Advertisement

“உங்களை இந்த அளவுக்கு கார்னர் பண்ண அவசியம் என்ன பிரபா? இத்தனைக்கும் அவர் உங்க வீட்ல இருக்கார், உங்க கம்பெனில தானே வேலை பாக்குறார். அப்புறம் என்ன?”

“அவன் ஸ்கூல் படிக்கும் போது அமைதியா தான் இருப்பான். ஆனா பொண்ணுங்களை லவ் பண்ணுறேன்னு டார்ச்சல் கொடுப்பான் போல? ரெண்டு பொண்ணுங்க என் கிட்ட வந்து சொல்லுச்சு. நான் அவனைக் கூப்பிட்டு வார்ன் பண்ணினேன். அப்புறம் அவன் சரியாகிட்டான். சாரி மச்சான்னு என் கிட்ட சொன்னான். நானும் அவன் திருந்திட்டான்னு தான் நினைச்சேன். ஒரே வீட்ல இருந்தாலும் வர்ஷினியைத் திரும்பிக் கூட பாக்க மாட்டான். அதுவே அவளை இம்ப்ரஸ் பண்ணுச்சு போல? அவ அவனை லவ் பண்ணினா. நானும் அவனை முதல்ல நல்லவன்னு தான் நினைச்சேன். அப்புறம் ஒரு நாள் அவன் அவனோட பிரண்டு கிட்ட பேசுறதைக் கேட்டேன். வர்ஷினியை வளைச்சுப் போடத் தான் அவ கிட்ட இருந்து விலகிப் போற மாதிரி நல்லவன் வேஷம் போடுறேன்னு சொன்னான்”

“என்ன சொல்றீங்க?”

“ஆமா, அதை நான் கேட்டுட்டேன். நான் என் தங்கச்சி கிட்ட எவ்வளவோ சொன்னேன். ஆனா அவ என்னை நம்பலை. அவனைத் தான் நம்பினா. எனக்கு அவர் தான் வேணும்னு சொன்னா. அதுக்கப்புறம் தான் வீட்ல அவங்க கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சது. அப்பா என் கிட்ட கேட்டாங்க. நான் சரின்னு சொல்லிட்டேன். வேற என்ன செய்ய? ஆனா அவனுக்குள்ள என் மேல கோபமும் வன்மமும் இருக்கும் போல? ஒண்ணு நான் அவனை மிரட்டினதுக்கா இருக்கலாம். இல்லை வர்ஷினி கிட்ட அவனைப் பத்தி சொன்னதுக்கா இருக்கலாம். அப்படி இல்லைன்னா இனிமே அவனைப் பத்தி ஏதாவது சொல்லிருவேன்னு பயந்து கூட இப்படி பண்ணிருக்கலாம். ஏதோ ஒண்ணு அவனுக்கு என் சந்தோஷம் கெடணும். அதான் அவன் பிளான்”

“அவரை ரொம்ப நல்லவர்னு நினைச்சேன்”

“எல்லாரையும் நம்பாத அர்ச்சனா. நம்ம கல்யாணம் நடந்த அப்புறமும் அவன் ஏதாவது தில்லாங்கலடி வேலை செய்வான். நீ கவனமா இருக்கணும்”

“சரி பிரபா”

“இப்ப சொல்லு. விக்ரம் கிட்ட எப்படி நான் வினோதினி என்னை விரும்பின விஷயம் சொல்லுவேன்?”

“கரெக்ட் தான். ஒரு பிரண்டா நீங்க இதை விக்ரம் கிட்ட மறைக்க முடியாது. சொல்லத் தான் செய்யனும். ஆனா விக்ரம் நல்ல கேரெக்டர். இதை எல்லாம் புரிஞ்சிப்பார்”

“பேசிப் பாக்கணும். சரி அத்தைக் கிட்ட பேசுறியா?”

“நான் போன் பண்ணினா அம்மா எடுக்க மாட்டாங்க”

“ஆனா நான் பண்ணினா எடுப்பாங்களே”, என்று சொல்லி தன்னுடைய போனில் இருந்து அழைத்து ஸ்பீக்கரில் போட்டான்.

