Advertisement

அத்தியாயம் 14 

தன் உயிர் வைத்து

பிரம்மன் படைத்த ஓவியத்தைக்

கண்டேன் உன் உருவில்!!!

“நீ என்னை நம்பி இந்த அளவுக்கு உன்னையே ஒப்படைச்சிருக்க. அதுவே உன் காதலை எனக்கு புரிய வச்சிருச்சு டி. கொஞ்சம் தனிமை கிடைச்சதும் ரொம்ப நாள் ஆசையும் சேந்து தான் என்னை தடுமாற வச்சிட்டு. சாரி”, என்று சொல்லி விலகினான் பிரபாகரன்.

“விலகாதீங்கன்னு தானே சொல்றேன்? என்னை விட்டுப் போகாதீங்க பிரபா”

“நான் உன்னை விட்டு எங்க போக? இல்லை உன்னை விட்டு போகத் தான் முடியுமா? நீ எப்ப டி என் காதலை புரிஞ்சிக்கப் போற?”

“எனக்கு புரியுது பிரபா. ஆனா பயமா இருக்கு. திருப்பியும் பிரிஞ்சிருவோமோன்னு”

“அப்படி ஏன் நினைக்கிற? இனி நமக்கு பிரிவே கிடையாது டி. நாளைக்கே ரெண்டு பேர் வீட்லயும் கல்யாணம் பத்தி பேசுறேன்”

“அது நடக்குறப்ப நடக்கட்டும். மறுபடியும் நீங்க எனக்கு கிடைக்காம போய்ருவீங்களோன்னு பயமா இருக்கு. பிளீஸ்”

“இது தப்பு டி. நீ ஒரு டாக்டர் தானே?”

“நான் யாரா வேணா இருக்கட்டும். நீங்க என்னோட பிரபா. எனக்கு அது மட்டும் தான் நினைவு இருக்கு”

“அர்ச்சனா பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு டி. பிளீஸ் என்னைப் புரிஞ்சிக்கோ”, என்று சொன்னவன் “அந்த அம்மா இதை தானே சொல்லி அனுப்பினாங்க?”, என்று கேட்டான். ஆமா என்று தலையசைத்தாள்.

“அவங்க மட்டும் இல்லை அர்ச்சனா. உங்க அம்மாவும் நம்பி தான் என்னை அனுப்பினங்க. என்னால அவங்களுக்கு மட்டும் இல்லை, என்னோட மனசாட்சிக்கு கூட துரோகம் செய்ய முடியாது. முதல்ல கல்யாணம் முடியட்டும். வா கொஞ்ச நேரம் பேசலாம்”, என்று சொல்லி சுவரில் சாய்ந்து அமர்ந்தவன் பாயில் காலை நீட்டிக் கொண்டான்.

அவன் அருகே வந்து அமர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவன் ஏதோ யோசித்த படி இருக்க “என்ன யோசிக்கிறீங்க?”, என்று கேட்டாள்.

“இல்லை விக்ரம் கிட்ட எப்படி வினோதினி என்னை விரும்பினான்னு சொல்ல முடியும்?”

“அது எதுக்கு சொல்லணும்?”

“சே சே அது தப்பு அர்ச்சனா. உண்மையை மறைக்க கூடாது”

“அப்படின்னாலும் அதை வினோதினி தான் சொல்லணும் பிரபா. விக்ரம் நீங்க பாத்த மாப்பிள்ளை அவ்வளவு தான். அதனால நீங்க சொல்லணும்னு அவசியம் இல்லை”

“அவன் நான் பார்த்த மாப்பிள்ளையா மட்டும் இருந்திருந்தா சொல்லிருக்க வேண்டாம். ஆனா என்னோட உயிர் நண்பனா போய்ட்டானே?”, என்று மனதில் எண்ணிக் கொண்டான். அதை இப்போது இவளிடம் சொல்லி விடலாமா என்று அவன் யோசிக்கும் போது “வினோதினி பத்தி சொல்லலாமா வேண்டாமான்னு அப்புறம் பாப்போம். இப்ப எனக்கு பதில் சொல்லுங்க. அப்ப எதுக்கு அப்படி பேசி என்னை வெறுப்பேத்தினீங்க?”, என்று கேட்டாள்.

