Advertisement

அவனும் வலக் கையை எடுத்து அவளுடைய தலையை ஒரு முறை வருடி விட்டு கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான். இந்த நிமிடம் இருவருக்கும் நிறைவாக இருந்தது. ஆண்டாண்டு காலம் ஒன்றாக வாழ்ந்தது போன்ற உணர்வு எழுந்தது இருவருக்கும்.

ஒரு இடத்தில் கார் நின்றதும் அவன் தோளில் இருந்து விலகி கண்களைத் திறந்து பார்த்தாள் அர்ச்சனா. “பிரபா சீ புட்ஸ் பிரைவேட் லிமிட்டேட்”, என்ற பெயர் பலகை இருந்தது.

“உங்க பேக்டரிக்கா வந்துருக்கோம்?”, என்று கேட்டாள் அர்ச்சனா. அந்த இடத்தைப் பார்த்து அவள் கண்கள் விரிந்தது.

“ஆமா, பேர் பாத்தா தெரியலையா? ஆனா அது என் பேர் இல்லை. என் தாத்தா பேர் பிரபாகரன். அவர் ஆரம்பிச்ச கம்பெனி. இப்ப என்னோட கண்ட்ரோல். சரி உள்ள போகலாமா?”

“போகலாம் பிரபா. உள்ள என்ன வேலை நடக்கும்?”

“நீ உயிரோட இருக்குற மனுசனுக்கே வைத்தியம் பாக்குற? இங்க எல்லாம் செத்த மீன்களும் நண்டுகளும் தான் இருக்கும். எனக்கு உன்னை இங்க கூட்டிட்டு வரணும்னு தோணுச்சு. நான் என்ன தொழில் பண்ணுறேன்னு உனக்கு தெரியணும்ல அதான். சரி வா உள்ள போகலாம்”, என்று அழைத்தான்.

“நான் இங்க வந்தா உங்க வீட்ல ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?”

“ஏய் நீ என்னோட பொண்டாட்டி டி. உன்னை நான் கூட்டிட்டு சுத்துனா யார் என்ன சொல்ல முடியும்?”, என்று அவன் பட்டென்று கேட்க அவள் முகம் சிவந்தது.

அங்கே இருந்த செக்யூரிட்டி அவனுக்கு விரைப்பாக சல்யூட் வைக்க அதை அங்கீகரித்தவன் அவளை உள்ளே அழைத்துச் சென்றான். அந்த பறந்து விரிந்த இடத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டிடங்கள் இருந்தன.

“அந்த பில்டிங்க்ல நண்டு, அப்புறம் இங்க இறால், அதோ அங்க இருக்குறது எல்லாம் மீன். எல்லாம் தனி தனி யூனிட்டா இருக்கும்”, என்று ஒவ்வொன்றையும் அவளுக்கு சொல்லிக் கொண்டே வந்தான்.

“உள்ளே போகணும் போல இருக்கு? போகலாமா? அங்க என்ன நடக்குதுன்னு பாக்கணும்?”

“என்ன நடக்கும்? மீன், நண்டு, இறால்ல இருக்குற சதையை எல்லாம் எடுத்து கிளீன் பண்ணி டின்ல அடைச்சு வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் பண்ணுறோம். உள்ள கொஞ்சம் கெட்ட வாடை வரும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. வா போகலாம்”

“டின்ல அடைச்சா கெட்டுப் போயிறாதா பிரபா?”

“ஐஸ்ல தானே வச்சிருப்போம்?”

“ரொம்ப நாள் பிரிஸெர்வ் பண்ணினா உடம்புக்கு கேடு தானே? கண்டிப்பா பிரிசேர்வேட்டிவ் வேற சேப்பீங்க?”, என்று ஒரு டாக்டராக கவலைப் பட்டு கேட்டாள்.

