Advertisement

நிலவு – 13
             அந்த மருத்துவமனை அறையில் வசுந்தரா அழுதுகொண்டிருக்க அவருக்கு ஆறுதலாய் சீமா நின்றுகொண்டிருந்தாள் அவரருகில்.
“ப்ளீஸ் அத்தை அழாதீங்க. மாமாவுக்கு சரியாகிடும்…” என அவரை தேற்றிக்கொண்டே விபீஷின் எண்ணிற்கு அழைத்துக்கொண்டே இருந்தாள். அவன் எடுக்கும் வழி தான் இல்லை.
“ப்ளீஸ் பிக்கப் அத்தான். ஒரு தடவை போன் எடுங்களேன்” என மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தவள் மீண்டும் மீண்டும் விடாது அழைத்தாள்.
அவளின் எண்ணத்தின் நாயகனோ விடாது வெண்மதிக்கு அழைத்துக்கொண்டிருந்தான்.
“வெண்மதி பேசு…” என அவளுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருந்தவன் மறுநாள் விடிந்தால் அவளின் திருமணம். அதுவும் முரளியுடன். 
திருமணம் நடக்கவிருக்கும் மண்டபத்திற்கு அருகில் தான் தன் காரில் அமர்ந்திருந்தான். மண்டபத்திற்குள் கோலாகலமாய் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்க விபீஷின் காதுகளில் அமிலமாய் பாய்ந்தது அந்த சந்தோஷ கூச்சல்கள்.
அவர்களை நெருங்க முடியாத அளவிற்கு எதுவோ ஒன்றை செய்துவைத்திருந்தான் முரளி. விபீஷிற்கு அதை மீறி அங்கே நெருங்க முடியவில்லை. 
வாசலில் பரசுராம் வேறு. இவனின் காரை பார்த்த பின்பும் நெருங்காமல் இங்கேயே இவன் மீதே பார்வையை அகற்றாது வைத்திருந்தான். இத்தனை தைரியமாய் தன்னை பார்த்துக்கொண்டு அவன் நிற்க விபீஷிற்கு எதுவும் செய்யமுடியாத சூழ்நிலை.
இதுவரை முரளியின் திருமணத்தை நிறுத்த அவன் மேற்கொண்ட அஸ்திரங்கள் வேறு. ஆனால் இங்கேயோ அவை எதுவும் எடுபடாது என்பதில் தான் சுருண்டுபோனான்.
அவனின் மனம் இயலாமையால் மூங்கில் காடுகளாய் வெடித்துசிதறிக்கொண்டிருந்தது. இந்த திருமணம் மட்டும் நடந்துவிட்டால்? நினைத்தும் பார்க்கமுடியவில்லை.
“உன்னை நான் ஏன் முன்னாடியே பார்க்காம போனேன் வெண்மதி?” என பிதற்றிகொண்டிருந்தான். 
முரளிக்கு திருமணம் என்பது பின்னால் போய் தன் மனம் கவர்ந்தவள் கை நழுவி போகப்போகிறாள் அதுவும் நிரந்தரமாய் என நினைக்க நினைக்க ஆறவில்லை அவனுக்கு.
கோபம் எல்லை மீற ஆத்திரம் கரையுடைக்க வெண்மதியின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தான்.
காதலாய் அவளிடம் பேசி பேசி அனுப்பியவன் கடைசியில் இந்த திருமணம் நிற்காமல் நடந்துவிட்டால் தன்னால் நிச்சயம் முரளிக்கு ஆபத்து என்று வேறு மிரட்டலாய் சொல்லியிருக்க நடுநிசி வரை வெண்மதி அதை பார்த்த அறிகுறியே இல்லை.
விண்டுபோன மனதுடன் வீட்டை அடைய அங்கே ஒருவரும் இல்லாதிருக்க செக்யூரிட்டியிடம் கேட்டு தெரிந்துகொண்டவன சட்டென சீமாவிற்கு அழைத்தான்.
அவனின் அழைப்பிற்காக காத்திருந்தவள் முதல் ரிங்கிலேயே எடுத்தவள் அழுகையுடன்,
“எங்க அத்தான் இருக்கீங்க? இங்க மாமாவுக்கு சிவியர் அட்டாக். ***** ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம்…”
“இதை ஏன் எனக்கு முதல்லையே சொல்லலை?…” என்று அவளிடம் கத்தியவன் பின் தலையிலடித்துக்கொண்டு,
“ஓகே நான் இப்பவே கிளம்பி வரேன்…” என சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு காரை கிளப்பினான். கண்கள் கலங்கிப்போய் இருந்தது.
