பின் அங்கே இருந்து கிளம்பி அவளை கடைக்கு அழைத்துச் சென்றான். அவள் மறுக்க மறுக்க அவளுக்கு தேவையான பொருள்கள், உடைகள், நகைகள் என வாங்கிக் கொடுத்தான்.
“எதுக்கு பிரபா இதெல்லாம்? இவ்வளவு வேண்டாமே?”, என்று மறுத்தாள்.
“நீ ஒரு பொண்ணு அர்ச்சனா. உனக்கு இது புரியாது”, என்று அவன் சொல்ல அவனை குழப்பமாக பார்த்தாள்.
“நான் கேட்டதுக்கும் நீங்க சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்?”, என்று புரியாமல் கேட்டாள்.
“ஒரு பையனுக்கு இந்த உணர்வு வரும் டி. தனக்கு பிடிச்ச பொண்ணுக்கோ பொண்டாட்டிக்கோ தன்னோட சம்பாத்தியதுல எல்லாத்தையும் வாங்கிக் குவிக்கணும்னு. இப்ப நான் வாங்கிக் கொடுக்குறது எனக்கு அவ்வளவு சந்தோஷத்தை தருது. உனக்கு இன்னும் என்ன வேணும்? கேளு வாங்கித் தரேன்”, என்று சொல்ல அவன் காதலில் உருகித் தான் போனாள். அதற்கு பின் அவன் என்ன வாங்கித் தந்தாலும் மறுக்க வில்லை.
“என்ன டி வேண்டாம் வேண்டாம்னு பல்லவி பாடிட்டு இருந்த? இப்ப அமைதியா வர?”, என்று கேட்டு வம்பிழுத்தான்.
“தன்னோட பொண்டாட்டிக்கு வாங்கிக் கொடுக்குறதுல கணவனுக்கு மட்டும் தான் மன நிறைவு வரும்னு இல்லை பிரபா. நீங்க எனக்காக வாங்கிக் கொடுக்குறது எனக்குள்ளயும் அவ்வளவு சந்தோசத்தைக் கொடுக்குது. நான் இப்ப அதை அனுபவிக்கிறேன்”, என்று சொல்ல அவளை மையலுடன் பார்த்தான்.
எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு அவளது வீட்டை நோக்கி காரைச் செலுத்தினான். அவளை வீட்டில் விட்டு விட்டு அவளுடன் சேர்ந்து அவள் வீட்டை, அவளது அறையை சுற்றிப் பார்த்து விட்டு மீனாட்சி கொடுத்த இரவு உணவை முடித்து விட்டே அங்கிருந்து கிளம்பினான்.
திரும்பிப் போகும் போது அவனுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அவன் வாழ்நாளிலே இவ்வளவு ஒரு நிறைவான நாளை உணர்ந்ததே இல்லை. இரவில் அவளை போனில் அழைத்து அந்த நாளைப் பற்றிய உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் போது அந்த நாள் இன்னும் அழகானதாக இருந்தது இருவருக்கும்.
இப்படியே நாட்கள் அழகாக நகர்ந்தது என்று சொல்லலாம். நேரில் அதிகம் சந்திக்க வில்லை என்றாலும் போன் அவர்களின் காதலை வளர்த்தது.
திருமண உடை எடுக்க வேணுகோபால், வினோதினியைத் தவிர மற்ற அனைவரும் சென்றார்கள். வினோதினி காலேஜ் இருக்கிறது என்று சொல்லி தப்பித்துக் கொண்டாள். வேணுவோ நானும் வருவேன் என்று தான் சொன்னான். “நீயும் வந்துட்டா ஆஃபிசை யார் பாத்துக்குவா வேணு? நீ ஆபீஸ் கிளம்பு”, என்று அனுப்பி வைத்தார் சக்கரவர்த்தி. யசோதாவுக்கு செல்ல பிடிக்க வில்லை தான். ஆனால் பிரபாவும் வந்திருந்ததால் யசோதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து கொண்டாள்.
அர்ச்சனா வீட்டில் இருந்து சொக்கலிங்கம், மீனாட்சி, அர்ச்சனா மூவரும் தான் சென்றிருந்தார்கள். மஞ்சுளா மற்றும் அஞ்சலியை சொக்கலிங்கம் அழைக்கவில்லை.
