Advertisement

“ஒரு நிமிஷம் மாப்பிள்ளை”, என்று அழைத்தார் சொக்கலிங்கம்.

“என்ன மாமா?”

“நீங்க எடுத்துருக்குற முடிவு எல்லாம் சரி தான். ஆனா இன்னொருத்தர் கிட்ட நீங்க வேலை பாக்க கூடாது. நம்ம கம்பெனியை எடுத்து நடத்துங்க. நாளைக்கே உங்க பேர்ல எழுதி வைக்கிறேன்”, என்று சொல்ல “அப்பா….” “என்னங்க”, என்று அஞ்சலி மற்றும் மஞ்சுளா இருவரும் கத்தினார்கள்.

“இல்லை மாமா அதுவும் பொதுச் சொத்து. எனக்கு வேண்டாம்”, என்றான் பிரபாகரன்.

“இல்லை மாப்பிள்ளை, எப்படியும் நான் அதை அர்ச்சனாவுக்கு தான் கொடுக்கப் போறேன். அவ டாக்டர். அவ எடுத்து நடத்த மாட்டா. அதனால அதை நீங்க தான் நடத்தணும். நான் இதை முன்னாடியே உங்க அப்பா கிட்ட சொல்லிருக்கேன்”, என்றார். பிரபாகரன் என்ன சொல்லி மறுக்க என்று தயங்கினான்.

“எதுக்கு தயங்குறீங்க பிரபா. எங்க அப்பா அவர் மாப்பிள்ளைக்கு கொடுக்குறார். இதுல என்ன இருக்கு? நீங்க தான் அதை எடுத்து நடத்தனும்”, என்று சொன்ன அர்ச்சனா சொக்கலிங்கத்தைப் பார்த்து “அப்பா, அந்த கம்பெனி பிரபா பேர்ல நாளைக்கே ரிஜிஸ்டர் ஆகணும்”, என்றாள்.

அவள் அப்பா என்ற சொன்ன சொல்லுக்காகவே உயிரையும் கொடுப்பாரே. சொத்தைக் கொடுக்க மாட்டாரா என்ன? “கண்டிப்பா பாப்பா. நாளைக்கே அப்பா எழுதி வச்சிறேன். இனி மாப்பிள்ளை தான் எல்லாம் பாக்கணும். எனக்கு கொள்ளி போடுற உரிமை கூட அவருக்கு தான் இருக்கு”, என்று ஆனந்த கண்ணீருடன் சொன்னார்.

அதைக் கடுப்புடன் பார்த்தார்கள் அஞ்சலி மற்றும் மஞ்சுளா இருவரும். எப்போதுமே அவர்களுக்கு சொக்கலிங்கம் வாழ்க்கையில் இரண்டாம் இடம் தான் என்று தெள்ளத் தெளிவாக புரிந்தது. இனி தேவையில்லாமல் பேசி உள்ளதையும் கெடுக்க கூடாது என்று எண்ணிக் கொண்டார்கள்.

“அவர் சொத்து எல்லாம் நமக்கு வேண்டாம் பாப்பா”, என்று சொன்னாள் மீனாட்சி. அதை வியப்பாக பார்த்தாள் யசோதா.

“நீ சும்மா இரு மா. நீ உன் புருஷனை விட்டுக் கொடுத்த மாதிரி நான் என்னோட உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. அது அப்பா ஆரம்பிச்ச கம்பெனி. அவரோட பொண்ணு நான். அவருக்கு அப்புறம் அது எனக்கு தான் வரணும். அப்பா மத்தவங்களுக்கு நகை வாங்கிக் கொடுக்கட்டும், இடம் வாங்கிக் கொடுக்கட்டும். ஆனா அவர் கம்பெனியை நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நீயும் விட்டுக் கொடுன்னு என் கிட்ட சொல்லாத மா. நீ உன் புருஷனை விட்டுக் கொடுத்தும் கூட உனக்கு கெட்ட பேர் தான். அதனால நாமளும் கொஞ்சம் சுயநலமா இருக்குறதுல தப்பு இல்லை. வா போகலாம்”, என்று சொன்ன அர்ச்சனா மீனாட்சியையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள். பிரபாகரனும் அவர்கள் பின்னே சென்றான்.

அவர்கள் போனதும் சொக்கலிங்கம் மற்றும் மஞ்சுளா இருவரும் கிளம்பிச் சென்றார்கள். “இப்ப சந்தோஷமா?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி. யசோதா கண்ணீருடன் நின்றாள்.

