Advertisement

“அர்ச்சனா”, என்று அவன் அழைத்ததும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “எப்ப வந்தீங்க பிரபா? டீ கொண்டு வரட்டுமா?”, என்று புன்னகையுடன் கேட்டாள்.

தன்னைக் கண்டதும் அவளது சோர்வைக் கூட மறைத்தவளை வேதனையாக பார்த்தவன் கட்டிலில் அமர்ந்து அவளையும் அருகே அமர வைத்துக் கொண்டான்.

“என்ன பிரபா ஒரு மாதிரி இருக்கீங்க?”

“வீட்ல என்ன நடந்துச்சு?”

“வீட்லயா? ஒண்ணும் நடக்கலையே? நீங்க விட்டுட்டு போனதும் ரூமுக்கு வந்து படுத்துட்டேன்”

“அப்படியா? ஆனா அத்தை வேற ஏதோ சொன்னாங்க”

“அது…”

“என் கிட்ட எதுக்கு மறைக்கிற?”

“சின்ன வயசுல இருந்து நானும் அம்மாவும் மட்டும் தான் இருந்துருக்கோம் பிரபா. இங்க தான் இவ்வளவு சொந்தக்காரங்க இருக்காங்கன்னு சந்தோஷமா இருக்கு. இதுல நான் ஏதாவது சொல்லி குடும்பம் பிரிஞ்சிறக் கூடாதுல்ல?”

“உனக்கு என் குடும்பத்தை பிடிக்கும் தானே?”

“அஞ்சலியை தவிர வேற எல்லாரையும் பிடிக்கும்”

“ஹா ஹா, அவ மேல உனக்கு எதுக்கு டி இவ்வளவு காண்டு?”

“இருக்காதா பின்ன?”

“சரி அதை விடு. இப்ப சொல்லு. என் குடும்பத்தை உனக்கு பிடிக்கும் தானே?”

“பிடிக்கும்னு இப்ப தானே சொன்னேன். ஆனா இங்க இருக்குற யாருக்கும் தான் என்னை பிடிக்கலை”

“அவங்க எல்லாருக்கும் உன்னைப் பிடிக்க வைக்கணும்ல?’

“அவங்களுக்கும் என்னைப் பிடிச்சா நல்லா இருக்கும்? ஆனா எப்படி நடக்கும்? எல்லாரும் அஞ்சலி கிட்ட நல்லா பேசுறாங்க. ஆனா என் கிட்ட பேசுறது இல்லை. சீதா மா, அப்புறம் மாமா நல்லா பேசுறாங்க. அகில் எப்பவாது நல்லா பேசுவான். ஆனா வர்ஷி பேசவே மாட்டா. அத்தையும் அப்படி தான்”

“அம்மாவுக்கும் வர்ஷிக்கும் உன்னைப் பிடிக்கணும்னா நாம இப்ப ஒண்ணு செய்யனும்”

“என்ன செய்யனும்?”

“நாம இந்த வீட்ல இருந்து போகணும்?”

“பிரபா”

“ஆமா அர்ச்சனா, ஒரு நல்ல விஷயம் நடக்கணும்னா சில கஷ்டமான விஷயங்களை நாம செஞ்சு தான் ஆகணும்”

“அது தப்பு இல்லையா?”

“இல்லை, உன்னோட அருமையை அவங்களுக்கு புரிய வைக்க போறேன்”

“இல்லை பிரபா, இன்னும் வெறுப்பு தான் என் மேல வளரும்”

“எனக்கு நிம்மதி வேணும் அர்ச்சனா”

“பிரபா”

“உன்னை அம்மா கஷ்டப் படுத்துறதைப் பாத்துட்டு என்னோட நிம்மதி போகுது. அதை சரி பண்ணனும். என்னோட நிம்மதிக்காக நீ சரின்னு சொல்லி தான் ஆகணும்”

“சரி, உங்களுக்காக சம்மதிக்கிறேன்”

“சரி தேவையானதை மட்டும் எடுத்து வை. மத்தது எல்லாம் புதுசா போய் வாங்கிக்கலாம்”

“நாம எங்க போறோம்?”

“அன்னைக்கு போனோம்ல அந்த வீட்டுக்கு தான். அத்தையையும் நாம அங்க கூட்டிட்டுய் போய்றலாம். அவங்களும் தனியா தானே இருக்காங்க? நமக்கு எப்ப தனிமையான வாழ்க்கை போர் அடிக்குதோ அப்ப இங்க வந்துறலாம். அதுவும் எங்க அம்மா மனசு மாறினா மட்டும் தான்”

“சரி பிரபா, ஆனா மாமா கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்கலை?”

