Advertisement

“அவங்க வந்துட்டாங்க போல. வா”, என்று சொல்லி வாசலுக்கு சென்றார்.

மொத்த குடும்பமும் காரிலிருந்து இறங்க மீனாட்சி மற்றும் சொக்கலிங்கம் இருவரும் இரு கரம் கூப்பி அனைவரையும் வர வேற்றார்கள். அந்த மரியாதையே யசோதாவுக்கு பிடித்து விட்டது. பிரபாகரனை பார்த்ததும் இன்னும் அதிகமாகவே மீனாட்சிக்கு பிடித்து விட்டது.

உள்ளே வரும் போதே சக்கரவர்த்தி காதில் “நல்ல மரியாதை தெரிஞ்சவங்களா இருக்காங்க”, என்று சொன்னாள் யசோதா.

“ஆமா யசோ”, என்று மனைவியை ஆமோதித்தார் சக்கரவர்த்தி.

“ஆனா வீடு தான் சின்னதா இருக்கு”

“அவன் பெரிய வீடு அண்ணாநகர்ல இருக்கு யசோ”

“அப்ப ஏன் அங்க இல்லாம இங்க இருக்காங்க?”, என்று யசோதா கேட்க அதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் திகைத்து விட்டார் சக்கரவர்த்தி.

“நின்னுட்டே இருக்கீங்களே? உக்காருங்க”, என்று மீனாட்சி சொல்ல அனைவரும் அமர்ந்தார்கள். அதில் யசோதா கேட்ட கேள்வியை மறந்து விட்டாள். சக்கரவர்த்தியும் அப்பாடா என்று நிம்மதி கொண்டார்.

ஒரு சோபாவில் நடுவில் பிரபாகரன் அமர அவனுக்கு இருபுறமும் சக்கரவர்த்தி மற்றும் யசோதா இருவரும் அமர்ந்தார்கள். இன்னொரு சோபாவில் அகிலன் வர்ஷினி வேணுகோபால் மூவரும் அமர்ந்தார்கள்.

சீதா ஒரு தனி இருக்கையில் அமரப் போக “பிரபா நீ அந்த சோபால உக்காரு. அத்தை உன் அம்மா பக்கத்துல உக்காரட்டும்”, என்று சக்கரவர்த்தி சொன்னதும் பிரபாகரன் எழுந்து தனி சோபாவில் அமர்ந்தான். சீதா யசோதா அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

மற்றொரு சோபாவில் சொக்கலிங்கம் அமர்ந்தார். “டீ கொண்டு வரேன்”, என்று மீனாட்சி சொல்ல “அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல என் மருமகளைக் கூப்பிடுங்க”, என்றாள் யசோதா.

“இருங்க கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்ற மீனாட்சி உள்ளே சென்று “வா பாப்பா, உன்னைக் கூப்பிடுறாங்க”, என்றாள்.

அவ்வளவு படித்து உயர்ந்த பதவியில் இருக்கும் அர்ச்சனாவுக்கு கூட அந்த சூழ்நிலையை எப்படி கையாள என்று தெரிய வில்லை. “அம்மா ஒரு மாதிரி படபடப்பா இருக்கு மா”, என்றாள். இது இந்திய பெண்களுக்கே உரித்தான உணர்வு போல?

“நான் தான் இருக்கேன்ல? வா டா”, என்று சொல்லி மீனாட்சி அர்ச்சனாவை அழைத்து வந்தாள். “பொண்ணு வந்துருச்சு பாரு டா”, என்றார் சக்கரவர்த்தி.

சிறு சிரிப்புடன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். ஏற்கனவே பார்த்த பெண் தான் என்றாலும் இப்போது தான் உரிமையான பார்வையைப் பார்த்தான். “நீயும் மாப்பிள்ளையை பாரு பாப்பா”, என்று மீனாட்சி அவள் காதில் சொல்ல தயக்கத்துடன் அரை மனதாக நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் வியப்பில் விரிந்தது.

இவனா என்று அவள் ஆச்சர்யமாக அவனைப் பார்க்க அவனோ அவளைக் கண்டு லேசாக புன்னகைத்தான். அதுவும் ஆச்சர்யத்தில் விரிந்த அவள் கண்களுக்குள் விழுந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். அர்ச்சனாவும் அவனது சிரிப்பில் கவரப் பட்டாள். அவன் சிரிப்பில் உயிர்ப்பு இருப்பது போல அவளுக்கு தோன்றியது.

அவனுடைய புன்னகையில் வசீகரிக்கப் பட்டவள் முதல் முறையாக ஒரு ஆணை எதிர்க் கொள்ள முடியாமல் வெட்கத்துடன் தலை குனிந்தாள். இந்த உணர்வே அவளுக்கு புதியது. அதைக் கண்டவனுக்கு ஆண் என்ற கர்வம் கூட வந்தது. அவளுக்கு தன்னை பிடித்திருக்கிறது என்று அவன் உணர்ந்து கொண்டான்.

