Advertisement

ஒரு வேளை அவன் திருமணம் செய்தது அஞ்சலியாக இருக்குமோ என்று அவள் உள்ளுக்குள் கலவரமே எழுந்தது. அப்படி மட்டும் அவனுக்கும் அஞ்சலிக்கும் திருமணம் ஆகி இருந்தால் அவ்வளவு தான் உள்ளுக்குள் செத்து பொசுங்கி விடுவாள். அவளால் வினோதினிக்கு அவனை விட்டுக் கொடுக்க முடியும்? ஆனால் அஞ்சலிக்கு அவனை விட்டுக் கொடுக்க முடியாது.

அவள் முகத்தில் வந்து போகும் உணர்வுகளைப் படித்தவனுக்கு அவள் யோசிப்பது தெளிவாக புரிந்தது. அதனால் வேண்டும் என்றே “அஞ்சலிக்கு கல்யாணம் ஆகிருச்சு”, என்றான்.

அவ்வளவு தான் அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. கடைசியில் அவளிடமா தோற்றிருக்கிறாள்? மீனாட்சி எப்படி மஞ்சுளாவிடம் தோற்றாளோ அது போல இவள் அஞ்சலியிடம் தோற்றிருக்கிறாள். சத்தியமாக அவளால் இந்த உண்மையை ஒரு சதவீதம் கூட சகிக்க  முடிய வில்லை.

அவள் கண்ணீர் மனதை வருத்தினாலும் அவன் பட்ட காயத்தை அவளும் பட வேண்டும் என்ற வெறி அவனுக்குள் இருந்தது. அதனால் அவள் கண்ணீர் அவனுக்கு திருப்தியாக இருந்தது.

“என்ன அழுற? என்னை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்க முடியலையா? வேணும்னா நீயும் என் கூடவே இரேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாம். நீ பேங்க்ளூர்ல இருந்துக்கோ. அவ அங்க இருக்கட்டும்”, என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் சீற்றத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “நீங்க வேணும்னா சொக்கலிங்கமா மாறலாம். ஆனா நான் மஞ்சுளாவா மாற மாட்டேன். நீங்க உங்க பொண்டாட்டி கூடவே வாழுங்க. எனக்கு என்ன? விக்ரம் பத்தி சொல்லிட்டேன்ல? நான் போறேன்”, என்று எழுந்து கொண்டாள்.

என்ன வார்த்தை சொல்லி விட்டான் என்று அவள் மனம் குமுறியது. அவள் இரண்டாம் தாரமாக வர வேண்டுமா? கடவுளே இப்போதே இந்த உலகில் இருந்து மறைந்து விட மாட்டோமா என்று இருந்தது அவளுக்கு.

“என்ன அர்ச்சனா இவ்வளவு கோபம்? என்ன இருந்தாலும் அஞ்சலி உன் தங்கச்சி தானே? அவளுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சா நீ சந்தோஷப் படுவன்னு நினைச்சேன். ஆனா அவ தினமும் கேப்பா. எப்ப அத்தான் என் அக்கா என் கண்ணுல படுவான்னு”, என்று கேட்டு அவளைச் சீண்டினான்.

“வாயை மூடுங்க பிரபா. யாரும் எனக்கு தங்கச்சி இல்லை. யாரைப் பத்தி நான் தெரிஞ்சிக்கவும் விரும்பலை”

“அதானே உனக்கு யாரைப் பத்தி தான் தெரிஞ்சிக்க விருப்பம் இருக்கு? என்னை மறந்து, கல்யாணத்தை மறந்து, ரெண்டு குடும்பத்தோட கவுரவத்தை மறந்து ஓடி வந்தவ தானே நீ?”