“என்ன பேசுனேன்?”

“அஞ்சலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு”

“நான் எங்க அப்படிச் சொன்னேன். அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு தான் சொன்னேன். என் கூடன்னு சொல்லவே இல்லையே?”

“சரி உங்க வீட்டுக்கு ராணியாகிட்டானு சொன்னீங்க தானே? அப்படி நீங்க சொல்லலாமா?”

“நான் பொய் சொல்லலை அர்ச்சனா”, என்று அவன் சொன்னதும் அவனைக் குழப்பமாக பார்த்தாள்.

“என்ன முழிக்கிற? நான் உண்மையைத் தான் டி சொல்றேன். நீ அங்க இருந்து வந்ததும் அன்னைக்கே அகிலுக்கும் அஞ்சலிக்கும் கல்யாணம் ஆகிருச்சு. அப்ப அவளும் அந்த வீட்டுக்கு ராணி தானே?”

“என்னது? கல்யாணம் ஆகிருச்சா? யார் பண்ணி வச்சா?”

“நான் தான்”

“ஏன்?”

“அவங்க ரெண்டு பேரும் விரும்பினாங்க. அதான் பண்ணி வைக்கச் சொன்னேன்”

“ஓ”

“ஆமா, அன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?”, என்று கேட்டவன் அன்று நடந்ததைச் சொன்னான். அவளால் மீனாட்சி அசிங்கப் பட்டதைக் கேட்டு கஷ்டமாக இருந்தது அர்ச்சனாவுக்கு.

“அத்தை பாவம் டி. ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க. நான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு உறுதி கொடுத்த பிறகு தான் நிம்மதியானாங்க”

“அம்மா என்னை மன்னிக்கவே மாட்டாங்கல்ல பிரபா?”

“நாளைக்கு என் கூட வா. நீயே வந்து அத்தைக் கிட்ட மன்னிப்பு கேளு”

“நானா?”

“ஆமா, உன்னைக் கூப்பிடத் தானே வந்தேன்?”

“என்னது? என்னைக் கூப்பிடவா? அப்படின்னா விக்ரம் பத்தி விசாரிக்க வரலையா?”

“அவனை எதுக்கு டி நான் விசாரிக்கணும்? அவன் என்னோட குளோஸ் ஃபிரண்ட்”

“என்னது?”, என்று கேட்டவள் கண்களை அகல விரித்தாள்.

“முட்டைக் கண்ணை விரிக்கிற? அழகா இருக்க டி”

“ப்ச் தெளிவா சொல்லுங்க பிரபா. விக்ரமை உங்களுக்கு தெரியுமா?”

“அதான் சொல்றேன்ல பிரண்டுன்னு. உன் கிட்ட கூட சொல்லிருக்கேன்”

“என் கிட்டயா?”

“ஆமா விக்ரம், அசோக், தீபக் என்னோட ஸ்கூல் பிரண்ட்ஸ். ஆகாஷ், அரவிந்த், வினித் என்னோட காலேஜ் பிரண்ட்ஸ்ன்னு சொல்லிருக்கேனே?”

“ஆமா, ஆனா அந்த விக்ரம் தான் இந்த விக்ரம்னு தெரியாது. அப்புறம் ஏன் தெரியாதது மாதிரி நடிச்சீங்க? ஒரு நிமிஷம்….”, என்று கேட்டுக் கொண்டே வந்தவள் கண்கள் மின்ன “அப்படின்னா நீங்க சொல்லி தான் விக்ரம் என்னைப் பாத்துக்கிட்டாரா?”, என்று கேட்டாள்.

“ஆமா”, என்று அவன் சொல்ல அவன் கண்கள் விரிந்தது.

