இப்போது அவள் தன்னைப் பார்த்ததும் நேற்று அவள் தன்னைப் பார்த்ததை நினைவு கூர்வாளா? இல்லை என் முகத்தை மறந்திருப்பாளா? கட்டாயம் மறந்திருப்பாள். ஒரு நாளைக்கு பல பேரை பார்க்கும் அவளுக்கு என் முகம் மட்டும் எப்படி நினைவிருக்கும்? ஆனா ஒரு நாள் தானே ஆகிருக்கு? கண்டிப்பா மறந்திருக்க மாட்டா? நினைவு வச்சிருந்தா என்னைப் பாத்ததும் அவ கண்ணு அப்படியே விரியும்ல? என்று சிறு பிள்ளைத் தனமாக எண்ணிக் கொண்டிருந்தான்.

கூடவே தானா இப்படி எல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. இதெல்லாம் ஹார்மோன்களின் விளையாட்டு என்று அந்த பிஸ்னஸ் மேனுக்கு புரிய வில்லையோ என்னவோ?

அனைவரும் பெண் பார்க்க கிளம்ப “எனக்கு படிக்க வேண்டியது இருக்கு. நான் வரலை”, என்று சொல்லி விட்டாள் வினோதினி. அவளுக்கு இப்போது தனிமை வேண்டும். சிறிது நேரம் ஏங்கி ஏங்கி அழுதால் தான் மனபாரம் தீரும் என்ற நிலையில் இருந்தாள் அவள். அது மட்டுமில்லாமல் அவளால் இன்னொரு பெண்ணை பிரபாகரன் அருகே நிற்க வைத்துப் பார்க்க முடியாது.

அதனால் அவளை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைவரும் கிளம்பினார்கள். வேணுகோபாலோ சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தான். அதுவும் பிரபாகரன் முகத்தில் இருக்கும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் பார்க்கும் போது “இன்னும் கொஞ்ச நேரம் தான் மச்சான் உன்னோட இந்த சந்தோஷம் எல்லாம். அதைக் கெடுக்க நான் என்ன எல்லாம் பண்ணனுமோ அதை பக்காவா பண்ணிட்டேன்”, என்று மனதில் எண்ணிக் கொண்டான்.

ஆம். அவன் பிரபாகரன் திருமணத்தைக் கெடுக்க மிகப் பெரிய சதி வலையை தான் பின்னி வைத்திருந்தான். நேற்று சக்கரவர்த்தியும் பிரபாகரனும் பேசியதை ஒட்டுக் கேட்ட பின்னர் சொக்கலிங்கத்தின் இரண்டு மனைவிகள் பற்றி யசோதாவிடம் போட்டுக் கொடுக்க வேண்டும் என்று தான் முதலில் நினைத்தான்.

ஆனால் அப்படிச் செய்தால் பிரபாகரன் மற்றும் சக்கரவர்த்தி இருவரும் அவனை தவறாக நினைக்க வாய்ப்பு உண்டு. அவன் கஷ்டப் பட்டு உருவாக்கிய நல்ல பெயரை கெடுக்க அவனுக்கு மனதில்லை. அதனால் அவன் தெளிவாக காய் நகர்த்த வேண்டும் என்று முடிவு எடுத்தான்.

சொக்கலிங்கத்தின் வீட்டு எண்ணுக்கு அழைத்தான். சொக்கலிங்கம் எடுத்தால் என்ன செய்வது என்று குழப்பம் வந்தது தான். ஆனால் அவன் நல்ல நேரம் போனை எடுத்தது மஞ்சுளா.

“ஹலோ யாருங்க?”

“சொக்கலிங்கத்தோட ரெண்டாவது மனைவிங்களா?”, என்று அவன் கேட்க அந்த பக்கம் அவள் பல்லைக் கடிப்பது அவனுக்கு நன்கு கேட்டது.

“கோபப் படாதீங்க மேடம். எனக்கு உங்க உணர்வுகள் புரியுது. முதல் மனைவி விலகி போயிருவா, நீங்க ராணி ஆகிறலாம்னு நினைச்சு வந்துருப்பீங்க? ஆனா உங்க ஆசை எல்லாம் புஸ்வாணமா போச்சே?”, என்று பரிதாபப் பட்டான்.

