வேறு ஒரு ஹாஸ்பிட்டலில் வேலை செய்தாலும் நோயாளிக்கு எது சரியான மருத்துவம் என்று எடுத்துச் சொல்லும் அவளை நினைத்து கொஞ்சம் பெருமையாக கூட இருந்தது. “இன்னும் பணத்தை மட்டுமே மதிக்காத நல்ல டாக்டர்ஸ் எல்லாம் இருக்காங்க போல?”, என்று எண்ணிக் கொண்டான். மற்ற படி அவளைப் பற்றி வேறு எண்ணம் எல்லாம் இல்லை.
அதே நேரம் “சார் வாங்க, வாங்க”, என்று சக்கரவர்த்தியை வரவேற்றார் தரகர்.
அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்த சக்கரவர்த்தி “என் மூத்த மகன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான். என் பிரண்ட்ஸ் சர்க்கில் எல்லாம் உங்க கிட்ட பொண்ணு பத்தி கேக்கச் சொன்னாங்க. அதான் நேர்ல வந்தேன்”, என்றார்
அவர் யார் என்ன என்று விசாரித்த தரகர் “நீங்க பெரிய இடம், உங்க அளவுக்கு பாக்கணும்னா என்னால முடியுமா? உங்க பிரண்ட்ஸ் சர்கிள்ல பாக்கலாம்ல?”, என்று கேட்டார்.
“பாக்கலாம் தான். ஆனாலும் அவங்க கிட்ட நேராப் போய் எதுவும் பேசிற முடியாது. அது மட்டும் இல்லை ஒருத்தர் கிட்ட பேசினா இன்னொருத்தர் முகத்தை தூக்குவாங்க. அதான். உங்க கிட்ட வந்தேன். எங்களுக்கு தகுந்த மாதிரி ஏதாவது வரன் இருக்கா?”
“உங்க அளவுக்குன்னா…. ஒரு வரன் இருக்கு. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அனுப்பினாங்க”, என்று சொல்லி அர்ச்சனாவின் புகைப்படத்தைக் காட்டினார்.
“பொண்ணு ரொம்ப அழகா இருக்கா. எங்க பிரபாவுக்கு பொருத்தமா இருப்பா. பொண்ணைப் பத்தி சொல்லுங்க”, என்று சக்கரவர்த்தி கேட்டதும் “பொண்ணு நல்ல பொண்ணு தான் சார். டாக்டரா இருக்காங்க. பொண்ணோட அப்பா பிஸ்னஸ் பண்ணுறார். ஆனா கொஞ்சம் குடும்ப சிக்கல் இருக்கு….”, என்றார் தரகர்.
“குடும்ப சிக்கலா?”, என்று சக்கரவர்த்தி கேட்க “ஆமா சார், பொண்ணோட அப்பாவுக்கு ரெண்டு பொண்டாட்டி. உண்மையைச் சொல்லணும்ல? அதான் சொல்லிட்டேன். உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னா மேற்கொண்டு பேசலாம். இல்லைன்னா வேற வரன் சொல்றேன்”, என்றார்.
“கொஞ்சம் பெரிய சிக்கல் தான். ஆனா பொண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என் மகனுக்கு இதை விட பொருத்தமா வேற வரன் அமையும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. பொண்ணோட குடும்பம் பத்தி சொல்லுங்க. பொண்ணோட அப்பா என்ன பிஸ்னஸ் பண்ணுறார்?”, என்று கேட்க பட சொக்கலிங்கம் குடும்பம் பற்றிய அனைத்தையும் சொன்னார் தரகர்.
“சொக்கலிங்கமா?”, என்று சக்கரவர்த்தி கேட்க “ஆமா அவரை உங்களுக்கு தெரியுமா?”, என்று கேட்டார் தரகர்.
“சின்ன வயசுல தெரியும். அப்புறம் தொடர்பு இல்லை. இவங்க பூர்வீகம் தஞ்சாவூர் தானே?”
“ஆமா சார், உங்களுக்கும் அந்த பக்கம் தானே?”
“ஆமா. சரி தரகரே, நீங்க சொக்கலிங்கம் நம்பர் கொடுங்க. நான் பேசிக்கிறேன். ஆனாலும் ஏதாவது நல்ல வரன் வந்தா சொல்லுங்க”, என்று சொன்ன சக்கரவர்த்தி சொக்கலிங்கத்தின் நம்பரை வாங்கிக் கொண்டு அங்கிருந்து வந்தார்.