“அழு, இனி உன் மூத்த மகன் உனக்கு இல்லை. இனி இந்த வீடு வீடாவே இருக்காது. நீ நிம்மதியா நாலு வேளை கொட்டிக்கோ”

“என்னங்க? அவன் இப்படி செய்வான்னு நான் எதிர் பாக்கலை”

“நீ பண்ணுற வேலைக்கு மானம் ரோஷம் உள்ளவன் இந்த வீட்ல இருப்பானா? முதல்ல உனக்கு அர்ச்சனா மேல என்ன கோபம்? அவளை மாதிரி ஒரு பொண்ணை உன்னால பாத்துருக்க முடியுமா? நீயும் முதல் நாள் அவ கிட்ட நல்லா தானே பேசின? அப்புறம் எந்த கெட்ட சக்தி உன்னை இப்படி மாத்திச்சு?”

“அது அவ அம்மா”

“மீனாட்சிக்கு என்ன? புருஷனை விட்டுக் கொடுத்து சொத்து சுகமும் வேண்டாம்னு சொல்லி தனியா நிக்குற பொம்பளை உனக்கு தப்பானவளா தெரியுறாளா? எதுக்கு உனக்கு மீனாட்சியைப் பிடிக்கலை?”, என்று கேட்க யசோதாவால் பதில் சொல்ல முடியவில்லை.

“என்ன பதில் சொல்ல முடியலையா? உன் கிட்ட பதிலே இல்லை யசோதா. நீ காரண காரியத்தோட அவங்களை வெறுத்தாப் பரவால்ல. ஆனா அடுத்தவங்க சொல்லிட்டாங்கன்னு நீயும் வெறுக்குற பாத்தியா? அது தான் தப்பு. அப்படின்னா உனக்கு மூளை இல்லையா? உன்னோட அறிவு உனக்கு நல்லது எது கெட்டது எதுன்னு சொல்லலையா? அப்படிச் சொல்லலைன்னா உனக்கு மூளையே இல்லைன்னு அர்த்தம்”

“இப்ப புரியுதுங்க. நான் தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். அதுவும் அர்ச்சனா கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு போனது எனக்கு இன்னும் கோபமா ஆகிருச்சு. அவளுக்கு பிரபா முக்கியத்துவம் கொடுத்தது பிடிக்கலை. அதான்…”

“இப்பவாது உன் தப்பை உணர்ந்தா சந்தோஷம் தான். ஆனா பிரபா மனசு மாற கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும். அர்ச்சனா உன்னால அதிகம் காயப் பட்டுருக்கா. அதுவும் மாறனும். அது வரை அவங்க தனியாவே இருக்கட்டும். ஆஃபிஸ்க்கு தான் என்ன பண்ணப் போறேனு தெரியலை. அவன் இல்லாம வேலை எல்லாம் எப்படி நடக்கும்?”, என்று சக்கரவர்த்தி கேட்டதும் “நான் எல்லாம் பாத்துக்குறேன் மாமா”, என்று அவசரமாக சொன்னான் வேணு.

அவனை முறைத்து பார்த்தவர் “நீ பாக்குறியா? நீ என்ன பாக்க போற? ஏன் இத்தனை நாள் பண்ணின தில்லாலங்கடி வேலை பத்தாதா? உன் கைல கம்பெனியைக் கொடுத்து நான் துண்டை தலையில போட்டுட்டு போகவா?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி.

“என்னங்க? வேணு நம்ம வளர்த்த பிள்ளை. இப்ப நம்ம வீட்டு மாப்பிள்ளை. இப்படியா பேசுறது?”, என்று கேட்டாள் யசோதா.

“இப்படியாவது பேசுறேன்னு சந்தோஷப் படு. இவனை எல்லாம் வீட்டை விட்டே துரத்தணும்”, என்று சொல்ல வேணு அவமானத்துடன் தலை குனிந்து நின்றான். “இவனுக்கு இது தேவை தான்”, என்று எண்ணிக் கொண்டாள் சீதா.

“அவன் என்ன செஞ்சாங்க?”

“என்ன செய்யலைன்னு கேளு? கம்பெனில லேபர்ஸ்க்குள்ள சண்டை இழுத்து விடுறான். கம்பெனில நடக்குற எல்லா பிரச்சனைக்கும் காரணம் இவன் தான். எல்லாம் கேமரால பதிவாகி இருக்கு”

“வேணு, மாமா சொல்றது எல்லாம் உண்மையா?”, என்று யசோதா கேட்க அவன் தலை குனிந்தான்.

“அவன் அது மட்டும் பண்ணலை யசோதா. நாம அர்ச்சனாவை பொண்ணு பாக்க போன அன்னைக்கு அஞ்சலியோட அம்மா உனக்கு கால் பண்ணி மீனாட்சியைப் பத்தி தப்பா சொன்னாங்களே நினைவு இருக்கா?”

