Advertisement

அத்தியாயம் 16 

உந்தன் ஒற்றைப் புன்னகையை

வரமாக வேண்டி முத்தமிட்டேன்

உந்தன் பாதச் சுவடுகளை!!!

பிரபாகரன் அர்ச்சனாவை அழைத்துச் சென்றது ஒரு உயர் தர ஹோட்டலுக்கு தான். அதைக் கண்டு “இங்க எதுக்கு பிரபா வந்துருக்கோம்?”, என்று கேட்டாள்.

“இன்னைக்கு ரொம்ப பசி. அங்க உக்காந்து எல்லார் முன்னாடியும் திருப்தியா சாப்பிட முடியாது. வா இங்க உக்காந்து நிம்மதியா சாப்பிடலாம்”, என்று சொல்லி உள்ளே நடந்தான்.

“எனக்காக தானே பசிக்குதுன்னு பொய் சொல்றீங்க?”, என்று கேட்டாள்.

“உனக்காகவா? உனக்காக நான் ஏன் பொய்ச் சொல்லணும்? இப்ப எல்லாம் நைட் முழுக்க ஹெவி வொர்க்கா இருக்கா? அதான் பயங்கரமா பசிக்குது”, என்று சொல்லி கண்ணடிக்க அவன் சொன்ன ஹெவி வொர்க்கை நினைத்துப் பார்த்தவளின் முகம் சிவந்து போனது.

அதன் பின் அவளை உண்ண வைத்து மருத்துவமனையில் அவளை விட்டுவிட்டு அதற்கு பிறகு தான் அலுவலகம் சென்றான். அன்றைய இரவு உணவை அவர்களின் அறைக்கு வந்து வைத்து விட்டுச் சென்றாள் சீதா. அதற்கும் புலம்பிக் கொண்டிருந்தாள் யசோதா.

அந்த வாரம் முழுக்க அப்படியே கடக்க அந்த வாரக் கடைசியும் வந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அர்ச்சனாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து மீனாட்சியைப் பார்க்க அழைத்துச் சென்றான். அங்கே அவளை விட்டுவிட்டு அலுவலகம் சென்றான்.

அம்மாவும் மகளும் பேசிய படியே மதிய சமையலை முடித்திருக்க அவன் வரவுக்காக காத்திருந்தார்கள். அவன் வந்ததும் மகள் மற்றும் மருமகனை சாப்பிட வைத்தாள் மீனாட்சி.

சாப்பிட்டு முடித்ததும் ஓய்வு எடுக்க அறைக்குள் சென்றவர்கள் நிம்மதியாக உறங்கினார்கள். பின் மாலை எழுந்து டீயை அருந்தி விட்டு தங்கள் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

அவளை தங்களின் வீட்டில் விட்டுவிட்டு “கொஞ்சம் வேலை இருக்கு டா. எட்டு மணிக்கு வந்துருவேன். நீ உள்ள போ”, என்று சொல்லி விட்டு மீண்டும் சென்று விட்டான் பிரபாகரன். இவள் மட்டும் வாங்கிய பொருள்களுடன் உள்ளே சென்றாள்.

ஹாலில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவள் அங்கே சென்றால் ஏதாவது வம்பு வரும் என்று உணர்ந்து தங்களின் அறைக்குச் செல்லப் பார்த்தாள். அப்போது “ஏய் நில்லு டி. என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?”, என்று கேட்டாள் யசோதா.

நின்று திரும்பிப் பார்த்து “நான் என்ன செஞ்சேன்?”, என்று குழப்பமாக கேட்டாள் அர்ச்சனா.

“இவ்வளவு நேரம் எங்க போயிட்டு வர? என் மகனை எங்க கூட்டிட்டு போன?”

“ஷாப்பிங் போனோம்”

“அதுக்கு இவ்வளவு நேரமா?”

“இல்லை, கடைக்கு போயிட்டு எங்க வீட்டுக்கு போனோம்”

“நீ கைக்காரி டி. என் மகனை என் கிட்ட இருந்து பிரிக்க பாக்குற தானே? அஞ்சலியும் தான் இந்த வீட்டுக்கு மருமக. அவ இப்படியா என் மகனை அவ அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறா? இதெல்லாம் உன் அம்மா உனக்கு சொல்லிக் கொடுத்தாளா? என் மகனை நல்லா கைக்குள்ள போட்டுருக்க”, என்று வார்த்தையை விட அர்ச்சனாவுக்கு சுள்ளென்று ஏறியது.

எப்போதும் அவளை ஏதாவது சொன்னால் கண்டு கொள்ளாமல் செல்வாள். ஆனால் மீண்டும் மீண்டும் தாயை வம்புக்கு இழுப்பதும் வளர்ப்பு சரியில்லை என்று சொல்வதும் அவளை வெகுவாக காயப் படுத்தியது.