“ஹலோ யாரு டா நீ? இப்ப உனக்கு என்ன வேணும்? முதல்ல எங்க குடும்ப விஷயம் உனக்கு எப்படி தெரியும்?”

“எனக்கு எப்படியோ தெரியும்? இப்ப நான் உங்களுக்கு ஒரு நல்ல நியூஸ் சொல்ல போறேன்”

“இங்க பாரு. நானே செம கடுப்புல இருக்கேன். நீ வேற வெறி ஏத்தாத?”

“என்ன கடுப்பு? அர்ச்சனாவை பொண்ணு பாக்க வர கடுப்பு தானே?”

“இது உனக்கு எப்படி தெரியும்?”

“இதை யூகிக்க பெரிய அறிவு வேண்டாம் மேடம்”

“இப்ப நீ எதுக்கு தான் போன் பண்ண? அதைச் சொல்லு”

“இப்ப பொண்ணு பாக்க வந்தாலும் கல்யாணத்தை முடிவு பண்ணுற ஐடியால தான் ரெண்டு குடும்பமும் இருக்காங்க”

“அப்படியா? இதை தடுத்து நிறுத்த முடியாதா?”

“நீங்க நினைச்சா முடியும் மேடம்”

“நானா? நான் என்ன செய்ய? என்னால முடிஞ்ச எவ்வளவோ பண்ணிட்டேன்”

“இன்னும் ஒரே ஒரு விஷயம் பண்ணுங்க. தன்னால இந்த சம்பந்தம் நின்னுரும்”

“என்ன செய்யனும்?”

“மாப்பிள்ளையோட அம்மாவுக்கு போன் பண்ணி அர்ச்சனா அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டின்னு சொல்லணும்”

“ஏன் அவங்களுக்கு இந்த விஷயம் தெரியாதா?”

“தெரிஞ்சா கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்கன்னு மாப்பிள்ளையோட அப்பா மறைச்சிட்டார். இப்ப தெரிஞ்சா கல்யாணம் நின்னுரும்ல?”

“கண்டிப்பா நின்னுரும். சூப்பர் ஐடியா. ஆனா அந்த அம்மா நம்பர் தெரியாதே”

“இது பெரிய விஷயமா? நான் தரேன். நோட் பண்ணிக்கோங்க”, என்று சொல்லி நம்பர் கொடுத்தான்.

“இப்பவே கால் பண்ணி பேசுறேன்”

“தப்பு பண்ணுறீங்க பாத்தீங்களா? பொண்ணு பாக்க போன அப்புறம் சொன்னா தானே அங்க பங்ஷன் நடக்காம பிரச்சனை வெடிக்கும். இப்பவே சொன்னா மாப்பிள்ளை வீட்ல அப்படியே திரும்பிப் போயிருவாங்க. எந்த பிரச்சனையும் இல்லாம போயிருமே? நாளைக்கு சரியா ஆறு மணிக்கு கால் பண்ணுங்க. அப்ப தான் சுவாரசியமா இருக்கும்”

“அதுவும் சரி தான். அந்த அர்ச்சனா அலங்காரம் பண்ணி சபைல நிக்கணும். அவளை வேண்டாம்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லணும். அப்ப அந்த மீனாட்சி அசிங்கப் பட்டு சாகனும். நான் நாளைக்கே கால் பண்ணுறேன். ஆனா ரெண்டு கல்யாணம் பண்ணினது தப்பு இல்லைன்னு அந்த அம்மா சொல்லுச்சுன்னா என்ன பண்ண?’

“பேசுற விதத்துல பேசுங்க மேடம்”

“சரி. ஆமா நீங்க யார்? இந்த சம்பந்தம் நின்னா உங்களுக்கு என்ன லாபம்?”

“எனக்கு ஒரு லாபமும் இல்லை”

“அப்ப ஏன் இவ்வளவு மெனக்கிடுறீங்க?”

“உங்க நலம் விரும்பின்னு வச்சிக்கோங்க”, என்று சொல்லி போனை அணைத்து விட்டான்.

