அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அகிலன் கூட “இவ்வளவு பிரச்சனையோட இந்த கல்யாணம் நடக்கணுமா? இந்த அண்ணன் பிரச்சனையை விட்டுட்டு வேற பொண்ணை மேரேஸ்ஜ் பண்ணிக்கலாமே?”, என்று தான் எண்ணினான்.
தோட்டத்துக்கு வந்த பிறகு அர்ச்சனா மற்றும் பிரபா இருவரும் அமைதியாக நின்றார்கள். அர்ச்சனா கோபத்தில் இருந்தாள் என்றால் பிரபாவோ எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற யோசனையில் இருந்தான்.
“அர்ச்சனா”, என்று அவன் அழைத்ததும் திரும்பி அவனைப் பார்த்தாள். “இந்த கல்யாணம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்ட? அப்படித் தானே?”, என்று அவன் கேட்க பட்டென்று “ஆமா”, என்று சொல்லி விட்டாள்.
“இந்த முடிவு என்னைப் பிடிக்காததுனாலயா?”, என்று அவன் கேட்க அவனை அதிர்வுடன் நிமிர்ந்து பார்த்தாள். ஆண்மையின் இலக்கணத்துடன் இருந்தவனை எப்படிப் பிடிக்காமல் போகுமாம்?
“உன்னை எனக்கு பிடிக்கும் டா”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “இப்ப பிடிக்குதோ பிடிக்கலையோ? அது பெரிய விஷயம் இல்லை. உங்க அம்மா பேச்சு எனக்கு பிடிக்கலை. அவங்களுக்கு என்னைப் பிடிக்கலை. உங்களைக் கல்யாணம் பண்ணினா காலம் முழுக்க அவங்க அப்படி தான் பேசுவாங்க. அதையெல்லாம் கேட்டு பொறுத்துப் போற அளவுக்கு எனக்கு பொறுமை கிடையாது. இன்னும் சொல்லப் போனா எனக்கு சுயமரியாதை கொஞ்சம் அதிகம். அது குடும்ப வாழ்க்கைக்கு நல்லது இல்லை. அதுவும் கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு நல்லது இல்லை. நம்ம கல்யாணம் நடந்தா நம்ம ரெண்டு பேருமே நிம்மதியா இருக்கப் போறது இல்லை. அப்புறம் எதுக்கு அதைப் பண்ணிக்கணும்?”, என்றாள்.
“உன்னைப் பொறுத்துப் போகச் சொல்லலை. உன்னோட சுயமரியாதையை இழக்கணும்னு நான் சொல்ல வரலை. என்னை நம்பி என் வீட்டுக்கு வரச் சொல்றேன்”, என்று அவன் சொல்ல அவனை திகைப்பாக பார்த்தாள்.
“உன்னை ஹாஸ்பிட்டல்ல வச்சு பாத்தப்ப நீ பேசினது பிடிச்சது. ஆனா அப்ப சத்தியமா வேற எந்த யோசனையும் எனக்குள்ள வரலை. உன்னை ஒரு டாக்டரா மட்டும் தான் நினைச்சேன். ஆனா அப்பா எப்ப இவ தான் உனக்கு பாத்துருக்குற பொண்ணு, பிடிச்சிருக்கான்னு கேட்டாங்களோ அந்த நிமிசத்துல நீ என் மனசுல வந்துட்ட”, என்று சொல்ல அவள் கண்களில் ஆச்சர்யம் வந்தது.
“இப்ப இந்த நிமிஷம் என் மனசுல நீ தான் இருக்க? உன்னை அவ்வளவு ஈஸியா விட்டுக் கொடுத்துட்டு என்னால போக முடியாது. நான் உனக்காக உன் பக்கம் எப்பவும் நிப்பேன்னு நீ நம்பினா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு”
உன்னைப் பிடிச்சிருக்கு என்று வெளிப்படையாக சொல்பவனிடம் எப்படி முகத்தில் அடிப்பது போல பேச என்று தெரிய வில்லை. அதனால் தன்மையாகவே “இல்லை வேண்டாம். பிரச்சனைல நம்ம வாழ்க்கை ஆரம்பிக்கணுமா? வேண்டாமே? நம்ம கல்யாணம் முடிஞ்சா உங்க அம்மாவுக்கும் எனக்கும் இடையில மாட்டிக்கிட்டு உங்க வாழ்க்கையையும் போராட்டமா மாறிரும்”, என்று மறுத்தாள்.