அவள் சமூக அக்கறையைக் கண்டு புன்னகைத்தவன் “டின்ல அடைச்ச லோட் எல்லாம் உடனே கப்பல் மூலமா கிளம்பிரும். ரொம்ப நாள் வச்சிருக்க மாட்டோம். அப்புறம் இது மட்டும் தான் உடம்புக்கு கேடுன்னு இல்லை அர்ச்சனா. நம்ம சாப்பிடுற எல்லாமே கிட்டதட்ட விசமா தான் இருக்கு. ஆர்கானிக் பழம், காய்கறி கூட இப்ப எல்லாம் கிடைக்கிறது கஷ்டம் தான்”, என்று சொல்ல உடனே ஆம் என்று ஒத்துக் கொண்டாள்.

ஒரு குடவுன் மாதிரி இருந்த பிரமாண்டமான அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான். உள்ளே சென்றதும் ஜில்லென்ற குளிர் அவள் மேனியைத் தாக்கியது. லேசாக கெட்ட வாடையும் வந்தது.

“ஐயோ குளிருது”, என்று கைகளை இறுக கட்டிக் கொண்டாள். “கொஞ்சம் குளிரத் தான் செய்யும். சரி உள்ள போகணும். இந்த கோர்ட் போட்டுக்கோ. தலைக்கு இந்த கேப் வச்சிக்கோ”, என்று சொல்லி கொடுத்தான்.

அனைத்தையும் மாட்டியவள் உள்ளே நுழைந்தாள். அங்கே பல பெண்கள் வரிசையாக அமர்ந்து நண்டின் சதையை தனியே எடுத்துக் கொண்டிருந்தனர். அதற்காக அவர்கள் வைத்திருந்த பொருளே வித்தியாசமாக இருந்தது.

அனைவரும் அவனைக் கண்டு வணக்கம் தெரிவிக்க அவனும் பதில் வணக்கம் தெரிவித்தான். அவனது திருமண விவரம் அனைவருக்கும் தெரியும் என்பதால் அனைவரும் அர்ச்சனாவின் அழகை புகழ்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

அர்ச்சனாவும் அனைவரையும் கண்டு புன்னகைத்து விட்டு அவனுடன் நடந்தாள். அந்த பெரிய அறையின் ஓரத்தில் ஒரு கதவு இருக்க அதை திறந்தான்.

“வா உள்ள போயிட்டு சீக்கிரம் வெளிய வந்துறலாம்”, என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றான்.

உள்ளே சென்றதும் அர்ச்சனா திகைத்து விட்டாள். வெளியே இருந்ததெல்லாம் குளிரே இல்லை என்னும் விதத்தில் இருந்தது குளிர்.

அவள் அந்த அறையையும் இருட்டையும் குளிரையும் கண்டு திகைத்து விட்டாள் என்று சொல்லலாம். “அதோ அங்க தான் எல்லாம் ஸ்டோர் பண்ணி வைப்போம். இன்னைக்கு காலைல இங்க வைக்கிறது இன்னைக்கு நைட் எக்போர்ட் ஆகிருக்கும்., நைட் வைக்கிறது காலைல போயிருக்கும்”, என்று சொல்லி அவள் கை பற்றி உள்ளே அழைத்துச் செல்ல “பிரபா பிளீஸ் வெளிய போகலாம்”, என்றாள்.

அவளைக் கண்டு சிரித்தவன் சரி என்னும் விதமாய் தலையசைத்து விட்டு வெளியே அழைத்துச் சென்றான்.

வெளியே வந்ததாலும் அவள் உடல் குளிரில் நடுங்க தான் செய்தது. அவள் அணிந்திருந்த உடைகளை எல்லாம் கழட்டி அங்கே வைத்து விட்டு வெளியே வந்தாள்.

பின் அவனது அறைக்கு அழைத்துச் சென்றான். உள்ளே சென்றதும் அங்கு கிடந்த சோபாவில் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்தவள் “ஐயோ, பிளீஸ் அந்த ஏசி யை ஆப் பண்ணுங்க. எனக்கு ரொம்ப குளிருது”, என்றாள்.

ஏசியை நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தான். அவள் பற்கள் எல்லாம் தந்தி அடித்துக் கொண்டிருந்தது.