அன்னையைச் சொன்ன எரிச்சலில் “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்க மரியாதை கெட்டுரும். என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. எங்க அம்மா பத்தி பேசினா நான் பொறுமையா இருக்க மாட்டேன்”, என்று சுள்ளென்று கத்தி விட்டாள். சீதா, வர்ஷினி, அஞ்சலி மூவரும் அங்கு தான் இருந்தார்கள்.

“என்ன செய்வ? எல்லாம் அழகா இருக்கேன்னு திமிர். அழகை காமிச்சு தானே ஆம்பளைங்களை மயக்குறீங்க? அதான் பிரபா உன் இஷ்டத்துக்கு ஆடுறான்”

“அழகை காமிச்சு நான் மயக்கி, உங்க மகன் மயங்கி கிடக்குறாங்கன்னு சொல்றது நீங்க பிரபாவை அசிங்கப் படுத்துற மாதிரி இருக்கு. அழகான பொண்ணு வந்தா உங்க மகன் மயங்கிருவாரா? அது மட்டும் இல்லை, அழகை காமிச்சு கண்டவங்களை மயக்கினா தான் தப்பு. கட்டின புருஷனை மயக்குறது தப்பு இல்லை. அப்புறம் இது தான் எங்க அம்மா பத்தி நீங்க பேசுறது கடைசியா இருக்கணும். என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க, என் பிரபாவுக்காக நான் பொறுத்துக்குவேன். எங்க அம்மா பத்தி பேசினீங்கன்னா….?”

“என்ன டி செய்வ? என்ன? அடிப்பியா?”

“சொல்ல மாட்டேன், செஞ்சு காட்டுவேன். நீங்க இப்படியே நடந்துக்கோங்க. கூடிய சீக்கிரம் அது நடக்கும். அது மட்டும் இல்லை உங்க மகனை பிரிச்சு கூட்டிட்டும் போவேன். அந்த அளவுக்கு வர விட்டுறாதீங்க. அதுக்கப்புறம் நினைச்சாலும் சேர முடியாது. குடும்பத்தை பிரிக்கணும்னு எனக்கு எண்ணம் இல்லை. ஆனா அந்த எண்ணத்தை நீங்க பிரபாவுக்கு வர விட்டுறாதீங்க”, என்று சொல்லி விட்டு அவள் உள்ளே செல்ல யசோதா முகம் கோபத்தில் சிவந்தது.

“என்னையே அடிப்பேன்னு சொல்லுவியா? உனக்கு இருக்கு டி”, என்று யசோதா கத்த “யசோ நீ பேசினது தப்பு. ரொம்ப தப்பு”, என்றாள் சீதா.

“என்ன அண்ணி நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறீங்க?”

“சப்போர்ட் இல்லை யசோ. நியாயத்தை சொல்றேன். அவ அவளோட அம்மா வீட்டுக்கு தானே போனா? அதுவும் பிரபா கூட தானே? அதுக்கு நீ இப்படி எல்லாம் பேசுவியா?”

“பேசாம இருங்க அண்ணி. உங்களுக்கு ஒண்ணும் தெரியாது”, என்று யசோதா பட்டென்று சொல்ல அதற்கு மேல் பேசினால் தனக்கு மரியாதை கிடைக்காது என்று எண்ணி அமைதியாக சென்று விட்டாள் சீதா. ஆனால் அறைக்கு சென்றதும் முதல் வேலையாக அங்கே நடந்ததை அப்படியே பிரபாவுக்கு சொல்லி விட்டாள்.

வீட்டில் என்ன நடந்தாலும் சீதா அவனிடம் சொல்லி விடுவாள். இன்றும் அது போல சொல்லி விட்டாள். “சரி அத்தை, நீங்க டென்ஷன் ஆகாதீங்க. நான் பாத்துக்குறேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் யோசனையில் ஆழ்ந்தான். அடுத்து என்ன செய்ய என்று அவன் மனம் வேகமாக கணக்கு போட்டது. இத்தனை நாள் நடப்பதையும் அவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அர்ச்சனாவுக்கு  நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்க வேண்டியது அவனது கடமை. அது மட்டுமில்லாமல் யசோதாவை மாற்ற வேண்டியதும் அவன் கடமை தான்.

கூடவே இருந்தால் யசோதா கட்டாயம் அர்ச்சனாவை புரிந்து கொள்ள மாட்டாள். அதற்கு பிரிவு அவசியம் என்று புரிந்தது. தன் கையில் இருந்த போனை எடுத்து தன் நண்பனுக்கு அழைத்தவன் சில விஷயம் பேசினான்.

பின் மூர்த்தியை அழைத்தான். “சார்”, என்ற படி வந்தான் மூர்த்தி.

