“இப்ப நான் அவளைக் கல்யாணம் பண்ணலைன்னு சொன்னேன். உடனே அவ செத்துட்டாளா? இல்லை, நான் தான் உனக்கு கிடைக்கலை, நீ என்ன செத்துட்டியா? அவளுக்கு ரொம்ப நாளா மாப்பிள்ளை பாக்குறேன். அவளோட சம்மதத்தோட தான். அவ என்ன என்னையே நினைச்சிட்டு கல்யாணமே வேண்டாம்னு சொன்னாளா? இல்லையே? அத்தை உனக்கு மாப்பிள்ளை பாக்க சொல்லிருக்காங்க வினோ? பாக்க ஆரம்பிக்கட்டுமான்னு கேட்டதுக்கு சரின்னு தான் சொன்னா. இது தான் எதார்த்தம். அவ என்னை விரும்பிருந்தாலும் என் மனசை புரிஞ்சிக்கிட்டு அவ விலகிட்டா. அவளுக்கு எது நல்லதுன்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்துட்டா. ஆனா நீ என்னை புரிஞ்சிக்கலை டி. என் மனசுல உள்ள உன் மேல இருக்குற காதலையும் நீ புரிஞ்சிக்கலை”

“பிரபா”

“உண்மையா தான் சொல்றேன். யாரும் யாருக்காகவும் சாகுறது இல்லை. சில லவ் பெயிலியர் சாகுறது கூட அதிக ஸ்ட்ரெஸ்னால தான். அந்த டைம் அவங்களுக்கு சரியான கவுன்சிலிங்க் கொடுத்தா அவங்க சரியாகிருவாங்க. நீ வினோதினி கிட்ட பேசிருக்கணும். என்னோட காதலைப் பத்தி அவ கிட்ட பேசி அவ மனசை மாத்திருக்கணும். ஆனா நீ என்னை அழ வச்சிருக்க கூடாது”

“சாரி பிரபா”

“உன் சாரி யாருக்கு வேணும்? நீ இப்ப சொன்னீயே? உங்க தம்பியோ நண்பனோ கேட்டிருந்தா உன்னை விட்டுக் கொடுத்துருப்பேன்னு. கண்டிப்பா மாட்டேன் டி. ஏன்னா நீ என்னை விரும்பினது தான் எனக்கு தெரியுமே? அவங்க கிட்ட பேசிருப்பேன். அர்ச்சனா மனசுல நான் தான் இருக்கேன். நான் விட்டுக் கொடுத்துட்டுப் போனாலும் அவ உங்களை ஏத்துக்க மாட்டான்னு நான் சொல்லிருப்பேன். ஆனா நீ என்னைப் பத்தி அப்படிச் சொல்லலை. நான் உன்னையே நினைச்சு உனக்காக காத்திருப்பேன்னு உனக்கு தெரியலை. உன்னைத் தவிர வேற ஒருத்தியோட நிழலைக் கூட நெருங்க மாட்டேன்னு உனக்கு புரியலை? நீ ஓடிப் போயிட்டா நான் எப்படி வினோதினியைக் கல்யாணம் பண்ணி அவ கூட சந்தோஸமா வாழ்வேன்னு நினைச்சியோ அப்பவே நீ என் மேல வச்ச நம்பிக்கை செத்துருச்சு. எனக்கு உன்னை எப்படியாவது பழிக்கு பழி வாங்கணும்னு ஆசையா இருக்கு. அப்படி ஏதாவது செஞ்சா தான் என்னோட மனசு அமைதியாகுமோ என்னவோ?”

“அப்படின்னா எனக்கு தாராளமா தண்டனை கொடுங்க. என்னைக் கொன்னு கூட போடுங்க”

“உன்னைக் கொன்னுட்டா நான் அடைஞ்ச வலி உனக்கு எப்படி தெரியும்? நீ இல்லாம ஒவ்வொரு நாளும் கடந்தது எப்படி எனக்கு மறக்கும்? என்னோட ஏக்கம் ஆசை எல்லாத்தையும் நீ குழி தோண்டி புதைச்சது எப்படி மறக்கும்?”

