“கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்க. ஏன் உனக்கு வர இஷ்டம் இல்லையா?”
“நான் அப்படிச் சொன்னேனா?”, என்று அவள் கேட்கும் போதே அவர்கள் ஆர்டர் செய்த உணவு வர இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். ஏதேதோ பேச வேண்டும் என்று இருவருக்கும் இருக்கிறது தான். ஆனால் என்ன பேச என்று தெரியாததால் அமைதியாக சாப்பிட்டார்கள்.
கிளம்பும் போது “நிறைய பேசணும்னு வந்தேன் அர்ச்சனா. ஆனா ஒண்ணுமே பேச வரலை”, என்று மனதில் இருப்பதை அவளிடம் சொல்லியே விட்டான்.
அவள் இதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருக்க “உனக்கு ஒண்ணும் தோணலையா?”, என்று கேட்டான்.
“எனக்கும் நிறைய பேசணும்னு தோணுச்சு. ஆனா கேக்க வரலை”
“நம்ம ரெண்டு பேருக்குமே தயக்கம் இருக்கு. அதை முதல்ல உடைக்கணுமே? நம்ம ரெண்டு பேருக்கும் தான் கடவுள் முடிச்சு போட்டுருக்கார். இனி உனக்காக நான் எனக்காக நீ. அதுல எந்த சந்தேகமும் இல்லை தானே?”
“இல்லை”
“அப்படின்னா நாம நம்ம தயக்கத்தை உடைச்சிறலாம். நீ ஏதாவது சொன்னா நான் தப்பா நினைச்சுக்குவேனோன்னு எல்லாம் யோசிக்காத. ஒரு ஃபிரண்ட் கூட எப்படி பேசுவியோ அப்படி பேசு. ஓகே வா?”
“சரி”
“அப்புறம், உன் லைப்ல வந்த முதல் ஆண் நான்னு நீ சொன்னல்ல? ஆனா என் லைப்ல நிறைய பொண்ணுங்க இருக்காங்க”, என்று சொல்ல அவனை அதிர்வாக நோக்கினாள்.
“நிறைய பொண்ணுங்களா? அப்படின்னா இவனும் அப்பா மாதிரி கெட்டவனா? ஆனா பாத்தா அப்படி தெரியலையே? இதெல்லாம் பாத்தா தெரியாதோ?”, என்று எண்ணி அவள் கற்பனைகள் தறிகெட்டு ஓட “ஏய் தப்பா நினைக்காத. நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. நான் சொல்ல வந்தது என்னன்னா என்னோட அம்மா, தங்கச்சி, அப்புறம் வினோதினி, என்னோட பிரண்ட்ஸ் அப்படிச் சொன்னேன். வேற யாரையும் நான் லவ் எல்லாம் பண்ணலை. லவ், மேரேஜ் இந்த எண்ணம் எல்லாம் உன்னைத் தவிர வேற யாரைப் பாத்தும் எனக்கு தோனினது இல்லை. அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல வச்சு உன்னைப் பாத்தப்ப கூட உன்னை சைட் அடிக்கலை. ஆனா இவ தான் உனக்கு பாத்துருக்க பொண்ணுன்னு சொன்னதும் எனக்குள்ள ஒரு தாக்கம். உன்னை விடவே கூடாதுன்னு ஒரு எண்ணம்”, என்று சொல்ல நிம்மதியாக அவனைப் பார்த்தாள்.
“சரி டைம் ஆச்சு. மீதி கதையை நாளைக்கு பேசலாம். இப்ப கிளம்புவோமா?”, என்று கேட்க அவளும் எழுந்து கொண்டாள். அவள் வீட்டை நோக்கி காரைச் செலுத்தினான்.
அவள் வீட்டின் முன் காரை நிறுத்தியதும் “உள்ள வாங்க”, என்று அழைத்தாள்.
“நாளைக்கு வரனே?”, என்று அவன் தயக்கத்துடன் மறுக்க “நீங்க தானே சொன்னீங்க நீ தான் நான் நான் தான் நீன்னு. அப்படின்னா என் வீட்டை உங்க வீடா நினைக்க மாட்டீங்களா? நீங்க வந்தா அம்மா ரொம்ப சந்தோஷப் படுவாங்க. உள்ள வந்து ஒரு அஞ்சு நிமிஷம் உக்காந்துட்டு போங்க”, என்று அழைக்க அதற்கு மேல் மறுக்காமல் அவளுடன் வீட்டுக்குள் சென்றான்.
அவனைக் கண்டதும் “வாங்க மாப்பிள்ளை… உள்ள வாங்க…”, என்று வரவேற்று அமர வைத்த மீனாட்சி “தோசை ஊத்தவா? சாப்பிடுறீங்களா?”, என்று கேட்டாள்.
“அம்மா நாங்க சாப்பிட்டுட்டு தான் வந்தோம்”, என்று அர்ச்சனா சொல்ல “ஆமா அத்தை, வயிறு புல். எதுவும் வேண்டாம். சரி நான் கிளம்புறேன்”, என்றான் பிரபாகரன்.
“ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க மாப்பிள்ளை. இதோ வரேன். அர்ச்சனா கூட பேசிட்டு இருங்க”, என்று சொல்லி விட்டு சமையல் அறைக்கு சென்ற மீனாட்சி ஏதோ ஒரு டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தாள்.
“கொஞ்சமா தான் இருக்கு. இதைக் குடிச்சிட்டு போங்க. நைட் நல்லா தூக்கம் வரும். சாப்பிட்டதும் செரிமானம் ஆகிரும். முதல் தடவை வீட்டுக்கு வந்துருக்கீங்க? ஒண்ணும் கொடுக்காம எப்படி அனுப்ப?”, என்று சொல்லி கொடுத்தாள், மகளுக்கும் கொடுத்தாள்.
“ஹோட்டல்ல சாப்பிட்டா அம்மா இந்த டீ தான் போட்டுத் தருவாங்க. மூலிகை டீ தான், நல்லா இருக்கும். குடிங்க”, என்று அர்ச்சனா சொல்ல அவனும் குடித்தான்.
அவனுக்கு டீயே பிடிக்காது, எப்போதும் அவன் புரு காப்பி மட்டும் குடிக்கும் ரகம். அவளை பெண் பார்க்க வரும் போது கூட அவன் டீயை அருந்த வில்லை. அதனால் கொஞ்சம் தயக்கத்துடன் தான் அதை வாங்கினான். மீனாட்சிக்காக அந்த டீயைக் குடித்தவனுக்கு அதன் சுவை பிடித்து போக “நல்லா இருக்கு”, என்று சொல்லி இன்னும் வாங்கிக் குடித்தான்.
“சரிங்க அத்தை. நான் கிளம்புறேன். காலைல வரேன். அர்ச்சனாவை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிட்டு கொஞ்சம் கடைக்கு போயிட்டு சாயங்காலமா அவளை வீட்ல விட்டுறேன்”, என்று சொல்லி எழுந்து கொண்டான்.
“சரிங்க மாப்பிள்ளை, பாத்துப் போயிட்டு வாங்க. வழி அனுப்பிட்டு வா மா”, என்று மீனாட்சி சொன்னதும் இருவரும் வெளியே வந்தார்கள். அவன் கார் வரைக்கும் அவனுடன் வந்தாள் அர்ச்சனா.
வெளியே வந்ததும் காரில் ஏறாமல் அவன் காரில் சாய்ந்து நிற்க அவன் பேச விரும்புவதை உணர்ந்தவள் “தேங்க்ஸ், நான் கூப்பிட்டதும் வீட்டுக்குள்ள வந்ததுக்கு”, என்றாள்.
“அப்படினா என் கூட சாப்பிட வந்ததுக்கு நான் தேங்க்ஸ் சொல்லட்டுமா? நமக்குள்ள தேங்க்ஸ், சாரி எல்லாம் அவசியம் இல்லை சரியா?”, என்று அவன் கேட்க “ம்ம்” என்று முணுமுணுத்தாள்.
“கிளம்பவா?”, என்று ஏக்கத்துடன் கேட்க அவன் ஏக்கம் அவளை பாதித்தது. இருவருமே வயது முதிர்ச்சி உள்ளவர்கள் தான். ஆனாலும் இது எந்த மாதிரி உணர்வு என்று அவர்களால் வரையறுக்க முடிய வில்லை.
“நேரம் ஆச்சு, பாத்து போயிட்டு வாங்க. வீட்டுக்கு போனதும் ஒரு மெஸ்ஸேஜ் பண்ணுவீங்களா?”, என்று அக்கறையுடன் கேட்க “கண்டிப்பா பண்ணுறேன். கால் பண்ணவா? உன்னால முடிஞ்சா பேசு. இல்லைன்னாலும் பரவால்ல. சரி பை”, என்று சொல்லி விட்டு காரில் ஏறிக் கொண்டான்.
அவன் கார் அந்த தெருவில் திரும்பும் வரைக்கும் அங்கேயே நின்றிருந்தவள் அதற்கு பின் உள்ளே சென்றாள். அன்னையின் அருகே அமர்ந்தவள் “அம்மா சாரி மா”, என்றாள்.
“ஏன் பாப்பா சாரி எல்லாம் கேக்குற?”
“உன் கிட்ட சொல்லாம அவர் கூட ஹோட்டல் போனேன்ல?”
“அதான் மாப்பிள்ளை கால் பண்ணி சொன்னாரே?”
“நான் சொல்லலைல?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை டா. அம்மா ஒண்ணும் நினைக்கலை. சரி மாப்பிள்ளை எப்படி? உன் கிட்ட நல்லா பழகுறாரா? உனக்கு பிடிச்சிருக்கா?”
“நல்லா பழகுறார் மா. ரொம்ப மரியாதையா கேரிங்கா நடத்துறார். பணக்காரன்னு பந்தா எல்லாம் இல்லை. உன் கிட்ட பிரியா பேசுறதுலே தெரியுது தானே?”
