“யசோதா பொறுமையா உக்கார்”, என்று சக்கரவர்த்தி சொன்னதும் “என்னங்க? உங்களுக்கு என்ன பைத்தியமா? இவ்வளவு நடந்துகிட்டு இருக்கு. நீங்க பொறுமையா உக்காரச் சொல்றீங்க?”, என்று கேட்டாள்.

“எனக்கு மரியாதை கொடுக்குறதா இருந்தா உக்கார். இல்லைன்னா வெளிய போ”, என்று சக்கரவர்த்தி சொல்ல “உங்க கிட்ட போய் சொன்னேன் பாருங்க? நமக்கு இந்த சம்பந்தம் வேண்டாம். வாங்க போகலாம். பிரபா வா டா”, என்று மகனை அழைத்தாள் யசோதா.

“எல்லாரும் பேச வேண்டியதை பேசி முடிச்சிட்டீங்களா? இப்ப நான் பேசலாமா?”, என்று கேட்டான் பிரபாகரன். அனைவரும் அவன் முகத்தையே பார்க்க “இது என்னோட கல்யாணம். இதுல நான் தான் கருத்து சொல்லணும். வேற யாரும் எதுவும் பேச வேண்டிய அவசியம் இல்லை. எனக்கும் அர்ச்சனாவுக்கும் கல்யாணம் நடக்கும்”, என்று அவன் சொல்ல யசோதா அதிர்ந்து போனாள். சக்கரவர்த்தி மகனுக்கு மனதுக்குள் சபாஷ் போட்டார்.

“பிரபா, நான் உன் அம்மா டா”, என்றாள் யசோதா.

“யாரா இருந்தா என்ன? என்னோட கல்யாணம் என்னோட விருப்பம். பொண்ணு இவ தான்னு காட்டினதோட உங்க வேலை முடிஞ்சிருச்சு மா. இனி முடிவு நான் தான் எடுக்கணும்”

“இவளை பொண்ணா நான் காட்டலை பிரபா. உங்க அப்பா தான் காட்டினார். அதுவும் உண்மையை மறைச்சு போர்ஜரி பண்ணிருக்கார்”

“அப்பா என் கிட்ட எதையும் மறைக்கலை. எல்லாம் சொல்லிட்டார். உங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னது கூட நான் தான்”

“அவ்வளவு பெரியவனா ஆகிட்டியா டா நீ?”

“ஏன் மா, நம்ம கம்பெனி நிர்வாகத்தை சிறப்பா செய்யுறதுலே நான் பெரியவன்னு நீங்க இன்னும் நம்பலையா? இல்லை சின்ன பையனுக்கா கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சீங்க?”, என்று அவன் நக்கலாக கேட்க “பிரபா, நீ என்ன வேணும்னாலும் முடிவு எடு. ஆனா யசோதா உன் அம்மா. அவ கிட்ட மரியாதையா பேசு”, என்றாள் சீதா.

“அவங்க மரியாதையா பேசலையே அத்தை? இப்ப இங்க என்ன நடந்துருச்சு? எதுக்கு தேவையில்லாம அர்ச்சனா வீட்ல இருக்குற எல்லாரையும் அம்மா காயப் படுத்தணும்? கல்யாணம் பண்ணப் போறது நான். வாழப் போறதும் நான் தான். எனக்கே சம்மதம். அப்புறம் எதுக்கு அம்மா இவ்வளவு யோசிக்கணும் அத்தை?”, என்று அவன் கேட்க “பிரபா அம்மா உனக்கு வேற நல்ல பொண்ணா பாக்குறேன் டா”, என்றாள் யசோதா.

“உங்களை மாதிரி இஷ்டத்துக்கு என்னால என் மனசை மாத்திக்க முடியாது மா. இவ தான் டா உனக்கு பாத்துருக்குற பொண்ணுன்னு அப்பா எப்ப அர்ச்சனா போட்டோ காட்டினாங்களோ அப்பவே அர்ச்சனா என் மனைவி ஆகிட்டா. எனக்கு கல்யாணம் ஒண்ணு நடந்தா அது அர்ச்சனா கூட தான். எனக்கு மீனாட்சி அத்தை மேலயும் அவ மேலயும் எந்த தப்பும் இருக்குறதா தெரியலை. அதனால அவ தான் எனக்கு வேணும். அவ மட்டும் தான் என் மனைவி. இதுக்கு யாரும் தடை சொல்லக் கூடாது. தடை சொல்லவும் முடியாது”, என்று பிரபாகரன் சொல்ல அடுத்த நொடி அங்கே அமைதியே நிலவியது. வேணுகோபால் கூட இந்த டுவிஸ்ட்டை எதிர் பார்க்கவே இல்லை.

அருகில் அமர்ந்திருந்த மனைவியிடம் “வர்ஷி, நீயும் உன் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசு டி. இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லு டி”, என்று கிசுகிசுப்பாக சொன்னான்.

“அண்ணன் பேசுறதை கேட்டீங்க தானே? இப்ப நான் எப்படி சொல்ல முடியும் அத்தான்? இந்த பொண்ணும் அழகா தானே இருக்கு. அண்ணனுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு? அம்மா தான் தேவையில்லாம பேசுறாங்க”, என்றாள் வர்ஷினி.

