Advertisement

நிலவு – 11
            கோவிலுக்கு கிளம்பி வந்து வெண்மதி அமர்ந்திருக்க கலைவாணி அவளை பார்ப்பதும் அனைத்தையும் எடுத்துவைப்பதுமாக இருந்தார். 
சுகன்யா முதல்நாளே சொல்லிவிட்டார், “கிளம்பி இருங்கள், வந்து அழைத்துக்கொள்கிறோம் என்று”. அதனால் வேகம் வேகமாய் எடுத்துவைத்துக்கொண்டிருந்தார்.
“மெதுவா வை கலை.  அவங்க வர இன்னும் ரொம்ப நேரம் இருக்கு. ஏன் பரபரன்னு இருக்க?…” நடேசன் கூட கண்டித்தார்.
ஆனால் கலைவாணி கேட்டால் தானே? காதில் விழாததை போல வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் பார்வை மட்டும் மகளை தொட்டு தொட்டு மீண்டது.
மனதிற்குள் இறைவனை வேண்டிக்கொண்டே தான் இருந்தார். வெண்மதிக்கு புரிந்தாலும் கண்டுகொள்ளவில்லை. 
அவளின் மனதினுள் ஏகப்பட்ட குழப்பங்கள். விபீஷ் முதல் நாள் இரவிலிருந்து அவளுக்கு அழைத்துக்கொண்டே தான் இருந்தான். எடுக்கவே ஏனோ அச்சமாக இருந்தது.
அவனிடம் தைரியமாக கிண்டலாக சொல்லிவிட்டவளால் ஏனோ அவனை பேச அனுமதிக்கவில்லை. என்ன பேசுவானோ என்று பதறியது.  அதனை கொண்டே அவனிடம் பேசுவதை தவிர்த்தாள். தன்னையும் இயல்பாய் காட்டிக்கொண்டாள்.
“மதி உனக்கு போன்…” நடேசன் வந்து நீட்ட,
“நாளைக்கு ஆபீஸ் வந்து பேசறேன்னு ஈஸ்ட்ட சொல்லவேண்டிதானேப்பா?…” என்று சலிப்புடன் அதனை வாங்கிக்கொண்டு எழுந்து உள்ளே வந்தவள், 
“ஏன்டி நான் தான் சொன்னேன்ல. கோவிலுக்கு போய்ட்டு வந்து ஈவ்னிங் நானே கூப்பிடுவேன்ல. உனக்கென்ன அத்தனை அவசரம் இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க…” என்று திட்ட மறுபக்கம் ஆழ்ந்த மௌனம்.
“ஈஸ், திட்டினா உடனே கோச்சுப்ப. பாப்பாவா நீ? ஓகே, நான் இப்போதைக்கு போன் ஆன் பண்ண மாட்டேன். ஈவ்னிங் வந்ததும் நானே கல பண்ணுவேனாம் செல்லத்துக்கு. சரியா?…” என்று கொஞ்ச அதற்கும் பதிலில்லை.
