Advertisement

“உன்னைப் பாக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வினோ மா. ஒரு கையாலாகாத அண்ணனா இருக்கேன்ல? உன்னை காலம் முழுக்க கண்ணீர் விட வச்சு பாக்கணும்னு என் தலையெழுத்து போல? வினோ மா, நான் வேணும்னா பிரபா மச்சான் கிட்ட பேசவா டா?”, என்று நடித்தான்.

“நம்ம பேச்சை அவங்க கேப்பாங்கன்னு நினைக்கிறியா?”

“அப்படின்னா அர்ச்சனா கிட்ட பேசவா? அவளும் எனக்கு தங்கச்சி மாதிரி தானே? உனக்காக நான் அவ கிட்ட மடிப் பிச்சைக் கேக்குறேன். அவளுக்கு உன் உணர்வுகள் புரியும். பணம் காசு இருந்தாலும் அவளும் நம்மளை மாதிரி அப்பா பாசம் இல்லாதவ தானே? நம்மளை கூட பிறந்தவங்களா ஏத்துக்க மாட்டாளா? உனக்காக அவ வாழ்க்கையை விட்டுக் கொடுக்க மாட்டாளா?”, என்று கேட்டான். இப்படி ஒரு எண்ணத்தை அர்ச்சனா மனதில் உருவாக்க வேண்டும் என்பது தான் அவன் பிளான்.

“உண்மையிலே அவங்க நல்லவங்க தான் அண்ணா. ஆனா விட்டுக் கொடுக்க முடியாததும் இந்த உலகத்துல இருக்கு. அவங்க எப்படி அத்தானை எனக்காக விட்டுக் கொடுப்பாங்க? அப்புறம் அவங்க வாழ்க்கை என்னவாகும்?”

“அவளுக்கு என்ன வினோ? அவ ஒரு டாக்டர். அவளுக்கு ஆயிரம் மாப்பிள்ளை கிடைக்கும். ஆனா நீ எப்படி மச்சானை மறப்ப?”

“மறந்து தான் ஆகணும் அண்ணா. அது தான் எல்லாருக்கும் நல்லது”

“வினோ நான் ஒண்ணு கேக்கவா?”

“என்னண்ணா?”

“நான் நினைக்கிற மாதிரி நடக்குமான்னு தெரியாது. ஒரு வேளை அர்ச்சனா இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லை. நான் வேற ஒருத்தரை விரும்புறேன்னு லட்டர் எழுதி வச்சிட்டு ஓடிட்டான்னு வச்சிக்கோ அப்ப நீ மச்சானைக் கல்யாணம் பண்ணிக்குவியா?”

“அப்படி ஒரு சிட்டுவேசன் வந்தா அதை விட வேற சந்தோஷம் எனக்கு என்ன அண்ணா இருக்கப் போகுது? காலம் முழுக்க அர்ச்சனா அக்கா கால்ல கூட விழுவேன். ஆனா அப்படி எல்லாம் நடக்காது. எல்லாம் என் விதி. விடுண்ணா என் வாழ்க்கை முழுக்க நான் நடைப்பிணம் தான்”, என்று சொல்லி விட்டு சென்றாள்.

வினோதினி சென்றதும் அப்போது தான் அர்ச்சனாவைப் பார்ப்பது போல அவள் முன்னால் வந்து நின்றவன் “சிஸ்டர் இவ்வளவு நேரம் நீங்க இங்கயா இருந்தீங்க?”, என்று வியப்பாக கேட்டான்.

“ஆம்”, என்னும் விதமாய் தலையசைத்தாள் அர்ச்சனா. அவள் முகம் இருண்டு போய் இருந்தது.

“என்னை மன்னிச்சிருங்க சிஸ்டர். நீங்க இருக்கீங்கன்னு தெரியாமலே என் தங்கச்சி கிட்ட பேசிட்டேன்”

“பரவால்ல விடுங்க. நீங்க என்ன செய்வீங்க?”, என்று கேட்ட அர்ச்சனா சோர்வாக உணர்ந்தாள்.

“டல்லா தெரியுறீங்க. ஜூஸ் எடுத்துட்டு வரவா சிஸ்டர்?”