நேற்று அவள் அவனிடமும் வெங்கட்டிடம் பேசும் போது அவர்களின் கண்களைப் பார்த்து நிமிர்வாக பேசினாள். ஆனால் இப்போதோ அவன் கண்களை பார்க்க முடியாமல் தலை குனிகிறாள். இந்த சாட்சியை விட வேறு என்ன வேண்டுமாம் அவனுக்கு? ஒரு பெண் மனதுக்கு பிடித்தவனிடம் மட்டுமே வெளிப்படுத்தும் உணர்வை அவள் அவனிடம் வெளிப் படுத்தி விட்டாள்.

அவன் முடிவு செய்து விட்டான். அவள் தான் அவன் மனைவி. இதைப் போல இன்னொரு பெண்ணைத் தன்னால் பார்க்க முடியாது என்று அவன் மனம் உறுதி கொண்டது.

“உக்காரு மா, ஏன் நின்னுட்டே இருக்க?”, என்று யசோதா சொல்ல சொக்கலிங்கம் அமர்ந்திருந்த சோபாவில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள். முதல் முறையாக தன்னருகே அமர்ந்திருக்கும் மகளை அன்பாக பார்த்தார் சொக்கலிங்கம். அங்கே மட்டும் தான் இடம் இருந்தது. வேறு இடம் இருந்திருந்தால் அங்கே அமர்ந்திருக்க மாட்டாள் அவள்.

அமர்ந்த பிறகு கொஞ்சம் படபடப்பு குறைந்தாலும் அது முழுதாக அடங்க வில்லை. அதுவும் பிரபாகரன் அவளைப் பார்வையால் விழுங்கிக் கொண்டிருக்க அவனை நிமிர்ந்து பார்க்காமலே அதை அவளால் உணர முடிந்தது. அது கூட கொஞ்சம் படபடப்பைத் தான் தந்தது.

“அர்ச்சனா… அது தானே உன் பேர்?”, என்று கேட்டாள் யசோதா.

“ஆமா”

“நல்ல பேர். அர்ச்சனா, இவங்க சீதா, என்னோட அண்ணி. அப்புறம் அது அகிலன் என் ரெண்டாவது பையன். அது வர்ஷினி என்னோட பொண்ணு. அவர் எங்க வீட்டு மாப்பிள்ளை. அப்புறம் இவன் தான் என் மூத்த பையன். அவனை நல்லா பாத்துக்கோ”, என்று சொல்லி சிரித்தாள் யசோதா.

“டீ குடிச்சிட்டே பேசிட்டு இருங்க”, என்று சொல்லி டீ மற்றும் ஸ்நாக்ஸை அனைவருக்கும் கொடுத்தாள் மீனாட்சி. டீ குடிக்கும் போது வேறு கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். யசோதாவும் அர்ச்சனாவின் வேலையைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள்.

டீ குடித்து முடித்ததும் “ஏம்மா அர்ச்சனா எங்க பையனை உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி.

“எங்க அம்மாவுக்கு பிடிச்சிருந்தா எனக்கு பிடிச்சிருக்கு”, என்று அவள் சொல்ல அவள் பதிலில் இரண்டு பேர் மனது பெரிய அளவில் பாதிக்கப் பட்டது.

பாதிக்கப் பட்ட நபர்களில் ஒருவர் சொக்கலிங்கம். மகள் தன்னை இப்போது வரை தந்தையாக அங்கீகரிக்க வில்லை என்று எண்ணி அவர் மனம் வேதனை கொண்டது. அப்படி அவரை அப்பாவாக நினைத்திருந்தால் அம்மா அப்பா விருப்பம் என்று சேர்த்து சொல்லி இருப்பாளே?

அவள் பதிலில் பாதிக்கப் பட்ட மற்றொரு ஆள் பிரபாகரன். ஆம் அவனே தான். “இவளுக்கு என்னைப் பிடிக்கலையா? வீட்ல சொல்றாங்கன்னு தான் சம்மதிக்கிறாளா?”, என்று உள்ளுக்குள் எண்ணி கவலை கொண்டான். “அடங்கு டா, அவ ஒண்ணும் நீயா பாத்த பொண்ணு இல்லை. உங்க அப்பா காட்டின பொண்ணு தானே?”, என்று கேள்வி கேட்டது அவன் மனசாட்சி.

“இருந்தாலும்….”, என்று அவன் ஆசை கொண்ட மனது அதை ஏற்றுக் கொள்ளாமல் சிணுங்க தான் செய்தது.

யசோதா அர்ச்சனாவிடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தாள். யசோதா கேட்கும் கேள்விகளுக்கு அர்ச்சனாவும் சிறு புன்னகையுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் உரையாடலே மற்றவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்தது. அன்னையும் வரப் போகும் மனைவியும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தால் எந்த ஆணுக்கு தான் பிடிக்காது.

“அப்பா, அம்மாவுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருச்சு போல?”, என்று தந்தையின் காதைக் கடித்தான் பிரபாகரன்.

சக்கரவர்த்திக்கு அர்ச்சனாவின் குடும்ப விவரம் முழுவதும் யசோதாவுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற கவலை எழுந்தது.

