அத்தியாயம் 15 

யுகங்கள் கடந்தாலும் கண்கள்

பேசும் மொழி என்றுமே

அழகு தான் காதலில்!!!

“என்ன பிரபா?”, என்று கேட்டாள் சீதா.

“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? வினோதினிக்கு பாத்துருக்குற மாப்பிள்ளை பிடிக்கலையா?”

“சே சே அப்படி எல்லாம் இல்லை. மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்? வினோதினிக்கு பொருத்தமா இருக்கார் பிரபா”

“அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??”

“அது வந்து…”

“சொல்லுங்க அத்தை”

“எனக்கு அர்ச்சனாவைப் பிடிக்கலை பிரபா”

“அத்தை”

“ஆமா, உனக்கு வேற பொண்ணு கிடைக்கலையா பா? ஒரு தடவை உன்னை வேண்டாம்னு போனவளையே திருப்பியும் கல்யாணம் பண்ணனுமா? நீ நல்லவன், நல்லா படிச்சிருக்க. அழகா இருக்க. உனக்கு ஆயிரம் பேர் பொண்ணு கொடுப்பாங்க. இவ வேண்டாமே?”

“என்னை வேண்டாம்னு சொன்னதுனால உங்களுக்கு அர்ச்சனாவைப் பிடிக்கலை. அப்படி தானே?”

“ஆமா பிரபா”

“ஆனா என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போனவ மறுபடியும் எப்படி என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சான்னு நீங்க யோசிக்கலையா அத்தை?”

“அது….”

“நானே சொல்றேன். அவ என்னை வேண்டாம்னு சொல்லி போனதுக்கு காரணமே உங்க பொண்ணும் உங்க பையனும் தான். அது தெரியுமா உங்களுக்கு?”

“பிரபா”

“ஆமா அத்தை. இந்த உண்மை எனக்கு, அப்பாவுக்கு, அர்ச்சனாவுக்கு மட்டும் தான் தெரியும்”, என்று ஆரம்பித்து அவன் நடந்ததைச் சொல்ல அர்ச்சனாவை எண்ணி பிரம்மித்துப் போனாள் சீதா. அப்படிப் பட்டவளையா தவறாக நினைத்தேன் என்று எண்ணி அவள் கண்கள் கலங்கியது.

“அவ உங்களை அம்மாவா, வினோ வேணுவை கூட பிறந்தவங்களா தான் நினைச்சா. அதனால தான் உயிருக்கு உயிரா விரும்பின என்னை விட்டுட்டு போனா. இப்ப சொல்லுங்க அத்தை. எனக்கு அவளை விட வேற ஒருத்தி பொருத்தமா இருப்பாளா?”

“இல்லவே இல்லை பிரபா. அவ கோடில ஒருத்தி. உனக்கு அவ தான் பொருத்தமா இருப்பா. அவ ஒரு தேவதைன்னு புரியாம பேசிட்டேன் பிரபா. அர்ச்சனாவை தப்பா நினைச்சு நான் மீனாட்சி கிட்ட கூட சரியா பேசலை”

“அவளை நீங்க தப்பா நினைக்க கூடாதுன்னு தான் நான் உண்மையைச் சொன்னேன். நீங்க இதை யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்”

“சரி பிரபா”

“இப்ப சந்தோஷமா ஓடியாடி என் கல்யாணத்தை நடத்துவீங்க தானே?”

“கண்டிப்பா பிரபா”

“அர்ச்சனா இந்த வீட்டுக்கு வந்த அப்புறம் நீங்க தான் அவளை பாத்துக்கணும்”

“என் பொண்ணை நான் பாத்துக்காம யார் பாத்துப்பா? நான் கண்டிப்பா பாத்துக்குவேன்.”, என்று வாக்கு கொடுத்தாள்.

“சரி அத்தை”

“வேணு, வினோ செஞ்சதை மன்னிச்சிரு பிரபா”

“வினோ செஞ்சது தப்பு இல்லை. ஒரே வீட்ல இருக்குறதுனால அவளுக்கு என் மேல ஈர்ப்பு வந்திருக்கும். அவ நல்லவ அத்தை. ஆனா வேணு தான், எப்ப என்ன செய்வான்னு தெரியலை. பாப்போம். சரி நீங்க ரெஸ்ட் எடுங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.

ஒரு வழியாக நாட்கள் நகர்ந்தது. மீண்டும் அர்ச்சனா பழைய மருத்துவமனைக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.

விக்ரம் வினோதினி திருமண நாளும் வந்தது. கோலாகலமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தனர் பிரபாகரனும் சக்கரவர்த்தியும்.