இனி செய்வதற்கு எதுவுமில்லை. நள்ளிரவு இரண்டரை மணி.இரவு விளக்கொளியில் பாதையில் வெளிச்சத்துகள்கள் பளிச்சென்று பரவியிருக்க இவனுக்கு மட்டும் எதிர்காலம் இருட்டாய் தெரிந்தது.
தன் காதலுக்கு ஆயுள் இத்தனை கம்மி என்று மனதிற்குள் அரற்றினான். கானல் நீராய் போக போகும் காதல். இப்படி ஒரு நேசம் தனக்குள் முகிழ்த்திருக்கவே வேண்டாமே என்று விதியின் மேல் சாபம் கொண்டான்.
திருமணத்தின் மேல் நாட்டம் கொள்ள செய்தவள். காதலின் வாசம் அறியச்செய்தவள். பார்வையில் ஆயிரம் பரவசம் பூக்க செய்தவள். அத்தனையும் கொடுத்து மீண்டும் கண்களை பறிப்பதை போல உயிரை பறித்து வாழ்க்கையை முடமாக்கத்தான் அவளை சந்தித்தேனா?
உருகி உருகி உயிர் கரைந்தான். கண்ணீர் வரும் போல் இருந்தாலும் முகம் இறுகிப்போனது. இதை தாண்டி இப்பொழுது தந்தையின் உடல்நலக்குறைவு. என்ன செய்வேன்? என கவலையுடன் மருத்துவமனைக்குள் நுழைய சரியாக சீமாவும் அவனை சமீபித்தித்தாள்.
“சீமா அப்பா..” 
“இப்ப கொஞ்சம் பெட்டர் தான் அத்தான். ஆனா ஆப்பரேஷன் செய்யனும்னு சொல்றாங்க. இப்படியே விட்டா உயிருக்கு ஆபத்தாகும்ன்னு…” சொல்லும் பொழுதே அவளின் அழுகை வெடிக்க ஆரம்பிக்க,
“ப்ச் அழாத. சரியாகிடும்…”
“நீங்க போங்க அத்தான். நான் அத்தைக்கு குடிக்க வாங்கிட்டு வரேன்…”
“நீதான் போகனுமா? அம்மாவோட இருக்கறதென்ன? வா கூட…” என்றவன் எதிர்பட்ட வார்ட்பாயிடம் சொல்லி காபிக்கு அனுப்பினான்.
அறைக்குள் நுழைந்ததுமே வசுந்தராவின் மட்டுப்பட்டிருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்க அவனை கட்டிகொண்டு அழ,
“ம்மா, அதான் ஆப்பரேஷன் செஞ்சா சரியாகிடும்ன்னு சொல்லிட்டாங்கல்ல. பின்ன எதுக்கு அழறீங்க? ஒண்ணுமில்லை…” என தாயை தேற்றியவனுக்கு அடுத்த சோதனையாக நாகராஜன் அதற்கு ச்மமதிக்க முடியாதென்று சொல்லியது பெரும் அதிர்ச்சியாக போனது.
“ம்மா இது உங்க வேலையா? ஏன் என்னை எல்லாரும் சாவடிக்கறீங்க?…” என்று மருத்துவமனை என்றும் பாராமல் கத்த டாக்டர் வந்து அவனை சமாதானம் செய்தார்.
“இப்போ உங்க கல்யாணத்தை பார்க்கனும்னு தானே ஆசைப்படறார் விபீஷ்? அவரோட ஆசையை நிறைவேத்தி வைங்க…” என்று அறிவுரை சொல்லிசெல்ல மொத்தமாய் சிதறிப்போனான். 
நாகராஜனுக்கு இப்படியே தன் உயிர் பிரிந்துவிடுமோ என்னும் பயம் வந்துவிட உடனே மகனுக்கும் சீமாவுக்குமான திருமணத்தை பார்த்துவிடவேண்டும் என்று தன் கடைசி ஆசையாக கேட்க இது குடும்பத்தினர் யாருமே எதிர்பார்க்கவில்லை.
“மாமா, ஆப்பரேஷன் நல்லபடியா முடியட்டும். அதன் பின்னால நல்லா செய்யலாம். இப்போ வேண்டாம். மாமா.எ அத்தானை வற்புறுத்தாதீங்க…” என்று கெஞ்ச அவர் இறங்குவதை தெரியவில்லை.
