Advertisement

அத்தியாயம் 12 

காந்தம் கூட தோற்றுத் தான்

போகிறது உந்தன் விழி ஈர்ப்பு

விசையுடன் மோதும் போது!!!

“நடிக்காத மஞ்சு. எனக்கு எல்லாம் தெரியும். அன்னைக்கு நம்ம வீட்டு போன் ஹிஸ்டரியையும் உன்னோட மொபைல் ஹிஸ்டரியையும் எடுத்து தரட்டுமா? இந்த நடிக்கிற வேலை என் கிட்ட வச்சிக்காத. உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் நான் அமைதியா இருந்ததுக்கு காரணம் அர்ச்சனாவும் அஞ்சலியும் தான். அர்ச்சனா வாழ்க்கை எப்படியோ ஆகிருச்சு. ஆனா அஞ்சலிக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. எனக்கு அர்ச்சனா வாழ்க்கை நல்ல படியா அமைஞ்சா தான் முழு நிம்மதி வரும். அவ எங்க போனா என்ன ஆனான்னு ஒண்ணும் தெரியலை. நான் அந்த டென்ஷன்ல இருக்கேன். நீ இன்னொரு தடவை மீனாட்சியையோ அர்ச்சனாவையோ ஏதாவது சொன்ன எல்லா சொத்தையும் அர்ச்சனா, மீனாட்சிக்கு கொடுத்துட்டு போய்க்கிட்டே இருப்பேன். அன்னைக்கு நீ என்னை மயக்கினாலும் என் மேலயும் தப்பு இருக்குறதுனால தான் இப்ப வரைக்கும் உன்னை சகிச்சுக்குறேன். அது மேலும் தொடரணும்னா நீ ஒழுங்கா இருக்கணும்”

“என்னோட உரிமைக்காக நான் போராடுறது தப்பா?”

“அந்த உரிமை உனக்கு எப்பவும் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே என்னைக் கல்யாணம் பண்ணின? அது உனக்கு எப்பவும் கிடைக்காது மஞ்சு”

“நீங்க பேசுறது எனக்கு கஷ்டமா இருக்குங்க. நானும் உங்களை நம்பித் தானே வந்தேன்?”

“அது உன்னோட தப்பு. நானே ஒண்ணும் உன் கிட்ட தப்பா நடக்கலையே? கல்யாணம் ஆகி குழந்தை இருக்குன்னு தெரிஞ்சு நீயா தானே… சரி அதை விடு. நான் இன்னைக்கு சொல்றதை தான் எப்பவும் சொல்லுவேன். இன்னும் சொல்லப் போனா நான் எழுதி வச்சிருக்குற உயில்ல கூட அது தான் இருக்கு. அது என்னன்னா…..”, என்று சொல்ல எதையோ சொல்லப் போகிறார் என்று அவளுக்கு திக்கென்று இருந்தது.

“என்னத்தை எழுதி தொலைச்சீங்க?”

“என்னோட சொத்து ரெண்டு பொண்ணுங்களுக்கு பாதி பாதி தான். நீ இருக்குற வீடு உனக்கு. மீனாட்சி இருக்குற வீடு மீனாட்சிக்கு. ஆனா நான் செத்தா எனக்கு ஈமக்காரியம் செய்யும் போது எல்லாமே அர்ச்சனாவும் மீனாட்சியும் தான் செய்யனும்”

“என்னங்க இது அநியாயம்”

“எனக்கு இது தான் நியாயம். எனக்கு பையன் இல்லாததுனால எனக்கு கொள்ளி போடுற உரிமை அர்ச்சனாவைக் கல்யாணம் பண்ணிக்கிறவர்க்கு தான்”

“அப்ப எங்க நிலைமை?”

“உங்களுக்கு என்ன? அதான் சொத்து இருக்குல்ல? இது தான் நீ செஞ்ச தப்புக்கு தண்டனை. உன் கூட சேந்து செஞ்ச தப்புக்கு எனக்கும் தண்டனை உண்டு. என்னைக்கு உன்னைத் தொட்டேனோ அன்னைல இருந்து இப்ப வரைக்கும் நான் சன்னியாசியா தான் வாழ்ந்துட்டு இருக்கேன். அது தான் எனக்கான தண்டனை. இனிமேலாவது கவனமா இரு. அப்படி இல்லைன்னா அந்த உயில்ல நான் செத்தா என் முகத்தைப் பாக்க கூட உன்னை விடக் கூடாதுன்னு ஒரு லைன் சேத்துருவேன்”, என்று சொல்ல வாயை மூடிக் கொண்டாள். “உனக்கு இது தேவை தான்”, என்று அவள் மனசாட்சியே அவளைக் கண்டு சிரித்தது.