“பிரபா”

“எங்களை எல்லாம் விடு. பாவம் மீனாட்சி அத்தை. அவங்க என்ன டி பாவம் பண்ணினாங்க. அவங்களை அசிங்கப் படுத்திட்டு வந்துட்டியே? இப்ப வரைக்கும் அவங்க எப்படி இருக்காங்கன்னு ஒரு வார்த்தை கேட்டியா? நீ எல்லாம் மனசாட்சியே இல்லாத மிருகம். நீயெல்லாம் ஒரு டாக்டர்? அடுத்தவங்க மனசை கொன்னு புதைக்கிற நீ எப்படி குழந்தை இல்லைன்னு வரவங்களுக்கு குழந்தையை உருவாக்கி கொடுக்குறியோ தெரியலை”

“இப்படி பேசாதீங்க பிரபா. கஷ்டமா இருக்கு. நான் அம்மாவை உங்களை எல்லாம் நினைக்காத நாளே இல்லை. தினமும் அம்மாவுக்கு கால் பண்ணுவேன். அம்மா கட் பண்ணி விடுவாங்க”

“கட் பண்ணி விடாம உன்னை மடில போட்டு கொஞ்சுவாங்களா? கணவனை இழந்து நீ தான் உலகம்னு வாழ்ந்த அந்த ஜீவனை மனசளவுல ஒரெடியா நொறுக்கிட்டு வந்துட்டியே டி?”, என்று கேட்க தளர்ந்து போய் அமர்ந்தாள். அன்னையை எண்ணி அவள் கண்கள் கண்ணீரைச் சொறிந்தது.

“அழு. நல்லா அழு. இப்படி தானே அன்னைக்கு நாங்க எல்லாரும் அழுதோம்? அழு. உன்னை இப்படி பாக்க பாக்க சந்தோஷமா இருக்கு”

“அன்னைக்கு ஒரு நாள் தான் நீங்க எல்லாரும் அழுதீங்க பிரபா? ஆனா நான் உங்க எல்லாரையும் நினைச்சு தினம் தினம் அழுறேன் தெரியுமா?”

“அழு, உன் தலையெழுத்து அது தான்னா அழு. இது நீயா தேடிக் கிட்டது அர்ச்சனா. என் வீட்ல என்னோட ராணியா இருக்குற குடுப்பனை உனக்கு கிடைக்கலை. உன் தங்கச்சிக்கு எங்க வீட்டுக்கு ராணியாகுற கொடுப்பனை கிடைச்சிருக்கு. இதை நினைச்சு நினைச்சு நீ காலம் முழுக்க அழு டி. அப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கும்”

“அதைச் சொல்லாதீங்க பிரபா. சத்தியமா என்னால அதை ஜீரணிக்கவே முடியலை. என்னோட இத்தனை நாள் வலிக்கும் உங்களைப் பாத்த இந்த நாள் மருந்தா இருக்கும்னு நினைச்சேன். ஆனா இந்த உண்மை என் ஓட்டு மொத்த வாழ்க்கைக்கும் என்னை எந்திக்க விடாம செஞ்சா அடியா இருக்கு. போயும் போயும் அவள் அந்த வீட்டுக்கு மருமகளா ஆகவா நான் விட்டுக் கொடுத்துட்டு வந்தேன்?”

“விட்டுக் கொடுத்தியா? எதை விட்டுக் கொடுத்த? என்னையா? நீ விட்டுக் கொடுக்க நான் என்ன நீ வாங்கி வச்ச பொருளா டி?”, என்று கேட்டவனின் ஆத்திரம் எல்லை கடந்தது. இருக்கும் இடம் கருதி அடக்கினான். தனியே சிக்கி இருந்தால் அவள் தலை முடியையாவது அவள் கழுத்தையாவது பற்றி இருப்பான்.

“சாரி பிரபா. நான் வேற ஒன்னு நினைச்சு…”

“என்ன நினைச்ச? இப்ப தான் எல்லாம் முடிஞ்சிருச்சே? இப்பவாது என்ன நடந்துச்சுனு உண்மையைச் சொல்லுறியா?”

“இனி சொல்லி என்ன ஆகப் போகுது?”