இதற்கும் மூச்சுத்திணறல் வேறு. பயந்துபோனான் விபீஷ். வசுந்தராவிற்கு ஆசை தான் என்றாலும் மகனை கத்திமுனையில் வைத்து திருமணம் செய்ய சொல்ல அவருக்கும் பிடித்தமில்லை. ஆனாலும் அவரின் கணவர் கேட்பாரா?  
எதுவும் செய்யமுடியாத கைய்யறு நிலையில் ஓய்ந்துபோய் அமர்ந்திருந்தவனருகில் வந்தவள்,
“அத்தான் எனக்கு உங்களோட கல்யாணம் ஆகனும்னு நான் ஆசைப்பட்டேன் தான். ஆனா இப்படி நடக்கனும்னு இல்லை. இது சூழ்நிலையால ஆனது. இதுல என் ப்ளே எதுவும் இல்லை. நான் செஞ்சா ஆமான்னு சொல்லுவேன். ஆனா இதுக்கு நான் காரணமில்லை…”
சீமா சொல்ல சொல்ல இனி எதுவும் செய்ய இயலாமல் விபீஷ் நிலைகுலைந்து நின்றான்.
“ப்ளீஸ் அத்தான், நான் இப்ப என்ன செய்யனும்? நீங்களே சொல்லுங்க…” என அவனின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்திருந்தவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“இப்பவும் நான் வெண்மதியை தான் விரும்பறேன் சீமா. ஆனா இப்போ?…” என்றவன் வார்த்தைகள் வராமல் முகத்தை மூடிக்கொண்டு சில நொடிகள் அப்படியே அமர்ந்திருந்தான். 
அவனின் வார்த்தைகள் கொடுத்த பேரிடியில் வேதனையான முகத்துடன் மெதுவாய் எழுந்து அங்கிருந்து சீமா நகரப்பார்க்க,
“சீமா…” என அழைத்து நிறுத்தியவன் கண்களை திறவாமலே,
“உன் பேரண்ட்ஸ வர சொல்லு. வரப்போ உன் கழுத்துல கட்ட தாலியையும் கொண்டுவர சொல்லு…” என்று சொல்லவும் அவனை நம்பமுடியாத ஒரு பாவனையுடன் அவள் பார்க்க அவன் திரும்பி பார்த்த அழுத்தமான பார்வையில் பதிலின்றி உள்ளே சென்றுவிட்டாள்.
வசுந்தராவிடம் சொல்ல பரபரப்பாய் ஆகிவிட்டார் அவர். சீமாவின் பெற்றோருக்கு அழைக்க ஏற்கனவே மகளின் திருமணத்திற்கென வாங்கியிருந்த மாங்கல்யம் வீட்டில் பூஜையறையில் இருக்க அதை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டனர்.
அந்த மாங்கல்யம் வாங்கிய பொழுதுகள் சீமாவின் நினைவில் வலம் வர துக்கத்துடன் இனி நடக்க போகும் அனைத்தையும் எதிர்கொள்ள மௌனமாய் நின்றாள். ஆனால் அவளின் காதுகளில்,
“இப்பவும் நான் வெண்மதியை தான் விரும்பறேன் சீமா” என்னும் வார்த்தைகள் ஒலித்துகொண்டே இருந்தது.
——————————————————————————–
‘மாங்கல்ய தாரணம் பண்ணுங்கோ’ என்ற அய்யரின் வார்த்தையை அடுத்து மந்திரங்கள் சொல்லப்பட முரளிதரனின் கைகளினால் திருமாங்கல்யத்தை தன் கழுத்தினில் வாங்கிக்கொண்டாள் வெண்மதி.
அந்த நொடி அவளின் உணர்வுகள் கட்டுக்கடங்காமல் பெருக விழிகள் கலங்க அவனை ஏறிட்டாள்.
“ப்ச், பீ ஹேப்பி வெண்ணிலா. நான் சொன்னதை அதுக்குள்ளே மறந்துட்டீங்களா?…” என கேட்க இல்லை என்று தலையாட்டியவளுக்கு அன்று காலை தன்னிடம் வந்து பேசியது அவளின் நினைவலையில். 
மணப்பெண் அலங்காரத்தோடு தேவதையென நின்றிருந்தவளை கண்டவனுக்கு மூச்சு நின்றுதான் போனது.