“நீ என்னை விட்டுட்டு போனாலும் என்னால எப்படி உன்னை அப்படியே விட முடியும்? அத்தை அன்னைக்கு காயத்ரிக்கு கால் பண்ணினாங்க. காயத்ரியோட வீட்டுக்காரர் கிருஷ்ணன் வச்சு விக்ரமை உனக்கு ஹெல்ப் பண்ணுற மாதிரி பண்ணினேன். நீ இங்க விக்ரம் பாதுகாப்புல இருக்கன்னு நம்பி தான் அத்தை அங்க நிம்மதியா இருக்காங்க. இல்லன்னா நீ செஞ்ச காரியத்துக்கு அவங்க உயிரோடவே இருந்துருக்க மாட்டாங்க”, என்று சொல்ல இன்னும் நெருங்கி அமர்ந்து அவனை இறுக்கிக் கொண்டாள்.

அன்னையை நினைத்து, அவனை நினைத்து, அவன் காதலை நினைத்து, அனைவரையும் நினைத்து என அழுதாள். சிறிது நேரம் அழட்டும் என்று எண்ணி அமைதியாக இருந்தான்.

“சரி போதும் அழுதது. இப்பவும் நான் பேசாம தான் இருந்துருப்பேன். உங்க அம்மா தான் இன்னும் என்னால என் பொண்ணைப் பிரிஞ்சு இருக்க முடியாது. கூப்பிட்டு வாங்க மாப்பிள்ளைன்னு சொன்னாங்க. அதான் வந்தேன்”

“அம்மா சொன்னாங்கன்னு தான் வந்தீங்களா? உங்களுக்கு என்னைத் தேடலையா?”

“நான் ஏன் டி தேடனும்? என்னைக்கு இருந்தாலும் நீ எனக்கு தான்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு? தினமும் நீ என்ன பண்ணுற என்ன சாப்பிட்டன்னு எல்லாமே விசாரிச்சிட்டு தானே இருந்தேன்?”

“ஒரு வேளை அந்த லட்டர்ல சொல்லிருந்தது உண்மையா இருந்திருந்தா இந்த ஒரு வருசத்துல நான் ஒருத்தனை கல்யாணம் பண்ணிருந்தா என்ன பண்ணிருப்பீங்க பிரபா?”

“உனக்கு கல்யாணம் ஆகிருந்தா நல்லா இருக்கட்டும்னு நினைச்சு விட்டுருப்பேன். ஆனா எனக்கு தான் அந்த லட்டரைப் படிச்சதும் எல்லாம் பொய்ன்னு தெரியுமே?”

“எப்படி?”

“என்னைப் பிடிக்கலைன்னு எழுதிருந்த. ஆனா முந்தின நாள் நைட் மொட்டை மாடில நடந்தது நினைவு இருக்கா? எந்த பொண்ணும் பிடிக்காத ஒருத்தன் கூட அப்படி எல்லாம் இருக்க மாட்டா”, என்று சொல்ல தன் விரல் கொண்டு அவன் உதடுகளை மூடினாள். அவள் முகம் சிவந்தது.

அவள் விரலைப் பிடித்து முத்தமிட்டவன் “சரி என்னைக்கு கல்யாணம் பண்ணனும் சொல்லு? நம்ம கல்யாணம் முதல்ல முடியட்டுமா? இல்லை வினோதினி கல்யாணம் முடியட்டுமா?”, என்று கேட்டான்.

“முதல்ல வினோதினி கல்யாணம் முடியட்டும் பிரபா. அப்ப தான் மனசு அமைதி அடையும். அப்படி நடந்தா தான் வினோதினியும் வேணு அண்ணாவும் மனசார நம்மளை ஆசீர்வாதம் பண்ணுவாங்க”, என்று அவள் சொல்ல அதைக் கேட்டு எரிச்சல் அடைந்தான்.