“இன்னுமா கோபம் போகலை? ஈஸ், ஈஸ்…” அதுவரை கொஞ்சிக்கொண்டிருந்தவள் பதிலின்றி இருக்க,
“நான் பேசறது கேட்குதா ஈஸ்?…” என கேட்டுக்கொண்டே கட் செய்து அழைக்க பார்க்க,
“வெண்மதி…” என்ற அழுத்தமான குரல் அவளை திகைக்க வைத்தது. நிச்சயம் அது முரளி இல்லை. அவனாக இருக்குமோ? என யோசிக்க,
“விபீஷ்…” என்றான் அவனே. கோபம் கட்டுகடங்காமல் பெருக,
“எதுக்கு அப்பா மொபைலுக்கு கூப்பிட்டீங்க?…” என்றாள் பல்லைக்கடித்துக்கொண்டு. அவளின் கோபம் உணர்ந்தவன்,
“உன் போனை ஏன் ஆஃப் பண்ணின? அதனால தான்…”
“அது என்னோட போன் நான் என்னவேனாலும் செய்வேன். உங்களுக்கு என்ன? இனி இப்படி ஒரு தேர்ட் ரேட் வேலையை பார்த்த நான் என்ன செய்வேன்னே தெரியாது…” அவளின் குற்றம்சாட்டலில் குறுகிப்போனவன் கோபத்துடன்,
“என்னை என்ன வேணா செய்,  ஐ’ம் ரெடி. ஆனா இப்போ நீ கோவிலுக்கு போக கூடாது. இதை முதல்ல செய்…” அதிகாரம் போல சொல்ல,
“அதை நீ ஏன்டா சொல்ற? நான் அப்படித்தான் போவேன். இப்ப எதுக்கு நீ கால் பண்ண?…” எரிச்சலாய் கேட்க,
“இதை சொல்ல தான் கால் பண்ணேன். நீ கோவிலுக்கு போக கூடாது. உன் போன் போகலை. அதான் உன் அப்பா போன்…”
“இன்னொருக்க இந்த கிறுக்குத்தனம் பண்ணின…”
“சொல்லு, தாராளமா சொல்லிக்கோ. நிஜம் தான். கிறுக்குத்தனம் தான். சோ வாட்?…” உல்லாசமாய் அவன் சொல்ல கேட்பவளுக்கு தான் நாராசமாய் இருந்தது.
“நான் நினைச்சேன், அன்னைக்கு என்னவோ நல்லவனாட்டம் முகம் சுண்டின ப்ரப்போஸ் பன்றியான்னு கேட்டதுக்கு. இப்போ நீ பன்றதுக்கு பேர் என்னவாம்?…”
“எஸ், அப்கோர்ஸ் வெண்மதி, பர்ஸ்ட் நீ கேட்டப்போ எனக்கு அது தப்பா தான் தோணிச்சு. ஆனா இப்போ நீ கேட்டதுல தப்பில்லன்னு தோணுது…”
“இப்படி பேச அசிங்கமா இல்ல? எனக்கு இன்னும் கொஞ்சம் நாள்ல கல்யாணம்….”
“இன்ட்ரெஸ்டிங்…”
“ஆனா எனக்கு உங்க மேல உங்க பேச்சுல எல்லாத்துலையும் ஜீரோ இன்ட்ரெஸ்ட். சோ வேற வேலையை பார்த்தா உங்களுக்கு நல்லது. முக்கியமா எங்க கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வந்துடாதீங்க…”  என,
“அன்னைக்கு என்னவோ இஷ்டம் இல்லாதவ மாதிரி பேசின, இப்ப என்னனா?….” என்றவன்,
“ப்ச், அது எனக்கு தேவையில்லாத விஷயம். உன் கல்யாணம், அது முரளியோட நடக்காது வெண்மதி. அது என்னோட தான்…” விபீஷ் அத்தனை உறுதியுடன் சொல்ல,
“நீ முடிவு பண்ணினா ஆச்சா? உனக்கும் முரளிக்கும் நடுவுல என்ன?…”
“நான் முடிவு பண்ணினதால தான் முதல் தடவை உனக்கும் முரளிக்குமான சம்பந்தம் முறிஞ்சு போச்சு. இப்போ என்னன்னா திரும்பவும். இப்பவும் நான் சும்மா இருக்க மாட்டேன்…” அவளின் முதல் கேள்விக்கு மட்டும் பதிலை கூறியவன் இரண்டாவது கேள்வியை தொங்கலில் விட,
“நீ தான் அந்த போன் பார்ட்டியா? விளங்கவே மாட்ட…” வெண்மதியின் சாபத்தில் வாய்விட்டு சிரித்தவன்,
“பாரு நீ கூட இன்னமும் என்னை மறக்கலை. என்னை பர்ஸ்ட் டைம் பார்த்ததுமே நான் என்ன நினைக்கறேன்னு ஒரே பார்வையில் கண்டுபிடிச்சுட்ட. இப்படி என்னை என் உணர்வை புரிஞ்சுக்கற பொண்ணு தான் எனக்கு வேணும்…”
“மண்ணாங்கட்டி, என் ஆபீஸ் பிரகாசம் கூட தான் எப்ப என்ன பேசுவான்னு எனக்கு தெரியும், அதுக்கு அவனை நான் நல்ல புரிஞ்சுருக்கேன்னு கட்டிக்கவா முடியும்? அறிவில்ல…” என்றவளின் பேச்சில் அடக்கமாட்டாமல் புன்னகைத்தவன்,
“யூ ஸி நான் இப்படி எல்லாம் சிரிச்சு ரொம்ப வருஷம் ஆச்சு வெண்மதி…”
“என்னை பார்த்த ஆனைக்கு காமெடி பீஸ் மாதிரியா தெரியுது…” நெற்றிகண்ணை திறந்தேவிட்டாள்.
