Advertisement

அத்தியாயம் 4 

என்னவள் கூட ரதியின்

இனம் தான் என்னை

மன்மதனாக்குவதால்!!!

அவளும் தயக்கம் உதறி அவனை நிமிர்ந்து பார்த்தாள் அர்ச்சனா. அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு தடுமாற்றமாக வந்தது. அவனுடைய கம்பீரமான தோற்றம் அவள் மனதில் பதிந்து போனது.

“எவ்வளவு அழகா கம்பீரமா இருக்கான்? சினிமா ஹீரோ எல்லாம் இவன் கிட்ட தோத்துருவாங்க போல”, என்று எண்ணினாள். அப்படி எண்ணியதில் அவளுக்கே சிரிப்பாக வந்தது.

அவன் நிதானமாக உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அளவெடுக்கும் பார்வை பார்க்க தலை குனிந்து கொண்டாள். “இந்த லுக் விடுறான்? நேத்து இப்படி பாக்கலையே?”, என்று எண்ணினாள். “நீயும் தான் நேத்து அவனைப் பாக்கும் போது இப்படி எல்லாம் தலை குனியலை. இப்ப நீ மாறலையா? அது மாதிரி தான்”, என்று அவளது மனசாட்சி அவனுக்காக வக்காலத்து வாங்கியது.

அவன் பார்க்கிறானா என்று மீண்டும் அவள் அவனைப் பார்க்க அவளுடைய பார்வையை கண்டு ஒரு மென் சிரிப்பு அவன் உதடுகளில் மலர “நம்மளை பாத்துட்டானே?”, என்று சங்கடமாக எண்ணிக் கொண்டாள். சிறிது வெட்கமும் வந்தது. அவள் முகம் சிவந்து போக அதை ரசனையாக பார்த்தான் அவன். சுற்றி அத்தனை பேர் இருக்க இவர்கள் இருவர் மட்டும் தனி உலகில் இருப்பது போல பார்வை பரிமாற்றம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த மணித் துளிகள் அருமையானவை என்று தோன்றியது இருவருக்கும்.

மணமக்கள் தனி உலகில் இருக்க வெளியே போன யசோதா போனை எடுத்து “ஹலோ, யாருங்க. திருப்பி திருப்பி கூப்பிடுறீங்க?”, என்று கேட்டாள்.

“உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு தான் கூப்பிட்டேன்”, என்றாள் மஞ்சு.

“முக்கியமான விஷயமா? என் கிட்ட என்ன பேசணும்? ஆமா முதல்ல நீங்க யாரு?”, என்று கேட்டாள் யசோதா.

“நான் யாருன்னு அப்புறம் சொல்றேன்? இப்ப விஷயத்தை மட்டும் கேளுங்க”

“சீக்கிரம் சொல்லுங்க. என் பையனுக்கு பொண்ணு பாக்க வந்துருக்கேன்”

“அந்த பொண்ணைப் பத்தி பேச தான் நான் இப்ப கால் பண்ணினேன். பொண்ணு வீட்டைப் பத்தி நல்லா விசாரிச்சீங்களா? அவ குடும்பம் பத்தி எல்லாம் தெரியுமா உங்களுக்கு?”

“எல்லாம் தெரியும். எங்க வீட்டுக்காரரோட பிரண்டு பொண்ணு தான். கண்டிப்பா நல்ல குடும்பமா தான் இருக்கும். பொண்ணும் ரொம்ப நல்ல மாதிரியா இருக்கா. என்ன மொட்டைக் கடிதாசி போட்டு கல்யாணத்தை நிறுத்துற மாதிரி ராங்க் கால் பண்ணுறீங்களா?”

“அப்படி எல்லாம் இல்லைங்க. உண்மை தெரியுமான்னு கேக்க தான் கூப்பிட்டேன். தெரிஞ்சதுன்னா எனக்கு ஒண்ணும் இல்லை. தாராளமா கல்யாணம் பண்ணி வைங்க”

“என்ன உண்மை?”

“பொண்ணோட அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டி அது தெரியுமா? அதுவும் தெரிஞ்சு தான் வந்துருக்கீங்களா?”

“என்னது பொண்ணோட அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டியா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் யசோதா.

