Advertisement

“இருக்காதா பிரபா? அவங்க உங்க அம்மா. அவங்க என்னைப் பாத்து முறைச்சிட்டு போறதும் உங்க தங்கச்சி என்னைக் கண்டுக்காம போறதும் எனக்கு கஷ்டமா இருக்கு”

“புரியுது அர்ச்சனா. அம்மா முதல் நாள் உன் கிட்ட நல்லா தானே பேசினாங்க? அதுக்கப்புறம் அவங்க மைண்ட் அப்படியே மாறிருச்சு. கூடிய சீக்கிரம் அவங்க உன்னைப் புரிஞ்சிப்பாங்க”, என்று சொன்னவன் அவளை தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.

தோய்ந்து கிடந்த அர்ச்சனாவின் கரங்கள் தன்னால் மேல் எழும்பி அவனை தழுவிக் கொண்டன. தன்னிடம் அடைக்கலமாகி இருந்தவளின் தோளில் முகம் புதைத்துக் கொண்டான் பிரபாகரன்.

அர்ச்சனாவுக்கு இருந்த அதே கவலை மீனாட்சிக்கும் இருந்தது. “இந்த அம்மா என்னோட மகளை இந்த வீட்ல நிம்மதியா வாழ விடுமா?”, என்ற பயம் உள்ளுக்குள் அரித்துக் கொண்டே இருந்தது. சீதா அவளிடம் நன்கு பேசினாலும் பெண்ணுக்கு மாமியாராக வரப் போவது யசோதா தானே? அர்ச்சனா முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் யசோதா முகத்தில் வந்து போகும் கோபத்தைக் பார்க்கும் போது இந்த திருமணம் சரி தானா என்ற கேள்வி வந்து போகும்.

ஆனால் அவளால் இதை யாரிடமும் சொல்ல முடியவில்லை. அவள் சொல்ல முடிந்த ஒரே ஆள் அர்ச்சனா தான். ஆனால் அவளோ பிரபாகரனைப் பற்றிய கனவுடன் சுற்றிக் கொண்டிருக்க மகளின் மனதை நோகடிக்க அந்த தாயால் முடியவில்லை. கடவுளிடம் வேண்டுவதை தவிர அவளுக்கு வேறு ஒன்றும் வழி தெரியாமல் போனது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் இருக்க வேணுகோபாலோ தன்னால் இந்த திருமணத்தை நிறுத்த முடியாதா என்று மண்டை காய்ந்து போய் இருந்தான். அதே நேரம் மஞ்சுளாவும் இப்படி தான் இருந்தாள்.

கண் முன்னால் அந்த மீனாட்சியும் அர்ச்சனாவும் சந்தோசமாக இருப்பது அவளுக்கு பிடிக்கவே இல்லை. அவளுடைய ஒரே ஒரு ஆறுதல் மஞ்சுளாவிடம் யசோதா நன்றாக பேசுவது தான்.

இப்படியே அன்றைய நாள் கடக்க திருமணத்துக்கு முந்தைய நாள் தன்னுடைய அன்னையைத் தேடி சீதாவின் அறைக்குச் சென்றான் வேணுகோபால்.

அங்கே ஒருவரும் இல்லை. “இந்த அம்மா எங்க போச்சு?”, என்று எண்ணி அவன் அங்கிருந்து திரும்பும் போது அவன் கண்ணில் ஒரு பேப்பர் விழ அதன் அருகில் சென்றான்.

அங்கே இருந்தது வினோதினியின் நோட். இதுல என்ன சிவப்பா இருக்கு என்று எண்ணி அதைப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.  அந்த பேப்பரில் ஒரு ஹார்ட் வரைந்து அதனுள் பிரபா வெட்ஸ் வினோதினி என்று எழுதி வைத்திருந்தாள்.

தங்கையின் மனதை அறிந்தவன் அதிர்ந்து போனான். இது வரை அவனுக்கு வினோதினியின் மனது தெரியாது. இப்போதோ தெரிந்ததும் திகைப்பாக இருந்தது.