அதை நினைத்துப் பார்த்தவனுக்கு நடக்கப் போவதை எண்ணி உள்ளுக்குள் குதூகலமாக இருந்தது. ஆனால் அவன் பிரபாகரனைப் பற்றி முழுதாக அறிய வில்லை. அவன் ஒன்று நினைத்தால் அதை முடிக்காமல் விட மாட்டான் என்ற உண்மை தெரிந்தாலும் அதன் தீவிரம் வேணுவுக்கு புரிய வில்லை.

அதனால் உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் வெளியில் அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டான். பிரபாகரனோ சற்று ஆர்வமாகவே வந்தான் அவனுடைய தேவதையைக் காண? இரண்டு கார்களில் வீட்டில் இருந்து கிளம்பினார்கள்.

அதே நேரம் சொக்கலிங்கமும் தனது வீட்டில் இருந்து கிளம்பினார் மகளுக்கு ஒரு நல்லது நடக்கும் போது அப்பாவாக கூட இருக்க வேண்டும் என்று.

அவர் கிளம்பும் போதே “இப்ப எங்க போறீங்க?”, என்று எரிச்சலுடன் கேட்டாள் மஞ்சுளா.

“போகும் போது எங்க போறன்னு கேக்குற? அறிவிருக்கா மஞ்சு உனக்கு? நான் எங்க போறேன்னு உனக்கு தெரியாதா?”, என்று எரிச்சலுடன் கேட்டார் சொக்கலிங்கம்.

“தெரியப் போய் தான் கேக்குறேன். நீங்க அங்க போக கூடாது”

“அதைச் சொல்ல நீ யாரு மஞ்சு? நான் என் பொண்டாட்டி பிள்ளையைப் பாக்க போறேன்”

“அப்படினா நாங்க ரெண்டு பேரும் யாரு?”

“ஆரம்பிச்சிட்டியா? உனக்கு பதில் சொல்ல எனக்கு ஆவி இல்லை. நான் வரேன்”

“நீங்க போகக் கூடாது”, என்று மஞ்சு சொல்ல “ஆமா பா, நீங்க எனக்கு மட்டும் தான் அப்பா. நீங்க போகக் கூடாது”, என்றாள் அஞ்சலி.

“உங்க ரெண்டு பேருக்கும் கிறுக்கு பிடிச்சிருச்சா? நல்ல காரியத்துக்கு போகும் போது கடுப்பைக் கிளப்பிட்டு. நகருங்க. இல்லை தொலைச்சு கட்டிருவேன்”, என்று எரிச்சலுடன் சொல்லி விட்டு கிளம்பிச் சென்றார்.

“என்ன மா அப்பா இப்படிச் சொல்லிட்டு போறார்?”, என்று கேட்டாள் அஞ்சலி.

“என்ன செய்யுறது என்னோட தலையெழுத்து. ஆனா என் நிம்மதியைக் கெடுத்த அந்த மீனாட்சியும் அவ மகளும் நல்லாவே இருக்க கூடாது. என்னோட போனை எடுத்துட்டு வா அஞ்சலி. இப்பவே இதுக்கு ஆப்பு வைக்கிறேன்”, என்று மஞ்சுளா சொல்ல அதை எடுத்துக் கொடுத்தாள் அஞ்சலி.

சரியாக ஆறு மணி ஆனதும் யசோதாவின் எண்ணுக்கு அழைத்தாள். வழியில் டிராபிக் இருந்ததால் அவர்கள் இன்னும் அர்ச்சனாவின் வீட்டுக்கு செல்ல வில்லை. யசோதாவுக்கு போன் வந்ததும் அது யார் என்று புரிந்து கொண்ட வேணுகோபால் “ஐயோ அந்த அம்மா சரியா ஆறு மணிக்கு கால் பண்ணிருச்சு போலயே? இப்ப அட்டண்ட் பண்ணி பேசுச்சுன்னா இப்படியே கார் திரும்பி வீட்டுக்கு போயிருமே? சரி எப்படியோ இந்த சம்பந்தம் நின்னா சரி தான்”, என்று எண்ணிக் கொண்டான்.

போனை எடுத்த யசோதா “ஹலோ யாருங்க?”, என்று கேட்டாள்.