“நம்ம ரெண்டு பேருக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லையே? உனக்கும் அம்மாவுக்கும் இடைல வர பிரச்சனையை நான் பாத்துக்குவேன்”
“உங்களுக்கே தெரியுது தானே பிரச்சனை வரும்னு”
“அம்மா நல்லவங்க தான் அர்ச்சனா. அவங்களை யாரோ தூண்டி விட்டுருக்காங்க”
“இதை தான் சொன்னேன். இப்ப உங்க அம்மா நல்லவங்கன்னு என்னைக் கண்வின்ஸ் பண்ணுறீங்க பாத்தீங்களா? அதே மாதிரி நான் நல்லவன்னு உங்க அம்மாவை கண்வின்ஸ் பண்ண வேண்டியது வரும். இந்த போராட்டம் உங்களுக்கு தேவையா?”
“அதை நான் பாத்துக்குறேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு”
“நான் அப்படிச் சொல்லவே இல்லையே?”
“நீ சொல்லலை? ஆனா உன் கண்ணு சொல்லுச்சு”
“கண்ணா?”
“ஆமா, நீ ஒரு டாக்டர். உன் வாழ்க்கைல எத்தனையோ ஆம்பளைங்களைப் பாத்துருப்ப. ஆனா யார் முன்னாடியாவது தலை குனிஞ்சிருக்கியா? என்னைப் பாத்ததும் உன் முகத்துல வந்த வெட்கம் சொல்லுச்சு. உன் விருப்பத்தை. இந்த ஜென்மத்துல எனக்கு நீ தான்னு நான் முழுமையா நம்புறேன். நீயும் என்னை நம்பினேன்னா வந்து சம்மதம் சொல்லு. முடிவு உன் கையில தான். இதுக்கு மேல உன் விருப்பம்”, என்று சொல்லி விட்டு அவன் நடக்க அவனையே பிரம்மிப்பாக பார்த்த படி அவன் பின்னே வந்தாள் அர்ச்சனா.
“என்ன பிரபா பேசிட்டியா? என்ன முடிவு பண்ணினீங்க?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி.
“அப்ப சொன்னதை தான் இப்பவும் சொல்றேன் பா. எனக்கு மனைவின்னா அது அர்ச்சனா தான். அவளைத் தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் பண்ண முடியாது. நான் என் மனசை அர்ச்சனா கிட்ட சொல்லிட்டேன். இனி அவ தான் முடிவு பண்ணனும். அவ பிடிச்சிருக்குன்னு சொன்னா எந்த பிரச்சனையும் பண்ணாம இந்த கல்யாணத்தை நடத்தி வைங்க. அப்படி அர்ச்சனா வேண்டாம்னு சொல்லிட்டா இனி காலம் முழுக்க என் கிட்ட யாரும் கல்யாணம் பத்தி பேசக் கூடாது. இன்னொரு பொண்ணை என்னால அந்த இடத்துல வச்சுப் பாக்க முடியாது”, என்று அவன் வெளிப்படையாகவே சொல்ல உண்மையிலே அர்ச்சனாவுக்கு அவனைக் கண்டு பிரமிப்பு தான் வந்தது.
“என் மகன் அவன் மனசுல இருக்குறதை சொல்லிட்டான். நீ என்ன மா சொல்ற?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி.
அர்ச்சனா சட்டென்று எந்த பதிலும் சொல்ல வில்லை. அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபாகரன். அவன் கண்களில் இருந்த எதிர்பார்ப்பைக் கண்டு அவளால் மறுக்க முடிய வில்லை.