“இவ பிரபா மச்சானை லவ் பண்ணினாளா? அதான் ஒரு மார்கமா சுத்திட்டு இருந்தாளா? ஆனா இப்ப சரியாகிட்டாளே எப்படி? அதுவும் அந்த அர்ச்சனா கூட ஒட்டிப் பிறந்த ரெட்டை மாதிரி சுத்திக்கிட்டு இருக்கா”, என்று எண்ணியவன் சிறிது நேரம் அமைதியாக அங்கயே அமர்ந்து விட்டான்.

இதை வைத்து என்ன செய்யலாம் என்ற யோசனை ஓடியாது. சிறிது நேரத்தில் அவன் மனதில் ஒரு எண்ணம் வர அவன் முகம் மலர்ந்தது. மனதில் எழுந்த திட்டத்தை யாருக்கும் தெரியாமல் அரங்கேற்றக் காத்திருந்தான். வினோதினியை வைத்து இந்த திருமணத்தை நிறுத்த முடிவு எடுத்தான். அது நடக்குமா என்ற பெரிய கேள்வி எழுந்தது தான். ஆனால் கல்லை எறிவோம் மாங்காய் விழுந்தால் நல்லது தானே என்று எண்ணிக் கொண்டான்.

தங்கையை வைத்து இப்படி ஒரு காரியம் செய்கிறோமே என்ற குற்ற உணர்வு எல்லாம் அவனுக்கு இல்லை. அவனைப் பொறுத்த வரைக்கும் பிரபாகரன் சந்தோஷமாக இருக்க கூடாது. அவனுக்கு திருமணம் நடக்க கூடாது. அவன் ஆபீஸில் இருந்தும் வெளியேற வேண்டும். வினோதினிக்கும் அகிலனுக்கும் திருமணம் நடக்க வேண்டும். அவனும் அவன் தங்கையும் சேர்ந்து இந்த வீட்டை ஆள வேண்டும். அதற்கு வினோதினி மற்றும் அர்ச்சனா இடையே இருக்கும் உறவை பகடைக்காயாக வைக்க முடிவு எடுத்தான்.

அவனுக்கு தெரிந்த வரையில் வினோதினியின் காதல் ஒரு நமத்துப் போன பட்டாசு. பிரபாகரன் கிடைக்க மாட்டான் என்று தெரிந்து வினோதினி மனதை மாற்றிக் கொண்டாள் என்று அவனுக்கு புரிந்தது. அதனால் அந்த பட்டாசை காய வைத்து எரிய வைக்க எண்ணினான். அவள் காதலை மீண்டும் தூண்டி விட முடிவு எடுத்தான்.

தன் திட்டத்துக்கு அவன் சரியான நேரம் பார்த்துக் கொண்டிருக்க சரியாக அன்று மாலை நான்கு மணிக்கு அர்ச்சனா தோட்டத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தான்.

இது தான் சரியான நேரம் என்று எண்ணி அவள் பின் பக்கம் நின்றான். இருவருக்கும் இடையே புதர்ச் செடி இருந்ததால் அவள் அவனைப் பார்க்க வில்லை. ஆனால் அவள் அங்கே அமர்ந்திருக்கிறாள் என்று தெரிந்தே தன்னுடைய போனை எடுத்த வேணு வினோதினியை அழைத்தான்.

அதை எடுத்தவள் “என்ன அண்ணா வீட்ல இருந்துட்டே கூப்பிடுற?”, என்று கேட்டாள்.

“பிரபா மச்சான் பத்தி ஒரு முக்கியமான விஷயம் பேசணும். தோட்டத்துக்கு வா, சீக்கிரம்”, என்று அழைத்தான்.