“அரைஞ்சேன்னா பாரு? முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு டி. கல்யாணத்துக்கு முந்துன நாள் நைட் என் கூட கொஞ்சி குலாவிட்டு…”

“பிரபா பிளீஸ்”

“சரி என்ன நடந்துச்சுன்னு சொல்லு”

“அது வந்து…”

“இப்ப சொல்லலை கண்டிப்பா உன்னைக் கொன்னுறுவேன். தயவு செஞ்சு படுத்தாம சொல்லித் தொலை. நீ இன்னொருத்தனை விரும்பினியா?”

“நான் விரும்பின ஒரே நாள் நீங்க தான் பிரபா”

“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. சரி எதுக்கு என்னைப் பிடிக்கலைன்னு எழுதி வச்சிட்டு போன? என்னை உனக்கு பிடிக்கலையா?”

“உங்களை மட்டும் தான் பிடிக்கும்”

“ஐயோ உன்னை கொன்னுறணும்னு ஆசையா இருக்கு டி. அந்த ஆசையை அடக்க தான் என்னால முடியலை”, என்று அவன் எரிச்சலுடன் சொல்ல அவனை பாவமாக பார்த்தாள்.

“என்னை உனக்கு பிடிக்கும்னு சொல்ற? என்னை தான் லவ் பண்ணேன்னு சொல்ற? அப்புறம் ஏன் கல்யாணம் வேண்டாம்னு முடிவு பண்ணி வந்த?”

“அது வந்து….”

“கடவுளே, என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற அர்ச்சனா. நீ மண்டபத்தை விட்டு போனா தான் என் மகன் நல்லா இருப்பான்னு எங்க அம்மா உன் காலுல விழுந்து மடிப் பிச்சை கேட்டாங்களா? அதைச் சொல்லக் கூடாதுன்னு உன் கிட்ட சத்தியம் வாங்கினாங்களா?”

“அப்படி எல்லாம் இல்லை”

“அப்புறம்.. உன் சித்தி நீ போனா அஞ்சலி அந்த வீட்டுக்கு மருமகளா ஆவான்னு உன்னை மிரட்டினாங்களா?”

“அவங்க எல்லாம் ஒரு ஆளு? அவங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுற ஆளா நான்?”

“ஆமா ஆமா என்னையே மயக்கின பெரிய ஆளு தானே நீ?”, என்று எரிச்சலுடன் சொன்னாலும் அந்த நினைவில் அவன் மனம் மயங்கியது.

“பிரபா”, என்று அவள் தவிப்பாக அழைக்க “சரி சரி.. விடு பழைய விஷயம் நினைவு வந்துருச்சு. அம்மாவும் கெஞ்சலை. உங்க சித்தியும் மிரட்டலை. அப்படின்னா உன் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்னு வந்தியா டி?”, என்று கேட்டான்.

“சே சே எந்த ஜென்மத்துலயும் நான் அவளை தங்கச்சியா நினைக்க மாட்டேன். ஆனா அவ அந்த வீட்டுக்கு மருமகளா ஆனதை தான் என்னால தாங்க முடியலை. ஏன் பிரபா நீங்க அவளைக் கல்யாணம் பண்ணுனீங்க? பேசாம வினோதினியைக் கல்யாணம் பண்ணிருக்க வேண்டியது தானே?”

“நல்லா இருக்கு டி உன் நியாயம்? இப்ப இந்த நியாயம் சொல்றவ அன்னைக்கே அங்க நின்னு இதைச் சொல்லிருக்க வேண்டியது தானே? எதுக்கு ஓடி வந்த?”

“அங்கயே இருந்து சொல்லிருந்தா நீங்க எப்படி கேப்பீங்க? ஆனா நீங்க செஞ்சது பெரிய தப்பு பிரபா”

“ஏனாம்?”

“உங்க வீட்ல தான் கல்யாண வயசுல வினோதினி இருக்காளே? அவளை கல்யாணம் பண்ணிருக்க வேண்டியது தானே? அவ அப்பா இருந்திருந்தா அவ குடும்பத்தை மதிச்சு அவளைக் கல்யாணம் பண்ணிருப்பீங்கல்ல?”