“இவ வேற”, என்று மனதுக்குள் பல்லைக் கடித்தவன் “ஏய் வர்ஷி, இந்த பொண்ணு இப்பவே அத்தையை எப்படி எதிர்த்து பேசுதுன்னு பாரு? கல்யாணம் ஆகி நம்ம வீட்டுக்கு வந்தா நாத்தனாரான உன்னைக் கூட மதிக்க மாட்டா. நீ அம்மா வீட்ல உக்காந்துருக்கேன்னு உன்னையே குத்திக்காட்டுவா. பரவால்லயா?”, என்று கேட்டான்.

“ஐயோ, அப்படி சொல்லுவாங்களா?”

“ஆமா டி, அவ பேசினதைக் கேட்ட தானே?”

“ஆமா ஆமா, அம்மாவையே எதுத்து பேசுறா. நாளைக்கு நம்மளையும் அடக்கி வச்சிருவா. இவ நம்ம வீட்டுக்கு கூடவே கூடாது”

“அதை என் கிட்ட சொல்லாத. உன் அண்ணா கிட்ட சொல்லு”, என்று வேணுகோபால் சொன்னதும் “அண்ணா அம்மா சொல்றதும் சரி தானே? உனக்கு என்ன பொண்ணா கிடைக்காது?”, என்று கேட்டு வைத்தாள் வர்ஷினி.

“தங்கச்சின்னு பாக்குறேன். இல்லை பல்லைத் தட்டி கையில கொடுத்துருவேன். உனக்கு மட்டும் இல்லை. உன்னை ஏவி விட்டவங்களையும் தான் சொல்றேன்”, என்று பிரபாகரன் சொல்ல வர்ஷினி வாயை மூடிக் கொண்டாள்.

“நம்ம தில்லாலங்கடி வேலையை இவன் கண்டு பிடிச்சிட்டானா? ஒரு மார்கமா பாக்குறானே?”, என்று எண்ணினான் வேணுகோபால்.

யசோதா மகனை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க அவனை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.

“அப்பா நீங்க மேற்கொண்டு பேசுங்க. இந்த கல்யாணம் நடக்கும்”, என்றான் பிரபாகரன்.

“யாரும் எனக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு நினைக்க வேண்டாம். அந்த அளவுக்கு என் நிலைமை ஒண்ணும் மோசமாகலை. இவ்வளவு பேசின பிறகு இந்த கல்யாணம் நடக்குறதை நான் விரும்பலை. தயவு செஞ்சு எல்லாரும் வெளிய போங்க”, என்றாள் அர்ச்சனா.

பிரபாகரன் அவளைக் கூர்மையாக பார்க்க ஒரு நொடிக்கு மேல் அவன் பார்வையைத் தாங்க முடியாமல் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். அவன் இதழ்களில் திருப்தி புன்னகை உதயமானது.

“அம்மாடி அர்ச்சனா, யசோதா பேசினது தப்பு தான். அதையும் விட எல்லா விசயத்தையும் அவ கிட்ட சொல்லாம விட்டது என்னோட தப்பு தான். எனக்காக கொஞ்சம் பொறுமையா இரு மா”, என்று சக்கரவர்த்தி சொல்ல அவருக்கு மரியாதை கொடுத்து அமைதியாக நின்றாள்.

“இங்க பாரு யசோ, நான் உன் கிட்ட சொல்லாம விட்டது என்னோட தப்பு. அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்”, என்று சக்கரவர்த்தி கேட்க “நீங்க என் கிட்ட மன்னிப்பு கேக்க கூடாதுங்க. ஆனா இந்த சம்பந்தம் வேண்டாம்”, என்றாள் யசோதா.

“வாழப் போறது நம்ம பிரபா தான். எனக்கு என் மகன் சந்தோஷம் முக்கியம் யசோதா”

“அதுக்கு?”

“அவன் சொன்னதைக் கேட்ட தானே?”

“அவன் ஆயிரம் சொல்லுவான். அவன் இஷ்டத்துக்கு என்னால விட முடியாது. அவன் சின்னப் பையன். இப்ப நாம சொல்றது அவனுக்கு தப்பா தெரியும். அப்புறம் ஒரு நாள் புரியும். இந்த பேச்சை நிறுத்திட்டு வாங்க போகலாம்”

“முடியாது யசோ. நான் தான் இந்த கல்யாணப் பேச்சு வார்த்தையை ஆரம்பிச்சேன். இவ தான் டா நீ கட்டிக்க போற பொண்ணுன்னு சொல்லி என் மகன் மனசுல ஆசையை வளத்தது நான் தான். அதனால நான் என் மகனுக்கு கெட்டது செய்ய முடியாது. இந்த கல்யாணம் நடந்தே தீரனும். இந்த சக்கரவர்த்திக்கு மதிப்பு கொடுக்குறதா இருந்தா யாரும் எதுவும் பேசக் கூடாது. அப்படி இல்லைன்னா ஆள் ஆளுக்கு பேசுங்க. நான் எதுலயும் தலையிடாம ஒதுங்கிக்கிறேன்”, என்று சொல்ல அடுத்து யாரும் எதுவும் பேசலை.