அதைக் கேட்டு அர்ச்சனாவும் திகைத்து அமர்ந்திருந்தாள். அவன் வேறு ஏதாவது சொல்லி இருந்தால் அதை பெரிதாக எடுத்திருக்க மாட்டாள். பிரபா பெயர் வரவும் “ஏன் பிரபா பத்தி இந்த அண்ணா பேசப் போறாங்க?”, என்று எண்ணி அமர்ந்திருந்தாள். அவனுக்கும் அது தானே வேண்டும்.

சற்று நேரத்தில் அங்கே வந்த வினோதினி “என்ன அண்ணா? எதுக்கு கூப்பிட்ட? அத்தான் பத்தி என்ன பேசணும்?”, என்று கேட்டாள். அவளும் அர்ச்சனாவைப் பார்க்க வில்லை.

“நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க வினோ?”, என்று கோபமாக கேட்டான் வேணு.

“என்ன அண்ணா?”

“நீ பிரபா மச்சானை லவ் பண்ணுறியா?”, என்று கேட்டதும் இரண்டு பெண்களும் அதிர்ந்து போனார்கள்.

தன்னைக் தவிர இது மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று நம்பிய வினோதினி தன்னுடைய தடுமாற்றத்தை மறைத்து “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை அண்ணா. நீ உளறாத”, என்றாள்.

“என்ன நடிக்கிறியா வினோ? நான் எல்லாம் பாத்துட்டேன்”, என்று சொன்னவன் அந்த பேப்பரை அவள் முன்னால் காட்டி அதை சரியாக அர்ச்சனா பக்கம் தூக்கிப் போட்டான். அதை எடுத்துப் பார்த்த அர்ச்சனா அதிர்ந்து போனாள்.

“இப்ப என்ன சொல்லப் போற வினோ? பேனாவே தன்னால இப்படி எழுதுச்சா?”, என்று வேணு கேட்டதும் “அண்ணா, சத்தம் போடாத. யாருக்கும் கேட்டுறப் போகுது”, என்றாள் வினோதினி.

“எப்படி சத்தம் போடாம இருக்குறதாம்? நீ பண்ணினது சின்ன விஷயமா?”

“நான் அத்தானை விரும்பினது தப்பாண்ணா?”

“தப்பு தான். நம்ம நிலைமை என்ன? அவங்க தராதரம் என்ன? நாம அவங்க கிட்ட அடைக்கலமா வந்துருக்கோம். அப்படின்னா நாம ஒதுங்கித் தானே போகணும்? நான் வர்ஷினியைக் கல்யாணம் பண்ணினது வேற கதை. அவ கிட்ட வந்தாலே நான் தலை குனிஞ்சு போயிருவேன். என் நல்ல மனசு புரிஞ்சு மாமா என்னை அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. ஆனா உனக்கும் அப்படியே நடக்குமா?”

“நடக்காதுன்னு தான் தெரிஞ்சிருச்சே? இப்ப நான் என் மனசை மாத்திக்கிட்டேன். நான் பிரபா அத்தானை மறக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன் அண்ணா”

“என்ன வினோ சொல்ற?”

“ஆமாண்ணா. நினைச்சது கிடைக்கலைன்னா அதையே நினைச்சு காலத்தை ஓட்ட முடியுமா? என் விருப்பம் யாருக்காவது தெரிஞ்சா என்ன நினைப்பாங்க? அத்தான் என் முகத்துல கூட முழிக்க மாட்டார். அது மட்டும் இல்லை. அர்ச்சனா அக்கா ரொம்ப நல்லவங்க. டாக்டர்னு பந்தா துளி கூட இல்லை. அவங்களை தான் அத்தானுக்கு ரொம்ப பிடிக்கும். நான் தான் எல்லாம் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்”

“என்ன உன் காதலை விட்டுக் கொடுத்துட்டியா வினோ?”

“வேற என்னண்ணா பண்ணச் சொல்ற? நான் போய் அத்தான் கிட்ட உங்களை விரும்புறேன்னு சொன்னா அத்தான் ஏத்துக்கப் போறாங்களா? இல்லை தானே? அப்புறம் அதை மறக்குறது தான் எனக்கு நல்லது”

“உண்மையிலே மச்சானை மறந்துட்டு உன்னால சந்தோஷமா இருக்க முடியுமா வினோ?”