“ஹேய் கேர்ள் போதும்மா…” என்று இன்னமும் சிரித்தவன்,
“இங்க பாரு வெண்மதி முதல்ல உனக்கு ஆக்ஸிடென்ட் பண்ணவச்சு உங்க கல்யாணத்தை நிறுத்தினதுக்கு வேணா முரளி காரணமா இருக்கலாம். உன்னை அன்னைக்கு பார்க்க வந்ததுக்கும் அவன் தான் காரணம். ஆனா…”
“உன் ஆனா அவரைக்காய் நீயே வச்சுக்கோ. நான் போனை வைக்கறேன்…”
“நான் பேசறதை கேட்காம உன்னால போனை வைக்க முடியாது வெண்மதி. இப்ப நீ போனை வச்சா இன்னைக்கு முழுக்க என்னோட தான் நீ பேசிட்டே இருக்கவேண்டியதாக இருக்கும்…”
“உன் மிரட்டலுக்கு பயப்படற ஆள் நான் இல்லை. முடிஞ்சா என்னோட பேசிப்பாரு…” என்று போனை வைத்துவிட்டு அவனின் எண்ணை ப்ளாக்கில் போட்டுவிட்டு வெளியே வந்துவிட்டாள்.
“மதி கிளம்பலாமா?…” எனும் பொழுதே வாசலில் கார் வந்து நின்றிருக்க வெளியே முரளியுடன் நடேசன் பேசிக்கொண்டிருந்தார். சுகன்யா கலைவாணி இருவரும் பூஜை பொருட்களை எடுத்துவைத்துக்கொண்டிருக்க வார்த்தையே வரவில்லை அவளுக்கு.
அன்றைய பிரச்சனைக்கு பிறகு இதோ இன்றுதான் சுகன்யாவை காண்கிறாள். ஒரு வருடம் கடந்திருந்தது. என்ன பேசுவது என யோசனையுடன் நிற்க,
“வா வெண்மதி, காருக்கு போம்மா…” அவரே பேச்சை துவங்கி,
“இன்னைக்கு நீ மௌன விரதமாமே. அம்மா சொன்னாங்க. நல்லது. நீ பாத்ரூம் போய்ருக்கன்னு அம்மா சொன்னாங்க. அதுக்குள்ளே எல்லாம் மாத்திடலாமேன்னு தான் எடுத்து வச்சிட்டிருக்கோம்…”  என்றவர் வாழைப்பழ தட்டை தூக்கிக்கொண்டு செல்ல கலைவாணியை பார்த்தாள் வெண்மதி.
“நீ பேசுவியோ என்னவோ தெரியலை. பேசாம முகம் திருப்பிட்டா நல்லா இருக்காதேன்னு தான் இதை சொல்லி சமாளிச்சேன்…” என அவர் சொல்லும் பொழுதே பரிதாபமாக இருந்தது. முகத்தில் அத்தனை கெஞ்சல்.
