அத்தியாயம் 2

எந்தன் விழியும் உந்தன் விழியும்

கலந்த போது தான் காதல்

என்னும் உயிர் உருவானதோ?!!!

மகளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று எண்ணி இன்று மீனாட்சி விரதம். ஆனால் அதை அர்ச்சனாவிடம் சொன்னால் அவள் திட்டுவாள் என்பதால் தான் சொல்ல வில்லை.

அருகில் இருந்த கோவிலுக்கு சென்று அர்ச்சனா பெயரில் அர்ச்சனைக்கு கொடுத்து விட்டு அந்த கடவுளைப் பார்த்த மீனாட்சி “நான் எனக்காக இது வரை எதுவுமே கேக்கலை. நீ இருக்கியா இல்லையான்னு கூட எனக்கு தெரியாது. ஆனா என் பொண்ணுக்காக நான் இப்ப கேட்டே ஆகணும். இதை மட்டும் எனக்கு நிறைவேத்திக் கொடு கடவுளே. அர்ச்சனாவுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும். அவளை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குற மாதிரி ஒரு மாப்பிள்ளையை நீ தான் அவளுக்கு கொடுக்கணும்”, என்று வேண்டிக் கொண்டாள்.

அர்ச்சனாவின் புகைப்படம் வாட்சப்பில் வந்ததும் தரகரை அழைத்தார் சொக்கலிங்கம். சக்கரவர்த்தி எந்த தரகரைப் பார்க்க நேரில் சென்று கொண்டிருந்தாரோ அந்த தரகருக்கு தான் அழைத்தார். ஆனால் தரகர் போனை எடுக்க வில்லை.

சொக்கலிங்கம் வேறு யாரும் அல்ல அர்ச்சனாவின் தந்தை தான். சொக்கலிங்கத்துக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பெயர் மீனாட்சி. இருவருக்கும் பெயர் எந்த அளவுக்கு பொருந்தி இருந்ததோ அது போல அவர்கள் மனம் பொருந்தவில்லை.

திருமணத்துக்கு முன்னும் பின்னும் இருவருக்கும் இடையே நெருக்கமும் அன்பும் அதிகம் தான் இருந்தது. அவர்களின் காதலுக்கு சாட்சியாக பிறந்தவள் தான் அர்ச்சனா. சொக்கலிங்கமும் மனைவி மற்றும் மகள் மீது உயிராக தான் இருந்தார். சொக்கலிங்கம் பணக்காரர். அதனால் அவர்கள் வாழ்வில் பணமும் சந்தோஷமும் நிறைந்து தான் இருந்தது. அவர்களது பூர்வீகத் தொழில் ஆடைகள் தயாரிப்பு தான்.

ஆனால் அர்ச்சனாவுக்கு ஒரு வயது ஆகும் போது மஞ்சுளா என்ற பெண் சொக்கலிங்கத்துக்கு பி.ஏ வாக வந்து சேர்ந்தாள். அப்போது ஆரம்பித்தது மீனாட்சி மற்றும் சொக்கலிங்கம் வாழ்க்கையில் பிரச்சனை. சொக்கலிங்கம் பணக்காரர் என்று தெரிந்து கொண்டு மஞ்சுளா அவரை நெருங்க பிள்ளையைக் காரணம் காட்டி மீனாட்சி அவரை விட்டு விலகிச் செல்வதால் சொக்கலிங்கம் மஞ்சுளாவிடம் நெருங்கி விட்டார். விளைவு மஞ்சுளாவின் வயிற்றில் உருவானது.

குழந்தை உருவான பின் அவளை விட முடியாமல் மீனாட்சியிடம் எல்லா உண்மையையும் சொல்லிய சொக்கலிங்கம் மஞ்சுளாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லி அனுமதி கேட்க “தாராளமா பண்ணிக்கோங்க”, என்று அனுமதி கொடுத்தாள் மீனாட்சி.

மனைவியின் பதிலில் அவர் வியந்து போக அடுத்த நொடியே குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பி விட்டாள் மீனாட்சி.

