போன முறை விடுபட்டிருந்த அனைத்து நண்பர்களையும் திருமணத்துக்கு அழைத்திருந்தான் பிரபாகரன். அர்ச்சனாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் தான் திருமணம் நின்றது என்று சொல்லி இருந்ததால் யாரும் அவளை தவறாக பேச வில்லை.
அழகு நிலையப் பெண் அர்ச்சனாவுக்கு அலங்காரம் ஆரம்பிக்க முன்பு அர்ச்சனாவுக்கு என வாங்கி வைத்திருந்த புடவையையே அவளுக்கு கொடுத்தான் பிரபாகரன்.
அவள் அதைக் கட்டிக் கொண்டு தயாராகி விட்டாள். காயத்ரி, வினோதினி, வர்ஷினி மற்றும் அர்ச்னாவின் தோழிகள் அனைவரும் சேர்ந்து அவளை மணமேடைக்கு அழைத்து வந்து பிரபாகரன் அருகில் அமர வைத்தார்கள். அவனும் அழகாக மாப்பிளை தோரணையுடன் அமர்ந்திருந்தான். பட்டு வேஷ்டி சட்டையில் அவன் இன்னும் அழகாக மாறி இருப்பது போல தோன்றியது. உண்மையான சந்தோஷம் நம்மை அழகாக்கும் போல?
அர்ச்சனாவைக் கண்ட அஞ்சலி “அம்மா இது முன்னாடி வாங்கின சேலை தானே? இதை நான் கட்டக் கூடாதுன்னு பிரபா அத்தான் வாங்கிட்டு போய்ட்டாரோ?”, என்று கேட்டாள்.
“ஆமா டி, அன்னைக்கு நீ இதைக் கட்டக் கூடாதுன்னு வாங்கிட்டு போய் அவளுக்குன்னே பத்திரப் படுத்தி வச்சிருக்கான் பாரேன்? எதுக்கும் உசாரா இருந்துக்கோ அஞ்சலி. இனிமே எல்லாம் உன் கையில தான் இருக்கு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவளை இந்த வீட்ல இருந்து துரத்திரு. சரியா?”
“ஏன் மா பயப்படுற? அவளை மாதிரி நானும் இந்த வீட்டுக்கு மருமகள் தானே? அத்தைக்கும் அவளை விட என்னை தான் ரொம்ப பிடிக்கும்”
“அது என்னமோ சரி தான் டி. ஆனா அகிலன் மாப்பிள்ளையை விட பிரபா மாப்பிள்ளை கை தான் இந்த வீட்ல ஓங்கி இருக்கு. அதை வச்சு இவ முக்கியமா மாறிருவா? அதுக்கு தான் சொல்றேன்”
“சரி மா, அதெல்லாம் நான் பாத்துக்குறேன். அத்தைக் கிட்ட ஏத்தி விட்டே அவளை இங்க இருந்து விரட்டுறேன். வேணு அண்ணாவும் அப்ப அப்ப அத்தைக் கிட்ட இந்த அர்ச்சனாவைப் பத்தி பத்த வைக்கிறாங்க. நான் பாத்துருக்கேன். ஆனா தெரிஞ்ச மாதிரி காட்டிக்கலை. இனி நானும் அது மாதிரி செய்றேன்”
“சரி அப்படியே மெயிண்டெயின் பண்ணு. அந்த மீனாட்சி முகத்துல இருக்குற சந்தோசத்தைப் பாக்கவே கடுப்பா இருக்கு. நீ இங்க அர்ச்சனாவை அடிக்கிற அடில அவ அழணும் டி”
“சரி மா”, என்றாள் அஞ்சலி.
ஒரு வழியாக அனைவரின் ஆசியோடும் சிலரின் சாபத்தோடும் அவர்கள் திருமணம் நடந்தது. புன்னகையுடன் அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான் பிரபாகரன். அவளும் சந்தோஷமாக அவன் கட்டிய தாலியை ஏற்றுக் கொண்டாள். நாத்தனார் முடிச்சைப் போட வந்த வர்ஷினியை தடுத்த பிரபாகரன் எல்லா முடிச்சையும் அவனே போட்டான். அவள் முகம் சுருங்கிப் போனது.
சிறிது நேரம் கழித்து அர்ச்சனா, பிரபாகரன் மட்டும் தனியே இருக்கும் போது அங்கே வந்த வர்ஷினி “எதுக்கு அண்ணா என்னை நாத்தனார் முடிச்சு போட விடலை? அகில் அண்ணா கல்யாணத்துல நான் தானே போட்டேன்?”, என்று கேட்டாள்.
“அர்ச்சனாவை முழு மனசா நீ அண்ணியா ஏத்துக்கிட்டியா?”, என்று கேட்டான் பிரபாகரன்.
