Advertisement

“கூல் பிரபா. எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? வினோதினியும் நீயும் சின்ன வயசுல இருந்து ஒரே வீட்ல இருந்துருக்கீங்க? அப்ப இந்த மாதிரி எண்ணம் வரது சகஜம் தான். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை”

“நீ வினோதினியை தப்பா நினைக்கலை தானே? பிடிக்கலைன்னா இப்பவே சொல்லிரு டா. நான் உனக்கு வேற பொண்ணு பாக்குறேன்”

“உண்மையிலே தப்பா நினைக்கலை டா. தப்பா நினைக்கவும் ஒண்ணும் இல்லை. இன்னும் சொல்லப் போனா வினோதினியை நேர்ல பாக்கணும்னு இன்னும் ஆர்வம் தான் கூடிருக்கு. என்ன புரியலையா? அர்ச்சனா உன்னை உயிருக்கு உயிரா விரும்பினாங்க. அப்படிப் பட்ட காதலனை வினோதினிக்காக விட்டுக் கொடுக்கணும்னா அர்ச்சனா மனசுல வினோதினிக்கான இடம் ரொம்ப பெருசு இல்லை. அப்படி அர்ச்சனா கிட்ட நல்ல பேர் வாங்கின வினோதினியை நான் தப்பா நினைப்பேனா? அது மட்டும் இல்லாம எனக்கும் காலேஜ்ல ஒரு ஒன் சைட் லவ் உண்டு. அதை நான் வினு கிட்ட சொல்லிக்கிறேன். ஆனா அவளுக்கு தான் என்னைப் பிடிக்குமானு தெரியலை”

“வினுவா?”

“ஆமா, என் பொண்டாட்டிக்கு நான் வச்ச செல்ல பேர்”, என்று சொல்ல சந்தோஷமாக அவனைக் கட்டிக் கொண்டான் பிரபாகரன்.

அன்று மதியத்க்கு மேல் அர்ச்சனா வேலை விட்டு வந்ததும் மதிய உணவை முடித்துக் கொண்டு அனைவரும் பிரபாகரன் காரில் சென்னைக்கு கிளம்பினார்கள்.

சென்னையில் இருக்கும் விக்ரமின் வீடு தூசியாக இருக்கும் என்பதால் கார் நேராக அர்ச்சனா வீட்டுக்கு தான் சென்றது. அனைவரையும் அன்புடன் வரவேற்ற மீனாட்சி மகளிடம் மட்டும் ஒரு வார்த்தை கூட பேச வில்லை.

அவர்களை அங்கே விட்டுவிட்டு இரவு உணவையும் முடித்து விட்டே அங்கிருந்து தன் வீட்டுக்கு கிளம்பினான் பிரபாகரன்.

அவன் சென்றதும் விக்ரம் பழைய வீட்டை கிளீன் பண்ணப் போகிறேன் என்று சொல்லி அர்ச்சனாவின் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான்.

மீனாட்சியும் பத்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த அர்ச்சனா “அம்மா சாரி மா, என் கிட்ட பேசு மா”, என்று மீனாட்சியின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்க அவள் பிடித்த கையை உதறிக் கொண்டு அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் மீனாட்சி.

“என்ன மீனாட்சி அவ சின்ன பொண்ணு”, என்று பத்மா சொல்ல உடைந்து அழுதாள் மீனாட்சி.

“சின்ன பொண்ணாக்கா இவ? எவ்வளவு பெரிய வேலை செஞ்சிட்டா? பிரபா மாப்பிள்ளை உறுதியா இருக்க பொய் எல்லாம் சரியாப் போச்சு. இல்லைனா இவ வாழ்க்கை என்ன ஆகிருக்கும்? இப்பவும் அந்த வீட்டுக்கு கல்யாணம் முடிச்சுப் போய் என்ன ஆகப் போறாளோ? பயமா இருக்கு. இவ வாழ்க்கை என்ன ஆகுமோ? எனக்கும் இவளை விட்டா வேற யார் இருக்கா? சொல்லுங்க”

“அம்மா என்னை மன்னிச்சிரு மா”, என்று சொன்ன அர்ச்சனா அன்னையை இறுக கட்டிக் கொண்டாள். மீனாட்சியும் மகளை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

சிறிது நேரத்தில் பத்மாவின் உதவியால் இருவரும் சமாதானமானார்கள். இரவு பத்து மணிக்கு விக்ரம் வரும் வரை மூன்று பெண்களும் பேசிக் கொண்டு தான் இருந்தார்கள். அதன் பின் அனைவரும் உறங்கச் சென்றார்கள்.

