Advertisement

அத்தியாயம் 13 

காயங்கள் நிமிடத்தில் மறைவதும்

சிறு சொல் கூட அதிக வலி தருவதும்

காதலில் மட்டுமே!!!

“ஓஹோ? சரி நீ ஏன் இந்த ஒரு வருசத்துல வேற யாரையும் லவ் பண்ணலை?”, என்று அழுத்தமாக கேட்டான்.

“அது எப்படி பிரபா? நான் தான் உங்களை இப்பவும் விரும்புறேனே?”

“ஓஹோ அப்படின்னா உன் காதல் உசத்தி, என் காதல் சும்மா. அப்படித் தானே?”

“அது…. ஆனா நான் நினைச்சது நடந்துட்டே பிரபா? எப்படியும் நீங்க மனசு மாறிட்டீங்கல்ல? அஞ்சலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க தானே?”

“உன் தலை. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை”

“என்னது?”

“ஆமா டி லூசு. உன் காதல் தான் உசத்தின்னு ஓடி வந்தல்ல? அதை விட பெருசு என் காதல். நீ என் மேல வச்சிருந்தது எல்லாம் காதலே இல்லை. எனக்கு வர கோபத்துல எதையாவது வச்சு உன் மண்டையை உடைக்கணும் போல இருக்கு டி”, என்று திட்டினான்.

அவன் அவளை திட்டிக் கொண்டிருப்பதை எல்லாம் கண்டு கொள்ளாமல் “பிரபா நீங்க உண்மையிலே தான் சொல்றீங்களா? உங்களுக்கு கல்யாணம் ஆகலையா?”, என்று கண்கள் மின்னக் கேட்டாள்.

“ஆமா, உண்மையைத் தான் சொல்றேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை”, என்று சொன்னதும் அவள் முகம் பூவாக மலர்ந்தது.

அவள் சந்தோஷத்தை வெறித்துப் பார்த்தவன் “என்ன ரொம்ப சந்தோஷமா? உனக்கு இன்னொரு சான்ஸ் இருக்குனு நினைக்கிற போல? ரொம்ப சந்தோஷப் படாத டி. சாமியாராப் போவேனே தவிர உன்னைக் கல்யாணம் பண்ண மாட்டேன்”, என்று சொன்னதும் அவள் முகம் வாடிப் போனது.

“சரி சரி நான் உங்க டீனைப் பார்த்து விக்ரமை பத்தி விசாரிச்சிக்கிறேன். நீ கிளம்பலாம்”

“கிளம்பனுமா? அவ்வளவு தானா பிரபா?”

“ஆமா அவ்வளவு தான். இனி உன்னை ஜென்மத்துல பாக்க விரும்பலை”

“சாரி பிரபா”

“கொலைவெறியைக் கிளப்பாத. அந்த சாரின்னு சொல்றதுக்கு கூட உனக்கு அருகதை இல்லை”

“பிளீஸ் என்னை மன்னிச்சிருங்க. நான் செஞ்சது தப்பு தான். மன்னிச்சு ஏத்துக்கோங்க. தனியா இருந்திருந்தா உங்க கால்ல விழுந்துருப்பேன். பொது இடமா போச்சு. ஆனாலும் உங்க கையை காலா நினைச்சு கேக்குறேன். என்னை ஏத்துக்கோங்க பிரபா”, என்று சொல்லி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவள் தொடுகையிலும் அவளது கெஞ்சலிலும் நெகிழ்ந்த மனதை அடக்கிக் கொண்டவன் “ஒரு சுயபுத்தி இல்லாத பொண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பேனே தவிர உன்னை ஒரு நாளும் கல்யாணம் பண்ண மாட்டேன்”, என்றான்.

“மன்னிக்க கூடாதா? நான் உங்க செல்ல பொண்டாட்டி தானே?”, என்று அவள் கண்ணைச் சுருக்கி கேட்க அவள் கேள்வியில் உள்ளுக்குள் அனைத்தும் தடம் புரண்டது அவனுக்கு. “டேய் பிரபா மறுபடியும் முதல்ல இருந்து மயக்க பாக்குறா டா. மயங்கிறாத”, என்று குரல் கொடுத்தது மனசாட்சி.

இதற்கு மேல் இங்கேயே இருந்தால் அவள் மேல் கோபப் படுவதை விட்டுவிட்டு சீக்கிரமே சமாதானமாகி விடுவோம் என்ற உண்மை புரிய “மன்னிக்க கூடிய தப்பை நீ பண்ணலைன்னு சொல்லிட்டேன். நான் வரேன்”, என்று சொன்னவன் அவள் கையை உதறி விட்டு எழுந்து சென்று விட்டான்.

போகும் அவனையே பார்த்த படி அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர் பெருகியது. ஆனாலும் அவன் தன்னை நினைத்து இவ்வளவு நாள் திருமணம் செய்யாமல் இருந்தது இத்தனை நாள் அலைபாய்ந்து கொண்டிருந்த மனதை அமைதி படுத்தியது.

