Advertisement

அத்தியாயம்

என்னைத் தாக்கும் மின்சாரம்

உந்தன் விழி வீச்சில்!!!

“அப்ப என் மேல ஆசை இல்லைன்னு சொல்ற?”, என்று பிரபாகரன் புருவம் உயர்த்தி கேட்க “இல்லையே?”, என்று சிரித்தாள்.

“அப்படியா? இதை தெரிஞ்சிக்காம உன்னை விடக் கூடாதே”, என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் வந்தான். அவன் நெருக்கம் அதிகமாவதை உணர்ந்து “பிரபா வேண்டாம்”, என்ற படி பின்னால் நகர்ந்தாள். அப்போதும் அவன் நிற்காமல் அவளை நோக்கி நடக்க அவளுக்கு படபடப்பு வந்தது.

பின்னே நகர்ந்தவள் கை பிடிச் சுவர் தட்ட நின்றாள். அதற்கு மேல் நகர இடமில்லை என்று திகைத்த படி நிற்க “மாட்டிக்கிட்டியா?”, என்று சொல்லி புன்னகைத்தான்.

பக்கவாட்டில் நகரலாம் என்று அவள் எண்ணும் போதே அவளுக்கு இரு புறமும் அரணாக தன்னுடைய கைகளை வைத்தான். அகப்பட்ட உணர்வுடன் அவள் தவிப்புடன் நிற்க அவனுக்கு சிரிப்பாக வந்தது.

“சொல்லு டி, என் மேல ஆசை இல்லையா?”, என்று அவன் அழுத்தமாக கேட்க அவன் கேள்வியே அவள் அடி வயிற்றில் பட்டாம் பூச்சியை பறக்க வைத்தது.

“என்ன இது இப்படி பண்ணுறீங்க? வழி விடுங்க பிரபா”, என்று முணுமுணுத்தாள். அவனது மூச்சுக் காற்று அவள் முகம் உரசுகையில் அவளால் அவனின் இந்த அருகாமையை தாங்க முடிய வில்லை. அவளுக்குள் ஹார்மோன்களின் அணிவகுப்பு வேகமாக நடக்க ஆரம்பித்தது.

அக்கம் பக்கத்தில் யாருமில்லாத தனிமையும், இருள் சூழ்ந்த ஏகாந்தமும் அவனுடைய அருகாமையும் அவளை பாடாய்ப் படுத்தியது.

“நான் இந்த நேரத்தில் இங்க வந்திருக்க கூடாது”, என்று காலம் கடந்து யோசித்தாள்.

“இப்ப உங்களுக்கு என்ன தான் வேணும்?”

“என் மேல ஆசை இல்லைன்னு சொன்னல்ல? அதை தான் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்”

“ஐயோ, நான் பொய் சொன்னேன் போதுமா? உங்க மேல கடல் அளவுக்கு ஆசை இருக்கு. அது உங்களுக்கும் தெரிஞ்சு தான விளையாடுறீங்க? என்னை விடுங்க”, என்று அவள் சொல்லியதும் அவன் கண்களில் வந்த மின்னலில் அவன் முகம் பார்க்க முடியாமல் தரையைப் பார்த்தாள்.

“அர்ச்சனா”, என்று மென்மையாக அழைத்தான்.

“ம்ம்‌”

“நிமிந்து என்னைப் பார்”

“பிளீஸ் வேண்டாமே”

“என்னை இப்ப பார் டி, உன் கண்ணுல இருக்குற வெக்கத்தை நான் பாக்கணும்”, என்று சொன்னவனின் விரல்கள் அவளுடைய நாடியில் கை வைத்து அவள் முகத்தை நிமிர்த்த அடுத்த நொடி அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவளை வெற்றி கொண்ட மமதையுடன் அவன் கரங்களும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டது. அவளது கூந்தலில் முகம் புதைத்து அதில் இருந்த மல்லிகையின் வாசனையைப் முகர்ந்தான்.

அவளை தன்னிடம் இருந்து விலக்கி தரையில் அமர்ந்தவன் அவளையும் தன்னை நோக்கி இழுத்தான். அவன் மடி மீது விழுந்தவளை அவன் கரம் தன்னை நோக்கி இழுக்க அவள் கரங்கள் அவன் கழுத்தில் மாலையாகின.

அதற்கு மேல் முடியாமல் அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவளது இதழோடு தன் இதழைப் பதிக்க தன் வசம் இழந்து மயங்கிப் போனாள்.

சிறிது நேரம் கழித்து விலகியவன் அவளைக் காதலாக பார்க்க அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள் அர்ச்சனா.

அவன் விரல் அவளுடைய நெற்றியில் இருந்து பயணித்து அவள் கண்கள் நாசி உதடு என்று பயணிக்க அவன் கரத்தை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

இந்த இரவையும் தனிமையையும் எப்போதுமே மறக்க முடியாது என்று இருவருக்குமே புரிந்தது. அந்த ஏகாந்தத்தை ரசித்தார்கள். அவன் மடியில் காலம் முழுக்க துயில் கொள்ள வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. வானில் பவனி வந்த நிலவு இருவரையும் வேடிக்கை பார்த்தது.