“அது….”, என்று அவள் தயங்க “எனக்கு தெரியும் வர்ஷி.. ஆனா நாம செய்யுறது எல்லாம் ஆத்மார்த்தமா இருக்கணும். வெறும் சடங்குக்காக இருக்க கூடாது”, என்று சொல்ல அமைதியாக அங்கிருந்து சென்று விட்டாள் வர்ஷினி.
அவள் சென்றதும் “எப்ப பிரபா எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்?”, என்று கேட்டாள் அர்ச்சனா.
“யாருக்கு பிடிச்சா என்ன? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குல்ல? அது போதும். உனக்கு என்னைக் கவனிக்கிற வேலையும் டாக்டர் வேலையும் மட்டும் தான் இருக்கு. அதை நீ பார்த்தா போதும். எனக்கு எப்ப நைட் வரும்னு இருக்கு டி”, என்றான்.
“நைட்டா எதுக்கு?”
“வேற எதுக்கு? பர்ஸ்ட் நைட்க்கு தான்”
“அட போங்க, எத்தனை சான்ஸ் கிடைச்சது? அப்ப எல்லாம் நல்ல பையனா இருந்துட்டு…”, என்று சொல்லிக் கொண்டே வந்தவள் தான் பேசியதின் அர்த்தம் புரிந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“ஹா ஹா, சான்ஸ் கிடைச்சது தான். அப்ப எல்லாம் நடந்திருந்தா திரிலிங்கா இருந்துருக்கும் தான். ஆனா மனசுல ஒரு ஓரத்துல ஒரு குற்றஉணர்வு இருக்கும். ஆனா இன்னைக்கு அப்படி இருக்காதுல்ல? கண்டிப்பா இன்னைக்கு உன்னைத் தூங்க விட மாட்டேன் டி”, என்று சொல்ல அவள் முகம் சிவந்தது. அவள் மனதை மாற்றியதில் அவனுக்கும் நிம்மதி வந்தது.
அதற்கு பின் மணமக்கள் இருவரும் மேடையில் நிற்க அனைவரும் மணமக்களை வாழ்த்தி பரிசு கொடுத்தார்கள். மூர்த்தி பந்தி பரிமாற்றத்தை நன்றாக பார்த்துக் கொண்டான். மூர்த்தி எப்போதுமே பிரபாவுக்கு பக்க பலமாக இருப்பான். இன்றும் அப்படியே. ஆனால் வேணு சும்மா சுற்றிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட சக்கரவர்த்தி “வர்ஷினி”, என்று மகளை அழைத்தார்.
“என்னப்பா?”
“என்ன மா இது? கல்யாணம் உன் அண்ணனுக்கு. ஆனா வேணு இப்படி செய்யலாமா?”
“என்ன செஞ்சார் பா?”
“இல்லை வினோதினி கல்யாணத்துல எவ்வளவு வேலை செஞ்சான்? அதே மாதிரி பிரபா கல்யாணத்துலயும் செய்யனும்ல? அங்க மூர்த்தி மட்டும் தனியா எல்லாம் பாக்குறான். ஆஃபிஸ்லயும் வேணு ஒண்ணுமே செய்யுறது இல்லை. இங்கயும் இப்படி இருந்தா எப்படி மா?”, என்று மகளிடம் சொன்னார்.
“ஆமா பா, வினோ கல்யாணத்துல இந்த அத்தான் எவ்வளவு வேலை செஞ்சார்? ஆனா இப்ப அக்கடான்னு இருக்குறதைப் பாருங்க. இனி நான் பாத்துக்குறேன் பா”, என்று சொன்னவள் நேராக வேணு அருகில் சென்றாள்.
“அத்தான்”
“என்ன வர்ஷி”
“என்ன பண்ணுறீங்க?
“சும்மா இருக்கேன்”
“சாப்பிடுற இடத்துல ஆயிரம் வேலை இருக்கு. அதைப் போய் பாருங்க”
“ஏய் என்னை என்ன சோத்தை பரிமாறி எச்சி இலை எடுக்கச் சொல்றியா?”, என்று எகிறினான். அவன் கோபத்தை வியப்பாக பார்த்தவள் “ஏன்? நீங்க வினோ கல்யாணத்துல அதைச் செய்யலையா? அப்ப எங்க அண்ணனுங்க மட்டும் உங்களையும் உங்க தங்கச்சியையும் சமமா நடத்தணும். ஆனா உங்களுக்கு நாங்க வேற நீங்க வேற அப்படி தானே?”, என்று கேட்டாள்.
“என்ன டி வாய் நீளுது? உங்க வீட்ல உக்காந்து சாப்பிடுறேன்னு பேசுறியா?”
“இல்லையே? நியாயத்தை பேசுறேன். இப்ப போய் பந்தியைக் கவனிங்க. நான் இங்க எல்லாம் முடிஞ்சதும் வேற முடிவு எடுக்குறேன்”
“வேற முடிவா? என்ன முடிவு டி?”
