உள்ளே வந்தவனைக் கண்டு திகைத்து எழுந்து நின்ற அர்ச்சனா “பிரபா நீங்களா? இது என்ன விளையாட்டு?”, என்று கேட்டாள். சிரிப்பு வந்தாலும் அவன் வந்ததில் அவளுக்குள் ஒரு பரபரப்பு வந்தது.

“மேடமை வேற எப்படி பாக்குறது? பெர்ஸ்னலா பேசணும்னு சொன்னா பாக்க முடியாது. அதான்”, என்று சொல்லி அவள் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“அதுக்குன்னு இப்படி பொய் சொல்லிட்டு வருவீங்களா? உங்களை… ஒரு கால் பண்ணிருக்கலாம்ல?”, என்று அவனிடம் சொன்னவள் “சிஸ்டர், இவர் என்னோட உட்பி தான். நீங்க கொஞ்சம் வெளிய இருங்க”, என்று சொல்ல அவளும் சிறு சிரிப்புடன் அங்கிருந்து சென்றாள்.

“ஐயோ, மேரி சிஸ்டர் சிரிச்சிட்டு போறாங்க. ஸ்டாப் ரூம் போய் என் மானத்தை வாங்கப் போறாங்க”, என்று சொன்னவள் அவனுக்கு எதிரே அமர்ந்தாள்.

அவள் முகத்தில் இருந்த தவிப்பைக் கண்டவன் “ஜஸ்ட் பன்க்கு தான் பண்னினேன். இதுல என்ன இருக்கு?”, என்று கேட்டான்.

“அப்படி இல்லை. அது வந்து… உங்களுக்கு எப்படி புரிய வைக்க?”, என்று அவள் தடுமாற்றத்துடன் கேட்க “உன்னை யாரும் தப்பா சொல்லிருவாங்கன்னு பயப்படுறியா அர்ச்சனா?”, என்று கேட்டான் அவன்.

“என்னை இல்லை. உங்களை யாரும் தப்பா பேசக் கூடாதுன்னு பயப்படுறேன்”, என்று சொன்ன அவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவள் அக்கறையில் மனம் நெகிழ்ந்தான் பிரபாகரன்.

“ஏய் இதுல என்ன இருக்கு? விளையாட்டுக்கு தான் செஞ்சேன். அது அந்த சிஸ்டருக்கும் தெரியும். சிரிச்சிட்டு தான் போறாங்க. வெளிய போய் அர்ச்சனாவைக் கட்டிக்கப் போறவர் அவங்களைப் பார்க்க இப்படி எல்லாம் பொய் சொல்லிட்டு வரார். அர்ச்சனா கொடுத்து வச்சவங்கன்னு பேசுவாங்க. உன் மூலமா எனக்கு பெருமை தான் கிடைக்கும்”, என்று சிரித்தான்.

அவன் சொன்னதைக் கேட்டு அவள் முகத்திலும் புன்னகையின் சாயல். “அர்ச்சனா”, என்று அழைத்தான் பிரபாகரன்.

“ஆன்”

“உண்மையிலே எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தா என்ன பண்ணுவ?”, என்று கேட்கும் போதே அவன் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது.

அவன் வம்பிழுப்பது புரிய “அப்படி எல்லாம் இருக்காது….”, என்று வெட்கத்துடன் முணுமுணுத்தாள். “இப்படி எல்லாம் இவன் பேசுவானா?”, என்று எண்ணி உள்ளுக்குள் படபடப்பு வந்தது அவளுக்கு.

அவனோ விடாமல் “ஒரு வேளை அப்படி இருந்தா என்ன பண்ணுவ? சொல்லு”, என்று கேட்டான்.

“அப்படி ஒரு நிலைமை வந்தா அதை எப்படி சரி செய்யணும்னு எனக்கு தெரியும். சரி செய்ய முடியாத பிரச்சனைன்னு எதுவும் இல்லை”, என்று தீவிரமாக சொன்னவள் “என்ன சார் டிரீட்மெண்ட் ஆரம்பிக்கலாமா?”, சிறு சிரிப்புடன் கேட்டாள்.

அவள் கேள்வியில் அடக்க மாட்டாமல் சிரித்தவன் “முதல்ல பிரச்சனை இருக்கான்னு செக் பண்ணனுமே? அதுக்கு என்ன பண்ணலாம்?”, என்று கேட்டு அவளையே திணறடித்தான்.

அவன் கேள்வியில் அவள் முகம் அந்தி வானமாக சிவந்தது. “பிளீஸ் இந்த பேச்சு போதும். ஆமா நீங்க எதுக்கு இப்ப இங்க வந்தீங்க? நாளைக்கு தானே வருவேன்னு சொன்னீங்க?”, என்று கேட்டாள்.

