“அதெல்லாம் முடியாது. நான் நம்ம கம்பெனிக்கு தான் வருவேன். அங்கேயே ஏதாவது வேலை செய்றேன்”

“நம்ம கம்பெனிக்கு வந்தா எல்லாரும் உன்னை என் மகளா தான் பாப்பாங்க. அது சரி வராது. உனக்கு அனுபவம் வரணும்”

“முடியாது பா, நம்ம ஆஃபிஸ்க்கு தான் வருவேன்”

“அப்படின்னா நீ வரவே வேண்டாம், உன் அம்மா மாதிரி தின்னுட்டு தின்னுட்டு தூங்கு. என் பொண்ணு அர்ச்சனாவைப் பாரு. இப்போதைக்கு இந்த சிட்டில இருக்குற பேமஸ் டாக்டர்ல அவளும் ஒருத்தி. ஆனா நீ….”, என்று எரிகிற தீயில் எண்ணையை ஊற்றிக் கொண்டிருக்கும் போது தான் அவருக்கு தரகரிடம் இருந்து அழைப்பு வந்தது.

மஞ்சுளா மற்றும் அஞ்சலி முன்னிலையிலே போனை எடுத்த சொக்கலிங்கம் “தரகர் பரமசிவம் தானே?”, என்று கேட்டார்.

“ஆமா சார், குளிச்சிட்டு இருந்தேன். அதான் உங்க போனை எடுக்கலை. சரி சொல்லுங்க, என்ன விஷயமா கூப்பிட்டுருந்தீங்க?”

“வேற எதுக்கு? என் பொண்ணுக்கு கல்யாண வயசு வந்துருச்சு. வயசு இருபத்தி ஏழு ஆகிருச்சு. அதான் வரன் பாக்கலாம்னு”

“பாத்துறலாம் சார். எப்படி எதிர் பாக்குறீங்க? பொண்ணு என்ன பண்ணுது?”

“பொண்ணு மகப்பேறு மருத்துவரா இருக்கா. பெரிய அளவுல நகை எல்லாம் போடுவேன். அதனால கொஞ்சம் பெரிய இடமா பாருங்க. பையன் நல்லவனா இருக்கணும். அப்புறம் இன்னொரு விஷயம்…”

“என்ன சார்?”

“யாரை மாப்பிள்ளை பாக்குறதா இருந்தாலும் இந்த விஷயத்தைச் சொல்லிருங்க. எனக்கு ரெண்டு பொண்டாட்டி. ரெண்டு பொண்ணுங்க. இதைச் சொல்லலைன்னா கண்டிப்பா நாளைக்கு பிரச்சனை வரும். அதனால இந்த விஷயம் சொல்லியே பாருங்க”

“கண்டிப்பா சார். மறைச்சு கல்யாணம் பண்ணி வைக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அதனால தான் இந்த தொழில்ல இவ்வளவு நல்ல பேர் வாங்கிருக்கேன். நல்ல வரன் வந்தா கால் பண்ணுறேன். நீங்க போட்டோ, ஜாதகம், பயோடேட்டா மட்டும் இந்த நம்பருக்கு வாட்ச் ஆப் பண்ணி விடுங்க”, என்று சொல்லி போனை வைத்தார்.

சொக்கலிங்கம் போனை காதில் இருந்து எடுத்ததும் “என்னங்க, நீங்க பண்ணுறது உங்களுக்கே நல்லா இருக்கா?”, என்று கேட்டாள் மஞ்சுளா.

“என்ன மஞ்சு?”, என்று சலிப்புடன் கேட்டார் சொக்கலிங்கம்.

“நம்ம அஞ்சலிக்கும் அர்ச்சனா விட ஒரு வயசு தானே குறைவு? அப்படின்னா இவளுக்கும் மாப்பிள்ளை பாக்கணும் தானே? இப்படி எல்லாம் நீங்க ஒர வஞ்சனை பண்ணக் கூடாது”

“அர்ச்சனாவுக்கு முடிஞ்சதும் அஞ்சலிக்கு பண்ணத் தான் போறேன். அர்ச்சனாவுக்கு எவ்வளவு செய்யுறேனோ அதே மாதிரி அஞ்சலிக்கும் செய்ய தான் போறேன். எனக்கு ரெண்டு பேருக்கும் இடையே எந்த பிரிவினையும் கிடையாது. ஆனா அர்ச்சனாவை விட அஞ்சலிக்கு தான் அதிகம் செய்யணும்னு நீங்க பேராசை பட்டா அதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். தாயும் மகளும் எரிச்சலுடன் நின்றார்கள். எப்படி இந்த சம்பந்தத்தைக் கெடுக்கலாம் என்று அவர்கள் மனம் யோசனையில் ஆழ்ந்தது.

அதே நேரம் டியூட்டி முடிந்து தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தாள் அர்ச்சனா.