“நாம வேற வீட்டுக்கு போறதைப் பத்தி தான்”
“நாம எதுக்கு வேற வீட்டுக்கு போகணும்?”
“ஆமா, இங்க இருந்தா என் வீட்ல இருக்குற மாதிரி உங்களுக்கு தோணும். அதனால நாம தனிக் குடித்தனம் போய்க்கலாம். சீதா அத்தையையும் கூட்டிட்டு போய்றலாம். நான் அப்பா கிட்ட பேசுறேன்”
“காரியத்தை கெடுக்குறாளே, தனியா போனா எவ்வளவு செலவு ஆகும்?”, என்று எண்ணியவன் “என்ன வர்ஷி நீ? விளையாட்டுக்கு சொன்னதுக்கு இவ்வளவு சீரியஸா ஆகுற? இப்ப என்ன பந்தி பரிமாற போகணும்? அவ்வளவு தானே? இதோ போறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.
போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி. எப்படி ஒரு நொடியில் அவன் முக பாவனையை மாற்றி கோபத்தை அடக்கி நடித்து விட்டுச் செல்கிறான் என்று எண்ணி அவளுக்கு வியப்பாக இருந்தது. இப்ப தான் நடிக்கிறானா? இல்லை எப்போதுமே நடிக்கிறானா என்ற சந்தேகம் வந்தது.
“இப்படி நடிச்சு தான் என்னையும் இவன் வலைல விழ வச்சானா? அதானே இவன் முகத்தை திருப்பிட்டு போனதுனாலே தானே இவனைப் பாக்கணும்னு ஆசையே எனக்கு வந்துச்சு. அப்படின்னா இது தான் இவன் பிளானா? அண்ணன் இவனைப் பத்தி சொன்னது எல்லாம் உண்மை தானா? இனி யோசிச்சு என்ன செய்ய? ஆனா கவனமா இருக்கணும். இது நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை. இதை நான் சரியா அமைச்சிக்கணும். நீ நடிக்கிறியா நடி அத்தான். அதையே நான் பாஸிட்டிவா மாத்திக்கிறேன்”, என்று எண்ணிக் கொண்டே மேடையில் நின்ற பிரபாகரனைப் பார்த்தாள்.
அண்ணன் சந்தோஷமாக இருப்பது போல பட்டது. ஆனாலும் அவன் பக்கத்தில் இருந்த அர்ச்சனாவைக் கண்டு சிறு கோபம் வந்தது.
“இவ என்ன பெரிய இவளா? இவ எப்படி என் அண்ணனை விட்டு போகலாம்? இந்த அண்ணன் மறுபடியும் எதுக்கு இவளைத் தேடி கூட்டிட்டு வந்தான்? என் அண்ணனுக்கு இவ பொருத்தமே கிடையாது”, என்று எண்ணிக் கொண்டாள்.
திருமணச் சடங்குகள் எல்லாம் முடிந்ததும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் கிளம்பி விட்டார்கள். மகளுக்கு புத்திமதி சொல்லி விட்டு மீனாட்சியும் கிளம்பி விட்டாள்.
வீட்டு ஆட்கள் மட்டுமே அங்கு இருந்தார்கள். அர்ச்சனா தனியே இருக்க அவளுடன் வந்து அமர்ந்து கொண்டாள் சீதா. அன்று இரவு பிரபாகரன் அறையில் இருவருக்கும் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
சீதா கொடுத்த பால் சொம்பை வாங்கிக் கொண்டு அறைக்குள் வந்தவளை சிறு சிரிப்புடன் எதிர்க் கொண்டான். அவளும் இத்தனை நாட்களைப் போல இல்லாமல் இன்று அதிக வெட்கத்துடன் தான் அவனை எதிர்க் கொண்டாள்.
“கிட்ட வா”, என்று அவன் கண்களால் அழைக்க அவன் அருகே சென்றவள் பால் செம்பை டேபிளில் வைத்து விட்டு அவன் அருகே அமர்ந்தாள்.
அவன் கைகள் அவள் தோளில் பதிந்து தன்னை நோக்கி இழுக்க அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
அப்படியே தலையை சரித்து அவனைப் பார்த்தவள் “என் மேல இருந்த கோபம் போய்ருச்சா பிரபா?”, என்று கேட்டாள்.
“அதெல்லாம் போயிருச்சு டி. யு ஆர் மை லவ்வபிள் பொண்டாட்டி. உன் மேல கோப பட முடியுமா? ஆனா பேச்சு போதும் டி. அடுத்ததை ஆரம்பிக்கலாமா?”, என்று கேட்டவனின் இதழ்கள் அவள் கன்னத்தில் பதிய கண்களை மூடி அவன் முத்தத்தில் கரைந்தாள்.