“உனக்கு இப்ப கூட என்னை விட்டுக் கொடுத்த வலி இல்லை. அஞ்சலி கல்யாணம் நடந்து வினோதினி கல்யாணம் நடக்கலைன்னு தான் பிரச்சனை அப்படி தானே? நீ என்னை உண்மையிலே லவ் பண்ணுனியான்னு எனக்கு சந்தேகமா இருக்கு டி”

“நான் உண்மையிலே உங்களை லவ் பண்ணினேன். ஆனா வினோதினிக்கு விட்டுக் கொடுக்கணும்னு நினைச்சது உண்மை தான்”

“என்ன?”

“ஆமா, நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளை நம்மளை விட இன்னொருத்தங்க நல்லா பாத்துக்குவாங்கன்னு நம்பி கொடுப்போம்ல? அது மாதிரி தான். என்னை விட வினோதினி உங்களை நல்லா பாத்துக்குவான்னு நம்பி விட்டுக் கொடுத்தேன். ஆனா எல்லாம் போச்சு. யார் கையில பொக்கிஷம் கிடைக்க கூடாதோ அவ கையில கிடைச்சிருக்கீங்க?”

“என்னை விட்டுக் கொடுன்னு வினோதினி கேட்டாளா உன் கிட்ட?”

“சே சே, அவ நல்லவ. அப்படி எல்லாம் வந்து கேக்க மாட்டா. நான் நல்லா இருக்கணும்னு தான் அவ நினைச்சா”

“அவ நீ நல்லா இருக்கணும்னு நினைக்கிறதும் நீ அவளை நல்லா இருக்கணும்னு நினைக்கிறதும்… முடியலை. சரி விசயத்தை தெளிவா சொல்லு. உனக்கு ஏன் என்னை அவளுக்கு விட்டுக் கொடுக்கணும்னு தோணுச்சு?”

“ஏன்னா அவ உங்களை விரும்பினா”

“வாட்? வினோவா? சான்ஸே இல்லை”

“உண்மை தான் பிரபா. உங்களுக்காக அவ சூசைட் அட்டம்ப்ட் பண்ணினா. நான் தான் அவளைக் காப்பாத்தினேன்”

“அர்ச்சனா நீ உண்மையை தான் சொல்லுறியா? பிளீஸ் என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு”, என்று அவன் சீரியசாக கேட்டதும் நடந்ததைச் சொன்னாள் அர்ச்சனா.

அனைத்தையும் கேட்டவனுக்கு திகைப்பாக இருந்தது. வினோதினி மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை. அது மட்டுமில்லாமல் சாகும் வரைக்கும் அவள் செல்வாள் என்றும் நினைக்க வில்லை.

“இது தான் பிரபா நடந்துச்சு. நான் உங்க மேல உயிரையே வச்சிருந்தேன். ஆனா வினோ உங்களுக்காக உயிரையே கொடுக்க துணிஞ்சா. அப்படி இருந்தும் வேணு அண்ணா என் கிட்ட வந்து கேக்கவே இல்லை. நல்ல அண்ணா”

“உன் அண்ணன் பாசத்துல இடி விழ? என்னை விட வினோவும் வேணுவும் உனக்கு முக்கியமா போய்ட்டாங்களா டி?”

“அவங்க ரெண்டு பேரும் என்னை உடன் பிறப்பா ஏத்துகிட்டாங்க. எனக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும். அதான். அவ நல்லா இருக்கணும்னு…”

“ஓஹோ, அப்ப என் மனசு, என் காதல், எதுவுமே உனக்கு நினைவுக்கே வரலைல்ல?”

“வந்துச்சு. ஆனா நீங்க கொஞ்ச நாள்ல அவளை ஏத்துக்குவீங்கன்னு  நினைச்சேன். ஆம்பளைங்க ரெண்டாவது கல்யாணம் பண்ணும் போது நீங்க அவளை ஏத்துக்கிடுறது பெரிய விஷயம் இல்லைன்னு தோணுச்சு”, என்றாள்.

காதல் தொடரும்…..

Advertisement