அதை எடுத்து “சொல்லுங்க மாப்பிள்ளை”, என்றாள் மீனாட்சி.

“நான் உங்க பொண்ணைப் பாத்து பேசிட்டேன் அத்தை. நாளைக்கு கிளம்பி அங்க வரோம்”

“நல்லது மாப்பிள்ளை வாங்க”

“அவ கிட்ட பேசுறீங்களா?”, என்று அவன் கேட்க “அம்மா”, என்று அழைத்தாள் அர்ச்சனா.

“நான் உங்க கிட்ட மட்டும் தான் மாப்பிள்ளை பேசுவேன். வேற யாரும் என் கூட பேச வேண்டாம். சரி நாளைக்கு பாத்து வாங்க. நான் வைக்கிறேன்”, என்று சொல்லி போனை வைத்தாள். அர்ச்சனா முகம் வாடிப் போக “அவங்க கோபமும் நியாயமானது அர்ச்சனா. அதை நீ தாங்கித் தான் ஆகணும்”, என்று அவன் சொல்ல புரிந்தது என்னும் விதமாக தலையசைத்தாள்.

“எங்க அம்மா கோபம் கூடிய சீக்கிரம் சரியாகிரும் பிரபா. ஆனா உங்க அம்மாக்கு ஏற்கனவே என்னைப் பிடிக்காது. இப்ப சுத்தமா பிடிக்காது”

“அதுவும் மாறும் அர்ச்சனா. முதல்ல அம்மாவுக்கு உன்னைப் பாத்ததும் பிடிச்சு போச்சு. இப்ப கோபமா இருக்காங்க தான். ஆனா கண்டிப்பா உன்னைப் புரிஞ்சிக்குவாங்க. அப்படி ஒரு வேளை உன்னைப் புரிஞ்சிக்காம பேசினா….”, என்று அவன் சொல்ல வர “நான் உங்களுக்காக பொறுமையா இருப்பேன் பிரபா”, என்றாள் அர்ச்சனா.

“அது என்ன தேவைக்கு? வாழ்க்கை ஒரு தடவை தான். அதை நிம்மதியா ரசிச்சு வாழனும். தினம் தினம் சகிச்சிக்கிட்டு வாழக் கூடாது. அவங்க ஏதாவது சொல்லி நீ எனக்காக அமைதியா போனாலும் உன் மனசு அமைதியா இருக்குமா சொல்லு? உனக்கு பொறுமை போற வரைக்கும் தான் நானும் பொறுமையா இருப்பேன். அதுக்கு மேல அம்மா ஏதாவது பேசினா நான் முடிவு எடுத்துக்குவேன்”

“எதுக்கு நீங்க ஏதாவது பேசி அம்மா மகனைப் பிரிச்ச பேரை நான் வாங்கவா? நீங்க உங்க அம்மா கூட தான் இருக்கணும். அவங்களை நாம தான் பாத்துக்கணும். அவங்க என்னை என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போகட்டும்”

“இது உன்னோட பெரிய மனசு டி. அவங்களும் பெரிய மனசோட நடந்துக்கிட்டா எல்லாரும் நல்லா இருக்கலாம். அப்படி இல்லைன்னா நான் கண்டிப்பா உன் பக்கம் நிப்பேன்”

“அப்ப அவங்க தனியா ஆகிருவாங்க பிரபா”

“இல்லை, அவங்களுக்கு அப்பாவும் ரெண்டாவது மகனும் இருப்பாங்க. அவங்களுக்கு மூத்த மகன் வேணுமா என் பொண்டாட்டிக்கான அங்கீகாரத்தை அவங்க கொடுத்து தான் ஆகணும்”

அடுத்து இருவரும் வெகு நேரம் பேசினார்கள். இனி அவளுடைய வேலை சென்னையில் தொடருவதைப் பற்றி பேசினார்கள். அவள் இங்கே வந்து தனிமையில் யோசித்தவற்றைப் பேசினாள். அவன் இப்போது போட்டிருக்கும் உடை அவனுடையது என்பது வரைக்கும் எல்லாம் சொன்னான்.

