Advertisement

“ஏய் என் துணியை பக்கெட்ல போட்டுட்டு வந்துருக்கேன் டி. நான் துவைச்சிட்டு வந்த அப்புறம் போய் குளி”, என்று அவன் வெளியே இருந்து சொல்ல உள்ள இருந்து எந்த அரவமும் இல்லை.

“சரி அவ வெளிய வந்ததும் துவைச்சிக்கலாம்”, என்று எண்ணியவன் அந்த வீட்டைப் பார்வையிட்டான். “ஒத்தையா இந்த வீட்ல இருக்குறது கஷ்டம் தான். அவளும் தனிமையை தான் அனுபவிச்சிருக்கா பாவம்”, என்று அவன் மனமே அவளுக்காக சப்போர்ட் செய்தது.

மெதுவாக டேபிள் பக்கம் வந்தவன் அங்கிருந்த சில மருத்துவம் சம்பந்தமான புத்தங்கள் இருப்பதைப் பார்த்தான். அங்கே அவளுடைய போன் இருக்க அதை எடுத்துப் பார்த்தான்.

போன் ஆன் ஆனதும் விரிந்த திரையில் இருந்தது அவன் உருவம் தான். “அடப்பாவி என் போட்டோ தான் வச்சிருக்காளா?”, என்று எண்ணி அவன் மனம் சிறு இதம் கொண்டது.

காண்டேக்ட்ஸ் சென்று அவன் எண்ணை அழுத்தினான். அதில் மை லைஃப் என்று அவன் எண் பதிந்திருக்க மீதமிருந்த கோபமும் கரைந்தது போல இருந்தது.

ஏனோ இப்போது அவள் காதலில் பிழை இருப்பது போல தெரிய வில்லை. என்றோ ஒரு நாள் மீனாட்சி சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தது.

“சின்ன வயசுல இருந்து அர்ச்சனா எனக்கு எந்த தொல்லையும் தர மாட்டா மாப்பிள்ளை. அது வேணும் இது வேணும்னு அவளுக்கு அடம் கூட பிடிக்க தெரியாது. ஆனா யாராவது அழுதா கையில என்ன இருந்தாலும் கொடுத்துட்டு வருவா. தனக்கு பிரச்சனை வரும்னு தெரிஞ்சாலும் அடுத்தவங்களுக்கு உதவுவா. தனக்கு தேவையான ஒண்ணைக் கூட அடுத்தவங்களுக்கு விட்டுக் கொடுப்பா. டாக்டர்க்கு படிக்க கவுன்சிலிங்க் வந்தப்ப இவளுக்கு பிடிச்ச காலேஜ்ல ஒரு சீட் இருந்தும் அதை இன்னொரு பொண்ணுக்காக விட்டுக் கொடுத்துட்டு வந்தா. அவ பட்டு பட்டுன்னு பேசினாலும் நீங்க பெருசா எடுக்காதீங்க மாப்பிள்ளை”, என்று சொன்ன மீனாட்சியின் வார்த்தைகள் நினைவில் வந்தது.

“அதுக்குனு என்னையே தூக்கி கொடுப்பியா டி?”, என்று அவன் மனம் சிணுங்கியது.

அவள் வெளியே வரும் போது அவனது உடைகளை துவைத்துப் வைத்திருந்தாள்.

“நீ எதுக்கு என்னோட துணியைத் துவைச்ச?”, என்று கேட்க அவனை முறைத்துப் பார்த்தவள் “இங்கயே இருங்க வரேன்”, என்று சொல்லி வெளியே சென்று துணியைக் காயப் போட்டு விட்டு நேராக விக்ரம் வீட்டுக்குச் சென்றாள்.

“வா அர்ச்சனா? ஆமா யார் வந்திருக்குறது? அம்மா என்னல்லாமோ சொல்றாங்க? உங்க அம்மா உனக்கு மாப்பிள்ளை பாத்துருக்காங்களா?”, என்று தெரியாதது போலக் கேட்டான் விக்ரம்.