“உன்னைப் பாக்கணும் போல இருந்துச்சு. அதான் வந்துட்டேன். ஏன் வரக் கூடாதா?”, என்று அவன் கேட்க அவள் இதற்கு என்ன பதில் சொல்வாளாம்?

“நாளைக்கு தானே வறேன்னு சொன்னீங்க? அதான் கேட்டேன்”, என்று முணுமுணுத்தாள்.

“சொன்னேன் தான். ஆனா நாளைக்கு வரைக்கும் பொறுமை இல்லை. அதான் வந்துட்டேன். டின்னர் மட்டும் சாப்பிட்டிட்டு போகலாம். என் கூட வெளிய வருவியா?”, என்று கேட்க அவளால் மறுக்க முடிய வில்லை.

அவள் சரி என்று சொல்ல அவன் எழுந்து கொண்டான். அவளும் தன்னுடைய பொருள்களை எடுத்துக் கொண்டு அவன் பின்னே சென்றாள். மனதுக்குள் அம்மாவிடம் சொல்லாமல் போகிறோமே என்று சிறு சஞ்சலம் எழுந்து அவளை இம்சித்தது.

வீட்டுக்கு போனதும் அவள் உண்மையைச் சொல்லி விடுவாள் தான். ஆனால் முன்பே சொல்லாமல் போவது தவறு தானே? அவள் ஏதோ யோசனையிலே வர “என்ன ஆச்சு? என்ன யோசிச்சிட்டு வர?”, என்று கேட்டான் பிரபா.

“இல்லை…. அம்மா கிட்ட உங்க கூட வெளிய போறேன்னு சொல்லலை, அதான் ஒரு மாதிரி இருக்கு. இது வரை அவங்க கிட்ட நான் எதுவும் மறைச்சது இல்லை. இப்ப கால் பண்ணிக் கேக்கவும் ஒரு மாதிரி இருக்கு”

“இவ்வளவு தானா? என்னை நம்பி என் கூட வெளிய வர. உனக்கு அவ்வளவு மனக் கஷ்டத்தைக் கொடுத்துருவேனா? நான் அத்தைக் கிட்ட சொல்லிட்டேன். அவங்களும் கூட்டிட்டு போங்க மாப்பிள்ளைன்னு சொல்லிட்டாங்க. போதுமா? இப்ப சந்தோஷமா என் கூட வா”, என்று சொல்ல “நிஜமாவா?”, என்று விடுதலை உணர்வுடன் கேட்டாள்.

அவள் கண்கள் விரிந்த விதத்தை ரசித்தவன் “ஆமா, உன்னை வெளிய அழைச்சிட்டு போனா அதுக்கான முன்னேற்பாடு என்ன செய்யணும்னு தெரியாதா எனக்கு? அது தெரியாமலா இவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேனா இருக்கேன்?”, என்று கேட்டுக் கொண்டே அவளுக்காக முன் பக்க கார் கதவை திறந்து விட அவளுக்கு வியப்பாக இருந்தது.

அவளை பெண் பார்க்க வந்த போது அவன் ஒரு வார்த்தைக்கு மொத்தக் குடும்பமே அமைதியானது. அது மட்டும் அல்லாமல் அவனுடைய அறிவையும் ஆளுமையையும் அம்மா மூலம் கேள்விப்பட்டவளுக்கு அவனுடைய இந்த செய்கை வியப்பாக இருந்தது.

அவனுக்கு கார் கதவை திறந்து விட ஆட்கள் இருக்கும் போது அவன் தனக்காக செய்வது சிறு சங்கடத்தைக் கொடுத்தது. காருக்குள் ஏறாமல் மீண்டும் அவள் யோசனையிலே இருக்க “டாக்டர்னா யோசிச்சிக்கிட்டே இருக்கணுமா? இப்ப என்ன யோசனை?”, என்று கேட்டான்.

“இல்லை… நீங்க இதெல்லாம் எனக்காக செய்யணுமா? எனக்கு இப்படி யாரும் செஞ்சது இல்லை”

“ஏன்? நான் உனக்காக செஞ்சா என்ன?”

“உங்களுக்கு சேவகம் பண்ண நிறைய ஆள் இருக்காங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன். அப்படி இருக்க நீங்க எனக்கு செஞ்சா அது எப்படி சரியா வரும்?”