‘இப்படி நிக்கிறப்போ நான் எங்க பேச. பேச நினைச்சது மறந்திடும் போல’ பின்னால் சிகையில் விரல்கொண்டு கோதிக்கொண்டவன் அவளை பார்த்து புன்னகைத்தான்.
“சொல்லுங்க…” இறுக்கமாய் அவனிடம் வெண்மதி கேட்க தன் மயக்கம் தெளிந்து தொண்டையை செருமி,
“ஹ்ம்ம், பேசனும். பேசத்தான் வந்தேன்…” அவளை தலைமுதல் கால்வரை பார்வையால் வருடியவன் முகத்தில் சிறு முறுவல்.
“பார்த்தா பேச வந்தது மாதிரி தெரியலையே…” அவனின் பார்வையை கண்டுகொண்டதை போல வெண்மதி பேச சிரித்துக்கொண்டவன்,
“வெண்ணிலா, எனக்கு தெரியும் இந்த கல்யாணம் உங்களுக்கு எவ்வளவு வருத்தத்தை தரும்னு. ஆனா என்னால இதுக்கு மேலையும் முடியாது வெண்ணிலா. நேத்து வரைக்கும் அமைதியா இருந்துட்டு நடு ராத்திரில போன் பண்ணி திரும்பவும் மேரேஜை நிறுத்திடுங்கன்னு சொல்றீங்க…” முரளியின் பேச்சிற்கு விதண்டாவாதம் செய்ய வாய் வரை வந்துவிட்ட வார்த்தையை மென்று விழுங்கினாள்.
தான் ஏதாவது பேசி அவனின் மகிழ்ச்சியை குலைக்கும் எண்ணம் மட்டும் வரவே இல்லை அவளுக்கு. எப்படியும் இந்த திருமணம் நடக்கத்தான் போகிறது. அது நல்லவிதமாகவே நடக்கட்டுமே என்பதுதான் அவளின் எண்ணம்.
அதனாலேயே அமைதியாக அவன் பேசுவதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் வெண்மதி.
என்ன ஒன்று முதல்நாள் தன் மொபைலில் விபீஷ் பேசியதை கேட்டதிலிருந்து மட்டுப்பட்டிருந்த கலக்கம் அவளை மீண்டும் சூழ பயத்தில் அவனுக்கு அழைத்து சண்டையிட காலையில் பேசிக்கொள்ளலாம் என்றதோடு நிறுத்துவிட்டான்.
இப்பொழுது வரை முரளியின் முகம் காணும் வரை ஒருவித தவிப்பிலேயே தான் இருந்தாள். அவனை பார்த்தபின்னால் ஒருவித பலம் தோன்ற அமைதியாய் அவனை பார்த்துக்கொண்டே அவள் இருக்க,
“உங்களுக்கு கல்யாணம் பிடிக்கலையே தவிர என்னை பிடிக்கலைன்னு இல்லை. அது எனக்கு நல்லாவே தெரியும் வெண்ணிலா…”
‘இதுல மட்டும் ரொம்ப தெளிவுதான்’ அவனை உள்ளுக்குள் மெச்சிக்கொண்டவள் முகத்தை அப்படியே வைத்திருக்க,
“இந்த நாள், இந்த நேரம், இந்த நிமிஷம் நம்மோட வாழ்க்கையில் திரும்பவும் வரவே வராது. இப்போ இல்லைனாலும் என்னைக்காவது ஒருநாள் உங்க மனசு மாறி அடடா கல்யாணத்தப்போ நம்ம அந்த நிறைவை, சந்தோஷத்தை அனுபவிக்கைலையேன்னு நினைச்சு வருத்தப்பட கூடாது பாருங்க…”
முதலில் உணர்வுப்பூர்வமாய் ஆரம்பித்து கேலியில் முடித்தவனை முறைத்து முகம் திருப்ப,
“இந்த நாளை நீங்க உங்க முழு மனசோட ஆழ்ந்து அனுபவிக்கனும். நம்ம சண்டை எல்லாம் அதுக்கு பின்னால தான். பார்த்துக்கலாம். கண்டிப்பா சண்டை போடுவோம். உங்க கோபத்தை ரெண்டு நாள் தள்ளி வச்சு இதை மனப்பூர்வமா உணர்ந்து வாழுங்க….”