“இப்ப நான் என்ன பண்ணுறது பிரபா? நீங்க எனக்கு வேணும்”

“நீ ஒண்ணும் பண்ண வேண்டாம். இத்தனை நாள் மாதிரி நீ உன் வேலையைப் பாரு. நான் என் வேலையைப் பாக்குறேன்”, என்று சொல்லி எழுந்து கொண்டான்.

“பிளீஸ் போகாதீங்க”, என்று சொன்னவள் அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.

“பின்ன இங்க நின்னு உன் முகத்தை பாத்துட்டு இருக்கச் சொல்றியா?”

“எனக்கு நீங்க வேணும் பிரபா”

“இதைக் கேக்குற தகுதியை நீ இழந்துட்ட அர்ச்சனா”

“நான் உங்களை மறக்கலை தெரியுமா?”

“ஆனா நான் தினமும் உன்னை மறக்க நினைச்சு தான் வாழ்ந்துட்டு இருக்கேன். அது தெரியுமா?”

“பிளீஸ் நாம பேசலாம். கொஞ்சம் பொறுமையா இருங்க”

“எனக்கு பேச ஒண்ணும் இல்லை”

“என்னைப் பதிலுக்கு பழி வாங்குங்க, என்னை ஆழ வைங்க. ஆனா விட்டுட்டு போகாதீங்கன்னு தானே சொல்றேன். பிளீஸ் நீங்க எனக்கு வேணும். நீங்க இல்லாத வாழ்க்கை நரகம்னு புரிஞ்சிக்கிட்டேன்”, என்று சொன்னவள் அவன் காலைக் கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

இப்படி சரணாகதி அடைந்தால் அவனும் தான் என்ன செய்வான்? அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் அவனே திணறினான். பேசாமல் திருமணத்திற்கு முன்பே அவளை மனைவியாக்கி கொண்டால் தான் என்ன என்ற எண்ணம் கூட வந்தது.

எப்படியும் அவளைத் தவிர வேறு யாரையும் திரும்பிக் கூட பார்க்க போவதில்லை. அவளும் இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் அவனையே தான் நினைத்துக் கொண்டு இருப்பாள். அப்புறம் ஏன் அவளைக் கஷ்டப் படுத்தணும் என்ற எண்ணம் உருவானது. அதே நேரம் அவளை காயப் படுத்தவும் செய்ய வேண்டும். அதற்கு ஒரே வழி தான் என்று எண்ணும் போதே அவனுக்குள் சின்ன குறுகுறுப்பு எழுந்தது.

அந்த சின்ன குறுகுறுப்பு அவன் கோபத்தைக் குறைத்து தாபத்தை உருவாக்கியது. அவளை அள்ளி அணைத்து அவளை ஆள வேண்டும் என்ற தவிப்பு அவனுக்குள் எழுந்தது.

அவன் அமைதியாக இருக்க அவள் எழுந்து நின்று அவன் முகம் பார்த்தாள். அவன் கண்கள் ரசனையாக அவளை அளவிட்டது.

அவன் பார்வையில் திணறிப் போனாள் அர்ச்சனா. இவன் என்ன இப்படி பாக்குறான் என்று எண்ணி அவள் முகம் சிவந்தது. “சரி உன்னை பழி வாங்கணும் அப்படித் தானே?”, என்று கேட்ட படி அவளை நெருங்கினான்.

“ம்ம்”, என்று சொன்னாலும் அவன் பார்வையில் சிறு படபடப்பு எழுந்தது அவளுக்குள்.

அவன் கரங்கள் அவள் கரத்தைப் பற்ற அவன் நோக்கம் புரிந்து “பிரபா”, என்று அதிர்வாக அழைத்தாள்.

“ஆமா பிரபா தான். அதுக்கு என்ன?”, என்று கேட்டவன் அவளை நெருங்கி அவள் கரத்தை சுண்டி இழுக்க நிலை தடுமாறி அவன் மீது விழுந்தாள்.

அவன் கரங்கள் உரிமையுடன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டது. சூடான முத்தங்களை அவளது வெற்றுத் தோளில் பதித்தான். வெகு நாட்கள் கழித்து கிடைத்த முத்தத்தில் அவள் மனம் தடுமாறி போனது.

கண்மூடி அவன் கைகளுக்குள் தொய்ந்து நின்றவளின் அடிவயிற்றில் பல மின்னல்கள் தெறித்தது. அவளுடைய தளர்வை உணர்ந்தவனின் மனம் அவளை வெற்றிக் கொண்ட மமதையுடன் லேசான அமைதி கொண்டது.