“என் பிரபா எனக்கு தான்”, என்று அவள் உள்ளம் உவகை கொண்டது. “ரொம்ப சந்தோஷப் படாத. உன் மேல கொலைவெறில இருக்கான். அவன் உன்னை ஏத்துக்குறது கஷ்டம்”, என்று குரல் கொடுத்தது அவள் மனசாட்சி.

“கண்டிப்பா என்னால பிரபா கோபத்தை போக வைக்க முடியும்”, என்று உறுதியாக நம்பினாள். கண்களில் கண்ணீரையும் மீறி, இழந்த பொக்கிஷம் திரும்பி கிடைத்த சந்தோஷம் வந்தது அவளுக்கு.

தூரத்தில் இருந்து அவள் உணர்வுகளைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். சிறிது நேரம் கழித்து அவன் சாதாரணமாக வருவது போல அவள் அருகே வந்து “நீ இன்னும் போகலையா? இங்கயே உக்காந்துருக்க?”, என்று கேட்டான்.

அவள் சந்தோஷமாக அவனைப் பார்க்க அவள் கண்ணுக்குள் தொலையைத் துடித்த மனதை அடக்கி “உங்க டீன் எங்கயோ வெளிய போயிருக்காராம். ரெண்டு மணி நேரம் கழிச்சு தான் வருவாராம். நான் அதுக்குள்ள விக்ரம் வீட்டுக்கு போகணும். அது எங்கன்னு சொல்றியா? நான் போய் வினோதினி வாழப் போற வீட்டைப் பாக்கணும்”, என்று கேட்டான்.

“நான் கூட்டிட்டு போறேன் பிரபா. என் வீடும் அங்க தான் இருக்கு. வாங்க”, என்று சந்தோஷமாக அழைத்தாள்.

அவள் தன்னை விட்டுக் கொடுத்து விட்டு வந்த கோபம் இருந்தாலும் அவள் மனதில் இருந்த காதல் இன்னும் குறையாமல் இன்னும் அதிகம் கூடி இருப்பதில் அவன் மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது. ஆனாலும் எதுவும் பேசாமல் அவளுடன் சென்றான்.

“இது தான் விக்ரம் வீடு பிரபா. வீடு பூட்டிருக்கு. பத்மா அம்மாவும் விக்ரமும் கோவிலுக்கு போயிருப்பாங்க போல? அவங்க வர வரைக்கும் என் வீட்டுக்கு… சாரி நம்ம வீட்டுக்கு வாங்களேன்”, என்று அழைத்தாள்.

“அதெல்லாம் வேண்டாம். நான் இந்த மரத்தடில வெயிட் பண்ணுறேன்”, என்று முறுக்கிக் கொண்டான்.

“பிளீஸ் பிரபா, வாங்களேன்”

“என்னால முடியாது. ஒரு வயசு பொண்ணு இருக்குற வீட்டுக்கு தனியா போறது தப்பு. நான் அதைச் செய்ய மாட்டேன்”

“பிரபா பிளீஸ், நான் என்ன வேற யாரோவா? நாம ரெண்டு பேரும் இது வரைக்கும் தனியா இருந்ததே இல்லையா? அப்படியே ஏதாவது நடந்தாலும் நான் சந்தோஷம் தான் படுவேன்”

“நீ சந்தோஷப் படுவ? உனக்கு உன்னோட உணர்வுகள் தானே முக்கியம்? ஆனா எனக்கு அப்படி இல்லை. வீட்ல பாத்த பொண்ணுன்னு லவ் பண்ணினதுக்கே இவ்வளவு பெரிய வலியைக் கொடுத்துட்டு போயிட்ட. இதுல உன் கூட ஒரு தடவை வாழ்ந்த பிறகு நீ சொல்லாம கொள்ளாம ஓடிப் போய்ட்டேன்னு வை என்னால என்னையே மன்னிக்க முடியாது. எதுக்கு இந்த விஷப் பரீட்சை எல்லாம்? நீ போ. நான் இங்கயே இருக்கேன்”

“நீங்க என்னை அடிக்க கூட செய்ங்க பிரபா. நான் செஞ்சது பெரிய தப்புன்னு எனக்கு தெரியும். இனி நான் எதுக்காகவும் யாருக்காவும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன். நீங்க எனக்கே எனக்கு வேணும்னு நான் அழாத நாள் இல்லை. கடவுள் எனக்கு ரெண்டாவது வாய்ப்பு கொடுத்துருக்கார். அதைக் கட்டாயம் இழக்க மாட்டேன்”

“சரி சரி வரேன். இங்கயே நின்னா எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க. அதனால வரேன். அப்புறம் ரொம்ப நல்லவ மாதிரி பேசாதே. மறுபடியும் நான் உன் கிட்ட ஏமாற மாட்டேன்”, என்று சொல்லி அவளுடன் நடந்தான்.