இவர்களிடம் பொய்ச் சொல்கிறோமே என்று உறுத்தினாலும் “ஆமா விக்ரம். அவர் பேர் பிரபாகரன். பிஸ்னஸ் பண்ணுறார். நான் இப்ப அவரை இங்க கூட்டிட்டு வரேன். அவருக்கு ஏதாவது உங்க டிரஸ் இருந்தா கொடுங்க”, என்று சொன்னதும் ஏற்கனவே பிரபாகரனின் கொண்டு வந்திருந்த பேகில் இருந்து அவனது உடைகளையே எடுத்துக் கொடுத்தான்.

“தேங்க்ஸ் விக்ரம்”, என்று சொல்லி அதை வாங்கிக் கொண்டு சென்றவள் அதை பிரபாகரனிடம் கொடுத்தாள். அவனோ “ஏய் யாரோடது? நான் அடுத்தவங்க டிரஸ் எல்லாம் போட மாட்டேன்”, என்றான்.

“இவர் ஒண்ணும் அடுத்தவர் இல்லை. எல்லாம் உங்க வீட்டுக்கு மாப்பிள்ளையா வரப் போற விக்ரமோடது தான். போட்டுக்கோங்க”, என்று நீட்டியதும் “அப்படின்னா சரி தான்”, என்று வாங்கிக் கொண்டான்.

அவன் அவள் முன்னேயே உடை மாற்ற ஆரம்பிக்க “ஐயோ என்ன பண்ணுறீங்க?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

“என்ன டி? டிரஸ் மாத்த வேண்டாமா?”

“அதோ அங்க ரூம் இருக்கு. அங்க போய் மாத்துங்க”, என்று சொல்ல அவளை ஒரு மார்கமாக பார்த்துக் கொண்டே உடை மாற்றச் சென்றான். அவன் உடை மாற்றி வந்ததும் அவனை அழைத்துக் கொண்டு விக்ரம் வீட்டுக்குச் சென்றாள்.

உள்ளே போகும் முன் “நீங்க விக்ரமையும் அவங்க வீட்டையும் வேவு பாக்க தான் வந்துருக்கீங்கன்னு அவங்களுக்கு தெரியாது. அதனால என்னோட வருங்கால மாப்பிள்ளையாவே இருங்க”, என்றாள்.

“ஆமா கேக்கணும்னு நினைச்சேன். நீயா இஷ்டத்துக்கு உன் மாப்பிளைன்னு சொல்ற?”

“ஆமா, நீங்க எனக்கு பாத்திருக்கும் மாப்பிள்ளை தானே?”

“அதெல்லாம் பழைய கதை டாக்டர் மேடம்”

“நாம புதுக்கதை எழுதலாம். சரி சரி நம்ம சண்டை எல்லாம் அப்புறம் வச்சிக்கலாம்”

“நாம கடைசியா சண்டையா போட்டோம்?”, என்று அவன் கேட்க அவன் கையை கிள்ளி வைத்தவள் “அதையும் அப்புறம் வச்சிக்குவோம். உங்க கூட குளோசா இருக்குறது எனக்கும் சந்தோஷம் தான். இப்ப பேசாம உள்ள வாங்க”, என்று சொல்லி முன்னே நடக்க சிறு சிரிப்புடன் அவள் பின்னே சென்றான்.

அவர்களைக் கண்டதும் “வாங்க வாங்க… எப்படி இருக்கீங்க?”, என்று பிரபாவுக்கு கை கொடுத்தான் விக்ரம்.

“நல்லா இருக்கேன்”, என்று சொல்லி அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.

“அர்ச்சனா அம்மா சாப்பாடு செஞ்சிட்டாங்களான்னு பாரு”, என்று விக்ரம் சொன்னதும் “சரி விக்ரம். நீங்க பிரபா கிட்ட பேசிட்டு இருங்க”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

அவள் சென்றதும் “என்ன டா இதெல்லாம்?”, என்று கேட்டான் விக்ரம்.