“உங்களுக்கு எதிரா நாங்க யாரும் பேச மாட்டோம் அண்ணா. யசோதா ஏதோ கோபத்துல பேசிட்டா. நீங்க மேற்கொண்டு பேசுங்க”, என்றாள் சீதா.

“இல்லை, எதுவும் வேண்டாம். நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன். ஆரம்பமே சரி இல்லை. இது சரியா வரும்னு எனக்கு தோணலை”, என்றாள் அர்ச்சனா.

“என் பொண்ணு சொல்றதும் சரி தான் சக்கரவர்த்தி. விருப்பம் இல்லாத இடத்துல கட்டிக் கொடுத்து மீதி இருக்குற அவ உயிரை நான் வாங்க விரும்பலை. என் தப்பால என் பொண்ணு பாதிக்கப் படுறா. பரவால்ல. அவளுக்குன்னு பிறந்தவன் ஒரு நாள் வராமலா போயிருவான். எனக்கு என் பொண்ணு சந்தோஷம் தான் முக்கியம். நான் என் தகுதி தெரிஞ்சும் உன் கிட்ட இந்த கல்யாணம் பத்தி பேசிருக்க கூடாது”, என்றார் சொக்கலிங்கம்.

“ஆமாங்க, இப்பவே இவ்வளவு பேச்சு வருதுன்னா இந்த வீட்ல என் பொண்ணு சந்தோஷமா இருப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு அவ சந்தோஷம் தான் முக்கியம். இந்த கல்யாணம் வேண்டாம். எங்க குடும்பத்தைப் பத்தி உண்மை தெரிஞ்சு அவளை ஏத்துக்குறவன் அவளைக் கல்யாணம் பண்ணிக்கட்டும். அவளுக்கு அழகிருக்கு. திறமை இருக்கு. நல்ல பதவில இருக்கா. எங்க குடும்பத்தை பாக்காம அவளை அவளுக்காக விரும்பி வரவன் வந்து அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா போதும்”, என்றாள் மீனாட்சி.

அர்ச்சனா வீட்டில் மூவருமே ஒன்று போல இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்ல “அதான் அவங்களே சொல்லிட்டாங்களே? ரொம்ப சந்தோஷம். வாங்க போகலாம்”, என்றாள் யசோதா.

“நான் இப்ப என்ன பண்ண பிரபா?”, என்ற கேள்வியைக் கண்ணில் தாங்கி மகனைப் பார்த்தார் சக்கரவர்த்தி. அவன் என்ன சொல்லப் போகிறான் என்று எண்ணி அனைவரும் அவனையே பார்க்க “நான் அர்ச்சனா கூட கொஞ்சம் தனியா பேசணும்”, என்றான் பிரபாகரன்.

“பிரபா, அவங்க தெளிவா பேசிட்டாங்க தானே? இன்னும் அவ கிட்ட பேச என்ன இருக்கு?”, என்று யசோதா கேட்க “அம்மாடி அர்ச்சனா, பிரபா கூட போய் பேசிட்டு வா மா”, என்றார் சக்கரவர்த்தி.

“இல்லை அங்கிள் வேண்டாம். எனக்கு எதுவும் இதைப் பத்தி பேசணும்னு தோணலை”, என்று சொன்னாள் அர்ச்சனா.

“நான் சொல்றேன்ல? போயிட்டு வா மா”, என்று சக்கரவர்த்தி சொல்ல வேறு வழி இல்லாமல் தோட்டத்துக்கு சென்றாள். பிரபாவும் அவள் பின்னே சென்றான்.

“உங்களுக்கு என்ன பைத்தியமா? அவ அவ்வளவு ராங்கித் தனமா பேசிட்டு இருக்கா? நீங்க அவ கூட போய் பேசணும்னு பையனை அனுப்புறீங்க?”, என்று கேட்டாள் யசோதா.

“உனக்கு தான் எங்க என்ன பேசணும்னு தெரியலை. இந்த விஷயம் எல்லாம் எனக்கு முன்னாடியே தெரிஞ்சும் நான் உன் கிட்ட சொல்லலை. உடனே என்னையும் தள்ளி வச்சிருவியா யசோ?”

“என்னங்க?”

“பிரபா சொன்னதைக் கேட்ட தானே? அவன் அர்ச்சனா தான் மனைவின்னு பிக்ஸ் பண்ணிட்டான். இதை ஆரம்பிச்சு வச்சது நான் தான். என்னால என் மகனை ஏமாத்த முடியாது. அது மட்டுமில்லாம இது என் நண்பனோட குடும்பம். இனி இதுவும் என் குடும்பம் மாதிரி தான். அர்ச்சனா தான் எனக்கு மருமகள்”, என்று சொல்ல அதற்கு மேல் யசோதாவால் எதுவும் சொல்ல முடிய வில்லை. ஆனாலும் உள்ளுக்குள் பொருமிக் கொண்டு தான் இருந்தாள்.