“எல்லாரும் பிராடு. பத்து அம்மா கூட ஒரு வார்த்தை சொல்லலையே?”, என்று சொல்லி அவனைக் கிள்ளி வைத்தாள்.

அது சிறு வலியைக் கொடுத்தாலும் அதற்கு முத்தமென்னும் பரிசையே அவளுக்கு கொடுத்தான் பிரபாகரன். இருவரும் வெகு நேரம் பேசினார்கள். பேசிய படியே உறங்கியும் போனார்கள். ஒருவரை ஒருவர் அணைத்த படி படுத்திருந்தாலும் அங்கே காதல் மட்டுமே இருந்தது.

இவன் இனி என்னுடையவன். இனி யாரும் வந்து தங்களுக்குள் பிரிவை ஏற்படுத்த முடியாது என்று அவள் மனம் நிம்மதி கொண்டது. அவனுக்கும் தன்னவள் கிடைத்து விட்டாள் என்று நெஞ்சம் அமைதி கொண்டது.

இது வரை அனுபவித்த வலியை எல்லாம் மறந்தது போல ஒரு நிம்மதியான உறக்கத்தை தொடர்ந்தார்கள். இது வரை இருந்த மனக் கசப்புகள் எல்லாம் அவர்களை விட்டுச் சென்றிருந்தது.

அடுத்த நாள் காலை எழுந்ததும் எப்போதும் போல எழுந்து குளித்து முடித்து மருத்துவமனைக்கு கிளம்பினாள். அவன் கண் விழித்த போது அவள் கிளம்பி முடித்திருக்க “குட் மார்னிங் அர்ச்சனா”, என்றான்.

“குட் மார்னிங் பிரபா”

“எங்க டி கிளம்பிட்ட? நாம ஊருக்கு போகணும்”

“தெரியும் பிரபா. உங்களை விட எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்லை. ஹாஸ்பிட்டல்ல இருக்குற முக்கியமான வேலையை முடிச்சிட்டு அப்படியே வேலை வேண்டாம்னு எழுதிக் கொடுத்துட்டு வந்துறேன்”

“சரி அர்ச்சனா”

“நீங்க எந்திரிச்சு குளிங்க. பத்மா அம்மா இன்னும் சாப்பிட வரலையேன்னு பாத்துக்கிட்டு இருப்பாங்க. விக்ரமும் இன்னும் கொஞ்ச நேரத்துல நைட் ஷிப்ட் பாத்துட்டு வந்துருவார்”, என்று சொல்ல அவனும் எழுந்து குளிக்கச் சென்றான்.

அவன் குளிக்கச் சென்றதும் விக்ரம் வீட்டுக்கு சென்றாள். “வா அர்ச்சனா, மாப்பிள்ளை எழுந்துட்டாரா?”, என்று கேட்டாள்.

இடுப்பில் கை வைத்து முறைத்தவள் “அவர் மாப்பிள்ளையா? அவரை உங்களுக்கு தெரியவே தெரியாது பாருங்க”, என்று கேட்டாள்.

“ஹி ஹி, பிரபா சொல்லிட்டானா?”

“எப்படி மா, இத்தனை நாள் என்னைப் பத்தி ஒண்ணுமே தெரியாத மாதிரி மெயிட்டேயின் பண்ணுனீங்க?”

“நீ எனக்கு பொண்ணு மாதிரி டா. உனக்கு ஒரு நல்லது நடக்கணும்னு நாங்க எல்லாம் பொறுமையா இருந்தோம். நான் ஏதாவது சொல்லிருந்தா நீ என்ன முடிவு எடுப்பேன்னு தெரியாதுல்ல? அதான். சரி சரி பிரபா எங்க? சூடா பொங்கல் செஞ்சிட்டேன். சாப்பிட கூப்பிட்டு வா”

“அவர் குளிக்கிறார் மா. அவர் பேக் எங்க?”