“கலை…” நடேசன் அழைக்கும் குரல் கேட்க,
“வா புறப்பட்டாச்சு போல. அப்பா கூப்பிடறாங்க…” என்று அவளுடன் வாசலுக்கு வந்து கதவை பூட்டிவிட்டு சிறு கம்பி போட்ட கேட்டும் இருக்க அதற்கும் பூட்டை போட்டுவிட்டு காரை நெருங்கினர்.
ட்ரைவர் சீட்டில் முரளி இருக்க பின்னால் நடேசன் ஏறி இருந்தார். சுகன்யா கலைவாணியை ஏற சொல்லிவிட்டு அவரருகே தானும் அமர வெண்மதி அப்படியே நின்றாள்.
“முன்னால ஏறு வெண்மதி…” சுகன்யா தான் சொல்ல கலைவாணியும் மகளை கேஞ்சுதலாய் பார்க்க முன்னால் அமர்ந்தவள் முரளியுன் புறம் திரும்பவே இல்லை.
சென்னையை விட்டு வெளியே சற்று தொலைவில் தான் அவர்களின் குலதெய்வ கோவில். மூன்றுமணி நேரத்தில் சென்றுவிடலாம். ஆனந்தன் வரவில்லை என்பதை காரை நெருங்கவுமே கண்டுகொண்டாள் வெண்மதி. 
மனதில் சிறு சுணக்கமும் கோபமும். இழுத்துக்கட்டி தன்னை பிடித்திருப்பது மகன். கோபம் என்னவோ மருமகள் மீது? என்ன மாமனாரோ? என்று தான நினைத்தாள் வெண்மதி.
“முரளி வெண்மதிக்கிட்ட பேச்சு குடுக்காத. அவ மௌனவிரதம்…” சுகன்யா சொல்லவும் ஒரு நொடியில் குபீரென சிரித்துவிட்டான் முரளி. 
அப்படி சிரிப்பான் என யாருமே எதிர்பார்க்காமல் போக வெண்மதியோ அவனை முறைத்தவள் மற்றவர்கள் முன்பு எதுவும் பேசமுடியாது மௌனம் காத்தாள்.
முரளியின் சிரிக்கும் கண்கள் வேறு அவளை சுவாரஸ்யத்துடன் தீண்டி சீண்டி அப்படியா என்று அடிக்கடி கேட்டுவைக்க இதற்கு பேசிவிட்டாலே பரவாயில்லை என்னும் அளவில் அவஸ்த்தைப்பட்டு போனாள் வெண்மதி.
கலைவாணியின் மொபைலிற்கு புது நம்பரிலிருந்து அழைப்பு வர எடுத்து பேசியவர்,
“இன்னைக்கு லீவ் ஆச்சே. வெண்மதி இன்னைக்கு மௌனவிரதம், ஆமாங்க. பேச முடியாது. ஓகே…” என சுகன்யாவையும் முரளியையும் கருத்தில் கொண்டு சொல்லியவர்
“வெண்மதி ஆபீஸ்ல இருந்து உனக்கு போன். ஏதோ பேசனும்னு சொன்னாங்க. அதான்…” என அவர் சொல்லவும் திடுக்கிட்ட வெண்மதி ஏனோ கலக்கம் சுமந்த விழிகளுடன் முரளியை ஏறிட்டாள்.
அவளின் முகவாட்டத்தை படித்தவன் அங்கே எதுவும் பேசாமல் காரின் வேகத்தை கூட்டினான்.
கோவிலுக்கு சென்று பூஜை ஆரம்பிக்க கலைவாணியும் சுகன்யாவும் பொங்கல் வைக்கும் வேலையை ஆரம்பித்தனர்.
“ம்மா, நானும் வெண்மதியும் கொஞ்சம் நடந்துட்டு வரோம்…”
“பார்த்து முரளி, கவனமா போய்ட்டு வாங்க…” சுகன்யாவும் சொல்ல கலைவாணி வேண்டாமென்று வாயெடுத்துவிட்டு பின் சம்பந்தியை பார்த்து மௌனமானார்.