அந்த அதிர்ச்சியை கவனித்த மஞ்சுளாவுக்கு நிம்மதியாக இருந்தது. “ஆமா, இது தெரியாமலா பொண்ணு பாக்க போனீங்க? அவருக்கு ரெண்டு பொண்டாட்டி தான். முதல் பொண்டாட்டி சரியில்லைன்னு தான் அவர் ரெண்டாவது பொண்டாட்டியை கட்டினார். நீங்க இப்ப பாக்க வந்தது முதல் பொண்டாட்டியோட பொண்ணு. இவ அவளோட அம்மா மாதிரி இருந்தா என்ன பண்ணுவீங்க? உங்க மகனுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைப்பீங்களா? இவ மட்டும் இல்லாம அவருக்கு இன்னொரு பொண்ணும் இருக்கு. அதைச் சொன்னாங்களா உங்க கிட்ட?”

“இல்லையே எனக்கு தெரியாதே? ஆமா நீங்க யாரு?”

“நான் பாதிக்கப் பட்ட ரெண்டாவது பொண்டாட்டி தான். நான் தான் சொன்னேன்னு அவங்க கிட்ட சொல்லாதீங்க. ஏற்கனவே என் வீட்டுக்காரர் அவ பக்கமே பேசுவார். இப்ப நான் இந்த உண்மையைச் சொன்னேன்னு தெரிஞ்சா என்னை மன்னிக்கவே மாட்டார்”

“நீங்க சொல்றது எல்லாம் உண்மையா?”

“ஆமாங்க. அந்த பொம்பளை சரி இல்லைன்னு தான் அவர் என்னைக் கல்யாணம் பண்ணினார். ஆனா இப்ப வரைக்கும் அந்த பொம்பளை எங்க வீட்டுக்காரருக்கு டைவர்ஸ் தரலை. கல்யாணப் பொண்ணு பத்தி குறை சொல்ல நான் விரும்பலை.  ஆனா அந்த பொம்பளை தப்பான பொம்பளை தான். நாளைக்கு நீங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு உங்களுக்கு ஏதாவது அவமானம் வரக் கூடாதுள்ள? சம்பந்திங்குற முறையில உங்களுக்கு கெட்ட பேர் வரும் தானே?”

“உண்மையிலே அந்த அம்மா மோசமா?”

“ஆமாங்க. மோசம் இல்லைன்னா என் வீட்டுக்காரர் எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணப் போறார்? அவங்க மேல எந்த தப்பும் இல்லைன்னா அவங்க உங்க கிட்ட உண்மையைச் சொல்லி இருக்க வேண்டியது தானே? இப்ப நீங்களே போய்க் கேளுங்க அவருக்கு இன்னொரு குடும்பம் இருக்கான்னு”

“நீங்க சொல்றதை என்னால நம்பவே முடியலை”

“நீங்க நம்பித் தான் ஆகணும். அந்த பொம்பளையை பிடிக்காம தான் என் வீட்டுக்காரர் என்னைக் கல்யாணம் பண்ணினார். ஒரு நல்ல பொம்பளைன்னா என்ன பண்ணனும்? அவரை விட்டு பிரிஞ்சிருக்கணும்ல? ஆனா இப்ப வரைக்கும் அவரை பிடிச்சு வச்சிருக்கா. நானும் என் பொண்ணும் தான் அனாதையா ஆகிட்டோம். இப்ப வரைக்கும் என் புருசனுக்கு டைவர்ஸ் தரலை. அவரும் நானும் எவ்வளவோ கெஞ்சிட்டோம். அந்த மீனாட்சி அசைஞ்சே கொடுக்கலை”, என்று கண்ணீர் வடிக்க யசோதா அனைத்தையும் நம்பி விட்டாள்.

இந்த விஷயத்தை சக்கரவர்த்தி சொல்கிற விதத்தில் சொல்லி இருந்தால் யசோதாவுக்கு பெரிதாக தெரிந்திருக்காதோ என்னவோ? ஆனால் அவர்கள் உண்மையை மறைத்ததே யசோதாவுக்கு பிடிக்க வில்லை,

“நீங்க போனை வைங்க மா, நான் பேசிக்கிறேன். ரொம்ப நன்றி கடைசி நேரத்துல என் கண்ணைத் திறந்ததுக்கு”, என்று சொல்லி போனை வைத்தாள் யசோதா. அடுத்து ஒரு நொடி அவள் மூளை வேலை செய்யவே இல்லை. அந்த இடத்தில் கோபம் ஆக்கிரமித்து அவளது அறிவு மழுங்கி விட்டது. அறிவு வேலை செய்திருந்தால் இந்த உண்மையை நீங்க எதுக்கு சொல்றீங்க? அதில் உங்களுக்கு என்ன அவ்வளவு சந்தோஷம்? என்னோட நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது? என்று கேட்டிருப்பாள்.