“என்ன பண்ணுறது? உன் ஃபிரண்ட் இந்த அளவுக்கு அறிவாளியா இருக்கா”

“சரி அவ கிட்ட பேசினியா?”

“பேசுனேன்”, என்று சொன்ன பிரபாவுக்கு விஷயத்தை எப்படிச் சொல்ல என்று தெரிய வில்லை. அவன் உண்மையைச் சொன்னால் வினோதினி அவனை விரும்புவதை சொல்லியாக வேண்டும். அது மறைக்கக் கூடிய விசயம் இல்லை என்றாலும் சட்டென்று சொல்லும் விஷயமும் இல்லையே?

உனக்காக நான் பாத்திருக்கும் பெண் ஏற்கனவே என்னை லவ் பண்ணினாளாம். அவளுக்காக தான் அர்ச்சனா என்னை விட்டுக் கொடுத்து விட்டு வந்தாளாம் என்று சொன்னால் அவன் என்ன நினைப்பான் என்று அவனுக்கு தயக்கமாக இருந்தது.

“என்ன பிரபா? அர்ச்சனா ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னாளாம்? நான் கேட்டுட்டே இருக்கேன். நீ என்ன யோசனைலே இருக்க?”, என்று கேட்டான் விக்ரம்.

“அது.. அது வந்து…”, என்று அவன் தயங்கும் போது அங்கே அர்ச்சனா உணவு பாத்திரத்தை எடுத்து வர இருவர் பேச்சும் தடை பட்டது.

“என்ன ரெண்டு பேரும் பேசச் சொன்னா அமைதியா இருக்கீங்க? புதுசா பாக்குறீங்கல்ல? அதான்”, என்று அர்ச்சனா சொல்ல இருவரும் ஈ என்று சிரித்து வைத்தார்கள்.

அடுத்து நால்வரும் உணவருந்த ஆரம்பித்தார்கள். பொதுவான பேச்சுக்கள் மட்டும் பேசப் பட்டது. “இன்னும் ரெண்டு இட்லி போட்டுக்கோ பிரபா. வளர்ற பையன் என்ன சாப்பிடுற?”, என்று எப்போதும் போல உரிமையாக பேசிய பத்மா அதற்கு பின் நடப்பை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

அர்ச்சனா கண்டு பிடித்து விடுவாளோ என்று எண்ணி விக்ரம் மற்றும் பிரபா இருவரும் ஒரு மார்கமாக விழிக்க பத்மா ஒரு மாதிரி விழிப்பதைப் பார்த்த அர்ச்சனா “இதுல என்ன மா இருக்கு? பிரபாவும் உங்களுக்கு பிள்ளை மாதிரி தான். நீங்க அவரை எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம்”, என்றாள். அதைக் கேட்டு அனைவரும் அப்பாடா என்று நிம்மதியானார்கள்.

முதல் ஆளாக சாப்பிட்ட விக்ரம் “எனக்கு டியூட்டிக்கு டைம் ஆகிருச்சு. நான் கிளம்புறேன்”, என்று சொல்லிச் சென்று விட்டான்.

மற்ற மூவரும் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் அர்ச்சனா மற்றும் பிரபாகர் இருவரும் தங்கள் வீட்டுக்கு கிளம்ப “அர்ச்சனா, சொன்னது நினைவு இருக்கட்டும்”, என்று சொன்னாள் பத்மா.

“சரி மா”, என்று சொல்லும் போதே அவள் முகம் சிவந்து விட்டது.

வீட்டுக்குள் வந்ததும் “சரி இப்ப சொல்லு அந்த அம்மா உன் கிட்ட என்ன சொன்னாங்க?”, என்று கேட்டான்.

அவன் கேட்டது காதில் விழாதது போல கதவை அடைத்து தாழ் போட்டவள் “பிரபா இங்க கட்டில் எல்லாம் இல்லை. தரைல பாய் போட்டு தான் படுக்கணும். இல்லைன்னா அந்த சோபால படுத்துக்குறீங்களா?”, என்று கேட்டாள்.