“எனக்கு அது மட்டும் போதும். எனக்கு மட்டும் இல்லை. அது நம்மை பெற்றவங்களுக்கும், நம்மை வாழ்த்த வந்தவங்களுக்கும் மரியாதை…” என்று சொல்ல தான் ஏதாவது பேசிவிடுவோமோ என்ற எண்ணத்தில்,
“உங்க லெக்சர் முடிஞ்சதா? நீங்க கிளம்புங்க இங்க இருந்து…”  அவனை கிளப்பிவிடும் வேகம் அவளின் குரலில் அப்பட்டமாய் தெரிய அதை கண்டுகொண்டவனின் விழிகள் மின்னின.
கதவினருகே சென்று நின்றவன் அதை தாழிட்டுவிட்டு திரும்ப வெண்மதிக்கு உள்ளுக்குள் படபடத்தலும் வெளியில் காண்பித்துக்கொல்லாமல் கெத்தாய் நின்றாள்.
“ஏன் என்னை விரட்டறீங்க வெண்ணிலா?…” கள்ளப்புன்னகையோடு கேட்க அவள் வெட்கப்படும் அழகுக்காய் காத்திருக்க,
“ஓகே, யார் தடுத்தா? இங்கயே இருங்க. நானும் அப்படி உட்காரறேன். பேசிட்டே இருக்கலாம். முகூர்த்த நேரமும் முடியட்டும். எனக்கொண்ணுமில்ல…”
அவளும் ஓரமாய் சென்று அமர முரளிக்கு தான் விளக்கெண்ணையை குடித்தது போல ஆனது முகம். அவனின் முகம் போன போக்கில் லேசாய்  சிரித்தவள்,
“கிளம்புங்க…” என்றதும் கதவை திறந்தவன் மீண்டுமாய் அவளை பார்த்து திடீரென கண் சிமிட்டி பார்க்க, அவனின் செயலில் சட்டென திகைத்து உண்மையில் முகம் சிவந்து தான் போனாள்.
அவள் விழி விரித்து அவனை கண்ட அழகில் புன்னகைத்தவன்,
“வெய்ட் பண்ணிட்டு இருப்பேன்…” என்று சைகையில் அவளிடம் சொல்லி தலையசைக்க விழி தாழ்த்திக்கொண்டாள் வெண்மதி.
“என்ன வெண்ணிலா டாட்டாய்ஸ் ஆர் குட்நைட்? போதும் போதும், இன்னும் நிறைய சடங்குகள் பாக்கி இருக்கு…” முரளியின் குரல் காதருகில் ஒலிக்க சிலிர்த்து நகர்ந்தாள்.
“எங்க தள்ளி போறீங்க? எல்லோரும் நம்மை தான் பார்த்திட்டு இருக்காங்க…” என்று எதிர் திசையை சுட்டி காண்பிக்க மொத்த குடும்பமும் உறவினர் சுற்றம் என அத்தனை பெரிய கூட்டம் தான் நிரம்பி வழிந்தது.
‘சத்தமே இல்லாம எவ்வளவு பெரிய காரியத்தை சாதிச்சுட்டான்’ என அவனை எண்ணி சில்லாகித்து கொண்டாலும் அன்றைய நாள் கண்முன் நிழலாடி அவளின் முகத்தை கன்ற செய்தது.
பேசிய தனக்கே அழியா கல்வெட்டாய் பதிந்துபோன தன் பேச்சுக்கள் இத்தனை சுட்டு பொசுக்கும் பொழுது பேச்சுக்களை வாங்கிக்கொண்டவர்களுக்கு எத்தனை வேதனையாய் இருக்கும்? நினைக்கும் பொழுதே வலி தைத்தது மனதை.
“வெண்ணிலா…” முரளியின் அழைப்பில் நிமிர்ந்து பார்க்க தன் கையை நீட்ட அதை பிடித்துக்கொண்டு எழுந்தவள் அக்னியை வலம் வந்தாள்.
இப்படி ஒரு நாள் தன் வாழ்வில் வரும் என்று அவள் நினைத்ததே இல்லை. ஆனால் வந்தே விட்டது. இன்பமும் துன்பமும் கலந்துவிட்ட இந்த உணர்வு அவளுக்குள் தீயை வளர்த்ததென்னவோ உண்மை.