“என் கிட்ட வேலை பாக்குறவங்களுக்கு நான் முதலாளி. அதனால அவங்க எனக்கு அப்படிச் செய்யுறாங்க. ஆனா என்னோட முதலாளி நீங்க தானே மேடம்? அதனால நான் உனக்கு செய்யுறதுல தப்பே இல்லை”, என்று சொல்லி அவன் சிரிக்க அவன் சிரிப்பை ரசித்த படி நின்றாள்.

“ஏய், இப்படி பாத்துட்டு யோசிச்சுட்டு நேரத்தை ஓட்டலாம்னு பாக்குறியா? ஒன்பது மணிக்குள்ள உன்னை வீட்ல விடணும். அதுக்கு மேல லேட் ஆனா அத்தை என்னை தப்பா நினைப்பாங்க. வா போகலாம்”, என்று சொல்ல அவளும் சிறு சிரிப்புடன் ஏறிக் கொண்டாள். அவன் அக்கறை அவளுக்கு மிகவும் பிடித்தது. அவனும் காரை எடுத்தான்.

காரில் ஏறி அமர்ந்ததும் சிறு தடுமாற்றத்துடன் தான் அமர்ந்திருந்தாள். காரை செலுத்தியவன் அவளை திரும்பிப் பார்த்தான்.

“ஏன் அர்ச்சனா ஒரு மாதிரி நெர்வசா இருக்க? என் கூட வரப் பிடிக்கலையா?”, என்று கேட்டான்.

“நான் இப்படி யார் கூடவும் தனியா கார்ல போனது இல்லை. எங்கயாவது அவசரமான வேலைக்கு போகணும்னா கூட பின்னாடி உக்காந்துருப்பேன். பிரண்ட்ஸ் கூடவும் கேங்கா தான் போயிருக்கேன். அப்பா கூட… போனதே இல்லை. இதான் முதல் டைம் தனியா ஒரு ஆள் கூட போறது. அதான்”

“அப்படின்னா நெருக்கமா உன் வாழ்க்கைல வந்த முதல் ஆண் நான்னு சொல்ல வரியா?”

“சத்தியமா அது தான் உண்மை”, என்று சொன்னவளின் குரலில் தந்தையை நினைத்து சிறு வேதனை தெரிய அவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவளுக்கு அனைத்துமாக தான் இருக்க வேண்டும் என்றும் அவனுக்கு தோன்றியது.

அவள் ஒரு மாதிரி அமைதியாக இருக்க அவள் அமைதியைக் கெடுக்காமல் அவனும் அமைதியாக காரை செலுத்தினான். கார் ஓட்டும் போது அவன் கவனத்தை சிதறடிக்க வேண்டாம் என்று எண்ணி அவளும் அமைதியாக வந்தாள்.

அவளை ஒரு உயர்தர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றவன் ஒரு இருக்கையில் அவளை அமரச் சொல்லி அவளுக்கு எதிரே அமர்ந்து “என்ன சாப்பிடுற?”, என்று கேட்டான்.

அவள் தனக்கு வேண்டியதைச் சொல்ல அவனும் இருவருக்கும் ஆர்டர் செய்தான். உணவு வரும் வரைக்கும் என்ன செய்ய என்று தெரியாமல் இருவரும் அமைதியாக இருந்தார்கள். அங்கிருந்த இரவு விளக்கும் மிதமான இசையும் தனிமையும் சேர்ந்து அவர்களை அமைதியாக்கியது. அது மட்டும் அல்ல. சரளமாக பேசும் அளவுக்கு இருவரும் இன்னும் நெருங்கவும் இல்லையே.

அப்போது தான் நினைவு வந்தவளாக “ஐயோ, உங்களைப் பாத்ததுல என்னோட வண்டியை ஹாஸ்பிட்டல்லே விட்டுட்டு வந்துட்டேன். இப்ப என்ன பண்ணுறது?”, என்று கேட்டாள்.

“இதுல என்ன இருக்கு? நான் தான் உன்னை வீட்ல டிராப் பண்ண போறேனே? வண்டி அங்கயே நிக்கட்டும். நாளைக்கு எடுத்துக்கலாம்”

“காலைல நான் வேலைக்கு போகனுமே?”

“நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்”

“உங்களுக்கு வேலை இருக்கும்ல?”

“உன்னை விட முக்கியமான வேலை எதுவும் இல்லை. அப்புறம் நாளைக்கு பதினொரு மணிக்கு மேல என் கூட தானே இருப்ப? நான் அதுக்கும் அத்தைக் கிட்ட கேட்டுட்டேன். அதனால மறுக்காம நீ வரனும்”

“நீங்க கேட்டதுக்கு அம்மா ஒண்ணும் சொல்லலையா?”, என்று வியப்புடன் கேட்டாள்.