“விக்ரம் ரூம்ல இருக்கு பாரு. எடுத்துட்டு போ. சீக்கிரம் சாப்பிட வாங்க”

“சரி மா”, என்று சொல்லி விட்டு உள்ள சென்று பேகை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்குச் சென்றாள். அவள் வரும் போது அவன் துண்டுடன் நிற்க அவன் முகம் பார்க்காமல் பேகை நீட்டினாள்.

சிறு சிரிப்புடன் வாங்கிக் கொண்டவன் “கல்யாணம் முடியுற வரைக்கும் தான் இந்த தலை குனியுறது எல்லாம்”, என்றான்.

“அதுக்கப்புறம்?”, என்று அவள் குழப்பமாக கேட்க “நீ தான் குளிக்க வைக்கணும்”, என்று சொல்லிச் சென்றான். அதைக் கேட்டு அவள் உதடுகள் மலர்ந்தது.

அர்ச்சனாவும் பிரபாகரனும் விக்ரம் வீட்டுக்குச் செல்லும் போது அப்போது தான் வேலை முடிந்து வந்த விக்ரம் அவர்களைக் கண்டு புன்னகைத்தான்.

அவனை முறைத்துப் பார்த்த அர்ச்சனா எதுவும் பேச வில்லை. “என்ன?”, என்று கண்களால் பிரபாகரனிடம் அவன் ஜாடை காட்ட “அவ கிட்ட எல்லாம் சொல்லிட்டேன் டா”, என்றான்.

“ஹா ஹா, இப்ப தான் நிம்மதியா இருக்கு. அர்ச்சனா எனக்கு நல்ல ஃபிரண்ட். அவளுக்கு உண்மையா இல்லாம இருக்கோமேன்னு ரொம்ப நாள் கஷ்டமா இருந்துக்சு”, என்றான்.

“பரவால்ல விக்ரம். என்னோட நல்லதுக்கு தானே பண்ணுனீங்க? சரி குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்“, என்றாள் அர்ச்சனா.

சாப்பிட்டு முடித்த பின் அனைவரிடமும் சொல்லி விட்டு அர்ச்சனா வேலைக்கு கிளம்ப பத்மா மதிய உணவுக்கு சமைக்கச் சென்றாள். நண்பர்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

“என்னைக்கு டா கல்யாணம் பண்ணப் போற?”,. என்று கேட்டான் விக்ரம்.

“முதல்ல உங்க கல்யாணம் நடக்கட்டும். அப்புறம் பண்ணுறேன். ஆனா அதுக்கு முன்னாடி உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”

“என்ன டா?”

“அர்ச்சனா ஏன் என்னை வேண்டாம்னு இங்க வந்தா தெரியுமா?”

“அட இதைக் கேக்க மறந்துட்டேன் பாரு? எதுக்காம் டா?”

“அது..,. அது வந்து….”

“என் கிட்ட என்ன தயக்கம்?”

“இல்லை, நான் சொல்லப் போறதை நீ எப்படி எடுத்துப்பன்னு தெரியலை. நீ வினோதினியை தப்பா நினைக்க கூடாது”

“என்னன்னு சொல்லு டா. குழப்பாதே. என்ன நடந்திருந்தாலும் அவ தான் என்னோட வைப்ன்னு நான் பிக்ஸ் பண்ணிட்டேன்”

“வினோதினிக்கு என் மேல ஒரு கிரஷ் இருந்துருக்கும் போல டா. அதான் அவளுக்கு என்னை விட்டுக் கொடுத்துட்டு அர்ச்சனா வந்துருக்கா. இது எனக்கு நேத்து தான் தெரியும். ஆனா முன்னாடியே வினோதினி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா. அவ மனசுல நான் இப்ப இல்லை. அவளை என் தங்கச்சி மாதிரி தான் டா நினைச்சேன்”, என்று தவிப்புடன் சொன்னான்.

Advertisement