“என்னப்பா யோசிக்கிறீங்க?”, என்று கேட்டான் பிரபாகரன்.

“சொக்கலிங்கத்துக்கு ரெண்டு குடும்பம் இருக்குற விஷயம் இன்னும் உங்க அம்மாவுக்கு தெரியாது டா. தெரிஞ்சா இப்படி பேசுவாளா? முன்னாடியே சொல்லிருக்கனுமோன்னு இப்ப தோணுது பிரபா“

“அம்மா, அர்ச்சனா கிட்ட நல்லா பேசுறாங்கப் பா. அவங்களுக்கு அவளை ரொம்ப பிடிச்சிட்டு போல? அதனால அம்மா அந்த விஷயம் தெரிஞ்சா எதுவும் சொல்ல மாட்டாங்க. நாம வீட்டுக்கு போகும் போது சொல்லிக்கலாம்”, என்றான் பிரபாகரன்.

அவர்கள் இருவரும் பேசுவதை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் வேணுகோபால். “என்ன இன்னும் அந்த பொம்பளை போன் பண்ணலை? அது போன் பண்ணுறதுக்குள்ள இங்க கல்யாணத்தையே பேசி முடிச்சிருவாங்க போலயே?”, என்று எண்ணிக் கொண்டான்.

அவனது பதட்டத்தை வியப்பாக பார்த்த பிரபாகரன் அதை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விட்டான். அவனுக்கு அர்ச்சனாவை பார்வையிடும் வேலை இருந்ததே.

உண்மையிலே யசோதாவுக்கு அர்ச்சனாவை அதிகமாகவே பிடித்து விட்டது. அவளது அழகும் அடக்கமும் டாக்டர் என்ற பதவியும் அவள் மேல் மரியாதையையும் அன்பையும் உருவாக்கியது. பிரபாகரனுக்கு பொருத்தமான பெண் இவள் தான் என்று அவள் மனம் ஒப்புக் கொண்டது.

“யசோதா, உனக்கு அர்ச்சனாவைப் பிடிச்சிருக்கா? கல்யாண தேதி குறிச்சிறலாமா?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி.

“ரொம்ப பிடிச்சிருக்குங்க. இவளை விட பொருத்தமா பிரபாவுக்கு வேற யார் கிடைப்பா? சீக்கிரம் தேதி குறிங்க. என்னைக் கேட்டா இப்பவே என் மருமகளை கையோட கூட்டிட்டு போயிருவேன்”, என்று உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பதில் சொன்னாள் யசோதா. அதைக் கேட்டு மீனாட்சி மனம் குளிர்ந்தது.

அப்போது யசோதாவின் போன் அடிக்க அதை எடுத்து கட் செய்தாள். மீண்டும் அழைக்கவும் “திருப்பி திருப்பிக் கூப்பிடுறாங்க. என்னன்னு கேட்டுட்டு வரேன்”, என்று சொல்லி வெளியே சென்றாள். அப்போது வேணுகோபால் முகத்தில் வந்த சந்தோசத்தைக் கண்டான் பிரபாகரன். அவன் உள்மனது எதுவோ சரியில்லை என்று அவனுக்குச் சொன்னது. ஆனால் என்ன என்று அவனால் கணிக்க முடிய வில்லை.

யசோதா வந்த பிறகு திருமண விஷயம் பேசிக் கொள்ளலாம் என்று மற்றவர்கள் வேறு விசயங்களைப் பேசிக் கொண்டிருக்க பிரபாகரனோ இது தான் சாக்கென்று அர்ச்சனாவை பார்வையிட ஆரம்பித்து விட்டான்.

ரோஜா வண்ணத்தில் வெள்ளைக் கற்கள் பதித்த ஷிஃபான்  புடவையைக் கட்டி இருந்தாள். நீளமாக இல்லாமல் போனாலும் இடுப்பு வரை இருந்த அடர்த்தியான கூந்தலை சிறு பின்னல் போட்டு ஒரு பேண்டில் மாட்டி இருந்தாள். ஒரு பக்கம் மல்லிகைப்பூ வழிந்து தொங்கியது.

காதுகளில் ஒரு சின்ன குடை சிமிக்கி, கழுத்தில் ஹார்டின் டாலர் உள்ள ஒரு சின்ன செயின், கொஞ்சம் பெரியதாக இருந்த நெக்லஸ், ஒரு கையில் இரண்டு தங்க வளையல்கள் மற்றொரு கையில் தங்க நிறக் கடிகாரம் அணிந்திருந்தாள்.

மாநிறத்துக்கும் சற்று அதிகமான சிவந்த நிறமும் அமைதியை வெளிபடுத்தும் அவளது கருவண்டு விழிகளும் அழகான பிறை போன்ற நெற்றியும் சின்னஞ்சிறிய நாசியும் செந்நிற இதழ்களும் என அவள் அழகை இன்னும் வர்ணித்துக் கொண்டே போகலாம் போல? அப்படி இருந்தாள். இளம் மருத்துவர் என்பதால் அறிவுக்களையும் அவள் முகத்தில் சொட்டியது.

காதல் தொடரும்….

Advertisement