“உனக்கு எப்படி புரிய வைக்கன்னு தெரியலை அர்ச்சனா. ஆனா உனக்கு உண்மை தெரிஞ்சிருக்கணும். வேணு அந்த அளவுக்கு நல்லவன் இல்லை”

“என்ன சொல்றீங்க?”

“உனக்கு இன்னும் புரியலையா? அன்னைக்கு நடந்தது வேணு போட்ட பிளான். நீ தோட்டத்துல இருக்கேன்னு தெரிஞ்சு தான் வினோதினியை அங்கே கூப்பிட்டு பேசினான். அவன் இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நினைச்சிருந்தா நாலு சுவத்துக்குள்ள பேசிருப்பான். அது மட்டும் இல்லாம வினோதினி எழுதின பேப்பரை கிழிச்சு மறைக்கப் பாக்காம உன் பக்கம் தூக்கிப் போட்டது கூட நீ பாக்கணும்னு தான்”, என்று சொன்னதும் அவள் மனம் அப்படியும் இருக்குமோ என்று சந்தேகப் பட்டது.

“நீங்க சொல்றது சரின்னு வச்சிக்கிட்டாலும் வினோதினி தூக்க மாத்திரை சாப்பிட்டது உண்மை தானே….?”

“அது உண்மை தான். ஆனா அவளை அந்த அளவுக்கு தூண்டினதே அவன் தான். அவ மனசு நம்ம கல்யாணத்தை அக்சப்ட் பண்ணிருச்சு. இனி நான் அவளுக்கு கிடைக்க மாட்டேனு அவளுக்கு நல்லா தெரிஞ்ச அப்புறம் தான் அவ உன் கிட்ட அன்பா பேசினா. ஆனா இவன் தான் அவ மனசை கிளறி அவ மறக்க நினைக்கிற விஷயத்தை மேல கொண்டு வந்து உனக்கு பிரபா கிடைப்பான்னு சொல்லி அவளை பிரெய்ன் வாஷ் பண்ணிருக்கான். அதே மாதிரி உன்னையும் பிரைன் வாஷ் பண்ணிருக்கான்”

“ஓ. . ஆனா அவருக்கு இதுல என்ன லாபம்? ஒரு வேளை அவரோட தங்கச்சி உங்களைக் கல்யாணம் பண்ணி நல்லா இருக்கணும்னு நினைச்சிருக்கலாம்ல?”

“கண்டிப்பா இல்லை. அவனுக்கு வினோதினியை அகிலனுக்கு கட்டிக் கொடுக்கணும்னு ஆசை இருந்துச்சு. அவன் கண்டிப்பா வினோதினியை எனக்கு கல்யாணம் பண்ண நினைச்சிருக்க மாட்டான். அகிலன் கல்யாணம் நடந்தப்ப அவன் முகத்தைப் பாத்துருக்கணுமே? அப்படி இருந்துச்சு”

“அப்ப அவர் ஏன் அப்படிச் செஞ்சார்?”

“அவனுக்கு நான் கல்யாணம் பண்ணக் கூடாது. அது மட்டும் இல்லை. நான் நிம்மதியா இருக்க கூடாது. இன்னும் சொல்லப் போனா நான் அந்த வீட்ல இருக்குறதே அவனுக்கு பிடிக்காது”

“எனக்கு புரியலை”

“நம்ம கல்யாணத்தை நிறுத்த மஞ்சுளா அத்தை தான் அம்மாவுக்கு கால் பண்ணி பத்த வச்சது. ஆனா அதுக்கு காரணம் வேணு”

“என்ன சொல்றீங்க?”

“ஆமா, அவங்களை எங்க அம்மாவுக்கு பேச வச்சிருக்கான். அதான் பொண்ணு பாக்க வந்தப்ப அவ்வளவு பிரச்சனை நடந்தது. அது மட்டும் இல்லாம…”, என்று ஆரம்பித்து அலுவலகத்தில் நடப்பவைகளைச் சொன்னான். அனைத்தையும் கேட்டு திகைத்துப் போனாள்.

Advertisement