“ஆமா பாப்பா. நல்ல பையனா தான் இருக்கார். சரி டயர்டா இருப்ப. நீ போய் ரெஸ்ட் எடு”, என்று சொல்ல புன்னகையுடன் உள்ளே சென்றாள்.
மகள் எப்போதும் இதே சந்தோசத்துடன் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் மீனாட்சி.
சிறிது நேரம் கழித்து தன்னுடைய அறைக்கு வந்த பிரபா உடனே அவளை அழைத்து விட்டான்.
அதை எடுத்த அர்ச்சனா “வீட்டுக்கு போய்ட்டீங்களா?”, என்று கேட்டாள்.
“ஆமா அர்ச்சனா. என்னோட ரூம்ல தான் இருக்கேன். நீ என்ன பண்ணுற?”
“நான் சும்மா தான் இருக்கேன்”
“பிரியா இருக்க தானே? பேசலாமா?”
“ஓ பேசலாமே?”
“அத்தை எதுவும் நினைக்க மாட்டாங்களா?”
“அவங்க பதினொரு மணி வரைக்கும் சீரியலைக் கட்டிக்கிட்டு அழுவாங்க”
“நீ பாக்க மாட்டியா?”
“படம் பாப்பேன். எல்லா படத்தையும் ஒரு தடவையாவது பாக்கணும்னு நினைப்பேன். அது ஓடாத படமா இருந்தாலும் சரி. ஆனா சீரியல் பிடிக்காது”
“ஏன்?”
“அது எப்படிச் சொல்றது? சீரியல்ல ஏதாவது இண்டெர்ஸ்டிங்க் சீன்ல நிப்பாட்டுவான். அடுத்து என்ன ஆகும்னு அடுத்த நாள் வரைக்கும் வெயிட் பண்ணனும். எனக்கு அந்த சஸ்பென்ஸ் எல்லாம் பிடிக்காது. சரி உங்களுக்கு என்ன பிடிக்கும்?”
“நான் காலேஜ் படிக்கும் போது பிரண்ட்சோட படம் பாத்தது. அப்புறம் டிவி போட்டா ஒண்ணு நியூஸ் பாப்பேன். இல்லை சாங் கேப்பேன். பழைய சாங் கேக்குறது தான் என்னோட பொழுது போக்கு. கூட சேந்து பாடவும் செய்வேன்”
“பாடுவீங்களா? இப்ப ஒரு பாட்டுப் பாடுங்களேன்”
“ஐயோ, நான் சிங்கர் எல்லாம் கிடையாது மா. சும்மா உளறுவேன். நீ வேற”
“பிளீஸ் பாடுங்களேன். எனக்காக”
“நாளைக்கு நேர்ல பாடுறேன். சரியா?”, என்று சொல்ல அவள் சரி என்று கேட்டுக் கொண்டாள். அதற்கு பின் வெகு நேரம் பேசினார்கள். விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொண்டார்கள்.
மீனாட்சி டிவியை அணைப்பது தெரிந்ததும் “சரி அம்மா தூங்க வராங்க. நான் வைக்கட்டுமா?”, என்று கேட்டாள் அர்ச்சனா.
“சரி அர்ச்சனா, குட் நைட், பை. நாளைக்கு பாப்போம்”, என்று சொல்லி போனை வைத்தான்.
அடுத்த நாள் காலை இருவருக்கும் அழகாக விடிந்தது. அவளை அழைக்க வீட்டுக்கு வந்து விட்டான் பிரபாகரன். அவனை வரவேற்றது மீனாட்சி தான்.
“உக்காருங்க மாப்பிள்ளை. அர்ச்சனா இப்ப தான் குளிக்க போனா”
“பரவால்ல அத்தை. நான் வெயிட் பண்ணுறேன்”
“உங்களுக்கு காபி தான் பிடிக்குமாமே? இப்ப தான் சொல்லிட்டு இருந்தா. போட்டுத் தரட்டா?”
“கண்டிப்பா மாப்பிள்ளை. நான் ரெடி பண்ணுறேன். நீங்க டிவி பாருங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றாள். ஒரு மகன் இருந்தால் அவளிடம் எப்படி பேசி இருப்பானோ அது போலவே பிரபாகரன் பேச மீனாட்சி மனம் நெகிழ்ந்து போனது.
குளித்து முடித்து கிளம்பி வந்த அர்ச்சனா “வாங்க”, என்று வரவேற்றாள். பின் மீனாட்சி இருவருக்கும் காலை உணவை பரிமாறினாள். அதற்கு பின் மீனாட்சியிடம் சொல்லி விட்டு இருவரும் கிளம்பினார்கள்.
ஜோடியாக போகும் இருவரையும் பார்க்கும் போது மீனாட்சிக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
“கடவுளே என்னோட வாழ்க்கையை ஒண்ணும் இல்லாம பண்ணிட்டேன்னு நினைச்சேன். ஆனா அதுக்கு பதிலா என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்துருக்க. உனக்கு நன்றி”, என்று வேண்டிக் கொண்டாள்.