“போய்ட்டு வா மதி…” நடேசனும் சொல்ல எதுவோ பேசத்தான் அழைக்கிறான் என்று புரிந்துபோனது வெண்மதிக்கு.
கொஞ்சம் தூரமாய் அங்கிருந்து நகர்ந்துவிட்டவர்கள் ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்தனர். அவனிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதை போல இருந்தது வெண்மதிக்கு. அதிலும் இந்த மௌனவிரதம் வெகுவாய் கைகொடுக்க அதை எளிதில் உடைத்தான் முரளி.
“நீங்க விரதம் எல்லாம் இல்லைன்னு எனக்கு தெரியும் வெண்ணிலா. ஸ்பீக் அவுட்…” என சொல்ல என்ன? என்பதை போல அவள் பார்க்க,
“மார்னிங் வீட்ல இருந்து கிளம்பறப்போ நான் உங்க வீட்டு லேண்ட் லைனுக்கு கால் பண்ணப்ப நீங்க தான் அட்டன் பண்ணுனீங்க. நாய் எதுவும் பேசலைன்னதும் அத்தனை திட்டு திட்டுனீங்க…” என புன்னகையுடன் சொல்ல மாட்டிக்கொண்ட தினுசில் கண்ணை இருக்கமாய் மூடி முகத்தை சுருக்க,
“ஜஸ்ட் க்யூட்…” என்றான் ரசனையாக.
“பேசக்கூடாதுன்னு நினைச்சேன். அம்மாவே சொல்லவும் நானும் மெய்ண்டெய்ன் பன்றேன்…” வேறெங்கோ பார்த்துக்கொண்டு அவள் சொல்ல அடக்கப்பட்ட சிரிப்புள் அவனின் உடல் குலுங்க,
“அதான் ஒத்துக்கிட்டேனே? என்னவாம் இப்போ?…” 
“ஓகே, ஏன் டல்லா இருக்கீங்க? எனிதிங் ராங்?…” கரிசனமாக அவன் கேட்க அவனை ஏறிட்டு பார்த்தவள் முகம் லேசாய் குழப்பம் படர்ந்தது.
விபீஷ் எதுவும் பேசியிருப்பானோ? என்று முரளி நினைக்க,
விபீஷை பற்றி எப்படி சொல்வதென? வெண்மதி திகைக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் தாங்கி நின்றனர்.
ஒரு நொடி. வெண்மதிக்கு என்னவென்று கேட்டுவிடலாமா? இப்படி ஒருவன் தொந்தரவு செய்கிறாள் என சொல்லிவிடலாமா என நினைத்தாள். ஆனால் அடுத்த நொடியே அந்த எண்ணத்தை மாற்றிகொண்டாள்.
ஒருவேளை தான் இதை சொல்லி இதனால் கோபத்தில் விபீஷிடம் பிரச்சனை செய்து முரளிக்கு எதுவும் ஆபத்தாகிவிட்டால்? இன்றைய சூழ்நிலையில் தொழில் ரீதியாக இப்படியாகப்பட்ட மிரட்டல்கள் சகஜம் தானே? என்று அவளுக்கு அவளே சமாதானம் செய்துகொண்டாள்.
முரளியோ விபீஷ் பற்றி சொல்லிவிடலாமா என்று நினைத்தவன் ஏற்கனவே அவனால் தான் ஒரு முறை வெண்மதியை பிரிய நேர்ந்தது. மீண்டும் சொல்லி அதன்பொருட்டு அவளை இழக்க முரளி தயாராய் இல்லை. 
திருமணம் முதலில் நல்லவிதமாக முடியட்டும் என்று அவன் காத்திருக்க முரளிக்கு எதுவும் தெரியவேண்டாம் என்று அவனுக்காக பார்த்திருந்தான் வெண்மதி.
“லுக்கிங் குட்…” என்றான் சட்டென்று. 
அவளிருந்த மனநிலையில் திடீரென்று அவன் சொல்லிவிட ஒரு நிமிடம் பிடித்தது வெண்மதிக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று.