“எப்படிண்ணா முடியும்? விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து நான் அவரை விரும்புறேன். அவங்க இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு கனவு கண்டுருக்கேன். அத்தையும் மாமாவும் என்னைத் தான் இந்த வீட்டு மருமகளா ஆக்குவாங்கன்னு ரொம்ப ஆசைப் பட்டுருக்கேன். ஆனா எல்லாமே கனவுன்னு இப்ப புரியுதுண்ணா”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கி விட்டது.

“உனக்காக நான் இந்த கல்யாணத்தை நிறுத்துறேன் வினோ”

“அது தப்பு அண்ணா. அத்தானும் அர்ச்சனா அக்காவும் விரும்புறாங்க”

“அது காதலே இல்லை வினோ. ரெண்டு பேர் வீட்ல பேசினதும் கல்யாணம் பத்தி யோசிச்சிருப்பாங்க. ஆனா உன்னோடது இத்தனை வருஷ காதல் வினோ”

“பரவால்லண்ணா, கடவுள் அவங்க ரெண்டு பேருக்கும் தான் முடிச்சு போட்டுருக்காரோ என்னவோ? இந்த பேச்சை விடேன். நானே என் மனசை கஷ்டப் பட்டு சரி பண்ணிருக்கேன். நீ மறுபடியும் அதையே பேசி கஷ்டப் படுத்தாதே அண்ணா. பிளீஸ்”, என்று சொல்ல “அது எப்படி விடுவேன்?”, என்று மனதில் எண்ணிக் கொண்டான் வேணு.

“எனக்கு புரியலை வினோ. நீ எப்படி மனசுல இவ்வளவு காதலை வச்சிக்கிட்டு இந்த வீட்ல இருப்ப? அவங்க கல்யாணத்துக்கு அப்புறம் இதே வீட்ல தான் ஒண்ணா வாழ்வாங்க. அதை பாத்து உன்னால சந்தோஷப் பட முடியுமா?”

“சந்தோஷப் பட முடியுமான்னு தெரியலை. ஆனா என்னை மாத்திக்க நான் முயற்சி பண்ணுவேன் அண்ணா. ஆனாலும் இந்த கல்யாணம் முடிஞ்ச உடனே என்னை ஹாஸ்டல்க்கு அனுப்பிறியா?”

“ஏது? கால் மணி நேரத்துல இருக்குற காலேஜ்க்கு ஹாஸ்டலா? தப்பிக்க பாக்குறியா வினோ?”

“ஆமாண்ணா. எனக்கும் மனசு மாற கொஞ்சம் டைம் வேணும்ல? இங்கயே இருந்தா என் கண் பட்டே அவங்க நல்லா வாழாம போயிருவாங்க. என்னை ஹாஸ்டல்ல விடு. படிச்சதும் வேற ஊர்ல ஏதாவது வேலை வாங்கிக் கொடு. என் வாழ்க்கை அப்படியே போயிரும்”

“சரி நீ போ”, என்று சொன்னதும் திரும்பி நடந்தவள் ஒரு நொடி நின்று அவனைத் திரும்பி பார்த்து “அண்ணா, நம்ம அப்பா இருந்திருந்தா நல்லா இருந்துருக்கும்ல? அப்பா இருந்திருந்தா அத்தைக் கிட்ட எனக்காக பேசி அத்தான் கூட கல்யாணம் பேசி வச்சிருப்பாங்கல்ல? அத்தானைப் பாக்கும் போதெல்லாம் ஒரு மாதிரி மனசை பிசையுதுண்ணா. ஆனா அர்ச்சனா அக்காவைப் பாக்கும் போது எனக்குள்ள குற்ற உணர்வா இருக்கு”, என்றாள்.

Advertisement