மனதிற்குள் அமிழ்த்து வைத்த காதல் வெடித்து சிதறும் நேரத்திற்காய் காத்திருக்க அவளின் காத்திருப்பிற்கு தன் நேசத்தால் உயிர் வார்த்தவன் பார்வையால் அவளை நிதானிக்க செய்தான்.
ஒருவழியாக அத்தனை சடங்குகளும் நிறைவு பெற்றும் உறவினர்கள் கிளம்ப மண்டபத்தை காலி செய்யும் பொறுப்பு முரளியின் தந்தை ஆனந்தனை சேர்ந்தது.
ஆசிர்வாதம் வாங்கும் பொழுது கூட அமைதியாய் நின்றவர் முகத்தில் தெரிந்த இறுக்கம் வெண்மதியை கவலை கொள்ள செய்தது.
முன்பே அமைதி தான். ஆனால் வாயை திறந்து ஒரு வார்த்தையும் பேசாமல் சிறு தலையசைப்புடன் கடந்து சென்றவரை பார்த்து இவருக்கு இன்னமும் முரளியின் தன்னோடான இந்த திருமணம் பிடிக்கவில்லையோ? என்றே எண்ணினாள்.
என் மகனுக்கு பிடித்தது. அவனுக்காகவே இந்த திருமணம் என்று சொல்லாமல் சொல்லியதை போல இருந்தது அவரின் நடத்தைகள். ஆனாலும் இதை யோசித்து இன்றைய நாளை கசந்து கடந்து செல்ல அவள் விரும்பவில்லை. தெரிந்தது தானே ஆனந்தனின் பாராமுகத்தை.
முரளி சொன்னது போல் மீண்டும் கிடைக்காத அரிய பொக்கிஷ தருணங்கள். இழக்க மனம் விரும்பவில்லை. அவரின் பாராமுகத்தை தள்ளிவைத்தாள்.
முரளியின் வீட்டிற்கு அடியெடுத்து வைத்த வெண்மதிக்கு ஆயிரமாயிரம் உணர்வு குமிழ்களின் சிதறல்கள்.
எத்தனை போராடி அனைவரையும் அவமதித்து இத்திருமணத்தை தான் நிறுத்த, இன்று தன் போராட்டத்தை துகள்களாக்கி திருமணத்தை முரளி நடத்தியும் முடித்துவிட்டான்.
சந்தோஷமும் துக்கமும் ஒருங்கே எழ ஆனந்தனின் குற்றப்பார்வை வேறு வெண்மதியை வதைத்தது.
சுகன்யா எப்பொழுதும் போல் இருப்பதை போன்று தான் தெரிந்தது. ஆனாலும் அவரும் பழையதை நினைக்காமல் இருக்கமாட்டார். நினைத்தாலும் தவறில்லேயே? 
அந்தளவிற்கு தானே தானும் நடந்துகொண்டேன் என்று எண்ணி மருக அவளின் நிலை அறிந்தவனோ அவளின் விரல் பிடித்து பூஜையறை அழைத்து சென்றான். 
அடுத்தடுத்த சடங்குகள் நடந்தேற இரவும் நெருங்கியது. தான் செய்ததையே எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு நடக்கபோகும் சடங்கு தெரியாமல் தன்னைப்போல் தயாராக அவர்களுக்கென்ற பிரத்யோக அறைக்குள் அனுப்பப்பட்டாள் வெண்மதி.
உள்ளே நுழைந்ததும் முதலில் பட்டது அறையின் அலங்காரம். புருவம் சுருக்கி பார்த்தவளுக்கு அப்பொழுது தான் ஸ்ரமனையே வந்தது. திடுக்கிட்டு போனவளுக்கு உருவமில்லா உருண்டை தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள சுற்றிலும் தன் பார்வையை ஓட்டினாள்.
வந்ததிலிருந்து அவளின் முகபாவனைகளை அவதானித்துக்கொண்டிருந்த முரளி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க தூக்கிவாரி போட்டது வெண்மதிக்கு.