கடையில் வைத்து “மருமகளே, கல்யாணத்துல நீ தான் ஹீரோயின். உனக்கு பிடிச்ச சேலையை எடு”, என்று அர்ச்சனாவிடம் சொன்னார் சக்கரவர்த்தி.
“சரி மாமா”, என்று சொல்லி ஒரு சேலையை தேர்வு செய்தாள். அதைக் கண்ட யசோதா “இதோட விலை ரொம்ப கம்மியா இருக்கு. இது வேண்டாம்”, என்றாள்.
அர்ச்சனா இன்னொரு சேலையைக் காட்டும் போது கலர் நன்றாக இல்லை என்று சொல்லி மறுத்தாள். அர்ச்சனா பாவமாக பிரபாவைப் பார்த்தாள். அவன் தான் பார்த்துக் கொள்வதாக கண்ணைக் காட்டி விட்டு அவள் அருகே வந்து “இங்க இருக்குறதுல உனக்கு பிடிச்ச சேலைல கையை வை”, என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொன்னான்.
அவள் ஒரு சேலையை அவனுக்கு காட்ட அதை கையில் எடுத்தவன் “இப்ப இந்த சேலையை பிடிக்கலைன்னு நீ சொல்லணும்”, என்று முணுமுணுத்தான்.
அவனை அவள் குழப்பமாக பார்க்கும் போதே “இந்த சேலை எடேன் அர்ச்சனா, நல்லா இருக்கு”, என்று அவளிடம் நீட்டினான். ஆனால் அவன் கண்களோ வாங்காதே என்று சொன்னது.
ஒரு நொடி குழம்பி “இது வேண்டாம் பிரபா. நல்லாவே இல்லை”, என்றாள்.
“ஏன் நல்லா இல்லை? நல்லா தான் இருக்கு. இங்க கொடு பிரபா”, என்று சொல்லி அதை வாங்கிப் பார்த்த யசோதா “இது தான் கல்யாணச் சேலை. நான் முடிவு பண்ணிட்டேன்”, என்றாள்.
மகன் மருமகள் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சக்கர்வர்த்தி “நீ சொன்னா சரியா தான் இருக்கும் யசோ. அதையே அர்ச்சனா கட்டிக்குவா”, என்றார்.
அர்ச்சனாவை கெத்தாக ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்றாள் யசோதா. அதைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் அர்ச்சனா. கூடவே பிரபாவின் புத்திசாலித்தனத்தை மெச்சிக் கொண்டாள்.
அதற்கு அடுத்த வாரத்தில் ஒரு நாள்…. அன்று ஞாயிற்று கிழமை என்பதால் அவளது நண்பர்களுக்கு டிரீட் கொடுக்க முடிவு செய்திருந்தாள். அவனிடம் ஏற்கனவே கேட்ட போது அவன் சரி என்று சொன்னதால் அன்று இருவரும் மீனாட்சியிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார்கள்.
சொன்ன நேரத்துக்கு அவர்கள் போன போது அவளது நண்பர்களும் அங்கே வந்திருந்தார்கள். காயத்ரி, விமலா, நான்சி தவிர ஆறு ஆண்கள் அங்கே இருந்தார்கள். அவர்கள் அனைவரிடமும் பிரபா நன்றாக பேசினான்.
அவனுடைய தோரணையிலும் ஆளுமையிலும் அவர்கள் தான் கொஞ்சம் தயங்கி தயங்கிப் பேசினார்கள். கடைசியில் அவன் தான் பில் கட்டினான். அவள் மறுக்க நினைக்கும் போதே கண்ணசைவில் அவளை சரி செய்து விட்டான்.
பின் அவர்கள் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி அவளுடைய வீட்டுக்கு வந்தார்கள். அவள் வீட்டின் முன் காரை நிறுத்தினான். “உள்ள வாங்க”, என்று அழைத்தாள்.
“மணி ஆறு ஆகிருச்சு அர்ச்சனா. நான் கிளம்பனும். கொஞ்சம் வேலை இருக்கு”, என்று மறுத்தான். ஆனாலும் அவன் கண்கள் எதையோ பேசியது.
