Advertisement

அத்தியாயம் 7

உன் வார்த்தைகள் சேகரித்து

உருவாக்கப் பட்டது தான்

எந்தன் காதல் புத்தகம்!!!

கார் சென்னைப் போக்குவரத்தில் கலக்க ஏசி காற்று அவளுக்கு மூச்சு மூட்டுவது போல இருந்தது.

“என்ன ஆச்சு அமைதியா வர?”, என்று கேட்டான் பிரபாகரன்.

“உங்களை எப்படிக் கூப்பிடணும்னு யோசிச்சிட்டு வரேன்”

“உங்க அம்மா உங்க அப்பாவை எப்படிக் கூப்பிடுவாங்களோ அப்படிக் கூப்பிடு”, என்று அவன் சாதாரணமாக சொல்ல அவள் முகம் இருண்டது.

அவள் முக மாறுதலைக் கண்டவன் “என்ன ஆச்சு அர்ச்சனா?”, என்று கேட்டான்.

“எங்க அம்மா அப்பா மாதிரி ஒரு வாழ்க்கையை வாழவே கூடாதுன்னு நினைக்கிறவ நான். அப்படி இருக்க அவங்களை மாதிரி நான் எப்படி உங்களைக் கூப்பிடுவேன்?”

“சாரி மா. கண்டிப்பா அவங்களை மாதிரி நம்ம வாழ்க்கை இருக்காது. இந்த ஜென்மத்துல நீ மட்டும் தான் டி எனக்கு… சாரி தெரியாம டின்னு வந்துருச்சு”, என்று சங்கடமாக சொல்ல “பரவால்ல… அந்த ஒத்த வார்த்தை அதிகமான உரிமையை தந்துரும்ல? ஐ லைக் இட்”, என்றாள்.

“தேங்க்ஸ். சரி எப்படிக் கூப்பிடணும்னு முடிவு பண்ணிட்டியா?”

“இதுல என்ன முடிவு பண்ண? எல்லாரை மாதிரி நான் பிரபான்னே கூப்பிடுறேன்”, என்று சொல்ல “எல்லாரும் சொல்ற பிரபாவுக்கும் நீ சொல்ற பிரபாவுக்கும் ஏதோ ஒரு டிப்பரன்ஸ் இருக்கு அர்ச்சனா. என்னால அதை உணர முடியுது”, என்றான் அவன். இதில் என்ன இருக்கிறது என்று அவனை குழப்பமாக பார்த்தாள்.

அவளை மருத்துவமனையில் இறக்கி விட்டவன் “நீ வேலையைப் பாரு. நான் அப்புறம் வந்து உன்னைக் கூப்பிட்டுக்குறேன்”, என்றான்.

“வந்துட்டு கால் பண்ணுங்க பிரபா. நேத்து மாதிரி ஏதாவது காரணம் சொல்லிட்டு வராதீங்க”, என்று சிரிப்புடன் சொல்லி விட்டுச் சென்றாள்.

சரியாக பதினொரு மணிக்கு மருத்துவமனை வந்தவன் அவளை அழைத்தான். அவன் போனை எடுத்தவள் “இதோ வந்துட்டேன் பிரபா”, என்று சொல்லி ஐந்து நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தாள்.

அவள் ஏறியதும் காரை எடுத்தான். சிறிது தூரம் சென்றதும் “பிரபா”, என்று அழைத்தாள்.

“ஆன்”

“வெயில் இல்லாம இருக்கே? ஜன்னல் ஓப்பன் பண்ணிக்கலாமா?”, என்று அவள் கேட்க அவன் அதைச் செய்தான்.

கண்ணாடி இறக்கியதும் ஜில்லென்ற காற்று வந்து இருவரின் முகத்திலும் மோதியது.

அவன் இளையராஜா பாடல்களை கொஞ்சமாக சத்தம் வைத்து ஓட விட அவளுக்கு அந்த தருணம் அழகாக இருந்தது. அவனது ரசனைகளை ரசிக்கவும் செய்தாள். அவனும் சிறு சிரிப்புடன் பாடலைப் பாட அவளுக்கு அவனைக் கண்டு வியப்பாக தான் இருந்தது.

“பிரபா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கவா?”