வெளியே வந்ததும் அந்த மரத்தடியில் நின்றே நண்பனை அழைத்தார்.
அதை எடுத்து “ஹலோ யாருங்க?”, என்று கேட்டார் சொக்கலிங்கம்.
“டேய் சொக்கு, நான் சக்கரவர்த்தி பேசுறேன் டா”
“சக்கரவர்த்தி….. டேய் சாக்கு நீயா டா? எப்படி இருக்க? என் நம்பர் எப்படி கிடைச்சது?”
“உன்னைப் பாக்குறதை விட வேற என்ன வேலை இருக்கு?”, என்று சொன்னவர் ஒரு பெரிய ஹோட்டல் பெயரைச் சொல்லி அங்கே வரச் சொன்னார்.
சற்று நேரத்தில் இருவரும் நேரில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள். பழைய நட்பு மீண்டும் மலர்ந்தது.
“எப்படி டா என் நம்பர் கிடைச்சது?”, என்று கேட்டார் சொக்கலிங்கம்.
“தரகர் கிட்ட உன் பொண்ணு போட்டோ கொடுத்துருந்தல்ல? நானும் என் மகனுக்கு பொண்ணு பாக்குறது விஷயமா தரகரைப் பாக்க போனேன்”
“அப்படியா?”
“ஆமா, ஆனா தரகர் என்னல்லாமோ சொல்றாரே டா? எங்க அப்பா இறந்தப்ப உன்னைப் பாத்தது? அப்புறம் நான் இங்க வந்துட்டேன். நீ எப்ப சென்னைக்கு வந்த? ஊர்ல தானே உங்க அப்பா காட்டன் மில் வச்சிருந்தார்? அதை இங்க எப்படி ஆரம்பிச்ச?”
“அது பெரிய கதை டா. ஊர்ல பிஸ்னஸ் டல்லா தான் போச்சு. அது மட்டுமில்லாம மீனாட்சியை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அது அப்பாவுக்கு பிடிக்கலை. சொத்தைப் பிரிச்சு கொடுத்துட்டார். நான் பணத்தை வாங்கிக் கிட்டு வந்து இங்க பிஸ்னஸ் ஆரம்பிச்சேன். அர்ச்சனா பிறக்குற வரைக்கும் நல்லா தான் போச்சு. அப்புறம் எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு”, என்று ஆரம்பித்து தன்னுடைய கதையைச் சொன்னார்.
“சரி விடு சொக்கு. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் மனுசனைக் கெட்டவங்களா மாத்துது. எல்லாம் விதி கையில. இப்ப நாம மீட் பண்ணது கூட விதிப் படி தான் போல?”
“ஆமா டா, சரி உன் மகன் போட்டோ காமி டா”, என்று சொக்கலிங்கம் கேட்டதும் தன்னுடைய மொபைலில் இருந்த பிரபாகரனின் புகைப்படத்தைக் காட்டினார் சக்கரவர்த்தி. அவனை சொக்கலிங்கத்துக்கு பார்த்த உடனே பிடித்து விட்டது.
“பையன் ரொம்ப அழகா இருக்கான். அர்ச்சனாவுக்கு பொருத்தமா இருக்கும். உனக்கு அர்ச்சனாவை பிடிச்சிருந்தா உன் பையனுக்கு கட்டி வை டா சக்கரவர்த்தி. அவ ரொம்ப நல்ல பொண்ணு. பொறுப்பானவ. என்னோட தப்பு அவ வாழ்க்கையையும் விளையாடிப் பாக்குது”, என்று சொல்லும் போதே சொக்கலிங்கம் கண்கள் கலங்கிப் போனது.
நண்பனின் கலக்கத்தைக் காண சகியாமல் “சரி டா, நான் வீட்ல பேசிட்டு பிரபா கிட்டயும் கேட்டுட்டு உனக்கு கால் பண்ணுறேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பிச் சென்றார். மகனுக்கு பிடிக்க வில்லை என்றால் அவரால் ஒன்றும் செய்ய முடியாதே.
வீட்டுக்கு சென்றதும் விஷயத்தைச் சொல்லக் காத்திருந்தார். இரவு உணவுக்கு அனைவரும் கூடியதும் அர்ச்சனாவின் புகைப்படத்தைக் காட்டினார். அனைவருக்குமே அவளைப் பிடித்திருந்தது.