வீட்டுக்குள் சென்றதும் அவன் கண்கள் அந்த வீட்டைச் சுற்றி அலசியது. வீடு சிறியதாக இருந்தாலும் நீட்டாக வைத்திருந்தாள். “பரவால்ல வீட்டை நீட்டா வச்சிருக்கா”, என்று அவன் தன் காதலியை மெச்சிக் கொள்ள “உன் லவ்வருன்னு ரொம்ப புகழாதே. வீட்ல சமையல் செஞ்சு சாப்பிட்டா தான் வீடு அழுக்காகும்? அவ தூங்குறதுக்கு தான் இந்த வீட்டுக்கே வரா. அப்புறம் வீடு நீட்டா இல்லாம எப்படி இருக்கும்?”, என்று குரல் கொடுத்தது அவன் மனசாட்சி.

“உக்காருங்க பிரபா”, என்று அவள் இருக்கையைக் காட்ட அதில் அமர்ந்தவன் “என்னமோ சொன்ன?”, என்று கேட்டான்.

“என்ன சொன்னேன்?”

“தனியா இருந்திருந்தா கால்ல விழுவேன்னு…”, என்று அவன் தெனாவெட்டாக கேட்க அடுத்த நொடி ஓடிச் சென்று அவன் காலில் விழுந்து “என்னை மன்னிச்சு ஏத்துக்கோங்க பிரபா”, என்றாள்.

அவள் செய்கையில் திகைத்தாலும் “கால்ல விழுந்தாலும் மன்னிக்க முடியாது, போ டி”, என்று சொல்ல எழுந்து அவன் அருகே அமர்ந்தவள் “என்னை மன்னிக்கவே மாட்டீங்களா?”, என்று கேட்டாள்.

“எனக்கு உன் மேல நம்பிக்கை இல்லை டி”

“பிரபா”

“உன் மேல நான் வச்ச காதலும் இப்ப எனக்குள்ள இல்லை. உன்னைப் பாக்கவே எனக்கு பிடிக்கலை. முன்னாடி எல்லாம் உன்னைப் பாத்தாலே ஒரு சந்தோஷம் வரும். இப்ப அது இல்லை. அதெல்லாம் திரும்பி வரட்டும். நான் மறுபடியும் உன்னைக் காதலிச்சா உன்னை நம்புறேன். என்னோட மனசு உன்னை முழு மனசா எப்ப ஏத்துக்குதோ அப்ப கல்யாணம் பண்ணுவோம். இல்லைன்னா வேற ஆளைக் கல்யாணம் பண்ணிக்கோ”

“பிரபா”

“என் பேரைச் சொல்லாத டி அடிச்சிருவேன். இல்லை தெரியாம தான் கேக்குறேன். உன்னால எப்படி டி என்னை விட்டுக் கொடுத்துட்டு போக முடிஞ்சது? உண்மையா லவ் பண்ணிருந்தா அவங்களை விட்டுக் கொடுக்க முடியுமா? இப்ப இவ்வளவு நாள் கழிச்சு என்னைப் பாக்குற? நான் உன் கண் முன்னாடி என்னோட மனைவி குழந்தைன்னு வந்து நின்னுருந்தா நீ என்ன செஞ்சிருப்ப? எனக்கு புரியலை. காதல்னு சொல்ற, அதான் விட்டுக் கொடுத்தேன்னு சொல்ற? இப்ப இந்த ஹாஸ்ப்பிட்டல்ல வேலை பாக்குற ஒருத்தன் உன்னை உயிரா விரும்பி உனக்காக கையை வெட்டிக்கிட்டான்னு வை. அப்ப கூட என்னால உன்னை விட்டுக் கொடுக்க முடியாது டி. உன்னால மட்டும் எப்படி முடிஞ்சது?”

“நீங்க சொல்றது சரி தான் பிரபா. இந்த ஹாஸ்பிட்டல்ல வேலை பாக்குற ஒருத்தன் வந்து கேட்டுருந்தா என்னை விட்டுக் கொடுத்துருக்க மாட்டீங்க. ஆனா ஒரு வேளை… பேச்சுக்கு சொல்றேன். உங்க உயிர் நண்பனோ, உங்க கூட பிறந்த தம்பியோ என்னை விரும்புறேன்னு சொல்லி சாக துணிஞ்சா கண்டிப்பா என்னை விட்டுக் கொடுத்துருப்பீங்க”, என்று அவள் சொல்ல “அர்ச்சனா”, என்று அதிர்வாக அழைத்தான்.

“ஆமா பிரபா, சில உணர்வுகள் ஆண் பெண் ரெண்டு பேருக்கும் பொதுவானது. என்னை அக்கான்னு பாசமா கூப்பிட்ட வினோவுக்காக செஞ்சேன். எனக்காவது அப்பா இல்லாத மாதிரி போனாலும் அப்பான்னு ஒருத்தர் இருக்கார். ஆனா வினோதினிக்கு அப்பா இல்லை. எனக்கு அப்பா இருந்துருந்தா அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துருப்பார்ன்னு சொல்லி அவ அழும் போது என்னால அதை தாங்க முடியலை. நீங்க இல்லைன்னா அவ செத்துருவாளோன்னு தான் அப்படி முடிவு பண்ணினேன்”

Advertisement