“இல்லைண்ணா வேண்டாம்”

“சரி சிஸ்டர். மனசுல எதுவும் வச்சிக்காதீங்க. அவ சின்னப் பொண்ணு”, என்று சொல்லி விட்டு அவன் திரும்ப “அண்ணா ஒரு நிமிஷம்”, என்று அழைத்தாள்.

“என்ன மா… சாரி என்ன சிஸ்டர்?”

“நீங்க ஏன் என் கிட்ட உங்க தங்கைக்காக பேசலை? என் தங்கைக்காக விட்டுக் கொடுத்துட்டு போன்னு ஏன் சொல்லலை?”

“ஏன்னா நீயும் எனக்கு ஒரு தங்கச்சி தானே மா? ஒரு தங்கச்சியோட சந்தோஷத்தை பரிச்சு இன்னொரு தங்கச்சிக்கு கொடுக்குற அளவுக்கு நான் கெட்டவன் இல்லை. வினோவுக்கு நல்ல வாழ்க்கையை நான் ஏற்படுத்திக் கொடுப்பேன். ஆனா அது வரைக்கும் அவ விரக்தில எந்த தப்பான முடிவும் எடுக்காம இருக்கணும். நீயும் நல்லா இருக்கணும் மா”, என்று நல்லவன் போல பேசி விட்டுச் சென்றான்.

அண்ணனிடம் பேசியதில் மனதில் இருந்த காதல் உணர்வுகள் தூண்டப் பட்டு இனி பிரபாகரன் தனக்கு இல்லை என்று எண்ணி ஏங்கி ஏங்கி அழுதாள் வினோதினி.

அவளுக்கு அவளே போட்டுக் கொண்ட முகமூடி கழண்டு விழ காதல் கொண்ட நெஞ்சம் கண்ணீர் சிந்தியது. அப்போது பார்த்து அவளுடன் படிக்கும் பெண் ஒருத்தி அழைக்க எடுத்து பேசினாள்.

“எதுக்கு டி காலேஜ்க்கு வரலை?”

“அது அது… உடம்பு சரியில்லை”

“பொய் சொல்லாத. நாளைக்கு உங்க அத்தானுக்கு கல்யாணம் அதானே? எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலைல? என்னமோ உனக்கும் உன் அத்தானுக்கும் தான் கல்யாணம் ஆகும்னு பேசுவ? இப்ப பொண்ணு வேற யாரோவாமே? நம்ம சீனு வீட்டுக்கு பத்திரிக்கை போயிருக்கு. அவ அப்பா உங்க பிரபா அத்தான் கம்பெனில தானே வேலை பாக்குறார்? போச்சா? உன் கனவு எல்லாம் ஊத்திக்கிச்சு போல?”, என்று கேட்க போனை கட் செய்து விட்டாள் வினோதினி.

இப்போது பேசியவள் வினோதினிக்கு தோழி கிடையாது. படிப்பில் இருவருக்கும் போட்டி வரும். அதனால் தான் வினோதினியைக் காயப் படுத்த வாய்ப்பு கிடைத்ததும் அவள் அதைச் செய்து விட்டாள்.

ஏற்கனவே அண்ணன் பேச்சில் தூண்டப் பட்டிருந்த அவள் காதல் மனம் இப்போது இவளின் பேச்சில் அடி பட்டு காயப் பட்டது. இனி வினோதினி கல்லூரிக்கு சென்றால் அனைவரும் அவளை ஒரு மாதிரி பார்ப்பார்கள் என்று தெரிந்தது. அனைவரிடமும் அவள் பிரபாகரனைத் தான் திருமணம் செய்வேன் என்று கதை விட்டுருக்கிறாளே? இனி அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பாள்? தோழிகளின் பரிதாபப் பார்வையை அவளால் தாங்க முடியுமா?

இதை எண்ணி எண்ணி அமர்ந்திருந்தவள் மனதின் இறுக்கம் தாங்க முடியாமல் சீதா வைத்திருந்த தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டாள். சிறிது நேரத்தில் அறைக்கு வந்த சீதா “ஏய் என்ன டி இந்நேரம் படுத்துருக்க?”, என்று கேட்க அவளிடம் இருந்து பதில் வராததால் திகைத்துப் போனாள்.