“ஒரு ஹெல்ப் பண்ணனும் மூர்த்தி”

“சொல்லுங்க சார்”

“நாளைக்கு காலைல என்னோட புது வீட்டுக்கு போங்க. கொஞ்சம் பர்னிச்சர் எல்லாம் ஆர்டர் பண்ணிருக்கேன். எப்ப வேணும்னாலும் டெலிவரி பண்ணுவாங்க. நீங்க போய் வாங்கி வச்சிறீங்களா? நானும் காலைல கொஞ்ச நேரம் கழிச்சு வந்துருவேன். இனி நானும் அர்ச்சனாவும் அங்க தான் இருக்கப் போறோம்”

“சரி சார், நான் காலைலே முதல் ஆளா போய் எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன். நீங்க மெதுவா வாங்க”, என்று சொல்லி விட்டு சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டான். பிரபாகரன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான். எடுக்கப் போகும் முடிவை எண்ணி அவன் முகம் இறுகிப் போய் இருந்தது.

பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு போவது கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் தன்னை நம்பி வந்தவளை, தன் மீது உயிராக இருப்பவளை காக்க வில்லை என்றால் அவன் என்ன ஆண் மகன்? அலுவலகத்தில் அவசரமாக சில வேலைகளைச் செய்தவன் வீட்டுக்கு கிளம்பி விட்டான்.

பிரபாகரன் வீட்டுக்கு வரும் போது சக்கரவர்த்தி மற்றும் வேணுவும் வந்து விட்டார்கள். அவன் பேசாமல் அறைக்குள் செல்லப் போக “பிரபா”, என்று அழைத்தாள் யசோதா.

“என்ன மா?”, என்று அவன் கேட்கும் போதே அர்ச்சனாவைத் தவிர அனைவரும் அங்கே கூடி விட்டார்கள்.

“உன் கிட்ட எத்தனை தடவை சொன்னேன்? இவ வேண்டாம்னு, கேட்டியா? என் பேச்சை?”

“என்ன நடந்துச்சு மா?”, என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான். அவன் முகத்தில் இருந்த அழுத்தமே சக்கரவர்த்திக்கு பயத்தைக் கொடுத்தது. எதுவோ தவறாக நடக்கப் போகிறது என்று அவர் உள் மனது சொல்லியது.

“அவ என்னை அடிப்பேனு சொல்லிட்டா டா”

“யாரு?”

“அவ தான்”

“அவனா, அவளுக்கு பேர் இல்லையா?”

“அவ பேரைச் சொல்லாதது தான் உனக்கு குறையா? அவளைக் கூப்பிட்டு கேளு”

“என்ன கேக்கணும்?’

“என் கிட்ட அவ எதுக்கு அப்படி பேசினான்னு கேளு”

“அவ கிட்ட கேக்குறது இருக்கட்டும். நீங்க அவ கிட்ட என்ன பேசுனீங்க?”

“அது… அது வந்து. நான் எங்க போயிட்டு வறேன்னு தான் கேட்டேன். அதுக்கு தான் அப்படி பேசிட்டா? அது மட்டுமில்லாம உன்னை என் கிட்ட இருந்து பிரிச்சிருவாளாம்”

“ஓஹோ. சரி அர்ச்சனா உங்களை அடிப்பேனு சொன்னப்ப வீட்ல யாருமே இல்லையா?’

“அண்ணி இருந்தாங்க. வர்ஷி, அஞ்சலி எல்லாம் இருந்தாங்க”

“நல்லதா போச்சு. அத்தை இங்க வாங்க. வர்ஷி இங்க வா. என்ன நடந்துச்சுன்னு நீங்க ரெண்டு பேரும் சொல்லுங்க”, என்று சொன்னதும் சீதா அமைதியாக இருக்க வர்ஷினி வார்த்தை மாறாமல் நடந்ததைச் சொன்னாள்.

அதைக் கேட்டு அன்னையை முறைத்துப் பார்த்தவன் “ரொம்ப நன்றி மா, நீங்க இப்ப நடந்துக்கிட்டதுக்கு. காலைல வரைக்கும் டைம் கொடுங்க. நான் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்”, என்று சொல்லி அறைக்குச் சென்றான்.

போகும் அவனையே திகைப்பாக பார்த்துக் கொண்டு நின்றாள் யசோதா. அவள் அருகே வந்த சக்கரவர்த்தி “நீ இன்னைக்கு குடும்பத்தையே உடைச்சிட்ட யசோதா”, என்றார்.

“என்ன நீங்க எப்பவும் என்னையே சொல்றீங்க? அவ அப்படி பேசினது தப்புன்னு ஏன் யாரும் சொல்ல மாட்டுக்கீங்க? இது என் வீடு. எனக்கு அவளை கேள்வி கேக்க உரிமை இல்லையா? அதெல்லாம் பிரபா கொஞ்ச நேரத்துல சரியாகிருவான். சரி சரி எல்லாரும் போய் வேலையைப் பாருங்க”, என்று சொல்லி நகர்ந்து விட்டாள்.

அறைக்குள் போன பிரபா பார்த்தது தலையில் கை வைத்து அமர்ந்திருந்த அர்ச்சனாவைத் தான். அவள் நிம்மதியை குழி தோண்டி புதைத்து விட்டோம் என்று புரிந்தது.

Advertisement