எதிர்பாராத அதிர்ச்சி யசோதாவின் கோபத்தைக் கிளப்பி விட்டது. அவசரமாக உள்ள வந்தாள். அவள் வரவையும் அவள் முகத்தில் இருந்த கோபத்தையும் ஆர்வமாக பார்த்தான் வேணுகோபால். அவன் ஆர்வத்தை கவனித்த பிரபாகரன் அன்னையின் கோபத்தைக் கண்டு புருவம் உயர்த்தினான்.

“யாரு யசோ போன்ல?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி.

“அது இப்ப முக்கியம் இல்லைங்க. அதை விட முக்கியமான விசயம் இருக்கு”

“என்ன யசோ?”

“இந்த கல்யாணம் நடக்காது. எல்லாரும் கிளம்புங்க”, என்று யசோதா சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து போக முதல் ஆளாக எழுந்து கொண்டான் வேணுகோபால். அவனை பிரபாகரன் முறைத்துப் பார்க்க அவசரமாக அமர்ந்து கொண்டான்.

மீனாட்சி மற்றும் சொக்கலிங்கம் முகம் கலக்கத்தைக் காட்டியது. அர்ச்சனாவோ திகைப்புடன் பிரபாகரனைப் பார்த்தாள். அதே நேரம் அவனும் அவளைப் பார்த்தான். என்ன நினைத்தானோ “நான் பாத்துக்குறேன்”, என்னும் விதமாய் கண்களை மூடித் திறந்தான். அவன் கண்ணசைவின் காரணமாக அவளும் பொறுமையாக எழுந்து நின்றாள்.

“யசோ உனக்கு என்ன பைத்தியமா? நல்ல விஷயம் நடக்கும் போது என்ன பேசுற?”, என்று கோபமாக கேட்டார் சக்கரவர்த்தி.

“எனக்கு பைத்தியம் இல்லை. ஆனா இந்த குடும்பத்துல கல்யாணம் பண்ணினா நம்ம குடும்ப மானம் தான் போகும். போயும் போயும் இந்த குடும்பத்துலயா என் மகனுக்கு நீங்க பொண்ணு பாக்கணும்?”, என்று யசோதா கேட்க அர்ச்சனா கோபத்தை அடக்கினாள்.

“யசோதா என்ன சொல்ற நீ? இவ்வளவு நேரம் ஒழுங்கா தானே இருந்த? அர்ச்சனாவையும் பிடிச்சிருக்குன்னு சொன்னியே?

“இவ்வளவு நேரம் உண்மை தெரியாதே? இப்ப தானே தெரிஞ்சது? இப்ப எனக்கு பொண்ணைப் பிடிக்கலை”

“உளறாத யசோ”

“நான் உளறலை. பொண்ணோட அப்பாவுக்கு ரெண்டு குடும்பம் இருக்கு. அது உங்களுக்கு தெரியுமா?”, என்று யசோதா கேட்க சக்கரவர்த்தி ஆம் என்னும் விதமாய் அமைதியாக இருந்தார்.

“ஓஹோ அப்படின்னா உங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கு. அப்படித் தானே?”, என்று அவள் அடக்கப் பட்ட கோபத்துடன் கேட்க “ஏமா தங்கச்சி, நான் இதை ஏற்கனவே சக்கரவர்த்தி கிட்ட சொல்லிட்டேனே? சொன்ன பிறகு தான் இந்த சம்பந்தமே பேசினோம்?”, என்று சொக்கலிங்கம் சொல்ல யசோதா சக்கரவர்த்தியை முறைத்தாள்.

“நான் பொறுமையா சொல்லணும்னு நினைச்சேன் யசோ. சரி இப்ப உனக்கு இந்த விஷயத்தைச் சொன்னது யாரு?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி.

“யாரோ எதுக்கோ சொன்னாங்க. அது இப்ப விஷயம் இல்லை. இந்த குடும்பத்துல இருந்து பொண்ணு எடுத்தா நம்ம குடும்ப மானம் என்ன ஆகுறது?”, என்று யசோதா கேட்க கண்களில் கண்ணீரோடு சொக்கலிங்கத்தை முறைத்தாள் மீனாட்சி.