“இப்ப சொல்லிட்டா போச்சு”

“மாமாவும் என்னை தப்பா நினைப்பாங்க”

“இல்லை, அப்பா புரிஞ்சிக்குவாங்க. இப்படி ஒரு சூழ்நிலை வந்தா உன் பக்கம் தான் நான் நிக்கணும்னு சொன்னதே அப்பா தான். சரி எடுத்து வை”, என்று அவன் சொன்னதும் அவள் எடுத்து வைக்க ஆரம்பித்தாள். அவன் தந்தையை தனியே அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

சக்கரவர்த்திக்கு கஷ்டமாக இருந்தாலும் இது தான் சரி என்று அவருக்கும் தோன்றியது. அடுத்த நாள் காலை அனைவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது. எப்போதும் போல முதல் ஆளாக எழுந்தது வேணு தான். அவனுக்கு பிரபாகரன் என்ன முடிவு எடுப்பான் என்று ஆர்வமாக இருந்தது.

சிறிது நேரம் கழித்து சொக்கலிங்கம் மஞ்சுளா இருவரும் வந்தார்கள். அடுத்த கால் மணி நேரத்தில் மீனாட்சியும் அங்கே வந்தாள். அனைவரையும் வரவேற்றார் சக்கரவர்த்தி.

யசோதா குழப்பத்துடன் கணவனைப் பார்க்க “பிரபா தான் எல்லாரையும் வரச் சொல்லிருக்கான். பெரிய முடிவா எடுத்துட்டான். இப்ப உனக்கு சந்தோஷம் தானே?”, என்று தெரிந்தும் தெரியாதது போலக் கேட்டார்.

யசோதாவுக்கு பயமாக இருந்தது. கொஞ்சம் அவசரப் பட்டு விட்டோமோ என்று காலம் தாழ்ந்து யோசித்தாள். அப்போது இரண்டு பெரிய பைகளுடன் கீழே வந்தார்கள் அர்ச்சனாவும் பிரபாகரனும். அவர்கள் பையைப் பார்த்து மொத்த குடும்பமே அதிர்ந்தது. வேணு முகம் மட்டும் மலர்ந்தது.

முன்பே தெரிந்தாலும் “என்ன பிரபா இதெல்லாம்?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி.

“நாங்க இந்த வீட்டை விட்டு போறோம் பா”, என்று அவன் சொல்ல அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

“என்ன பிரபா சொல்ற?”

“நான் உங்களை எந்த குறையும் சொல்லலை பா. கொஞ்சம் எங்களுக்கு பக்குவம் வரணும். நாங்க தனியா போறோம். கம்பெனில இருந்தும் நான் விலகிக்கிறேன்”, என்று சொல்ல “பிரபா என்ன சொல்ற?”, என்று சக்கரவர்த்தியும் அதிர்ந்து போனார். தனியாக போகிறேன் என்று அவன் ஏற்கனவே சொன்னான் தான். ஆனால் கம்பெனியில் இருந்தும் விலகுவான் என்று அவர் எதிர் பார்க்க வில்லை.

“ஆமா பா. உங்களுக்கு நான் மட்டும் மகன் இல்லை. அதனால இனி எல்லாத்தையும் உங்க சின்ன மகன் பாத்துக்குவான்”, என்று பிரபாகரன் சொல்ல “அண்ணா”, என்று அதிர்வாக அழைத்தான் அகிலன்.

“இனி அந்த உறவு நமக்குள்ள இல்லை அகிலன். அது முடிஞ்சு போய் ரொம்ப நேரம் ஆகிருச்சு. இனி நான் தனி. நீங்க எல்லாரும் தனி”

“அண்ணா, அம்மா செஞ்சது தப்பு தான். அதுக்கு வீட்டை விட்டுப் போவியா? அதுவும் போயும் போயும் இவங்களுக்காக?”, என்று கேட்டாள் வர்ஷினி.

“இனி தயவு செஞ்சு என்னை அண்ணனு கூப்பிடாதே வர்ஷி. உனக்கு அவன் மட்டும் தான் அண்ணன். இனி யார் கேட்டாலும் மூத்த அண்ணன் இறந்துட்டான்னு சொல்லிரு வர்ஷி. என் பொண்டாட்டியை மதிக்காத யாரும் எனக்கு தேவை இல்லை”, என்று சொல்ல அவள் திகைத்து போய்ப் பார்த்தாள்.