அரக்கு வண்ணப் பட்டுப் புடவையில் அர்ச்சனாவும் திருமணத்தில் கலந்து கொண்டாள். அவளை யசோதா, மஞ்சுளா மற்றும் அஞ்சலி மூவரும் முறைத்துக் கொண்டு தான் இருந்தார்கள். வேணுவோ அவள் பக்கமே வர வில்லை.

யசோதாவிடம் “எப்படி இருக்கீங்க அத்தை?”, என்று அர்ச்சனா கேட்டதற்கு கூட “யாருக்கு யாரு டி அத்தை? ஓடிப் போனவ எதுக்கு திரும்பி  வந்த? ரெண்டாவது தடவை ஓடிப் போறதுக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு தரேன்”, என்று கேட்டாள் யசோதா. அவள் அப்படிக் கேட்ட போது அஞ்சலி மற்றும் மஞ்சுளா இருவரும் அங்கு தான் இருந்தார்கள்.

“சூப்பரா கேட்டீங்க சம்பந்தி அம்மா. ஆனா இவளுக்கு இதெல்லாம் உரைக்குமா என்ன? அப்புறம் இவ ஒரு கோடி ரூபாய் கொடுத்தாக் கூட பல்லைக் காட்டிட்டு வாங்கிக்கிடுவா”, என்றாள் மஞ்சுளா.

“வெறும் ஒரு கோடி தானா? எங்க அப்பாபாபா…. கிட்ட கேட்டா அதுக்கு மேலயும் தருவார். என்ன கேக்கவா? கேக்க கூட வேண்டாம், அப்பான்னு ஒரு வார்த்தை நான் சொன்னாப் போதும், அவர் கிட்ட இருக்குற அத்தனையும் என் பேருக்கு மாறிரும். என்ன செஞ்சி காட்டவா?”, என்று அர்ச்சனா தெனாவெட்டாக கேட்க மஞ்சுளா மற்றும் அஞ்சலி முகம் கருத்தது. அந்த உண்மை அவர்களுக்கு தெரியும். மகள் ஒரு வார்த்தை பேசி விட மாட்டாளா என்று தவம் இருக்கும் சொக்கலிங்கம் கட்டாயம் செய்வார்.

“ஏய் என் கிட்ட பேசு டி. சரி ஒரு கோடி பத்தாதுன்னா அஞ்சு கோடி தரேன். என் பையனை விட்டுப் போயிரு”, என்றாள் யசோதா.

“என்ன அத்தை உங்க பையனோட மதிப்பு வெறும் அஞ்சு கோடி தானா?”, என்று சிரிப்புடன் கேட்டாள் அர்ச்சனா.

“பத்து கோடி தரேன் டி”

“பிரபாவோட மதிப்பு பத்து கோடி தானா?”

“என் மகனுக்கு விலையே கிடையாது டி. உனக்கு எவ்வளவு வேணும்னு சொல்லு, தரேன். வாங்கிட்டு ஓடிரு”

“ஒரு நிமிஷம், அதை உங்க பையன் கிட்ட கேட்டுச் சொல்றேன்”, என்று சொன்ன அர்ச்சனா அங்கே சற்று தள்ளி நின்றிருந்த பிரபாவைப் பார்த்து “பிரபா”, என்று அழைத்தாள்.

“என்ன அர்ச்சனா?”, என்ற படி அங்கே வந்தவன் அப்போது தான் அங்கே நின்ற மற்ற மூவரையும் பார்த்தான். அவன் புருவம் உயர்ந்தது.

மூவரும் திருடனுக்கு தேள் கொட்டியது போல விழிக்க “என்ன அர்ச்சனா? இவங்க கூட என்ன பேசிட்டு இருக்க?”, என்று கேட்டான்.

“இல்லை, உங்க அம்மா, எனக்கு பணம் தராங்களாம். அதை வாங்கிட்டு உங்களை விட்டு போகணுமாம். எவ்வளவு வாங்கட்டும்? உங்களுக்கு தான் விலையே கிடையாதே? என்ன செய்ய?”, என்று அர்ச்சனா சொல்ல அதைக் கேட்டு திகைத்து போனவன் “என்ன மா இதெல்லாம்?”, என்று கேட்டான்.

“இவளை எனக்கு பிடிக்கலை பிரபா. அதான் பணம் தரேன் போய்ருன்னு சொன்னேன். எவ்வளவு வேணும்னு கேட்டு சொல்லு, தந்துறேன்”, என்று திமிராக சொன்னாள் யசோதா.

“ஓஹோ, அப்படின்னா நான் உங்க கிட்ட கேக்குறேன் மா. உங்களுக்கு எவ்வளவு வேணும்?”

“எனக்கு எதுக்கு டா பணம்?”