இத்தனை நாள் இல்லாத அமைதியை பெற்றுத் தர இது தான் வழி என்று அவன் மனம் நம்ப ஆரம்பித்தது. அதனால் அவன் பிடி இறுகியது.

அவளை லேசாக விலக்கி அவள் நாடியில் கை வைத்து அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவள் கண்களை வெகு அருகில் பார்த்தான். அவன் பார்வையில் அவள் மயங்கி நிற்க அந்த மயக்கத்தைக் கண்டவனுக்கு கோபம் எல்லாம் பின்னுக்கு போய் காதல் அலை மேல் எழ ஆரம்பித்தது.

அவள் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டவன் அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை தேய்த்தான். “ம்”, என்ற படி அவள் லேசான முணுமுணுப்பை வெளியிட்டாள். அவளது ஒத்துழைப்பு அவனுக்கு தீயை மூட்ட அவள் இதழ்களில் முத்தமிட்டான்.

எவ்வளவு நேரம் இருவரும் கட்டுண்டு இருந்தார்களோ அவர்களே அறிய வில்லை. அந்த முத்தம் எவ்வளவு நேரம் நீடித்தது என்றும் தெரிய வில்லை. யாரோ வீட்டின் அழைப்பு மணியை அழுத்தவும் தான் நிகழ் காலத்துக்கு வந்தார்கள்.

அவசரமாக அவனிடம் இருந்து விலகி நின்றவள் வேகமாக மூச்சு வாங்கினாள். அவனோ சுவாரசியமாக அவளைப் பார்த்தான். கள்ளுண்ட வண்டு போல அவன் பார்வை அவளை உண்டு கொண்டிருந்தது.

மீண்டும் சத்தம் கேட்கவும் முந்தானைச் சேலையால் பூர்த்திருந்த வியர்வையை துடைத்த படி கதவை நோக்கிச் சென்றாள். அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவன் வாசல் பக்கம் பார்த்தான்.

அவள் கதவைத் திறந்ததும் அவசரமாக உள்ளே வந்த பத்மா “நீ எப்ப வந்த? நீ இன்னும் வரலையோனு நினைச்சேன். இப்ப தான் விக்ரம் சொன்னான் உன் வீட்ல லைட் எரியுதுன்னு. சரி வா வீட்டுக்கு போய்க் டீ குடிக்கலாம்”, என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்த பத்மா அப்போது தான் பிரபாகரனைப் பார்த்தாள்.

“இது யாரு அர்ச்சனா?”, என்று பத்மா கேட்க அவளுக்கு சட்டென்று என்ன சொல்ல என்று தெரிய வில்லை. அவனோ சுவாரசீயமாக அவள் திணறலைப் பார்த்துக் கொண்டிருந்தான். கூடவே பத்மாவின் நடிப்பு திறமையை மெச்சிக் கொண்டான்.

“என்ன அர்ச்சனா அமைதியா இருக்க? யாரு இது? உனக்கு வேண்டியவரா? ஆமா நீ ஏன் வேத்து பூத்து இருக்க? உன்னை இவன் மிரட்டுறானா? எதவாது பிளாக்மெயில் பண்ணுறானா? ஏய் யாரு டா நீ? அர்ச்சனா எங்க வீட்டுப் பொண்ணு மாதிரி. அவளை மிரட்டுறியா நீ? இங்க என்ன நடக்குது? நான் எத்தனை படம் பாத்துருக்கேன்?“, என்று கேட்க அவனுக்கு சிரிப்பு வந்தது.

“ஆமா இவளை மிரட்டிட்டாலும்… மிரட்டணும்னு நினைச்சு பக்கத்துல போனா நான் தான் மயங்கி நிக்குறேன். இது உங்களுக்கு எப்படி தெரியும்?”, என்று எண்ணினான். இங்க என்ன நடந்தது என்று நினைவில் அவன் உடல் முருக்கேறியது.