சொக்கலிங்கம் தடுக்க “எப்ப என்னை மறந்து இன்னொரு பொண்ணைத் தொட்டீங்களோ அப்பவே நம்ம வாழ்க்கை முடிஞ்சு போச்சு. என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு நானும் நினைச்சிருக்கேன். ஆனா ரெண்டுல ஒண்ணா எப்பவும் வாழ நான் நினைச்சது இல்லை. நீங்க எனக்கு மட்டும் தான் வேணும்னு நான் போராட மாட்டேன். எனக்கு அது அவசியமும் இல்லை. எப்படியும் உங்க கூட இனி வாழப் போறது இல்லை. நானும் வாழாம உங்களையும் வாழ விடாம பண்ணுறதுல எனக்கு உடன்பாடு இல்லை. இனி மனைவின்னா உங்களுக்கு அந்த பொண்ணு தான். நம்ம ரெண்டு பேருக்குள்ள இனி எதுவும் இல்லை. ஆனா ஒண்ணு, என் பொண்ணுக்கு அப்பா நீங்க தான். அதை என்னால விட்டுக் கொடுக்க முடியாது. என் பொண்ணுக்கு எப்ப அப்பா தேவைப் படுறாரோ அப்ப நான் கூப்பிட்ட உடனே நீங்க வந்து தான் ஆகணும். மனைவிக்கான உரிமையை நான் விட்டுக் கொடுத்துருவேன். ஆனா என் பொண்ணுக்கான உரிமையை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். உங்களோட மூத்த பொண்ணு அர்ச்சனா தான். அவளுக்கு அப்பா நீங்க தான். அதை மறந்துறாதீங்க. அந்த கடைமைல இருந்து நீங்க தவறுனீங்கன்னா அடுத்த நிமிஷம் நீங்க செத்துட்டீங்கன்னு நான் என் பொண்ணுக்கு சொல்லிருவேன்”, என்றாள் மீனாட்சி.

“நீ இப்ப எங்க போவ மீனாட்சி? தனியா போனா கஷ்டப் படனும்? நான் தப்பு பண்ணிட்டேன் தான். ஆனா உன் மேல இருக்குற காதல் அப்படியே தான் இருக்கு. நான் மஞ்சுவை வேணும்னா வேற வீட்ல தங்க வைக்கிறேன். நீ இங்கயே இரு மீனாட்சி. இது நம்ம வீடு”, என்று தடுத்தார் சொக்கலிங்கம்.

“இல்லை. இனி என்னால உங்க கூட இருக்க முடியாது. அப்புறம் நான் தனியா தான் போறேன். ஆனா வெறுங்கையோட போகப் போறேன்னு சொல்லவே இல்லையே. ஒண்ணும் இல்லாம போய்க் கஷ்டப்படணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா? நான் நம்ம பழைய வீட்டுக்கு தான் போறேன். நாளைக்கே அந்த வீட்டை என் பேருக்கு மாத்திறனும். அர்ச்சனாவுக்கு பதினெட்டு வயசு வரைக்கும் அந்த வீடு என் பேர்ல தான் இருக்கும். அப்புறம் உங்க பொண்ணுக்கு போகும். இன்னொரு முக்கியமான விஷயம் உங்க கிட்ட சொல்லணும்”

“என்ன மீனாட்சி?”

“நான் உங்களுக்கு என்னைக்குமே டைவர்ஸ் தர மாட்டேன். அதே நேரம் நீங்க அந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்ல மாட்டேன். டைவர்ஸ் பண்ணிட்டா என் பொண்ணு ஒண்ணும் இல்லாம போயிருவா. நான் பெத்தது ஒரு பையனா இருந்தா எதுவுமே வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போய்ருவேன். ஆனா பொண்ணைப் பெத்து வச்சிருக்கேனே? அவளுக்கு ஒரு நல்லது நடக்குற வரைக்கும் அவ உங்க பொண்ணா தான் இருக்கணும். அதுக்கு எனக்கு உங்க மனைவிங்குற அடையாளம் வேணும்”,  என்று சொன்னவள் அடுத்து ஒரு நொடி கூட நிற்க வில்லை.

மீனாட்சி குழந்தையுடன் சென்றது சொக்கலிங்கத்தின் இன்னொரு வீட்டுக்கு தான். படிக்கும் போது காதலித்து அவர் தான் வேண்டும் என்று பிறந்த வீட்டை விட்டு வந்த மீனாட்சிக்கு காதலில் தோற்று மீண்டும் பிறந்த வீட்டினரிடம் சென்று அவமானப் பட விரும்ப வில்லை. அதனால் தான் இந்த முடிவு.