“ஹா ஹா, சூடா டீ சொல்லவா? ரொம்ப நடுங்குற?”

“அதெல்லாம் வேண்டாம், கொஞ்ச நேரத்துல சரியாகிரும். என்ன குளிர்? அதுக்குள்ள எப்படி போயிட்டு வருவாங்க?”

“கொஞ்ச நேரம் தானே? சட்டுன்னு வந்துருவோம். பழகிருச்சு”, என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தவன் அவள் இன்னும் நடுங்கவும் “உனக்கு இன்னும் குளிர் போகலை டி. வா நாம கிளம்பலாம். வெயில் பட்டா கொஞ்சம் நல்லா இருக்கும்”, என்று சொல்லி அழைத்துச் சென்றான்.

அவள் குளிரில் நடுங்குவதைக் கண்டு அவளை இறுக்கி அணைத்து தன்னுடைய உடல் சூட்டை அவளுக்கு வழங்க ஆசை தான். ஆனால் இரண்டு காரணம் அவனைத் தடுத்தது. ஒன்று அது அவனது அலுவலகம், மற்றொரு காரணம் அதை அவள் விரும்புவாளா என்பதே. என்ன தான் தயக்கம் இல்லாமல் என்னுடன் பேசு என்று அவன் சொன்னாலும் அவனாலே எல்லா தயக்கங்களையும் உதறித் தள்ள முடிய வில்லையே.

அடுத்து ஒரு பெரிய ஹோட்டல் முன்பு காரை நிறுத்தினான். “சாப்பிட போகிறோம் போல?”, என்று எண்ணி அவள் இறங்க முயல “நீ கார்லே இரு. நான் இப்ப வரேன்”, என்று சொல்லிச் சென்றான்.

அவள் அவனை வியப்பாக பார்க்க அவன் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான். அவன் திரும்பி வரும் போது அவன் கையில் உணவு பைகளும் வாட்டர் பாட்டிலும் இருந்தது.

“சாப்பாடு வாங்கவா போனீங்க? ஏன் உள்ளயே சாப்பிட்டுருக்கலாமே?”

“ஒரு ஸ்பெஷல் இடத்துல லன்ச் சாப்பிடலாம்னு நினைச்சேன். அதான். போகலாமா?”, என்று சொல்லி காரை எடுத்தான். மீண்டும் அலுவலகம் செல்லும் பாதையில் கார் செல்ல “உங்க ஆஃபிஸ்க்கா போறோம்?”, என்று கேட்டாள்.

“இல்லை, இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும் பாரு”, என்று சொல்லி சிரித்தான்.

அவனுடைய அலுவலகத்தைக் கடந்து ஒரு ஐந்து நிமிடத்தில் ஒரு குடியிருப்பு இருந்தது. “இது எந்த ஊர்?”, என்று அவள் பார்த்துக் கொண்டே வர அங்கே கிட்டத் தட்ட நானூறு வீடுகள் இருந்தன.

அந்த வீடுகளைத் தாண்டி சற்று தள்ளி ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டின் முன் காரை நிறுத்தினான். பெரிய அரண்மனை போல எல்லாம் இல்லை. அதே நேரம் சின்னதாகவும் இல்லை. ஆனால் அந்த இடமும் அந்த வீடும் அழகாக இருந்தது. சுற்றிலும் மரங்களும் பூச்செடிகளும் இருக்க நடுவே இருக்கும் அந்த வீடு அவள் கண்களைக் கவர்ந்தது.

“இது யார் வீடு பிரபா?”, என்று கேட்டாள்.

“உள்ள வா சொல்றேன்”, என்று சொல்லி கேட்டைத் திறந்து உள்ளே சென்றவன் அந்த வீட்டின் கதவைச் சாவி போட்டுத் திறந்தான்.

விழி விரிய அந்த வீட்டின் அழகையும் தோட்டத்தின் அழகையும் பார்த்த படி உள்ளே சென்றாள்.

Advertisement