“இந்த சேரி உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு வெண்ணிலா…” என்றான் அவளை கண்களுக்குள் நிரப்பியபடி.
“பேசனும்னா பேசுங்க. அதுக்குன்னு இப்படித்தான் ஆரம்பிக்கனும்னு இல்லை…” வெண்மதி சொல்ல அதற்கும் அவன் புன்னகைக்க,
“உங்கப்பா ஏன் வரலை?…” என்றால் நேரடியாக.
“வரலை. வரலைன்னா வரலை தான்…” அதற்கும் சிரித்துக்கொண்டே சொல்ல,
“அவங்களுக்கு என்னை பிடிக்கலை முரளி. உங்களுக்கு புரியுதா?…” என்றதற்கு ஆமென தலையசைக்க,
“அவரை கஷ்டப்படுத்தி நீங்க இந்த மேரேஜ் நடத்திக்கனுமா?…” மீண்டும் ஒரு முயற்சியாக கேட்க,
“எனக்காக நான் நடத்துக்கறேன்னா? ஓகே அப்படியே இருக்கட்டும். எனக்காக தான் நடத்திக்கறேன். நடத்தியே தீருவேன்…” சுத்தமாய் புன்னகை துடைக்கப்பட்ட முகத்துடன் அவன் சொல்ல,
“உங்களுக்கு பாஸ்ட் நினைச்சாலே எவ்வளவு கோபம் வருது. இது சரிவருமா? எனக்கு…. என்னால எதையும் மறந்து உங்களோட வாழ்ந்திட முடியும்னு தோணலை முரளி…” சஞ்சலம் அவளின் முகத்தினை வட்டமிட்டிருக்க ஒரு நொடி கண்களை மூடி திறந்தவன்,
“நாம வாழலைனா வேற யாரால வாழ முடியும் வெண்ணிலா?…” உணர்ச்சி பொங்க அவன் கேட்கும் பொழுது கண்கள் கலங்கி கண்ணீர் நிறைக்க ஆரம்பிக்க,
“ஹேய் வெண்ணிலா?…” என்றவன் தவிப்புடன் அவளின் கண்களை துடைத்து தன் தோள் மீது சாய்த்துக்கொண்டான்.
ஏனோ சுமக்கமுடியாத பாரத்தை சுமந்திருந்தவள் இளைப்பாற இடம் கிடைத்துவிட்டதை போன்றொரு உணர்வில் அவனின் கைகளை பற்றிகொண்டாள்.
“வேணாம்னு தோணுது முரளி. ஆனாலும் நான் நினைக்க நினைக்க வேணாம்னே போய்டுமோன்னு பயமா இருக்கு. மனசுக்கும் குற்றவுணர்ச்சிக்கும் நடுவுல நான் ரொம்ப கஷ்டமா இருக்கு முரளி. பயமா பயமா இருக்கு….”
“ஹ்ம்ம்….”
“ப்ளீஸ் எதுவும் பேசாதீங்க…”
“பேசலை…”
“இந்த கல்யாணம் நடக்குமா?…” 
“கண்டிப்பா?…”
“எனக்கு நம்பிக்கை இல்லை….”
“என்னை நம்புங்க வெண்ணிலா…” 
“என்னையே நம்ப முடியலை. என்னால என் வாயாலையே நான் சொல்ல கூடாததெல்லாம் சொல்லி கல்யாணத்தை நிறுத்தியிருக்கேன். எந்த நம்பிக்கையில் நான் உங்களை நம்ப?…”
“நடக்கும் நல்லபடியா…” 
“ம்ஹூம், கடைசி நேரம் வரை நான் நம்ப மாட்டேன். இந்த பயம்…”
“இது வெண்ணிலாவா?…”
“முரளியோட வெண்ணிலான்றதால தான் இந்த பயம். வெண்மதிக்கு இல்லை….” 