“பாவி மனுசா நீ செஞ்ச தப்பு என் பொண்ணு வாழ்க்கையை எப்படி கேள்வி குறி ஆக்கிருக்குன்னு தெரியுதா?”, என்று அவள் பார்வையால் கேட்க சொக்கலிங்கம் மனைவியை எதிர்க் கொள்ள முடியாமல் தலை குனிந்தார்.

“யசோ, ஒரு சின்ன விஷயத்தை எதுக்கு பெருசு பண்ணிட்டு இருக்க? முதல்ல உக்காரு, பேசுவோம்”, என்றார் சக்கரவர்த்தி.

அர்ச்சனாவோ தன்னுடைய அம்மாவைப் பார்த்தாள். அவள் கண்கள் “இதுக்கு தான் நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்”, என்று சொன்னது.

“சம்பந்தி அம்மா நாங்க வாழ்ந்து முடிச்சவங்க. என் பொண்ணு வாழ வேண்டியவ. பெரியவங்க பண்ணின தப்பு என் பொண்ணு வாழ்க்கையை பாதிக்க கூடாது. கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க”, என்று மீனாட்சி கேட்க அன்னையை முறைத்தாள் அர்ச்சனா.

“நாங்க கௌரவமா வாழ விரும்புறோம். எங்களுக்கு இந்த பஞ்சாயத்து எல்லாம் தெரியாது. என் மகனுக்கு நல்ல குடும்பத்துல இருந்து பொண்ணு எடுக்க நினைக்கிறேன். நாளைக்கு எங்க சொந்தக்காரங்க கண்டிப்பா உங்க குடும்பத்தை பத்தி விசாரிப்பாங்க. அப்ப நாங்க பதில் சொல்லணுமே? நாங்க வரோம். என்ன எல்லாரும் உக்காந்துருக்கீங்க? எந்திங்க. அண்ணி, பிரபா, அகில், வர்ஷி, மாப்பிள்ளை எல்லாரும் எந்திரிங்க போகலாம்”

“யசோ நீ பேசுறது சரி இல்லை”, என்று சக்கரவர்த்தி சொல்ல “எல்லாம் சரி தான். இந்த சம்பந்தம் வேண்டாம்னா வேண்டாம்”, என்று நிலையாய் நின்றாள்.

“இவ்வளவு நேரம் அர்சசனாவை பிடிச்சிருக்குன்னு சொன்ன தானே? அவளுக்காக பாரு யசோ”

“இப்ப சொல்றேன் பிடிக்கலை. இந்த பொண்ணு என் மகனுக்கு வேண்டாம்”, என்று யசோதா சொல்ல “ஹலோ ஒரு நிமிஷம், என்ன விட்டா பேசிட்டே போயிட்டு இருக்கீங்க? நீங்க என்ன சொல்றது என்னை வேண்டாம்னு? நான் சொல்றேன். எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். உங்க மகனும் வேண்டாம். உங்க மகன் இல்லைன்னா எனக்கு மாப்பிள்ளையே கிடைக்காதா? இப்பவே இப்படி பேசுறவங்க கல்யாணத்துக்கு பிறகு என்ன எல்லாம் பேச மாட்டீங்க? கிளம்புங்க கிளம்புங்க. காத்து வரட்டும்”, என்று நக்கலாக சொன்னாள் அர்ச்சனா.

“அச்சு ஒரு நிமிஷம் அமைதியா இரு டி”, என்றாள் மீனாட்சி.

“நீ சும்மா இரு மா. பொண்ணு பாக்க வந்தா பிடிக்கி பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கணும். அதை விட்டுட்டு கண்டது எல்லாம் பேசினா நான் இப்படி தான் பேசுவேன்”

“ஏய் என்ன டி திமிரா?”, என்று கேட்டாள் யசோதா.

“ஆமா திமிர் தான். ஆனா நீங்க போட்ட சாப்பாட்டை தின்னு வந்த திமிர் இல்லை. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். நீங்க போகலாம்”

“அவ இவ்வளவு பேசுறா. இன்னும் எல்லாரும் உக்காந்துருக்கீங்க? வாங்க போகலாம். இது மோசமான குடும்பம். இப்பவே பெரியவங்கன்னு மரியாதை இல்லாம எப்படி பேசுறான்னு பாருங்க”, என்றாள் யசோதா.

Advertisement