மகளைத் திருப்பி அவள் முகத்தைப் பார்க்கும் போது தான் அவள் மயங்கி கிடப்பதே தெரிந்தது. பக்கத்தில் தூக்க மாத்திரை பாட்டிலும் கிடந்தது. நாளைக்கு திருமணத்தை வைத்துக் கொண்டு… இது யாருக்காவது தெரிந்தால் பிரச்சனை வரும் என்பது ஒரு பக்கம்… மகளுக்கு என்ன ஆனதோ என்ற பதபதைப்பு ஒரு புறம். உடனே மகனை அழைத்து விட்டாள்.

“என்ன மா?”, என்றான் வேணு.

“யாருக்கும் தெரியாம என் ரூமுக்கு வா வேணு”

“என்ன மா? என்ன பிரச்சனை?”

“என்னன்னு தெரியலைப்பா. வினோதினி தூக்க மாத்திரை தின்னுட்டு மயங்கி கிடக்கா? எப்ப சாப்பிட்டான்னு கூட தெரியலை”

“இதோ வரேன் மா. இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சா வீணா பிரச்சனை”, என்று சொல்லி போனை வைத்தவன் இதை எதிர் பார்த்தான் தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எதிர் பார்க்க வில்லை.

கொஞ்சம் பதட்டத்துடன் அவன் நிற்க அவனைக் கண்டு “என்ன ஆச்சு அண்ணா?”, என்று கேட்டாள் அர்ச்சனா.

“நான் பயந்த மாதிரியே ஆகிருச்சு மா. வினோதினி அம்மாவோட தூக்க மாத்திரையை விழுங்கிட்டாளாம். நீ டாக்டர் தானே? பிளீஸ் என் தங்கச்சியை வந்து பாரு, அவளைக் காப்பாத்து”, என்று உண்மையிலே பாசத்தில் தான் கேட்டான்.

“வாங்க போகலாம்”, என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு சீதாவின் அறைக்கு வந்தாள். அடுத்த அரை மணி நேரம் போராடி அவளை வாந்தி எடுக்க வைத்து காப்பாற்றி விட்டாள். வயிற்றுக்குள் சென்ற மாத்திரை இன்னும் கரையாததால் எளிதாக வேலை முடிந்தது.

வினோதினி கண் விழித்ததும் “ஏன் டி இப்படி பண்ணின?”, என்று சீதா கேட்க என்ன சொல்ல என்று தெரியாமல் விழித்தாள் வினோதினி. அங்கே அர்ச்சனா இல்லையென்றால் உண்மையைச் சொல்லி இருப்பாள். அர்ச்சனா இருந்ததால் யோசித்தாள்.

ஆனால் அவள் ஏன் இப்படி செய்தாள் என்ற உண்மை வேணுவுக்கும் அர்ச்சனாவுக்கும் நன்கு புரிந்தது. “அதெல்லாம் அப்புறம் கேட்டுக்கலாம் மா. நீங்க போய் அவளுக்கு ஜூஸ் எடுத்துட்டு வாங்க”, என்று சொல்லி அன்னையை அப்புறப் படுத்தியவன் “ரொம்ப தேங்க்ஸ் மா என் தங்கச்சியைக் காப்பாத்தினதுக்கு. இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம். பரீட்சைல பெயில் ஆகிட்டா போல? அதான் இப்படி பண்ணிட்டா. நீ போ மா”, என்று சொல்லி அர்ச்சனாவையும் அங்கிருந்து அனுப்பினான்.

அவள் வெளியே சென்றதும் “ஏன் வினோ இப்படி பண்ணின? அத்தான் இல்லைன்னா இப்படி பண்ணுவியா? உனக்கு நான் அம்மா இல்லையா? இனி இப்படி பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணு? அம்மா கிட்டயும் உண்மையைச் சொல்லக் கூடாது. அப்பா நினைவு வந்துச்சு. அதான் இப்படி பண்ணினேன்னு சொல்லிரு”, என்று சொல்லி அவளிடம் இருந்து சத்தியம் வாங்கிக் கொண்டான்.

இதையெல்லாம் அர்ச்சனா வெளியே நின்று கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். அவள் வெளியே இருக்கிறாள் என்று தெரிந்து தானே வேணுவும் பேசினான். அதைக் கேட்டு தன்னுடைய அறைக்குள் வந்து அமர்ந்தாள். அவள் முகம் இடிந்து போய் இருந்தது.