அது புரியாமல் “சரி போயிட்டு எனக்கு கால் பண்ணுங்க”, என்று சொன்னவள் கார் கதவைத் திறந்து இறங்கப் போக அவள் கரம் பற்றி தடுத்து நிறுத்தினான்.
அவனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு அவன் கண்களில் இருந்த தவிப்பு அப்போது தான் புரிந்தது.
“என்ன ஆச்சு பிரபா?”
“உன்னை விட்டுட்டு போகவே மனசில்லை டி”, என்று அவன் குரல் உருக அவள் கரைந்து போனாள் அவன் காதலில்.
“ரொம்ப நேரம் இறங்காம காருக்குள்ள இருந்தா எல்லாரும் என்ன நினைப்பாங்க? வாங்க வீட்டுக்குள்ள போகலாம்”
“வேண்டாம், இப்ப எனக்கு உன் கூட கிடைக்கிற தனிமை தான் வேணும்”, என்று அவன் சொல்ல அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கு புரியவே இல்லை.
“மதியத்துல இருந்து ஒண்ணா தானே இருந்தோம்?”, என்று அவள் கேட்க அவனுக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை. இன்று முழுவதும் அவள் அருகில் இருந்ததா? உணவு உண்ணும் போது இருவரின் கை கால்கள் உரசிக் கொண்டதா? அவளது அழகா? இல்லை எல்லாமுமா? ஏதோ ஒன்று அவளை ஒரு முறையாவது முத்த மிட மாட்டோமா என்று ஏங்கிப் போனான்.
அதுவும் உணவு உண்ணும் போது “கல்யாணத்துக்கு பிறகு அர்ச்சனா வேலைக்கு வருவாங்களோ என்னவோ? இல்லை சார் பிஸ்னசைப் பாக்க போயிருவாங்களோ?”, என்று வெங்கட் கேள்வி கேட்ட போது “அவர் பிஸ்னஸ் அவருக்கு, என் வேலை எனக்கு. ஆனா பிரபா ஏதாவது உதவி கேட்டா நான் கண்டிப்பா செய்வேன். அப்படி தானே பிரபா?”, என்று கேட்டாள் அர்ச்சனா.
அவளது புன்னகையையும் அவளது உதடுகளையும் வெகு அருகில் கண்டதில் இருந்து அவன் அவனாக இல்லை. அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இப்போது இருவரும் காருக்குள் தனிமையில் தான் இருக்கிறார்கள். ஆனால் அவளை நெருங்க பயமாக இருந்தது. தவறு செய்யும் போது ஒரு பயம் வருமே? அப்படி ஒரு உணர்வு. ஆனால் தவறு என்று தெரிந்தும் அதைச் செய்யாமல் போக அவனுக்கு மனதில்லை.
“சொல்லுங்க பிரபா, மதியத்துல இருந்து உங்க கூட தானே இருந்தேன்?”, என்று மீண்டும் கேட்டாள்.
“அது பத்தலை டி. எனக்கு என்னவோ நான் நானா இல்லைன்னு தோணுது”
“அதான் தெரியுதே. நீங்க நீங்களா இல்லை? என்னமோ யோசிக்கிறீங்க? ஆனா என்னனு சொல்ல மாட்டுக்கீங்க. முதல்ல நீங்க வீட்டுக்குள்ள வாங்க. கொஞ்ச நேரம் இருந்துட்டு போங்க. அப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கும். பிளீஸ் வாங்க”, என்று அழைத்தாள்.
“வேலை இருக்கு”, என்று சொல்லி மறுத்தாலும் அவன் முகத்தில் எதுவோ இருந்தது.
“அப்படின்னா கிளம்புங்க”, என்று அவள் சொல்ல “என்னால முடியலை டி”, என்று சொன்னான் அவன். அதைக் கேட்டு அவளுக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை.
“பத்து நிமிசத்துல ஒண்ணும் ஆகிறாது. நீங்க உள்ள வாங்க. உங்களை இப்படியே அனுப்பினா என்னால நிம்மதியா இருக்க முடியாது”, என்று சொல்லி அவனை உள்ளே அழைத்தாள்.