ஆனாலும் விசயம் தெரிந்து அவளது பிறந்த வீட்டினர் வந்தார்கள் தான். “நீ ஏன் பிள்ளையை தூக்கிட்டு தனியா வந்த? அங்கயே இருந்துருக்கணும். உன் மரியாதையை ஏன் இழக்கணும்? இப்படி தனியா இருந்தா உன்னைத் தப்பா பேசுவாங்க. உன் புருஷன் வீட்டுக்கு போ”, என்று எவ்வளவோ சொன்னார்கள்.

“எல்லாரும் என்னை ஏன் தப்பா பேசணும்? தப்பா பேச நான் என்ன தப்பு பண்ணினேன்? அவர் கூட வாழ எனக்கு பிடிக்கலை, நான் ஒதுங்கி வந்துட்டேன். அதையும் மீறி யார் பேசினாலும் பேசிட்டு போகட்டும்”, என்று தெளிவாகச் சொன்னாள் மீனாட்சி.

“வேண்டாம்னு ஒதுங்கி வந்த பிறகு அவன் நிழல்ல ஏன் இருக்கணும்? உனக்குன்னு வீடு இல்லையா? சொத்து இல்லையா? எங்க கூட வந்துரு”, என்று அழைத்த போதும் “எனக்கு அவர் நிழல் தேவை இல்லை தான். ஆனா என் பொண்ணுக்கு அவர் நிழல் தேவை. அவளை ஸ்கூல்ல சேக்கணும்னா கூட அப்பா பேர் இருக்குற இடத்துல அவர் பேரைத் தான் போட முடியும்? பேரண்ட்ஸ் மீட்டிங்க்கு அவர் தான் கூட வரணும். அதனால தான் இங்க இருக்கேன். உங்க கூட வந்தா நாலு மாசம் நல்லா வச்சிருப்பீங்க? அப்புறம் எப்படி மாறுவீங்கன்னு யாருக்கும் தெரியாது. நீங்க போகலாம்”, என்று சொல்லி விட்டாள் மீனாட்சி.

“எப்பவும் எங்க பேச்சைக் கேக்க மாட்டல்ல? ஒரு தடவை கேக்காம போனதுக்கு தான் இப்ப அனுபவிக்கிற? இப்பவும் கேக்காததுக்கு வாழ்க்கை முழுக்க அனுபவிக்க தான் போற?”, என்று சாபம் கொடுத்து விட்டுச் சென்றது அவளது பிறந்த வீடு. அனைவரும் சென்றதும் தளர்ந்து போய் அமர்ந்தாள். அந்த வீட்டில் அவளது அழுகையின் சத்தம் மட்டுமே கேட்டது.

கணவனை எண்ணி, காதலை எண்ணி, அவர் செய்த துரோகத்தை எண்ணி ஏங்கி ஏங்கி அழுதாள். ஆற்றுவார் தேற்றுவார் யாருமே இல்லை. அப்போது குழந்தையான அர்ச்சனா பசியால் அழ தன்னுடைய கவலை மறந்து மகளைத் தேற்றினாள்.

அதற்கு பிறகு மனதால் மீனாட்சி நிறைய கஷ்டப் பட்டிருக்கிறாள். இளமை உணர்வுகளை துறந்து மகளுக்காக தவ வாழ்க்கை வாழ ஆரம்பித்தாள். சொக்கலிங்கம் மஞ்சுளாவைத் திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகும் மீனாட்சி நினைவு வந்தால் மகள் மற்றும் மனைவியைப் பார்க்க வருவார். அவர் வரும் போது மகளை அவர் கையில் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வாள் மீனாட்சி.

சொக்கலிங்கம் தேவையானதை பேசும் போது கேட்டுக் கொள்வாள். வீட்டு செலவுக்கு அவர் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வாள். வீட்டுத் தேவைக்கு பணத்தை எடுத்துக் கொண்டு மற்றதை மகள் பெயரில் போட்டு விடுவாள். ஆடம்பரமாக எந்த பொருளையும் வாங்க மாட்டாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் சொக்கலிங்கம் மனம் குமுறும்.