“இப்ப சொல்லு டி நான் வருவேன்னு நினைச்சு தானே மேல வந்த?”, என்று கர்வத்துடன் கேட்டான்.

“அதான் உங்களுக்கு தெரிஞ்சிருக்கே. அப்புறம் என்ன? ரொம்ப வேலையா பிரபா? ரொம்ப டயர்டா தெரியுறீங்க?”, என்று கேட்க அதற்கு பதில் சொன்னான். இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் அஞ்சலி மற்றும் அகிலன் இடையே ஒரு தனி டிராக் ஓடிக் கொண்டிருந்தது. அர்ச்சனாவின் தங்கை என்று எண்ணி அவளிடம் சாதாரணமாக பேசியவன் அவள் அழகில் வசீகரிக்கப் பட்டான்.

அவன் அவளிடம் சற்று ஆர்வமாக பேச ஆரம்பிக்க அவளோ உன்னைப் போல எத்தனை பேரை பாத்துருக்கேன் என்னும் விதமாக நழுவிக் கொண்டிருந்தாள். அவன் ஆசையாக பேச முயல்வதையும் அவள் தவிர்ப்பதையும் இரண்டு பேர் பார்த்தார்கள். அதில் ஒன்று பிரபாகரன்.

தன்னுடைய தம்பியின் பார்வையை வைத்தே அவனுக்கு அஞ்சலியை பிடித்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டான். தம்பியின் ஆசையை நிறைவேற்ற அவன் மனம் விளைந்தது. அது மட்டும் இல்லாமல் அஞ்சலியே அகிலனுக்கு மனைவியாக வந்தால் அர்ச்சனா மற்றும் அஞ்சலி இடையே எந்த பாகுபாடும் வராது என்று அவன் உள்ளம் நம்பியது.

அதனால் அதைப் பற்றி சக்கரவர்த்தியிடம் அவன் சொல்ல “முதல்ல உன் கல்யாணம் முடியட்டும் பிரபா. அப்புறம் அகிலன் கல்யாணம் பத்தி சொக்கலிங்கத்துக்கிட்ட பேசுறேன். அவன் என்ன மாட்டேன்னா சொல்லப் போறான்? இப்ப சொல்லி எந்த குழப்பமும் வேண்டாம்”, என்று சம்மதம் சொன்னார்.

அதை போல அகிலனிடம் சரியாக பேசாமல் அஞ்சலி செல்வதைக் கண்ட இன்னொரு ஆள் மஞ்சுளா தான். தனிமையில் மகளை அழைத்து “என்ன டி நடக்குது?”, என்று கேட்டாள்..

“நான் ஒண்ணும் பண்ணலை மா. அவன் தான் சும்மா சும்மா ஜூஸ் வேணுமா காபி வேணுமான்னு பேச வரான்”

“அவன் பேச வந்தா நீ எதுக்கு முகத்தை திருப்பிட்டு போற?”

“அம்மா?”

“அம்மா தான். இங்க பாரு டி. இது எவ்வளவு பெரிய குடும்பம். இந்த வீட்டுக்கு அர்ச்சனா மருமகளா வரப் போறான்னு நானே பொறாமைல வெந்து போய் இருக்கேன். இப்ப கடவுள் அருளால சின்னவர் பார்வை உன் மேல விழுந்துருக்கு. இதை அப்படியே யூஸ் பண்ணிக்கணும் டி?”

“என்ன மா சொல்ற? என்னையும் இந்த வீட்டுக்கு மருமகளா வரச் சொல்றியா? என்னால அந்த அர்ச்சனா வாழுற வீட்ல எல்லாம் வாழ முடியாது. தினமும் அவ முகத்தை பாத்துட்டு… அப்பப்பா அந்த கொடுமை எல்லாம் எனக்கு வேண்டாம்”

“புரியாம பேசாத அஞ்சலி? அந்த அர்ச்சனா இங்க வாழ்ந்தா தானே?”

“என்ன மா சொல்ற?”

“நாம அவ கல்யாணத்தை நிப்பாட்டலைன்னாலும் அதுக்கப்புறம் அந்த அர்ச்சனாவை இந்த வீட்ல இருந்து விரட்டனும்னா நீ இந்த வீட்டுக்கு மருமகளா மாறனும்”

“எப்படி மா?”

“நீ அகிலனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த யசோதா உன்னைத் தான் கொண்டாடுவா. அவளுக்கு அர்ச்சனாவை கண்டாலே பிடிக்காது. இதை நாம சரியா பயன்படுத்திக்கணும். உங்க அப்பா கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பார். நீ கல்யாணம் முடிஞ்சதும் உன் மாமியாரைக் கைக்குள்ள போட்டுகிட்டு அர்ச்சனாவை ஈஸியா இந்த வீட்டை விட்டு விரட்டலாம். அப்ப தான் மீனாட்சி இடிஞ்சு போய் உக்காருறதைப் பாக்க முடியும். நீ அந்த பையன் கிட்ட நல்ல விதமாவே பேசு அஞ்சலி. உன் அப்பா இந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா தடை சொல்ல மாட்டார்”, என்று சொல்ல மகளும் கேட்டுக் கொண்டாள்.