‘இவன் பார்வையே சரியில்லையே’ முணுமுணுக்க,
“இன்னும் எவ்வளவு நேரம் அந்த இடத்திலேயே நிக்கிறதா உத்தேசம்?. மேடம் கொஞ்சம் முன்னாடி வாங்க. என்கிட்டே என்ன பயம்?…” கிண்டலாய் சொல்ல அதில் சண்டை கோழியாய் சிலிர்த்தவள்,
“என்ன கிண்டலா? யாருக்கு யார்க்கிட்ட பயம்? இதெல்லாம் வேற யார்ட்டையாச்சும் வச்சுகோங்க…” நக்கலாய் சொல்லி அவனின் அருகில் வந்து நிற்க அவளை மேலிருந்து கீழாய் அளவெடுக்க, 
“செய்றதையும் செஞ்சுட்டு பார்வையை பாரு. கண்ணை நோண்டிருவேன்…” அவனின் விழிகளுக்குள் இரு விரல்களை நீட்ட அசையாது அவன் பார்த்த பார்வையில் கையை இறக்கியவள் அந்த நேர மௌனத்தின் கனம் தாளமுடியாது,
“ஏன் இப்படி பண்ணுனீங்க?…” என்று திரும்பவும் அதையே கேட்க,
“என்ன பண்ணினேன்?…” என்று அவளை நெருங்கி நிற்க வெண்மதியோ சுவற்றோடு சாய்ந்து நின்றாள். முரளி தன் இரு கைகளால்  அணையிட்டு அவள் நகராதவாறு நெருங்கி நிற்க,
“இப்ப ஏன் இப்படி வந்து நிக்கிறீங்க? தள்ளி போங்க…” அவனை அத்தனை நெருக்கமாய் காணமுடியாமல் முகம் திருப்பியவளுக்கு இதுவரை உணராத உணர்வுகள் பிரவாகம் எடுக்க நிலைகுலைய ஆரம்பித்தாள்.
“நான் என்ன பண்ணினேன்னு கேட்டேன். அதுக்கு பதில் சொல்லுங்க வெண்ணிலா…”
“ஏன் உங்களுக்கு தெரியாதா?…”
“ஹ்ம்ம் தெரியும் தான் வெண்ணிலா. தெரிஞ்சு தானே பண்ணேன். இப்போ இந்த நிமிஷம் என்ன பண்ணினேன்னு தெரியலை. அதான். ஓகே அதை விடுங்க. இப்போ …… ஷேல் வி ட்ரை சம்திங்…” கிறங்கிய குரலில் கண்களில் குறும்புடன் கேட்க விதிர்விதிர்த்து போனாள். 
சத்தியமாக இப்படி ஒரு முரளி அவள் எதிர்பார்த்ததே இல்லை. அவனின் கண்களில் அத்தனை கண்ணியம் இருக்கும். இன்று அவன் பார்க்கும் பார்வையும் அது உணர்த்தும் சாராம்சமும் இப்போதிருக்கும் மனநிலையில் அவளால் ஏற்றுகொள்ள முடியாதவை.
திருமணம் என்றால் அதன் பின் என்ன நடக்கும் என்பதை தெரியாத அளவிற்கு குழந்தை அல்ல தான். ஆனாலும் இப்போதிருக்கும் மனநிலை. அனைத்தும் அவசரமாக நடந்தேறியதை போல இதுவும் நடக்கவேண்டுமா என்று தவித்தாள்.
இதுவே எந்தவித குற்றவுணர்வும் இன்றி அன்றைய நாளின் பாதிப்பின்றி அவனை திருமணம் செய்திருந்தால் இத்தகைய பரிதவிப்பு தோன்றியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றளவும் மறக்கமுடியாத அவ்வார்த்தைகள் சுடுகின்றனவே.
“வெண்ணிலா…” முரளியின் அழைப்பில் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் லேசாய் கண்ணீர் கரையிட்டது.
“நான் தூங்கனும்…” 
“ஹ்ம்ம் தாராளமா…” ஒரு கையால் கட்டிலை காட்ட அவனை திகைப்பாய் பார்த்தாள் வெண்மதி.
“என்னையே பார்த்திட்டு இருந்தா எப்படிங்க? தூங்க வேணாமா?…” புருவம் உயத்தி அழகாய் கேட்க அந்த நிலையிலும் அவனின் பாவனையை ரசித்து தனக்குள் சேமித்தாள். அவள் படுத்ததும் விளக்கை அணைத்துவிட்டு தானும் வந்து படுத்தவன்,
“குட்நைட்…” என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டான்.
அந்த அறையில் மெல்லிய விளக்கொளியில் கூட அவனின் புன்னகை முகம் அவளுக்கு தெள்ளதெளிவாய் தெரிந்தது.
‘லவ் யூ முரளி’ மனதினுள் சொல்லிக்கொண்டவளும் மெதுவாய் கண்ணயர்ந்தாள்.

Advertisement