“தூங்குறது இருக்கட்டும். நீ அவங்க என்ன சொன்னாங்கன்னு  சொல்லு”, என்று கேட்ட அவன் பார்வை அவளையே நோட்டம் இட்டது. அவன் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் எழுந்து சென்றவள் ஜன்னல் கம்பிகளைப் பற்றிய படி நிற்க அவன் அவளை நெருங்கிச் சென்றான்.

அவன் காலடி ஓசைகளைக் கேட்டு அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. அடுத்து என்ன என்ற பரபரப்பு அவளுக்குள் வந்தது.

சாப்பிட போவதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் அவள் ஆசையை விசிறி விட்டன. பிரபாகரனின் கரங்கள் பின்புறமிருந்து அவளுடைய தோளை இறுகப் பற்றின. அவன் குனிந்து அவளுடைய பின்னங்கழுத்தில் முத்தமிட்டான். அவன் முத்தத்தில் மேலும் சூடேறிப் போனாள். பதட்டத்தில் வியர்வை அதிகரித்தது.

அவள் தோளை முரட்டுத் தனமாக பற்றி தன் பக்கம் திருப்பினான். அவளுடைய முகத்தை தன் கைகளில் ஏந்தி நிதானமாக அவளைப் பார்வை இட்டான். அவன் விழி வீச்சைத் தாங்க முடியாமல் இமைகளை மூடிக் கொண்டாள்.

மூடிய இமைகள் படபடப்பதையும் அவளது இதழ்கள் நடுங்குவதையும் வெகு அருகில் பார்த்தான். அதைக் கண்டு அவனுக்குள் மோகத் தீ பற்றிக் கொண்டது.

அவள் நெற்றியில் இதழ்ப் பதித்தவனின் இதழ்கள் அவள் கன்னம் காது என்று பயணிக்க அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். அவள் கைகள் அவன் முதுகின் மீது பரவி இறுகின.

அவன் இதழ்கள் அவள் இதழ்களுக்குள் தொலைய காற்றுப் புக இடைவெளி இல்லாமல் அவனை அணைத்துக் கொண்டாள். அதற்கு மேல் தன்னைக் கட்டுப் படுத்த முடியாதவனாய் அவன் கரங்கள் அவளைக் அள்ளிக் கொண்டது. அவன் கைகளில் பூமாலை போல கிடந்தவளின் கரங்கள் அவன் கழுத்தை கோர்த்துக் கொண்டது.

பூ போல அவளை அவள் விரித்த பாயில் கிடத்தி அவள் மேல் சரிந்தான். அவன் அவள் மேல் பரவிப் படர அவளோ அவன் கைகளுக்குள் இருந்து விலக விரும்பாதவள் போல அவனை அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.

அவளால் மட்டுமே உருவாக கூடிய உணர்வுகள் கரையைத் தொட்ட நேரம் அது தவறு என்று அறிவு உணர்த்த அவள் மேல் இருந்து எழுந்து விலக போனான்.

அவன் விலகலை உணர்ந்தவளின் கரங்கள் அவன் முதுகில் பயணித்து தன்னை நோக்கி இழுக்க அவள் மேல் விழ இருந்து சுதாரித்தவன் “ஏய் விடு டி”, என்றான்.

“பிளீஸ் பிரபா”

“ஏய் லூசு, நானே இப்படி ஒரு நிலைக்கு வந்துட்டேன்னு நினைக்கிறேன். நீ வேற? விடு”, என்று அவன் சொல்ல அவளோ அவனை விட வில்லை.

“அர்ச்சனா நீ என்ன பண்ணுறேன்னு தெரியுதா?”

“ம்ம்”

“அப்புறம் ஏன் டி?”

“நீங்க எனக்கு வேணும்”

“என்னமோ நான் உன்னை வேண்டாம்னு சொன்ன மாதிரி பேசுற? நீ தானே டி ஓடி வந்த?”

“தப்பு தான். அதுக்கு நான் அனுபவிக்காத வலி இல்லை”, என்று அழுதாள்.

காதல் தொடரும்…..

Advertisement