Advertisement

“எனக்கு தெரியும் அகில். உனக்கும் பிரபாவுக்கும் இடைல சண்டையே வராது. அதே மாதிரி அர்ச்சனாவும் உங்க தம்பிக்கு சொத்து கொடுக்க கூடாதுன்னு சொல்ல மாட்டா. ஏன்னா அர்ச்சனா உன்னை அவளோட கூட பிறந்த பிறப்பா தான் நினைப்பா. ஆனா அஞ்சலி நினைக்கணுமே?”, என்று சொல்ல அவளுக்கு திக்கென்று இருந்தது. அவரை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் சக்கரவர்த்தி பார்வையில் இருந்த தீட்சண்யத்தில் தலை குனிந்து கொண்டாள்.

“அவளும் எதுவும் சொல்ல மாட்டா பா. என்னோட பொண்டாட்டியா என் கூட இருக்கணும்னா என்னோட அண்ணனையும் அண்ணியையும் மதிச்சு தான் ஆகணும்”, என்று அகிலன் சொல்ல அது தனக்கு சொல்லப் பட்டது என்று அஞ்சலிக்கு நன்கு புரிந்தது.

“நல்லது அகிலன். இப்ப நீ சொன்னது மத்தவங்களுக்கு புரிஞ்சா சந்தோஷம் தான்”, என்று மகனிடம் சொன்ன சக்கரவர்த்தி “என்ன வர்ஷி, நீ என்ன சொல்ற?”, என்று மகளிடம் கேட்டார்.

“நான் ஒண்ணும் சொல்லலைப்பா”

“சொல்லக் கூடாது. அது என்ன அர்ச்சனாவை போயும் போயும்னு சொல்ற? உன்னை விட அவ எல்லா விதத்துலயும் சிறந்தவ தான்”

“சாரிப்பா. அது அண்ணனை வேண்டாம்னு சொல்லிட்டு போனதுனால….”

“அதுக்கான காரணம் என்னன்னு உன் புருஷன் கிட்ட கேளு. விலாவாரியா சொல்லுவான். அர்ச்சனாவை இந்த வீட்ல இருந்து போக வச்சதே வேணு தான். அவன் கிட்ட விசாரி வர்ஷி. அப்படியே அவன் உண்மையைச் சொல்லும் போது உன் அம்மாவையும் கூட வச்சிக்கோ. அவளுக்கும் உரைக்கட்டும். இப்ப போங்க எல்லாரும்”, என்று சொல்ல அனைவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள்.

வர்ஷினி மற்றும் யசோதா இருவரும் வேணுவிடம் எவ்வளவோ கேட்டு விட்டார்கள். ஆனால் அவன் வாயைத் திறக்கவே இல்லை. ஆனால் சீதா அவன் செய்த அனைத்து விசயங்களையும் சொல்லி விட்டாள். அதைக் கேட்டு இருவருக்குமே கஷ்டமாக இருந்தது.

“இனி இவன் எனக்கு வேண்டவே வேண்டாம்”, என்று வர்ஷினி கத்த அவன் மன்னிப்பு கேட்க சீதா மற்றும் யசோதா இருவரும் சமாதானம் செய்து வைத்தார்கள்.

உடனே அண்ணனை அழைத்த வர்ஷினி அவனிடமும் அர்ச்சனாவிடமும் மன்னிப்பு கேட்டாள். “நீ எனக்கு தங்கச்சி மாதிரி வர்ஷி. இதுக்கெல்லாம் சாரி கேப்பியா?”, என்று சொல்லி போனை வைத்தாள் அர்ச்சனா.

அதே நேரம் அஞ்சலியை போனில் அழைத்த மஞ்சுளா “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அஞ்சலி. அவளை பெரிய வீட்ல இருந்து துரத்தியாச்சுல்ல? இன்னும் இன்னும் உன் மாமியாருக்கு ஏத்தி விடு டி”, என்றாள்.

“அட போமா. அவங்களுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சு. அவங்களும் அர்ச்சனாவை ஏத்துக்கிட்டாங்க. நான் இப்ப இங்க ஏதாவது சொன்னேன், என் புருசனே என்னை விரட்டி விட்டுருவான். எனக்கு என் வாழ்க்கை முக்கியம். நீ முடிஞ்சா அப்பா மனசை மாத்தப் பார். கடைசில அப்பா கம்பெனி அவ கைக்கே போகுது. நீ ஏன் மா அப்பாவை ரெண்டாவது கல்யாணம் பண்ணின? ஏதாவது கஷ்டப் படுறவனா இருந்திருந்தா கூட முதல் கல்யாணம் பண்ணிருந்தா எனக்கு முக்கியத்துவம் இருந்துருக்கும். எல்லாம் உன்னால தான் போ மா. கடுப்பா இருக்கு”, என்று சொல்லி போனை வைத்தாள்.

இத்தனை நாள் வராத உறுத்தல் மகள் சொன்னதும் மஞ்சுளாவுக்கு வந்தது. ஆனால் இப்போது வந்து என்ன பயன்? அவளும் வாழும் வரைக்கும் சொக்கலிங்கம் உடன் வாழ்ந்தாகவே வேண்டுமே? இதற்கு மேல் வாயை மூடிக் கொள்வது தான் நல்லது என்று உணர்ந்தாள்.