“ஆமாங்க”

“அன்னைல இருந்து தானே நீயும் மீனாட்சி அர்ச்சனா மேல கோபமா இருக்க. அதுக்கு காரணமே வேணு தான். இவன் தான் அஞ்சலி அம்மா கிட்ட பேசி அப்படி பேசச் சொன்னது”, என்று சொல்ல அனைவரும் அதிர்ந்து போனார்கள். இந்த உண்மை சீதாவுக்கே இப்போது தான் தெரிந்தது. அவளும் அதிர்ந்து போனாள். சீதாவிடம் வேணு கம்பெனியில் பிரச்சனை செய்கிறான் என்றும் அர்ச்சனா திருமணம் வேண்டாம் என்று சொல்லிச் சென்றதற்கு வேணு தான் காரணம் என்றும் சொல்லி இருந்தான் பிரபாகரன். ஆனால் இதைச் சொல்ல வில்லை. வர்ஷினிக்கும் அதிர்ச்சி தான்.

“என்னங்க நீங்க சொல்றது உண்மையா?”, என்று கேட்டாள் யசோதா.

“ஆமா இவன் பிரபா மேல ஏதோ வஞ்சம் வச்சிருக்கான். அதான் இப்படி எல்லாம் பண்ணுறான். உன்னையே எத்தனை தடவை தூண்டி விட்டுருக்கான்னு யோசி. அவன் சொன்னதுக்கு நீயும் ஆடுற?”

“என்னை மன்னிச்சிருங்க”, என்று யசோதா சொல்ல “என்னையும் மன்னிச்சிருங்க மாமா. ஏதோ தெரியாம பண்ணிட்டேன்”, என்றான் வேணு.

“உன்னை மன்னிக்கிறேன். ஏன்னா பொண்ணைக் கொடுத்துருக்கேனே? வேற வழி இல்லையே? ஆனா எனக்கு என் கம்பெனி முக்கியம். பிரபா திரும்பி வர வரைக்கும் நானும் அகிலனும் பாத்துக்குவோம். உனக்கு என்னோட ஃபிரண்ட் கம்பெனில வேலைக்கு சொல்லிருக்கேன். வர மாசத்துல இருந்து அங்க போய் வேலை பாரு. அவன் கிட்ட நல்ல விதமா தான் உன்னைப் பத்திச் சொல்லிருக்கேன். அங்க போய் உன் வேலையைக் காட்டிறாத”, என்று சக்கரவர்த்தி சொன்னதும் அவன் சரி என்று சொன்னான்.

“அப்பா நான் கொஞ்ச நாளா தான் ஆஃபிஸ்க்கு வரேன். என்னால முடியுமா?”, என்று கேட்டான் அகிலன்.

“என்ன முடியுமான்னு கேக்குற? முடியணும். நான் இப்ப கடைசியா தொடங்கின யூனிட்டை தான் உனக்கு கொடுக்கப் போறேன். இனி அது உன் சாம்ராஜியம். அதுல லாபம் வந்தாலும் சரி நஷ்டம் வந்தாலும் சரி, நீ தான் பாத்துக்கணும். இந்த யூனிட்டை நீ பிரபாவோட யூனிட் கூட சேந்து நடத்தினாலும் சரி, தனியா நடத்தினாலும் சரி. அது உன் விருப்பம். இந்த யூனிட்டும் அடையார் வீடும் உனக்கு வரும். வர்ஷினிக்கு பெசன்ட்நகர்ல பிரபா வீடு கட்டிட்டு இருக்கான். எப்ப வேணும்னாலும் அவ குடும்பத்தோட அங்க போயிறலாம். அது மட்டும் தான் அவளுக்கு. ஏன்னா அவளுக்கு தேவைக்கு அதிகமா நகை போட்டாச்சு. அதை வச்சும், கிடைச்சிருக்குற வேலையை வச்சும் வேணு முன்னேறிக்கணும். இந்த வீடும் கம்பெனில இருக்குற இன்னொரு யூனிட்டும் பிரபாவுக்கு போகும். அவன் வர வரைக்கும் நான் பாத்துக்குவேன். மத்த சொத்தெல்லாம் உனக்கும் பிரபாவுக்கும் பாதி பாதி என் காலத்துக்கு பிறகு வரும். உங்க அம்மா நகைகள் அவ காலத்துக்கு பிறகு ரெண்டு மருமகளுக்கும் பாதி பாதி வரும். இப்ப சொன்னதை எல்லாம் நாளைக்கே நான் உயிலா எழுதி வச்சிருவேன்”

“இப்பவே எதுக்கு பா சொத்து எல்லாம் பிரிக்கிறீங்க? நான் அண்ணன் கிட்ட சண்டை எல்லாம் போட மாட்டேன் பா. அண்ணாவும் என்னை எதிரியா நினைக்க மாட்டாங்க”, என்று சொன்னான் அகிலன்.

Advertisement