“ஏன் டா இப்படி எல்லாம் பேசுற? இவ உன்னை பேச வைக்கிறாளா?”, என்று கேட்டாள் யசோதா.

“அன்னைக்கு கேட்டதை தான் இன்னைக்கும் கேக்குறேன். நான் உங்க மகன் இல்லையா மா? அகிலன் பொண்டாட்டியை மதிக்கிறீங்க? ஆனா அர்ச்சனாவை மதிக்கிறது இல்லை? அவ எந்த விசயத்துல எல்லாரையும் விட குறைஞ்சிட்டா? இன்னும் சொல்ல போனா இந்த வீட்லயே அதிகம் படிச்சு பெரிய பதவில இருக்குறவ அவ தான். ஆனா அவளை மதிக்க  மாட்டீங்க அப்படி தானே? அவ முக்கியம் இல்லைன்னா உங்களுக்கு நானும் முக்கியம் இல்லையா மா?”

“இல்ல பிரபா… அவ அம்மா”

“அவங்களுக்கு என்ன? அர்ச்சனா அம்மா தான் மாமாவுக்கு முதல் மனைவி. அவங்க அம்மா தன்னோட கணவரை இன்னொரு பெண் பங்கு போட்டதுனால தான் விட்டுக் கொடுத்தாங்க. இப்ப வரை கண்ணியமா வாழ்ந்துட்டு இருக்காங்க. மத்தவங்க அம்மா மாதிரி ஆஃபிஸ்ல நுழைஞ்சு எம் டியை மயக்கி பிள்ளை உருவாகி அதை காரணமா வச்சி ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க இல்லை”, என்று சொல்ல அஞ்சலி மற்றும் மஞ்சுளா முகம் கூம்பியது.

“என்னைச் சுத்தி இருக்குற எல்லாமே சுயநலக் கூட்டம். இதுக்குள்ள இருந்தா நானும் அர்ச்சனாவும் ஒண்ணும் இல்லாம போயிருவோம். இல்லை உங்களை மாதிரி பச்சோந்தியா நாங்களும் மாறிருவோம். அதனால நாங்க கிளம்புறோம்”

“வேண்டாம் பிரபா”, என்றார் சக்கர்வர்த்தி.

“என்னை மன்னிச்சிருங்க பா. எனக்கு இதை தவிர வேற முடிவு தோணலை”

“தனியாப் போறது சரி தான் பிரபா. இதை நான் முன்னாடியே எதிர் பார்த்தேன்? ஆனா கம்பெனி விட்டு ஏன் போகணும்? அது நீ வளர்த்தது பிரபா”

“இல்லைப்பா எனக்கு வேண்டாம். இத்தனை நாள் நான் உழைச்சதுக்கான சம்பளத்தை மட்டும் நான் எடுத்துக்கிட்டேன். வேற எதுவும் எனக்கு வேண்டாம்”

“வேலைக்கு என்ன பண்ணுவ பிரபா? ஏதாவது பிஸ்னஸ் ஆரம்பிக்கப் போறியா?”

“இல்லைப்பா. யோகா குருப் ஆப் கம்பெனிஸ் எம் டி யோகேந்திரன் என்னோட ஃபிரண்ட் தான். அவன் கம்பெனில எனக்கு ஜி. எம் போஸ்டிங் கொடுத்துருக்கான்”

“உனக்கு கீழ பல ஆயிரம் பேர் வேலை செய்யுறாங்க டா. நீ இன்னொருத்தன் கிட்ட கை நீட்டி வேலை பாக்கணுமா?”

“பரவால்ல பா. உழைக்கிறதுக்கு ஊதியம் கிடைக்கப் போகுது. நாங்க வரோம்”

“பிரபா, போகாத பிரபா. நான் பேசினது தப்பு தான். என்னை மன்னிச்சிரு”, என்றாள் யசோதா.

“இதே மன்னிப்பை அர்ச்சனா கிட்ட நீங்க கேப்பீங்களா மா? மன்னிப்பு கூட கேக்க வேண்டாம். அவளை முழு மனசா மருமகளா ஏத்துக்குவீங்களா?”, என்று கேட்க திகைத்து அவனைப் பார்த்தாள்.

“முடியாதுல்ல? அப்ப எங்களைத் தடுக்காதீங்க”, என்று சொன்னவன் அவளுடன் கிளம்பி விட்டான்.

Advertisement