பிரபாகரன் காரை புது வீட்டின் முன் நிறுத்தினான். ஏற்கனவே வந்திருந்த மூர்த்தி வீட்டை ஆட்கள் வைத்து சுத்தம் செய்து முடித்திருந்தான்.

மீனாட்சி வீடு அழகாக இருக்கிறது என்று சொன்னாள். சிறிது நேரத்தில் பிரபாகரன் ஆர்டர் செய்த பொருள்கள் எல்லாம் வந்தது. ஆனால் மீனாட்சி தெளிவாக சொல்லி விட்டாள் நல்ல நாள் பார்த்த பிறகு தான் இங்கு குடி வர வேண்டும் என்று.

வீட்டை செட் செய்து விட்டு மூவரும் மீனாட்சி வீட்டுக்கு சென்று விட்டார்கள். அடுத்த இரண்டு நாட்களில் வீட்டுக்கு தேவையான மற்ற பொருள்கள் எல்லாம் வாங்கப் பட்டு மூன்றாம் நாள் பால் காய்க்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதற்கிடையில் சொக்கலிங்கம் தன்னுடைய கம்பெனியை பிரபாகரனுக்கு எழுதிக் கொடுத்து விட்டார். மற்ற சொத்துக்களையும் பிரித்து விட்டார். அஞ்சலி மற்றும் மஞ்சுளா இருவரும் கையெழுத்தைப் போட்டு விட்டனர்.

பால் காய்க்கும் நாளும் வந்தது. புது வீட்டுக்குச் செல்ல சொக்கலிங்கம் மட்டும் கிளம்பிக் கொண்டிருந்தார். மஞ்சுளாவை யாரும் அழைக்கவும் இல்லை. வர வேண்டாம் என்றும் சொல்ல வில்லை. ஆனால் சொக்கலிங்கம் தான் அவளை வரக் கூடாது என்று சொல்லி விட்டார்.

அதே போல பிரபா வீட்டில் சக்கரவர்த்தி மட்டுமே கிளம்பிக் கொண்டிருந்தார். அர்ச்சனா வீட்டில் இருக்கும் அனைவரையும் தான் அழைத்திருந்தாள். ஆனால் அவர் தான் அழைக்க வில்லை. “நாங்களும் வரோமே? அர்ச்சனா கிட்ட மன்னிப்பு கேக்கணும்”, என்றாள் யசோதா. அதற்கு பின்னர் தான் அனைவரையும் அழைத்துச் சென்றார்.

வீட்டுக்கு வந்த அனைவரையும் வரவேற்றாள் அர்ச்சனா. யசோதாவிடம் “வாங்க அத்தை”, என்று பேசினாள்.

“என்னை மன்னிச்சிரு மா”, என்று மன்னிப்பு கேட்டாள் யசோதா. வேணுவும் மன்னிப்பு கேட்டான். “பரவால்ல விடுங்க”, என்று சொல்லி விட்டாள் அர்ச்சனா.

யசோதா மீனாட்சியிடமும் மன்னிப்பு கேட்டாள். மீனாட்சி மனமும் நிறைந்தது. ஆனால் பிரபாகரன் வேணுவிடமும் பேச வில்லை, யசோதாவிடமும் பேச வில்லை.

யசோதாவுக்கு கஷ்டமாக இருந்தாலும் மகன் மன்னிக்க காத்திருந்தாள். அண்ணனை தனியே சந்தித்த அகிலன் “அப்பா தனியா யூனிட்டை பாக்கச் சொல்றார் அண்ணா. எனக்கு என்ன தெரியும்?”, என்று கேட்டான்.

“அங்க இருந்து வெளிய வந்தாலும் அது நம்ம கம்பெனி டா. அதை அப்படியே விட்டுருவேனா? என்ன டவுட் வந்தாலும் கால் பண்ணு. நான் சொல்லித் தரேன். ஆனா அந்த அளவுக்கு அப்பா விட மாட்டாங்க. கொஞ்ச நாள் தான் டா”

“அதான் அம்மா மாறிட்டாங்களே அண்ணா? நீயும் அண்ணியும் வீட்டுக்கு வரலாம்ல?”

“ஆனா நாங்க மாறணுமே அகில்?”

“அண்ணா”

“கொஞ்சம் மனசுல இருக்குற காயம் மறையட்டும். வரோம்”, என்று சொல்ல அவனும் சரி என்று சொன்னான்.

அன்றைய விழா நல்ல படியாக முடிய அனைவரும் கிளம்பினார்கள். சொக்கலிங்கத்துடன் மீனாட்சியும் கிளம்பினாள்.

“அத்தை நீங்க எங்க போறீங்க? நீங்களும் எங்க கூடவே இருங்க”, என்றான் பிரபாகரன்.

“அது சரி வராது மாப்பிள்ளை. எல்லாரும் இருக்க வேண்டிய இடத்துல தான் இருக்கணும்”, என்று மறுத்தாள் மீனாட்சி.