தெளிவாய் அவளின் மனதை இதைவிட வேறு எப்படி சொல்லிவிட முடியுமாம்? அவள் அவளறியாமல் சொல்லிவிட்டாள். முரளியின் முகத்தில் பழைய புன்னகை மீண்டிருந்தது.
“சோ?…” அவனின் அணைப்பு லேசாய் அழுத்தம் கொடுக்க சுகமாய் சாயத்துடித்த மனதை அடக்கியவள் அவனை விலகி நிற்க பார்க்க அது முடிந்தால் தானே?
“விடுங்க முரளி…” என்றாள் கூச்சமாய். 
“விடனும்னு தான் தோணுது. புத்தி சொல்லுது. மனசு விடாதன்னு கத்துதே. என்ன பண்ணலாம் வெண்ணிலா. என்னால முடியலை…” என்றவன் அவளின் கன்னம் பற்றி வருட ஏதோ ஒரு மாயவலைக்குள் இருவருமாய் மூழ்கிக்கொண்டிருந்தனர்.
“மதி?…” கலைவாணியின் அழைப்பு தூரமாய் கேட்க வெண்மதி பதற,
“இங்க என்ன நடந்திருச்சுன்னு இந்த பதட்டம்?…” குரலில் ஒருவகை உவகையுடன் நிதானமாய் கேட்க,
“அம்மா பார்த்திருந்தா?…”
“தப்பா எதுவும் நினைக்கமாட்டாங்க…”
“ஆனா எனக்கு அப்படி இருக்காது மேன். போங்க…” என அவனின் கையை தட்டிவிட்டு அங்கிருந்து விலகி நடக்க செல்லும் அவளை பார்த்தபடி அந்த மரத்தில் சாய்ந்து நின்றான்.
மனதில் பரவிய ஏகாந்தத்தோடு பூஜையில் கலந்துக்கொள்ள வெண்மதிக்குமே கொஞ்சம் நிம்மதி பிறந்தது. ஆனாலும் விபீஷ் முள்ளென உறுத்திக்கொண்டே தான் இருந்தான்.
—————————————————
“உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை விபீஷ்…” 
வசுந்தரா கவலையுடன் சொல்ல அவனின் முகம் இறுகிக்கிடந்தது. சற்று தள்ளி கதவோரம் நின்றிருந்த சீமாவின் விழிகள் கலங்கி சிவந்துபோய் இருந்தது. கன்னத்தில் கண்ணீரின் கோடுகள்.
“நீ போற பாதை ரொம்ப தப்புப்பா…” மகனை அதட்டவும் முடியாமல் அவன் முடிவில் அதிர்ச்சிவிலகாமல் அவர் பேச அவனின் கோபம் அதிகமாகியது.
“சீமாவை பாரு எப்படி அழறான்னு. பழி வாங்க உனக்கு ஒரு பொண்ணு வாழ்க்கை தான் கிடைச்சதா? இதனால பாதிக்கபடப்போறது முரளி கிடையாது. நீ, சீமா, அந்த வெண்மதி எல்லாரும் சேர்ந்து தான்…” 
“ம்மா ஸ்டாப் இட்…” என்ற இரைச்சலுடன் எழுந்து கோபமாய் நின்றவன்,
“ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க. ஐ லவ் வெண்மதி. நான் அவளை தான் கல்யாணம் செஞ்சுப்பேன்…” குரலில் அத்தனை உறுதியும் முகத்தில் கலவையான உணர்வுகளும் தெறிக்க அவன் நின்றிருந்த விதம் பெண்கள் இருவருக்கும் நடுக்கம் பிறப்பித்தது.
இது பழிக்கு தேடிய வழி போல தெரியவில்லை சீமாவிற்கு. அதையும் தாண்டி இதில் உண்மையில் காதல் உள்ளதோ? நினைக்கும் பொழுதே தன் நேசமனத்தை கூறு போடுவதை போல வேதனை எரிக்க அவனை பார்த்தபடியே நின்றாள் சீமா.

Advertisement