தாள்.
“என்ன இது சின்னபிள்ளையாட்டம்? தலையை உலர்த்தாம?…” என்று கடிந்தவன் அவளை திருப்ப,
“ப்ச், விடுங்க முரளி. இன்னும் கொஞ்சம் நேரத்துல கிளம்பனும். கோவிலுக்கு போய்ட்டு அம்மா வீட்டுக்கு போகனும்னு அத்தை சொல்லிருந்தாங்க நேத்தே…” என அவனை தவிர்க்க பார்க்க அவளை பின்னால் இருந்து கட்டிக்கொண்டவன் அவளின் கழுத்தில் தன் தாடையை பதித்து,
“இந்த புடவையில ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க. பார்த்ததுமே மனசுல ஒட்டிக்கிச்சு. இதை சொல்லியிருப்பான் அப்பவே. என்னை உள்ள வச்சு பூட்டினீங்கல்ல. அதான் சும்மா போக்கு காண்பிச்சேன்…” 
அவன் சொல்லியதை தனக்கு முன்பிருந்த கண்ணாடி வழியே கண்டவளின் மனம் மயங்க மெல்லிய புன்னகையுடன் அதை ஏற்றவள் அமைதியாக நிற்க,
“இப்படி பேசிட்டே தான் இருக்க போறோமா வெண்ணிலா? எத்தனை நாளைக்கு?…” என்றதும் அவனை திரும்பி பார்க்க இருவருக்குமான இடைவெளி மிக குறுகியதாக இருக்க,
“வெண்ணிலா…” என்றான் காதலாய் கசிந்த குரலில். ஒருவித மோன நிலையில் அவள் கண்மூடி நிற்க  இருவரையும் கலைக்கும் விதமாய் வெண்மதியின் அலைபேசி குரலெழுப்பியது. 
அதை எடுப்பதற்காக சட்டென அவனை விட்டு நகர பார்க்க அவனின் பிடி விடக்கூடியதாய் இல்லை.
“நானே எடுத்து தரேன். பேசுங்க…” என்றவன் மொபைலை நீட்ட யாரென்று பார்த்தவள் கண்கள் நிலைகுத்தி போனது.
“வெண்மதி…” என்றான் அவளை உசுப்பும் பொருட்டு.
“முரளி இது…” என மொபைலை காட்ட அதில் தெரிந்த நம்பரை பார்த்ததுமே முரளி கண்டுகொண்டான். வெண்மதியின் முகத்தில் தெரிந்த பயத்தில் ஒன்றுமில்லை என்பதை போல தலையசைத்து கண்ணமர்த்தியவன்,
“அட்டென் பண்ணி பேசுங்க…” என்றான். சொன்னதோடு நிற்காமல் மீண்டும் அழைப்பு வர அவனே அட்டென் செய்ய வெண்மதி ஸ்பீக்கரில் போட்டாள்.
“வெண்மதி…” என்ற தவிப்பான விபீஷின் குரலில் வெண்மதிக்கு நடுக்கம் உண்டானதானால் முரளிக்கு இறுக்கம் சூழ்ந்தது.
விபீஷின் குரலில் தான் எத்தனை ஏக்கமும், ஏமாற்றமும், வேதனையும். ஒட்டுமொத்த உணர்வுகளையும் திரட்டி ஒரே வார்த்தையில் நிரப்பினான்.
“வெண்மதி பேசு. நான் விபீஷ். வெண்மதி லைன்ல இருக்கியா?…” 
“இப்ப எதுக்காக எனக்கு கால் பண்ணுனீங்க?…” அவனின் உரிமையான பேச்சிலும், உருகலான குரலிலும் வெண்மதி எரிந்துவிழ முரளியின் இதழ்களில் சிறு புன்னகை.
அவளை கூட்டிவந்து படுக்கையில் அமர்த்தியவன் தான் தலைவார செல்ல அவனின் கைபிடித்து தன்னருகே அமர்த்தி அவனோடு விரல் கோர்த்துக்கொண்டாள்.

Advertisement