“உன்னோட நம்பருக்கும் போட்டோ அனுப்பிருக்கேன் பிரபா. நீயும் பொண்ணைப் பாரு”, என்று சக்கரவர்த்தி சொல்ல அதை சிறிது ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்தான்.
பார்த்ததும் அவன் ஆர்வம் இன்னும் கூடியது. “அட நம்ம டாக்டர் மேடம்”, என்று எண்ணிய பிரபாவின் உதடுகள் சிறிது மலர்ந்தது. அவன் சிரிப்பே அவன் மனதை மற்றவர்களுக்கு புரிய வைத்தது. இந்த பேச்சை எல்லாம் எரிச்சலுடன் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள் வினோதினி. அதுவும் பிரபாகரன் முகத்தில் இருந்த ஆர்வத்தைக் கண்டதும் அவள் கண்கள் கலங்கி விட்டது.
“எனக்கு சாப்பாடு போதும்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள். இருந்த கலகலப்பில் அவளை யாரும் கண்டு கொள்ள வில்லை.
“பொண்ணு ரொம்ப அழகா இருக்கால்லங்க?”, என்று கணவரிடம் கேட்டாள் வர்ஷினி.
“உன்னை விட அழகு இல்லை வர்ஷு குட்டி”, என்று ஒரு மார்கமாக சிரித்தான் வேணுகோபால். அதைக் கேட்டு வர்ஷினி முகம் பூவாக மலர்ந்தது. அது தானே அவனுக்கு வேணும். இப்படி பேசி தானே அவளை மயக்கி வைத்திருக்கிறான்.
“பொண்ணு ரொம்ப அழகா இருக்கா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. குடும்பம் எப்படிங்க?”, என்று யசோதா கேட்க சற்று நிதானித்தார் சக்கரவர்த்தி. ஏனென்றால் யசோதாவுக்கு சட்டென்று எதையும் யோசிக்க வராது. அவசரமாக எதையும் பேசி விடுவாள். அதனால் சொக்கலிங்கத்தின் குடும்ப வரலாறு பற்றிச் சொல்லாமல் “என் நண்பனோட பொண்ணு. பேர் அர்ச்சனா. டாக்டரா இருக்கா. நிறைய நகை போடுவாங்க”, என்று மனைவிக்கு சாதகமாகவே பேசினார்.
“ரொம்ப சந்தோசங்க”, என்று யசோதா சொன்னதும் மகனைப் பார்க்க அவனோ அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். மகன் மனது புரிந்தாலும் அன்றே அவனை தனியே அழைத்து அனைத்தையும் சொல்லி விட்டார். அதை எல்லாம் வேணுகோபால் ஒட்டுக் கேட்டதை இருவரும் அறிய வில்லை.
“அந்த பொண்ணும் அவ அம்மாவும் பினான்சியல் ரீதியா எந்த கஷ்டமும் அனுபவிக்கலைன்னாலும் மனசளவுல அனுபவிச்சிருக்காங்க பிரபா. அதனால இனியாவது அந்த பொண்ணு சந்தோஷமா இருக்கணும். நீ தான் அவளை நல்லா பாத்துக்கணும். அவ அப்பா செஞ்ச பாவத்துக்கு நீ அந்த பொண்ணைக் கஷ்டப் படுத்திறக் கூடாது. எங்க நட்பும் கெட்டுப் போகுற மாதிரி நீ நடந்துக கூடாது. ஏன்னா நானா தான் அவன் கிட்ட இதைப் பத்தி பேச்சை ஆரம்பிச்சேன். நானே மறுத்தா என் மரியாதை என்ன ஆகுறது? முழு மனசா உனக்கு சம்மதம்னா இதை ஆரம்பிக்கலாம். இல்லைன்னா வேற பொண்ணு பாக்குறேன்”, என்றார் சக்கரவர்த்தி.
“இந்த சம்பந்தமே பேசுங்க பா. நான் அவளை நல்லா வச்சிக்குவேன். எப்பவும் எதுக்காகவும் யாருக்காகவும் அவளைக் கஷ்டப் படுத்த மாட்டேன். ஆனா அம்மா….”, என்று இழுத்தான் பிரபாகரன்.
ஏனென்றால் இந்த விஷயம் மறைக்க கூடிய விஷயம் இல்லையே. இன்னைக்கு இல்லை என்றாலும் ஒரு நாள் தெரியத் தானே செய்யும்? இதை யசோதா சாதாரணமாக எடுத்துக் கொள்வாள் என்று யாராலும் கணிக்க முடியாதே?