“நான் உங்க மகனே இல்லைன்னு நீங்க சொல்றதுக்கு”

“பிரபா”, என்று அதிர்ந்து போய் அழைத்தாள்.

“என்ன மா அதிர்ச்சியாகுறீங்க? நீங்க சொல்லுங்க எத்தனை கோடி வேணும் உங்க மகனை விட்டுக் கொடுக்க? நான் தரேன் உங்களுக்கு. பணத்தை வாங்கிட்டு என்னை உங்க மகனே இல்லைன்னு சொல்லிட்டு போயிருங்க”, என்று அவன் தயவு தாட்சண்யமே இல்லாமல் சொல்ல யசோதா கண்களில் கண்ணீர் வந்தது.

அன்னையின் கண்ணீரை வெறித்துப் பார்த்தவன் “இந்த உலகத்துல எப்படி அம்மா மகன் பாசத்துக்கு விலை வைக்க முடியாதோ அதே மாதிரி காதலுக்கும் விலை கிடையாது. அப்படி விலை இருந்துச்சுன்னா அது காதலே கிடையாது. இன்னொரு தடவை அர்ச்சனா கிட்ட இந்த மாதிரி பேசினீங்க நீங்க வேற ஒரு பிரபாவை பாக்க வேண்டியது இருக்கும். வா அர்ச்சனா போகலாம்”, என்று சொல்லி அவளை அழைத்துச் சென்று விட்டான்.

அவன் சென்றதும் யசோதா இடிந்து போய் இருக்க “பாத்தீங்களா சம்பந்தி, உங்க மகனையே ஒரு நிமிசத்துல உங்களுக்கு எதிரா திருப்பிட்டா. கைகாரி. அவ அம்மா இப்படி தான் இவளை வளத்துருக்கா. கல்யாணம் முடிஞ்ச அப்புறம் இந்த வீடும் நீங்களும் என்ன ஆகப் போறீங்களோ?”, என்று ஏற்றி விட்டாள் மஞ்சுளா.

அன்னையின் அருகில் வந்து அமர்ந்தாள் அர்ச்சனா. யசோதா பேசியது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் பிரபா அவளுக்காக பேசியது கொஞ்சம் சந்தோசமாகவே இருந்தது.

அப்போது அவள் அருகே வந்து அமர்ந்தார் சொக்கலிங்கம். அவரைக் கண்டு குழப்பமாக பார்த்தாலும் எதுவும் பேச வில்லை. “என்னை மன்னிச்சிரு பாப்பா. நானும் உன்னை தப்பா நினைச்சிட்டேன். சக்கரவர்த்தி சொன்னதும் தான் எல்லாம் புரிஞ்சது”, என்று மன்னிப்பு கேட்டார்.

“பரவால்ல விடுங்க”, என்று மட்டும் சொன்னாள் அர்ச்சனா. முன்பிருந்த அர்ச்சனாவாக இருந்திருந்தால் முகத்தை திருப்பி அவரை அவமானப் படுத்தி இருப்பாள். அப்படி இல்லையென்றால் உங்களை மாதிரி என்னையும் நினைச்சீங்களா என்று பதிலுக்கு கேட்டிருப்பாள். ஆனால் இப்போது இருப்பவள் இன்னும் பக்குவப்பட்டவள். அதுவும் இந்த ஒரு வருட தனிமை வாழ்க்கை அவளை கொஞ்சம் மாற்றி இருந்தது. இப்போதும் அவரை அவள் அப்பா என்று அழைக்க வில்லை தான். ஆனாலும் அவர் மேல் எந்த கோபமும் காட்ட வில்லை. அதுவே அவருக்கு போதுமானதாக இருந்தது.

அவளின் இரண்டு வார்த்தையில் அவர் முகம் மலர்ந்து போனது. “என் பொண்ணு என் கிட்ட பேசிட்டா டா”, என்று சக்கரவர்த்தியிடம் சொல்லி பூரித்துப் போனார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மஞ்சுளா மற்றும் அஞ்சலி முகம் கடுத்தது.

விக்ரம் வினோதினி திருமணம் நல்ல படியாக நடந்தது. எல்லா சடங்குகளும் முடிந்ததும் வினோதினியை அழைத்துக் கொண்டு விக்ரம் பத்மா இருவரும் பேங்க்ளூர் கிளம்பினார்கள்.

அடுத்த பத்து நாட்கள் கழித்து அர்ச்சனா பிரபாகரன் திருமண நாளும் வந்தது. விக்ரம் குடும்பமாக வந்திருந்தான். காயத்ரியும் குடும்பமாக வந்து விட்டாள். மற்ற உறவினர்கள், தோழிகள் என அனைவரும் வந்திருந்தார்கள். மீனாட்சியின் பிறந்த வீட்டினர் கூட வந்து விட்டார்கள்.