அடுத்த நாள் காலை எழுந்து குளித்து முடித்து கீழே வந்தான் பிரபாகரன். சக்கரவர்த்தி யசோதா சீதா மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பிரபா வந்ததும் சீதா அவனுக்கு பரிமாற எழுந்து கொள்ள முயல “நீங்க உக்காந்து சாப்பிடுங்க அத்தை. நான் எடுத்து வச்சிக்கிறேன்”, என்று சொல்லி எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தான்.

அவன் ஒரு வாய் உணவை உண்ண கையை கொண்டு செல்லும் போது “உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க பிரபா?”, என்று கேட்டாள் யசோதா.

“யசோ, அவனை முதல்ல சாப்பிட விடு”, என்றார் சக்கரவர்த்தி.

“என்னங்க நீங்க, இப்படி இருக்கீங்க? ரெண்டு நாளா இவன் எங்க போனான்? ஆஃபிஸ்க்கும் போகலை. எங்க போறேன்னு ஒரு வார்த்தை சொல்லலை”

“என் கிட்ட சொல்லிட்டு தான் போனான் யசோ”

“என்னது? அவன் எங்க போனான்னு உங்களுக்கு தெரியுமா? அப்ப நான் கேட்டப்ப ஏன் சொல்லலை?”

“சொன்னா நல்ல காரியம் நடக்காதுல்ல? அதான்”

“என்னது? என்ன உளறுறீங்க?”

“அவன் போனது அர்ச்சனாவைக் கூப்பிட?”

“என்னது அர்ச்சனாவா? அவளை எதுக்கு? இவன் இன்னும் அவளையா நினைச்சிட்டு இருக்கான்? என்ன பிரபா இதெல்லாம்?”

“மறந்தா தானே மா நினைக்கணும்?”, என்று கேட்டான் மகன்.

“பிரபா”, என்று அவள் கத்த “கத்தாதீங்க மா. நான் தான் முன்னாடியே சொன்னேனே? அவ தான் எனக்குன்னு”, என்றான்.

“உனக்கு வெக்கம் மானம் சூடு சுரணை இல்லையா பிரபா”

“என் பொண்டாட்டிக்கிட்ட அதை எல்லாம் பாக்கணுமா மா?”

“பொண்டாட்டியா? சகிக்கலை”, என்று சொல்லி யசோதா முகம் சுளிக்க “யசோ, சும்மா இரு”, என்று சொன்ன சக்கரவர்த்தி மகனைப் பார்த்தார்.

“அர்ச்சனா வந்துட்டா பா. கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டா. விக்ரம் குடும்பமும் வந்தாச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல வினோதினியை பொண்ணு பாக்க வராங்க. அப்படியே பேசி முடிச்சிறலாம். எங்க கல்யாணத்தையும் சேத்து. சொக்கலிங்கம் மாமாவையும் வரச் சொல்லிட்டேன்”, என்று பிரபாகரன் சொல்ல “உனக்கு கல்யாணமா? பொண்ணு யாரு பிரபா?”, என்று கேட்டு கடுப்பேற்றினாள் யசோதா.

“என்ன கேக்குற யசோ? அர்ச்சனா தான் பொண்ணு”, என்றார் சக்கரவர்த்தி.

“என்னது? அந்த ஓடுகாலியா?”, என்று யசோதா கேட்க “அம்மா…” “யசோதா…”, என்று அப்பா மகன் இருவரும் கத்தினார்கள்.

“என்ன கத்துறீங்க ரெண்டு பேரும்? நான் இல்லாததையா சொன்னேன். அவ எல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி பட்டு வர மாட்டா”, என்றாள் யசோதா.

“இதுக்கு தான் உன் கிட்ட சொன்னா நல்ல காரியம் நடக்காதுன்னு சொன்னேன்”, என்று சக்கரவர்த்தி சொல்ல “அம்மா போன தடவை வாயை வச்சீங்க? ஒண்ணும் இல்லாம போச்சு. இப்பவும் ஏதாவது பேசினீங்க? நானே கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பேன்”, என்றான் பிரபாகரன்.

அவன் சொன்னதை செய்வான் என்பதால் வாயை மூடிக் கொண்டாள். “அவ கிடக்குறா டா. ரெண்டு கல்யாணமும் முடிவு பண்ணலாம். சீதா என்ன மா சொல்ற?”, என்று கேட்டார் சக்கரவர்த்தி.

“எனக்கு சம்மதம் அண்ணா”, என்று சீதா சொல்ல “வினோதினி கிட்ட விக்ரம் போட்டோ காமிங்க பா”, என்று சொல்ல வினோதினியை அழைத்து விக்ரம் போட்டோவைக் காட்டி “இவர் தான் பிரபா உனக்கு பாத்திருக்குற மாப்பிள்ளை வினோ மா. உனக்கு பிடிச்சிருக்கான்னு பாரு”, என்று நீட்டினார் சக்கரவர்த்தி.