“கேளு, என் கிட்ட பெர்மிசன் கேக்கலாமா? நீ என்ன வேணும்னாலும் பேசலாம்”

“பொண்ணு பாக்க வந்தப்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசரா இருந்தீங்க? ரொம்ப கறாரான ஆளுன்னு நினைச்சேன். சிரிக்கவே மாட்டீங்களோனு கூட நினைச்சேன். ஆனா நீங்க நான் நினைச்சதுக்கு அப்படியே வேற மாதிரி இருக்கீங்க? ஏன் இப்படி?”

“தெரியலை. படிச்சு முடிச்சதும் அப்பா ஆஃபிஸ்க்கு வர வச்சிட்டாங்க. அகில்க்கு கிடைச்ச சுதந்திரம் எனக்கு கிடைச்சது இல்லை. பொறுப்புகளை தலையில் வச்சதுனால சிரிப்பை மறந்து வேலை வேலைன்னு இருந்துட்டேன். ஆனா எப்ப உன்னைப் பாத்தேனோ அப்பவே நான் மாறிட்டேன்னு எனக்கே தெரியுது. அப்பா கிட்ட பிஸ்னஸ் மீட்டிங்ன்னு பொய் சொல்லி உன்னைப் பாக்க வந்து இப்ப உன்னைக் கடத்திட்டு போய்க்கிட்டு இருக்கேன்? நீ என்ன வசியம் பண்ணினேன்னு நான் தான் உன் கிட்ட கேக்கணும்? அது மட்டும் இல்லை. பொண்ணு பாக்க வந்தப்பவும் உன் கிட்ட நல்லா தானே பேசினேன்?”, என்று அவன் சொல்ல சிறு வெட்க புன்முறுவல் அவள் உதடுகளில் மலர்ந்தது.

காரில் அடுத்த பாடல் மாற அவனும் அந்த பாட்டோடு சேர்ந்து பாடினான். அவன் பாடியதை, அவன் கார் ஓட்டும் அழகை, ஸ்டேயரிங்கில் பதிந்த அவன் கரங்களின் ஆளுமையை, என அவனுடைய ஒவ்வொரு செய்கையையும் ரசித்த படி வந்தாள்.

அவர்கள் வீட்டில் இருந்து பெண் பார்க்க வருகிறார்கள் என்று அன்னை சொன்ன போது கூட அவள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இருந்தாள்.

எவனோ ஒருவன் வந்து பார்த்து விட்டுச் செல்லட்டும் என்ற மனநிலையில் தான் இருந்தாள். ஆனால் இப்போதோ அவள் வாழ்வில் அனைத்தும் அவனாகிப் போன உணர்வு.

அவள் மனதை முழுமையாக நிறைத்து அவள் மனதை மொத்தமாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதல் ஆண்மகன் அவன் தான்.

ஒரு மரத்தடியில் காரை நிறுத்தியவன் அவளை பார்த்து திரும்பி அமர்ந்தான். “என்ன இங்க காரை நிறுத்திட்டீங்க?”, என்று குழப்பமாக கேட்டாள்.

“இல்லை என்னோட மாற்றம் பத்தி கேட்ட? அது உன்னால தான்னு சொல்லிட்டேன். ஆனா நீ எதுவுமே சொல்லலையே?”

“என்ன சொல்லணும்?”

“உன் மனசுல நான் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தலையா அர்ச்சனா? என்னை பாக்குறதுக்கு முன்னாடி நீ எப்படி இருந்தியோ அப்படி தான் இப்பவும் இருக்கியா?”

“அது…”, என்று ஆரம்பித்தவளுக்கு சட்டென்று பொய் சொல்ல வரவில்லை. அவ்வளவு அழகான ஆண்மகன் அவள் முகத்தை ஆவலாக பார்க்கும் போது அவன் மனம் சந்தோஷப் படும் பதிலைச் சொல்ல வேண்டும் என்று தான் அவளுக்குத் தோன்றியது.

அவள் அமைதி அவனை பாதிக்க “நிஜமாவே உனக்கு என்னைப் பிடிக்கலையா அர்ச்சனா? உங்க வீட்ல சொன்னாங்கன்னு தான் ஒத்துகிட்டியா? நானும் எங்க அப்பா சொல்லி தான் உன் போட்டோவைப் பாத்தேன். ஆனா பாத்ததும் எனக்கு பிடிச்சிருச்சு. அதே மாதிரி உன் மனசுல உள்ளதை நீயும் சொல்லு”, என்று கேட்டான்.