அப்போது அவள் அறைக்கு வெளியே இரண்டு ஆண்கள் நின்றிருந்தார்கள். அதில் ஒருவன் டாக்டர் வெங்கட், மற்றொருவன் பிரபாகரன் தான். அவனுடைய கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு ஆளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அடி பட்டிருக்க அவரைக் காண வந்திருந்தான்.

வெங்கட்டிடம் வெகு சீரியசாக பேசிக் கொண்டிருந்தான் பிரபாகரன். அவன் அர்ச்சனாவைக் கவனிக்க வில்லை. ஆனால் அர்ச்சனாவைக் கவனித்த வெங்கட் “என்ன அர்ச்சனா வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா?”, என்று கேட்டான். பிரபாகரனும் அவளை திரும்பிப் பார்த்தான். ஆனால் அவள் ஒரு டாக்டர் என்பதால் வேறு எதுவும் யோசிக்க வில்லை. அவர்கள் பேசட்டும் என்று மரியாதையுடன் ஒதுங்கி நின்றான்.

“ஆமா வெங்கட், டியூட்டி முடிஞ்சிருச்சு. அதான் கிளம்பிட்டேன். நீங்க கிளம்பலையா?”, என்று புன்னகையுடன் கேட்டாள் அர்ச்சனா.

“போகணும், நம்ம சம்பத் டாக்டர் தான் வந்து பிசியோ தெரபி பண்ணனும். அதான் வெயிட் பண்ணுறேன்”

“பிஸியோதெரபியா? யாருக்கு என்ன ஆச்சு?”

“சார் பேர் பிரபாகரன், அவங்க கம்பெனில வேலை பாக்குற வொர்க்கர் ஒருத்தர் மிஷின்ல கையை விட்டுக்கிட்டார். இரண்டு விரல் தனியா வந்துருச்சு. இப்ப தச்சாச்சு. எல்லாம் சரியாகிருச்சு. பிஸியோதெரபி மட்டும் இருக்கு. அந்த அடிபட்ட ஆளோட அம்மா வந்து ரொம்ப செலவாகுதுன்னு புலம்புறாங்க. நான் கூட கேட்டேன், கம்பெனி தானே மா செலவு செய்யுது? நீங்க ஏன் கவலைப் படுறீங்கன்னு? அதுக்கு அந்த அம்மா பிரபாகரன் ஐயா ஏற்கனவே எங்களுக்கு எல்லாம் நிறைய செஞ்சிட்டாங்க. இப்பவும் இந்த ஆஸ்பத்திரிக்கு லட்ச கணக்குல செலவாகிருச்சு. மேலும் மேலும் செலவு பண்ண வேண்டாம்னு சொன்னாங்க. அதான் சார் கிட்ட பேசிட்டு இருக்கேன்”, என்றான் வெங்கட். அர்ச்சனா பிரபாகரனை “இந்த உலகில் இப்படியும் ஒரு நல்லவனா?”, என்று எண்ணி வியந்து பார்த்தாள்.

அவனோ வெங்கட்டைப் பார்த்து “பரவால்ல டாக்டர், பணம் எப்ப வேணும்னாலும் சம்பாதிச்சிக்காலம். ஆனா ஒரு நல்ல மனுசனை இழந்துறக் கூடாதுல்ல? என்னோட வொர்க்கர்சை நான் என் குடும்பமா தான் பாக்குறேன். நீங்க டிரீட்மெண்ட் கண்டிநியூ பண்ணுங்க. இன்னும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை”, என்றான்.

பிரபாகரன் புறம் திரும்பிய அர்ச்சனா அவன் பேச்சில் வியந்து “சார் நான் ஒரு ஸஜசன் சொல்லலாமா?”, என்று கேட்டாள்.

“சொல்லுங்க டாக்டர்”, என்றான் பிரபாகரன்.

“நீங்க உங்க வொர்க்கருக்கு சரியாகணும்னு நினைக்கிறது பெரிய விஷயம் தான். ஆனா எனக்கு என்ன தோணுதுன்னா…. அவரை பூந்தளிர் சித்தா டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போங்க. அங்க அவருக்கு சீக்கிரம் சரியாகிரும். பணமும் கம்மியா ஆகும். இங்க செலவாகுற பணத்தை நீங்க அவங்க குடும்பத்துக்கு கொடுத்தீங்கன்னா அவங்களும் சந்தோஷப் படுவாங்க. உங்களுக்கும் நிம்மதி. அதை விட்டுட்டு இங்கயே வச்சிருந்தா…. சரியாகும் தான். ஆனால் ரொம்ப மெதுவா தான் சரியாகும். ஆனா அங்க சீக்கிரம் சரியாகிரும். இங்க வேலை பாத்துட்டு நான் இப்படி சொல்றது தப்பு தான். நான் இப்படி பேசுறது தெரிஞ்சா என் வேலை போயிரும். ஆனாலும் எங்களால முடிஞ்ச அளவுக்கு நல்ல மருத்துவத்தைக் கொடுக்கணும்னு அப்ப அப்ப நாங்க இப்படி சொல்லிட்டு தான் இருக்கோம். அந்த சித்தா டாக்டர் பேர் நவநீதன். எங்க கூட படிச்சவர் தான். அவர் கிட்ட குணமாகி போனவங்க நிறைய பேர். அதுக்கப்புறம் உங்க விருப்பம். வரேன் சார், வரேன் வெங்கட்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