அதை வாங்கிப் பார்த்தவள் “நல்லா இருக்கார் மாமா. உங்க எல்லாருக்கும் சரின்னா எனக்கும் சரி தான்”, என்று சொல்லி விட்டு பிரபாகரனை ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்றாள். அவன் அவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. ஆனாலும் அவள் பார்வையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. “முன்னாடியே கவனிச்சிருக்கணும்”, என்று காலம் தாழ்த்தி புரிந்து கொண்டான்.

சீதா வேணுவிடம் விஷயத்தைச் சொன்னதும் வேணு உள்ளுக்குள் குமுறினான். பிரபாகரன் திருமணத்தை நிறுத்தி வினோதினியை அகிலனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அவனது திட்டம் தவிடு பொடியானதை அவனால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை.

இப்போது ஒரு டாக்டர் மாப்பிள்ளையை தங்கைக்கு பேசி முடித்திருப்பது நிம்மதியைத் தந்தாலும் பிரபாகரன் அர்ச்சனா திருமணம் மீண்டும் நடக்க விருப்பத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவன் முகமே உர்ரென்று இருந்தது. அவன் முகத்தைப் பார்த்த சக்கரவர்த்தி “என்ன வேணு டல்லா இருக்க? தங்கச்சிக்கு கல்யாணம்னு சந்தோஷமா இருப்பேன்னு பாத்தேன்?”, என்று கேட்டார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாமா”

“ஒண்ணும் இல்லாம தான் இருக்கணும். ஏதாவது இருந்தா பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை”, என்று அவர் சொல்ல திகைத்து போனான்.

அவர் கோபமாக சொல்ல வில்லை தான். ஆனால் அவர் பேச்சில் ஏதோ உள்குத்து இருப்பது போலவே அவனுக்கு தோன்றி வைத்து. “என்னைப் பத்தி எதுவும் கண்டு பிடிச்சிருப்பாரோ? சே சே இருக்காது. இருந்தா நேரடியா கேட்டுருப்பாரே? ஆனா ஏன் இப்படிச் சொன்னார்?”, என்று குழம்பினான்.

பதினொரு மணி போல விக்ரம், பத்மா, மீனாட்சி, சொக்கலிங்கம் நால்வரும் வந்தார்கள். அர்ச்சனா மருத்துவமனைக்கு வேலைக்கு கேட்க போய்விட்டு காயத்ரியை பார்க்கச் செல்வதாக கிளம்பி விட்டாள். சொக்கலிங்கமும் அங்கே வந்திருந்தார். அவர் கிளம்பும் போது மஞ்சுளா “அஞ்சலியைப் பாக்கணும் போல இருக்குங்க. நானும் வரேன்”, என்று தான் சொன்னாள்.

“நான் அர்ச்சனா கல்யாணத்தை முடிவு பண்ணப் போறேன். நீ வந்தா போன காரியம் உருப்படாது. நீ வீட்லே இரு”, என்று சொல்லி விட்டு தான் வந்தார்.

விக்ரம் மற்றும் வினோதினி இருவருக்கும் பார்த்த உடன் பிடித்துப் போனது. இரண்டு திருமணங்களும் முடிவானது. இன்னும் இருபது நாளில் விக்ரம் வினோதினி திருமணமும் அதற்கு அடுத்து பத்து நாட்கள் கழித்து பிரபாகரன் அர்ச்சனா திருமணமும் முடிவானது.

விக்ரம் வினோதினி இருவரையும் தனியே பேசச் சொல்ல இருவரும் தயக்கத்துடன் என்றாலும் ஒருவருக்கொருவர் பிடித்திருப்பதை சொல்லி விட்டார்கள். பழைய காதலைப் பற்றியும் பேசி அதை ஒன்றும் இல்லை என்றும் கூறி விட்டார்கள்.

எல்லாம் நல்ல படியாக சென்றது. ஆனால் அர்ச்சனா இந்த வீட்டுக்கு மருமகளாக வருவது மட்டும் வேணு, யசோதா, அஞ்சலி மற்றும் சீதாவுக்கு பிடிக்க வில்லை. ஆம் சீதாவுக்கு அர்ச்சனாவைப்  பிடிக்க வில்லை. அர்ச்சனா திருமணம் பற்றி பேசும் போது அவள் முகம் சுளித்ததை பிரபாகரன் பார்த்து விட்டான். கூடவே சீதா முன்பு போல மீனாட்சியிடம் பேசாததையும் குறித்துக் கொண்டான்.

திருமண விஷயம் பேசி விட்டு அனைவரும் சென்றதும் “அத்தை”, என்ற படி வந்தான் சீதா அருகில் வந்து அமர்ந்தான் பிரபாகரன்.

காதல் தொடரும்…..

Advertisement