பதில் சொல்லாமல் விட மாட்டான் என்று புரிய “வாழ்க்கைல நிறைய பேரை பாத்துருக்கேன் பிரபா. யார் மேலயும் எனக்கு எந்த தாக்கமும் ஏற்படலை. இன்னும் சொல்லப் போனா அம்மா அப்பா வாழ்க்கையை பாத்துட்டு லவ், கல்யாணம் இது எல்லாம் சும்மா டிராமா அப்படின்னு தான் எனக்குள்ள தோணுச்சு. ஆனா எல்லாம் நீங்க பொண்ணு பாக்க வரும் வரை தான். உரிமையா ஒரு பார்வை பாத்தீங்க பாருங்க. அப்பவே என்னவோ வெக்கமா..,. எனக்கு சொல்ல தெரியலை. எல்லாரையும் விட நீங்க தான் எனக்கு இப்ப ஸ்பெஷலா தெரியுறீங்க. நான் சைட் அடிச்ச முதல் பையன் நீங்க தான். போதுமா?”, என்று அவள் சிறு வெட்கத்துடன் சொல்ல அவன் கண்கள் மின்னியது.

“நீ பேசுறதைக் கேக்க அவ்வளவு நல்லா இருக்கு டி. மேல சொல்லு”, என்றான்.

“எனக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும். ஆனா அம்மாவோட போன் கால்க்காக கூட நான் அவ்வளவு ஏங்கினது இல்லை. பட் உங்க போன் கால் வராதுன்னு ஏங்குற அளவுக்கு என் வாழ்க்கைல மாற்றம் வந்துருக்கு. இது உங்களால தான் போதுமா?”, என்று வெட்கத்துடன் சொல்ல அதற்கு மேல் அவனுக்கு என்ன வேண்டுமாம்?

இந்த நிமிடம் இருவருக்கும் மனதில் இருந்த தயக்கங்கள் எல்லாம் விடை பெற்றுச் சென்றிருந்தது. இருவருக்குமே பல யுகங்கள் ஒன்றாக வாழ்ந்த ஒரு உணர்வு எழுந்தது. இருவருமே மற்றவருக்காக பிறந்தவர்கள் என்ற உண்மை புரிந்தது.

அவன் சிரித்த படி காரை எடுக்க “தயவு செஞ்சு சிரிக்காதீங்க பிரபா”, என்றாள்.

“ஏன் டி?”, என்று குழப்பமாக கேட்டான்.

“ரொம்ப அழகா இருந்து தொலையுறீங்க”, என்று சொல்ல அவன் அடக்கமாட்டாமல் சிரித்தான்.

“நான் உங்க கிட்ட மயங்கி கிட்டு இருக்கேன்னு சொல்றேன்? நீங்க சிரிக்கிறீங்க?”, என்று அவள் பொய்க் கோபம் காட்ட “நான் அழகுன்னு சொல்றியே? அப்படின்னா உன்னோட அழகை என்ன சொல்ல?”, என்று மையலுடன் கேட்டான் அவன்.

“பிரபா”, என்று அவள் சிணுங்களுடன் அழைத்தாள். “போட்டோ பாத்ததும் பைத்தியம் பிடிச்சது எனக்கு தான் டி தெரியும்”, என்று அவன் சொல்ல சந்தோஷமாக அவன் தோளில் தலை வைத்து சாய்ந்து கொண்டாள். அந்த தருணம் அவள் வாழ்வில் மறக்க முடியாததாக இருந்தது.

அவன் பேச்சும் அக்கறையும் அவளை மயக்கியது. அவன் சொன்ன டி என்ற ஒற்றை வார்த்தையும் அவளுக்குள் சில பல மின்னல்களை உருவாக்கி சென்றது. அவள் தன்னுடைய தோளில் சாய்ந்ததும் பிரம்மித்துப் போனான் அவன். தன்னையே எல்லாமுமாக அவள் ஏற்றுக் கொண்டதை இந்த செய்கை அவனுக்கு உணர்த்தியது. அவள் செய்கை அவனுக்கு இனம் புரியாத சந்தோசத்தைக் கொடுத்தது.

Advertisement