போகும் அவளையே வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தான் பிரபாகரன். மீண்டும் வெங்கட் “அர்ச்சனா சொல்றது உண்மை தான் சார். அதை டிரை பண்ணி பாருங்களேன். நவநீதன் கண்டிப்பா சரி பண்ணுவார்”, என்று சொல்ல பிரபாகரனுக்கு அது நியாயமாக பட்டது.

நேராக அடிபட்டவரின் மனைவி அருகில் சென்று “உங்க நிலைமை எனக்கு புரியுது மா. இது யாருக்குமே தெரியாம நடந்த ஆக்ஸிடெண்ட். இதை சரி பண்ணுறதும் உங்க கணவர் சரியாகி வர வரைக்கும் உங்க குடும்பத்தை பாத்துக்க வேண்டிய பொறுப்பும் எங்களோடது. இப்ப டாக்டர் என்ன சொல்றாங்கன்னா சித்தா டாக்டரை பாக்க சொல்றாங்க. நான் பணம் செலவு பண்ண கஷ்டப் பட்டு தான் இப்படிச் சொல்றேன்னு நினைக்காதீங்க. எனக்கும் அது சரின்னு படுது. ஒண்ணுக்கு ரெண்டு டாக்டர் கிட்ட பேசிட்டேன். அங்க போறதா இருந்தாலும் போகலாம். இல்லை இங்கயே டிரீட்மெண்ட் பாக்குறதுனாலும் பாக்கலாம். முடிவு நீங்க தான் பண்ணனும்”, என்றான்.

“எங்களுக்கு உங்க மேல நம்பிக்கை இருக்குங்க ஐயா. அடி பட்டதும் நீ கவனமா வேலை செய்யலைன்னு என் புருஷன் மேல பழி போடாம அவரை சரி பண்ணணும்னு நினைக்கிறீங்க. உங்களை நம்புறேங்க. எனக்குமே தினம் தினம் இவ்வளவு செலவாகுறது வருத்தமா இருக்கு. அவர் இந்த அளவுக்கு குணமாகி இருக்குறதே உங்களால தான். இனி நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படியே பாத்துக்கலாம் ஐயா”, என்று அந்த பெண் சொல்ல அடுத்த நொடி டிஸ்சார்ஜ் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான்.

பின் அவரை சித்தா டாக்டரிடம் அழைத்து சென்று அங்கே தேவையான விவரங்களைக் கேட்டு பணம் கட்டி அவரை அட்மிட் செய்தான். அவரை பரிசோதித்த நவநீதன் கூடிய விரைவில் சரியாகி விடும் என்று நம்பிக்கை கொடுத்ததால் பிரபாகரனுக்கும் நிம்மதியாக இருந்தது.

“இங்க வரதுக்கு யார் சொல்லி விட்டாங்க?”, என்று நவநீதன் கேட்டதற்கு “அர்ச்சனான்னு ஒரு டாக்டர். உங்க கூட படிச்சாங்களாமே?”, என்றான் பிரபாகரன்.

“யாரு அர்ச்சனாவா?”, என்று கேட்கும் போதே நவநீதன் முகம் ஒளிர்ந்தது.

“என்ன டாக்டர் அவங்க பேரைச் சொன்னதும் உங்க முகம் இவ்வளவு பிரைட்டா மாறிருச்சு? அவ்வளவு பிடிக்குமா அவங்களை?”

“அவ கிட்ட பேசுறவங்க அவளைப் பிடிக்கலைன்னு சொல்லவே மாட்டாங்க. அவளோட நட்பு கிடைக்கவே நாம புண்ணியம் பண்ணிருக்கணும். ரொம்ப நல்ல பொண்ணு சார் அவ. படிக்கும் போதே எவ்வளவு உதவி செய்வா தெரியுமா? எனக்கு எல்லாம் அவ செஞ்ச உதவியை விரல் வச்சு எண்ணக் கூட முடியாது. அவ என்னோட பிரண்டுன்னு நினைச்சாலே எனக்குள்ள சந்தோஷம் வந்துரும். சரி சார். நீங்க கிளம்புங்க. கூடிய சீக்கிரம் இவருக்கு சரியாகிரும்”, என்று நவநீதன் சொன்னதும் அங்கிருந்து கிளம்பினான் பிரபாகரன்.