அதற்கு மேல் அகிலன் மெனக்கெட வேண்டியது இல்லை. “என்னங்க ஜூஸ் வேணுமா?”, என்று அவன் கேட்ட படி வந்தால் “சாப்பிடுற டைம் ஜூசா? எனக்கு ரொம்ப பசிக்குது”, என்றாள் அஞ்சலி.

“அப்படின்னா வாங்க சாப்பிடலாம்”, என்று சொல்லி அவன் அவளை அழைத்துச் சென்று உணவு ஏற்பாடு செய்து கொடுத்தால் அவளோ “தனியா சாப்பிட ஒரு மாதிரி இருக்கு. நீங்களும் வாங்களேன்”, என்று அழைத்தாள்.

கண்கள் மின்ன அவளுடன் அமர்ந்தவன் பேசி பேசியே அவள் வலையில் விழுந்தான். அவளையும் காதலில் விழ வைத்தான். இருவரும் இரண்டு நாட்களில் காதலைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு முன்னேறி விட்டார்கள்.

அவர்கள் பேசுவதை யசோதாவும் கவனித்தாள். அகிலனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது என்று தெரிந்து கொண்ட யசோதா அஞ்சலியிடம் நல்ல விதமாக பேசினாள். ஆனால் அர்ச்சனாவை ஒதுக்கி வைத்தாள். இதையெல்லாம் பிரபாகரன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

திருமணத்துக்கு ஒரு நாள் இருக்கும் போது பிரபாகரனைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. அவன் வீட்டில் இல்லாததால் அவளை தனிமை வாட்டுவது போல இருந்தது. அதுவும் யசோதா காட்டிய பாராமுகம் அவளை இன்னும் வருத்தியது.

மற்ற யாராக இருந்தாலும் அர்ச்சனாவும் முகம் திருப்பி சென்றிருப்பாள். ஆனால் பிரபாவின் அன்னையிடம் அவளால் அப்படி நடக்க முடிய வில்லை. அவனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவனைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்க எண்ணினாள். விளைவு மனம் காயப் பட்டு நின்றாள். அவளே பேசச் சென்றாலும் யசோதா விலகிச் செல்வது அவளுக்கு வலித்தது.

தனிமையை விரும்பி தோட்டத்துக்கு சென்றாள். அவள் தோட்டத்திற்கு போவதைப் பார்த்த படியே வீட்டுக்குள் வந்த பிரபாகரன் தந்தையிடம் சில விஷயம் பேசி விட்டு வெளியே வந்தான். அவன் கண்கள் அவளைத் தேடிச் சுழன்றது.

“இங்கே தானே வந்தா?”, என்று எண்ணி அவளைத் தேடினான். அனைவரும் உள்ளே இருக்க இவர்களை யாரும் கவனிக்க வில்லை. மீனாட்சியிடம் தோட்டத்துக்கு சென்று விட்டு வருகிறேன் என்று சொன்னதால் அவளும் மகளைத் தேட வில்லை.

பூச்செடிகளின் மறைவில் இருள் சூழ்ந்திருந்த இடத்தில் நின்றவளை கண்டு கொண்டான். கைகளைக் கட்டிக் கொண்டு நின்ற அவளின் காட்சி நிழலோவியம் போல அவன் மனதில் பதிந்தது.

சத்தமில்லாமல் அவளை நெருங்கி அவள் பின்னால் வந்து நின்று அவள் இடையோடு கட்டி அணைத்தான். ஒரு நொடி திடுக்கிட்டவள் அடுத்த நொடி அவன் தான் என்று உணர்ந்து கொண்டாள். தன்னவனின் அருகாமை அவளுக்கு தெரியாதா என்ன? அவளது தனிமை உணர்வு அவளை விட்டுச் சென்றது.

பின் பக்கமாக அவன் நெஞ்சில் சாய்ந்தவள் “திருட்டுப் பூனைக்கு இங்க என்ன வேலை?”, என்று சிரிப்புடன் கேட்டாள். “மயக்குற டி?”, என்று அவள் காதில் உதடு படும் படி உளறினான். அவன் அப்படி பேசியது அவளை கிளர்ச்சிக்குள்ளாக்கியது.

சிறிது நேரம் அப்படியே இருந்து விட்டு அவளைத் தன் பக்கம் திருப்பியவன் “இப்ப சொல்லு. என்ன ஆச்சு?”, என்று கேட்டான்.

“என்ன?… ஒண்ணும் இல்லையே?”

“உன் முகத்தை வச்சே கண்டு பிடிச்சிருவேன் டி. சொல்லு. உன் தலையில என்ன குடையுது?”

“ஒண்ணும் இல்லை பிரபா”

“அம்மா ஏதாவது சொன்னாங்களா?”

“அவங்க தான் பேசுறதே இல்லையே?”, என்று அவள் ஏக்கமாக சொல்ல “அப்ப அது தான் உனக்கு கஷ்டமா இருக்கா?”, என்று கேட்டான்.

Advertisement