“இவர் தான் எங்க வீட்ல எனக்கு பாத்திருக்கும் மாப்பிள்ளை மா. அடுத்த வாரம் கல்யாணம்னு நிச்சயம் பண்ணிட்டாங்க. என்னை பாக்க தான் வந்தார்”, என்று அர்ச்சனா கதை கட்டி விட அவளை வியப்பாக பார்த்தான். “அடப்பாவி என்ன பிராடு உடுறா? நான் எப்ப இவ கிட்ட கல்யாணம்னு சொன்னேன்?”, என்று அவன் உள்ளம் சிரித்தது.

“அடடே மாப்பிள்ளையா? ரொம்ப அழகா இருக்கார். சரி இருட்டிருச்சு. இவர் ஊருக்கு கிளம்பலையா?”, என்று பத்மா கேட்டதும் தான் இருவரும் இருட்டியதேயே உணர்ந்தார்கள். அவர்கள் ஆறு மணிக்கு வீட்டுக்குள் வரும் போது வெளிச்சமாக தான் இருந்தது. அதற்கு பின் நிகழ்ந்த நிகழ்வில் நேரம் ஓடியதே இருவருக்கும் தெரிய வில்லை.

“அவர் போறேன்னு தான் சொன்னார். இந்த நைட் நேரத்துல எப்படி அவரை அனுப்ப? அதான் இருந்துட்டு காலைல போங்கன்னு சொல்லிட்டு இருந்தேன். வீடு குப்பையா இருந்துச்சு. அதான் பெருக்கினேன். அதனால தான் வேர்த்திருக்கு”, என்று அவள் சமாளிக்க அவளுடைய சமாளிப்பில் மெச்சிப் போனான் பிரபாகரன்.

“ஆமா ஆமா இந்நேரம் அவ்வளவும் தூரம் கார் ஒட்டிட்டு போறது கஷ்டம் தான். விடிஞ்சதும் போங்க மாப்பிள்ளை. சரி டி, ஏதாவது சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு வரேன் ரெண்டு பேருக்கும்”

“இல்லை மா, நாங்களே அங்க வரோம்”

“நல்லது, குளிச்சிட்டு வாங்க. சாப்பிடலாம். அப்புறம் ஒரு நிமிஷம் அர்ச்சனா”

“என்ன மா?”

“நிச்சயம் ஆகிட்டுனு கிட்டப் போய்றாத டி. கல்யாணம் ஆகுற வரைக்கும் தள்ளியே இரு. நீ ஒரு டாக்டர். உனக்கு சொல்ல வேண்டாம். இருந்தாலும் பாத்துக்கோ… நான் வரேன். சாப்பிட வாங்க ரெண்டு பேரும்”, என்று அவள் காதில் முணுமுணுத்து விட்டுச் சென்றாள். அதைக் கேட்டு அவள் முகம் சிவந்து போனது.

அவள் போனதும் முகம் சிவந்து நின்றவளை ஆசையாக பார்த்தவன்  “அவங்க என்ன சொன்னாங்க?”, என்று கேட்டான்.

“ஆன்… அது… ஒண்ணும் இல்லையே?”, என்று தடுமாற்றத்துடன் மறுத்தாள்.

“இல்லை, அவங்க சொன்னதும் உன் முகம் எல்லாம் மாறிருச்சு. என்னன்னு சொல்லு”

“ஒண்ணும் இல்லை“

“நம்ப மாட்டேன். ஏதோ இருக்கு. என்னன்னு கண்டு பிடிக்கிறேன். சரி இப்ப எனக்கு ரொம்ப பசிக்குது. நான் குளிச்சிட்டு வரேன். சாப்பிட்டுட்டு என்னன்னு கேக்குறேன்”, என்று சொன்னவன் அங்கிருந்த துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான்.

குளித்து முடித்து அதே டவலுடன் அவன் வெளியே வர அவனை அப்படி ஒரு தோற்றத்தில் இது வரை கண்டிராதவள் அதிர்ந்து எழுந்து நின்றாள்.

“நான் வேற டிரெஸ் எடுத்துட்டு வரலை. அதான் உன் துண்டு யூஸ் பண்ணிக்கிட்டேன். என் டிரஸ் வாஸ் பண்ணனும். அப்ப தான் நாளைக்கு போட முடியும். சோப் இருக்கா?”

“இவன் துணி துவைக்க போகிறானா?”, என்று வியப்பாக எண்ணியவள் செல்பில் இருந்து சோப்பையும் அவளுக்கு என மாற்றுடையையும் எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்.