“உங்க கிட்ட முக்கியமா ஒரு விசயம் பேசணும்”, என்று மஞ்சுளா சொல்ல “ஹலோ நாங்க டிராவல்ல இருக்கோம். சரியா கேக்க மாட்டிக்கு. கொஞ்ச நேரம் கழிச்சு பேசுங்க”, என்று சொல்லி கட் பண்ணி விட்டாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் கனவு கண்டுக்கோ மச்சான். அந்த பொண்ணை நேர்ல பாத்த பிறகு தான் உன் சந்தோஷம் ஸ்டாப் ஆகும் போல? அப்ப உன் முகம் போற போக்கைப் பாக்கணும் டா”, என்று எண்ணிக் கொண்டான் வேணுகோபால்.

அதே நேரம் “என்ன ஆச்சு மா? பேசலையா?”, என்று கேட்டாள் அஞ்சலி.

“அந்த பொம்பளை சரியா கேக்கலைன்னு போனை வச்சிட்டா அஞ்சலி. இன்னும் வீட்டுக்கு போகலை போல? டிராவல்ல இருக்கேன்னு சொல்லுச்சு”

“பரவால்ல மா, கொஞ்ச நேரம் கழிச்சு பேசு. இப்ப நீ உண்மையைச் சொன்னா அவங்க திரும்பி போய்ருவாங்க. அங்க பேச்சு வார்த்தை நடக்கும் போது பேசு. அப்ப தான் அந்த மீனாட்சியும் அந்த அர்ச்சனாவும் அசிங்கப் படுவாங்க”

“ஆமா அஞ்சலி, எனக்கும் அது தான் வேணும்”

“அப்பாவுக்கு நாம தான் சொன்னதுன்னு தெரிஞ்சா என்ன மா செய்யுறது?”

“தெரிஞ்சா தெரியட்டும். அப்புறமாவது உங்க அப்பா வழிக்கு வராரான்னு பாப்போம்”

“அப்பா நம்ம மேல கோபப் பட்டு அவங்க பக்கம் போய்ட்டார்னா?”

“உங்க அப்பா போனாலும் அந்த மீனாட்சி அவரை ஏத்துக்க மாட்டா.  கல்லை அடிச்சு பாப்போம். பழம் விழுந்தா லக். இல்லைன்னா விடுன்னு போய்ட்டே இருப்போம்”, என்று சொன்ன மஞ்சுளா கண்களில் வஞ்சம் நிறைந்திருந்தது. அவள் எதற்கும் துணிந்து விட்டாள்.

முதலில் வீட்டுக்கு வந்த சொக்கலிங்கம் “எல்லாம் தயாரா இருக்கா மீனாட்சி?”, என்று கேட்டார்.

“தயாரா இருக்குங்க. டீ கூட போட்டு வச்சிட்டேன்”

“சரி நான் ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன். இந்த சம்பந்தம் முடியனும். அர்ச்சனா என்ன சொன்னா?”

“முதல்ல வேண்டாம்னு சொன்னா. ஏதோ சொல்லி சம்மதிக்க வச்சிருக்கேன்”

“என்னால தானே வேண்டாம்னு சொன்னா?”, என்று அவர் கேட்க மீனாட்சி எதுவும் சொல்ல வில்லை. உண்மை அது தான் என்று தெரிந்த பின் அதைப் பற்றி பேசி என்ன ஆகப் போகுது?

“அர்ச்சனா கிளம்பிட்டாளா மீனாட்சி?”

“கிளம்பி உள்ள உக்காந்துருக்கா. ஆஸ்பத்திரில இருந்து ஏதோ போன் வந்துச்சுன்னு பேசிட்டு இருக்கா”

“பேசட்டும் பேசட்டும்….. எனக்கு தான் நெர்வசா இருக்கு. எப்படியாவது இந்த சம்பந்தம் அமையனும். நல்ல குடும்பம். நல்ல பையன். அர்ச்சனா அங்க போனா சந்தோஷமா இருப்பா”, என்று அவர் சொல்ல மீனாட்சிக்கும் அதே வேண்டுதல் தான். அப்போது வெளியே கார் சத்தம் கேட்டது.