“என்ன பாப்பா முகம் ஒரு மாதிரி இருக்கு?”, என்று கேட்டாள் மீனாட்சி.

“ஒண்ணும் இல்லை மா, சும்மா தான்”, என்று சொல்லி சமாளித்தாள்.

“சரி நீ ரெஸ்ட் எடு”, என்று சொல்லி விட்டு மீனாட்சி வெளியே செல்ல அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.

தன்னைப் பார்த்ததும் அக்கா என்று சொன்ன வினோதினிக்காகவும் சிஸ்டர் என்று வாய் நிறைய சொல்லும் வேணுவுக்காகவும் அவளுடைய வாழ்க்கையைக் காவு கொடுக்க முடிவு எடுத்தாள்.

அவர்களுக்காக இவ்வளவு யோசித்தவள் பிரபாகரனைப் பற்றி யோசிக்கவே இல்லை. மனதுக்கு பிடித்த பெண் இருந்தாலும் இன்னொரு பெண் பின்னால் போன அவளது தந்தையைப் பார்த்த அவள் பிரபாகரனும் தான் இல்லையென்றால் வினோதினியை ஏற்றுக் கொள்வான் என்று நம்பினாள்.

பிரபாகரனிடம் இந்த பிரச்சனையை சொல்லி இருந்தால் அவன் இதை வேறு மாதிரி சரி செய்திருப்பான் என்று அவளுக்கு தோன்றாமல் போனது தான் விதியோ?

உடனே தன்னுடைய தோழி காயத்ரியை அழைத்தாள். “என்ன கல்யாணப் பொண்ணு? என்ன பண்ணுற? நான் இப்ப தான் அங்க கிளம்பிட்டு இருக்கேன்? இந்த குட்டி தான் கிளம்பாம அழிச்சாட்டியம் பண்ணுது. நானும் குட்டியும் இப்ப அங்க வரோம். உங்க அண்ணா நாளைக்கு வருவாங்க”, என்று சந்தோஷமாக பேசினாள்.

“நீ வர வேண்டாம் காயு”, என்று இறுக்கத்துடன் வந்தது அர்ச்சனாவின் குரல்.

“என்ன டி சொல்ற?”

“இந்த கல்யாணம் நடக்காது”

“என்ன உளறுற லூசு”

“ஆமா காயு. நான் இன்னைக்கு நைட் உன் வீட்டுக்கு வரேன். அங்க வச்சு எல்லாம் பேசிக்கலாம். எல்லாம் அங்க வந்து சொல்றேன். இப்ப யார்க் கிட்டயும் இதைப் பத்தி பேசாத. அப்புறம் அண்ணா கிட்ட சொல்லி எனக்கு வெளியூர்ல ஏதாவது ஜாப்க்கு ஏற்பாடு பண்ணச் சொல்லு. அப்புறம் பன்னிரெண்டு மணிக்கு பிரபா வீட்டு அட்ரஸ்க்கு ஒரு கார் அனுப்பச் சொல்லு. கார் டிரைவரை தெருமுனைல வெயிட் பண்ணச் சொல்லு. எவ்வளவு பணம் வேணும்னாலும் கொடுத்துறேன்”

“என்ன டி என்னல்லாமோ சொல்ற?”

“செய்வியா மாட்டியா? முடியாதுன்னா சொல்லு, நான் வேற யார்க் கிட்டயாவது கேட்டுக்குறேன்”

“நீ அவசரப் படுற அர்ச்சனா. அவசரத்துல தப்பான முடிவு எடுக்காத. என்ன நடந்திருந்தாலும் பொறுமையா யோசி”

“எல்லாம் யோசிச்சிட்டேன். நான் சொன்னதை செய். உன்னால செய்ய முடியலைன்னா சொல்லிடு”

“ஏய் உனக்கு நான் ஹெல்ப் பண்ணாம யாரு டி பண்ணுவா? உன் வாழ்க்கையை நினைச்சு தான் அப்படிச் சொன்னேன். சரி நான் எல்லாம் ஏற்பாடு பண்ணுறேன். நீ ரிலாக்சா இரு. அப்புறம் நைட் வரைக்கும் கொஞ்சம் பொறுமையா யோசி”, என்று சொல்லி போனை வைத்தாள்.

காதல் தொடரும்….

Advertisement