“அம்மா என்ன மா?”, என்று கேட்டாள் அர்ச்சனா.

“நீ நல்ல விஷயம் சொல்லு அர்ச்சனா அம்மா வரேன். அதுக்கு அப்புறம் வயசான பிறகு உங்க கூட தான் வந்து இருக்கப் போறேன். இப்ப தான் உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு. இப்ப உங்களுக்கு இந்த தனிமை அவசியம்”, என்று சொல்ல அது அனைவருக்குமே சரி என்று பட்டது.

மீனாட்சியின் தெளிவான பேச்சைக் கேட்டு யசோதாவுக்கு வியப்பாக இருந்தது. ஏனோ இத்தனை நாள் அவளிடம் தெரியாத கம்பீரம் இப்போது யசோதாவுக்கு தெரிந்தது.

அவர்கள் கிளம்பிப் போனதும் புது வீட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள் பிரபாகரன் மற்றும் அர்ச்சனா இருவரும்.

பகலில் அலுவலகம் செல்பவன் இரவு ஆனதும் வீட்டுக்கு வந்து விடுவான் மனைவியைத் தேடி. அவளுக்கும் பகலில் மருத்துவமனைக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். சொக்கலிங்கம் அவனுடன் இருந்து அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார்.

ஆனால் மாதத்தில் இரண்டு வாரம் அவளுக்கு நைட் ஷிப்ட் போடும் போது தான் அவனுக்கு கடுப்பாக இருக்கும். ஆனால் அதற்கும் பழகிக் கொண்டார்கள்.

மூன்று மாதங்கள் கழித்து அவனைப் போலவே ஒரு குட்டி இளவரசன் வேண்டும் என்ற ஆசை அவளுக்கு வந்தது. அடுத்த இரண்டு மாதத்தில் அந்த நல்ல செய்தியை அவனிடம் கூறினாள்.

சந்தோஷமாக அவளை அனைத்துக் கொண்டான் பிரபாகரன். போனில் தகவல் சொன்னதும் அனைவருக்கும் சந்தோஷமாக இருந்தது. வர்ஷினியும் நான்கு மாதக் கருவை சுமந்து கொண்டிருக்க அனைவருக்கும் இரட்டை சந்தோஷம் தான்.

ஆனால் அஞ்சலி தான் ஒடுங்கிப் போனாள். அகிலனிடம் அவள் சொல்லி அழ “அண்ணனுக்கு முதல்ல குழந்தை பிறக்கணும்னு தான் தள்ளிப் போட்டேன். அவனுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணினது எனக்கு கஷ்டமா இருந்துச்சு. இப்ப தான் அவனுக்கு குழந்தை பிறக்கப் போகுதே? நமக்கும் கூடிய சீக்கிரம் பிறக்கும்”, என்று அவன் சொன்னதும் தான் நிம்மதி அடைந்தாள்.

அனைவரும் நினைத்தது போல அர்ச்சனாவுக்கு மகன் பிறந்ததும் பிரபாகரன் அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை. அனைவரும் அவனைக் காண வந்து விட்டார்கள். மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் நேராக பிரபாகரன் வீட்டுக்கு சென்றாள் அர்ச்சனா. யசோதாவுக்கு மனம் நிறைந்து போனது. அவனுக்கு தருண் சக்கரவர்த்தி என்று பெயர் வைத்தான் பிரபாகரன். பெயர் சூட்டும் விழாவுக்கு விக்ரம் மற்றும் வினோதினி இருவரும் தங்கள் குழந்தையுடன் வந்தார்கள். காயத்ரியும் குடும்பத்துடன் வந்திருந்தாள்.

இப்போதும் அர்ச்சனா மற்றும் அஞ்சலி இருவரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். ஆனால் இருவரும் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். எல்லாரையும் அனுசரித்துப் போகும் அர்ச்சனாவால் கூட அஞ்சலியை தங்கையாக ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. யசோதா, வேணு மற்றும் வர்ஷினியைக் கூட அவளால் மன்னிக்க முடிந்தது. ஆனால் அஞ்சலியிடம் மட்டும் பேச மாட்டாள். அதைப் போல அஞ்சலியும் தான்.

மீனாட்சி மற்றும் மஞ்சுளா இடையே இருக்கும் வெறுப்பு அப்படியே அர்ச்சனா மற்றும் அஞ்சலி இடையே பகிரப் பட்டது. இதுவும் எதார்த்தம் தான்.

ஆனால் பிரபாகரன் அர்ச்சனாவை உள்ளங்கையில் வைத்து தாங்கினான். அவளால் தான் அவன் வாழ்க்கையே அழகாகிப் போனது போன்ற உணர்வு. கைகளில் மகனை வைத்துக் கொண்டு மனைவியைப் பார்த்தவனின் கண்களில் எல்லையில்லாத காதல் கரை புரண்டு ஓடியது. அர்ச்சனாவும் அவளுடைய நெஞ்சத்தின் நாயகனை ரசித்துப் பார்த்தாள்.

……முற்றும்……..

Advertisement