“எனக்கும் சம்மதம் அங்கிள். ஆனா எனக்கோ எங்க அம்மாவுக்கோ ஏதாவது மரியாதை குறைவான பேச்சு வந்துச்சுன்னா அதுக்கு பொறுப்பு உங்க பையன் தான். வேற யாரையும் நான் கேள்வி கேக்க மாட்டேன். அவரைத் தான் கேப்பேன்”, என்று தெளிவாக சொல்லி விட்டாள்.
அவளது தெளிவான அதே நேரம் தைரியமான பேச்சு சக்கரவர்த்திக்கு பிடித்தது. பிரபாகரனுக்கு அவள் தான் பொருத்தமாக இருப்பாள் என்று அவருக்கு தோன்றியது. அவள் சம்மதம் சொன்னதும் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. சொக்கலிங்கமும் சந்தோஷப் பட்டார்.
மீனாட்சிக்கு சந்தோஷமாக இருந்தாலும் யசோதாவை நினைத்து கொஞ்சம் மனம் யோசிக்க தான் செய்தது. ஆனால் பிரபாகரனை விட நல்ல மாப்பிள்ளை தன்னுடைய மகளுக்கு கிடைக்க மாட்டான் என்ற நம்பிக்கையும் இருந்தது.
“ரொம்ப சந்தோஷம் அர்ச்சனா. என் மகன் உன்னை நல்லா பாத்துக்குவான். என் பையனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். ஒண்ணை நினைச்சு ஒண்ணுல நிக்குறவன். அவன் ஒரு நாளும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டான்”, என்று சொன்ன சக்கரவர்த்தி அர்ச்சனாவின் பெற்றவர்களிடம் திரும்பி “இந்த கல்யாணத்துல எனக்கு பரிபூரண சம்மதம். நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க?”, என்று கேட்டார்.
“உன் குடும்பத்துல சம்பந்தம் பண்ண நான் கொடுத்து வச்சிருக்கணும் டா. எனக்கு சம்மதம்”, என்று சொன்ன சொக்கலிங்கம் “மீனாட்சி நீ என்ன சொல்ற?”, என்று மனைவியிடம் கேட்டார்.
“எனக்கும் சம்மதம்”, என்று மீனாட்சி சொல்ல அவர்களின் திருமணம் பெரியோர்களால் உறுதி செய்யப் பட்டது. அங்கே சக்கரவர்த்தி மற்றும் சொக்கலிங்கம் இருவரும் மட்டுமே பேசிக் கொண்டிருக்க மற்றவர்கள் அனைவரும் அமைதியாக வேடிக்கை பார்த்தார்கள்.
தன் கை மீறி எல்லாம் நடக்கிறது என்ற கடுப்பில் இருந்தாள் யசோதா. அர்ச்சனா மீது அவளுக்கு கோபமாக வந்தது.
“சொக்கு என் பையனோட கல்யாணத்தை ரொம்ப கிராண்டா பண்ணனும் டா”, என்றார் சக்கரவர்த்தி.
“அதுக்கென்ன? பண்ணிட்டா போச்சு. என் மகளுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்”
“நல்லது டா. ஒரு வாரத்துக்கு முன்னாடியே எல்லாரும் நம்ம வீட்டுக்கு வந்துரணும். அன்னைக்கே நிச்சயதார்த்தம் மாதிரி வச்சிக்கலாம். அன்னைல இருந்து ஒரு வாரம் கழிச்சு கல்யாணம். அந்த ஒரு வாரமும் நீங்க எல்லாரும் எங்க வீட்ல தான் இருக்கணும்”
“அது எப்படி டா? கல்யாணத்துக்கு முந்தின நாள் தானே பெண்ணழைச்சிட்டு போகணும்? ஒரு வாரம் எப்படி அங்க தங்க முடியும்?”
“அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. நீங்க எல்லாரும் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துரணும். மாடில உங்க குடும்பத்துக்குன்னு ஒரு புளோரை ஒதுக்கிறோம். என் மகன் கல்யாணம் ஒரே நாள்ல ஆரம்பிச்சு அன்னைக்கே முடிஞ்ச மாதிரி இருக்க கூடாது டா. ஒரு வாரம் சொந்தக்காரங்க எல்லாம் நிறைஞ்சு கொண்டாட்டமா இருக்கணும்”
“என் பக்கமும் சரி, மீனாட்சி பக்கமும் சரி. சொந்தக்காரங்க கூட அவ்வளவா ஒட்டுதல் இல்லை. யாரும் வருவாங்களான்னு தெரியாது. பிஸ்னஸ் பிரண்ட்ஸ் கல்யாணத்துக்கு வருவாங்க”
“அதுக்கென்ன? எங்க சொந்தக்காரங்களும் இனி உங்க சொந்தக்காரங்க தானே? அதுக்கு தான் சொல்றேன். எல்லாரும் பேசிப் பழக ஒரு வாரம் ரொம்ப சந்தோஷமா இருக்கும்”
“சரி”, என்று சம்மதித்தார்.
அதற்கு பின் முகூர்த்த நேரம் எப்போது. நிச்சயதார்த்தம் எப்போது,. திருமண உடைகள் எப்போது எடுக்கப் போவது என்ற பேச்சுக்கள் ஆரம்பமானது.
எல்லாவரையும் பேசி முடித்து விட்டு பிரபாகரன் குடும்பம் கிளம்பியது. போகும் பொது அர்ச்சனா அவனைப் பார்க்க யாரும் அறியாமல் அவளைத் திரும்பிப் பார்த்தவன் இமை சிமிட்டி விட்டு சென்றான். அவன் செய்கையில் குப்பென்று வியர்த்துப் போனது அவளுக்கு. சிறு வெட்கம் கூட அவள் முகத்தில் உருவானது.
வீட்டுக்கு வந்ததும் யசோதா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். “மாமா, அத்தைக்கு தான் இந்த பொண்ணு பிடிக்கலையே? நம்ம பிரபா மச்சானுக்கு கிடைக்காத பொண்ணா?”, என்று கேட்டான் வேணுகோபால்.
பிரபாகரன் அவனை தீயாக முறைக்க “என் மகனுக்கு எப்ப என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் மாப்ள. நீ உன் குடும்பத்தை மட்டும் பாரு. ஏற்கனவே உன் அத்தை எரிஞ்சிக்கிட்டு இருக்கா. அதுல எண்ணையை ஊத்தாத”, என்று சக்கரவர்த்தி சொல்ல வேணுகோபால் வாயை மூடிக் கொண்டான்.
யசோதாவை யாரும் சமாதானம் செய்ய வில்லை. சமாதானம் செய்தாலும் அவள் சமாதானம் ஆக மாட்டாள் என்று தான் அனைவருக்கும் தெரியுமே? அதே போல கண்ணீரும் கம்பளையுமாக இருந்த இன்னொரு ஆள் வினோதினி. அவளுடைய காதலை எண்ணி கண்ணீரில் கரைந்தாள். அந்த கண்ணீரை மற்றவருக்கு காட்டாமல் மறைத்துக் கொண்டாள்.
சீதா மூலம் அங்கே நடந்த நிகழ்வுகளை கேட்டவளுக்கு இந்த திருமணப் பேச்சு வார்த்தை நின்றிருந்தால் சந்தோஷமாக இருந்திருக்குமே என்று தோன்றியது.
அன்னையின் அருகில் வந்து அமர்ந்தான் பிரபாகரன். மகனைக் கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டாள் யசோதா.
“என் மேல கோபமா மா?”
“ஏன்? உனக்கு தெரியாதா?”
“அம்மா, இதெல்லாம் நம்ம கை மீறி நடந்த விஷயங்கள்”
“உன் கை மீறி ஒண்ணும் நடக்கலை பிரபா. நீ தான் நடக்க வச்ச?”
“எதையுமே நான் ஆரம்பிச்சு வைக்கலை மா”
“எல்லாம் உங்க அப்பா தான். எனக்கு எரிச்சலா இருக்கு பிரபா”
“விதிப் படி தான் மா நடந்திருக்கு. நான் எதுக்கு அர்ச்சனாவைப் பாக்கணும்? அப்பா எதுக்கு அவளை பொண்ணு பாக்கணும்? அவ தான் எனக்குன்னு கடவுள் எழுதி வச்சிட்டார் மா”