சொக்கலிங்கம் மற்றும் மஞ்சுளா இருவரும் அங்கிருந்து சென்ற பின்னர் மனதை அழுத்திய உணர்வில் அப்படியே தரையில் சாய்ந்து அமர்ந்து விட்டாள். டைவர்ஸ் தர மாட்டேன் என்று சொன்னதும் சொக்கலிங்கம் முகத்தில் வந்த நிம்மதியே அவள் மனக் கண்ணில் வந்து போனது.

எங்கே தவறினேன்? ஏன் அவர் இன்னொரு பெண் பின்னால் போனார்? குழந்தை குழந்தை என்று இருந்தது தவறோ? என்று பலவாறு யோசித்தாள். ஆனால் இவை எல்லாம் காலம் கடந்த யோசனை என்றும் புரிந்தது. இழந்த வாழ்க்கையை எண்ணி சிறிது நேரம் கண்ணீர் விட்டவள் மகளின் எதிர்காலம் பிரபாகரனால் நன்றாக இருக்கும் என்று எண்ணி மனதை தேற்றிக் கொண்டாள்.

அர்ச்சனா பேங்க்ளூர் சென்று ஒரு வருடத்துக்கு மேல் ஆகி விட்டது. அன்று அர்ச்சனாவுக்கு பிறந்த நாள். எப்போதும் தன்னுடன் இருக்கும் மகள் இன்று இல்லாதது மீனாட்சியை அதிகம் பாதித்தது.

இதற்கு மேல் மகளை தனியே விடக் கூடாது என்று தோன்றியது அவளுக்கு. உடனே பிரபாகரனை அழைத்து விட்டாள்.

அதை எடுத்து “சொல்லுங்க அத்தை”, என்றான்.

“வேலையா இருக்கீங்களா மாப்பிள்ளை?”

“இல்லை அத்தை, சொல்லுங்க”

“இன்னைக்கு அர்ச்சனாவுக்கு பிறந்த நாள். காலைல இருந்து அவ நினைப்பாவே இருக்கு”

“ஓ”

“என் பொண்ணு பண்ணினது தப்பு தான் மாப்பிள்ளை. இப்ப வரைக்கும் அவ எதுக்காக அப்படி பண்ணினான்னு தெரியலை. உங்களைப் பிரிஞ்சு அவளும் சந்தோஷமா இருக்குற மாதிரி தெரியலை. அவ சரியா சாப்பிடுறது இல்லைன்னு பத்மா அக்கா சொல்லிட்டு தான் இருக்காங்க. இதுக்கு மேலயும் அவளை தண்டிக்கணுமா? ஒரு வருசத்துக்கும் மேல ஆகப் போகுது. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பிரிவு? உங்களை வேண்டாம்னு சொல்லிட்டு போனவ உங்களைத் தேடி வரணும்னு நீங்க நினைக்கிறது சரி தான். ஆனா அவளுக்கு இப்ப வரை உங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரியாது. அவ ஒரு வேளை உங்களுக்கு கல்யாணம் ஆகிருக்கும்னு நினைச்சு விலகி இருக்கலாம்ல?”

“இப்ப நான் என்ன செய்யணும் அத்தை?”

“அவளைப் போய் பாத்து ஏன் இப்படி செஞ்சான்னு கேட்டு அவளை கண்டிச்சு கல்யாணம் பண்ணிக்கோங்க மாப்பிள்ளை. எனக்கு அவளை நினைச்சா தான் கவலையா இருக்கு”

“சரிங்க அத்தை. நீங்க சொல்றதும் நியாயம் தான். முதல்ல அவ ஏன் போனான்னு தெரிஞ்சிக்கணும். அவ போக காரணம் யாருன்னு தெரிஞ்சிக்கணும். எனக்கு ஒரு வாரம் மட்டும் டைம் கொடுங்க. வினோதினி படிச்சு முடிச்சிட்டால்ல? அவளுக்கு வரன் பாரு, இல்லைன்னா நீ கல்யாணம் பண்ணிக்கோன்னு வீட்ல சொல்லிக்கிட்டு இருக்காங்க. அவளுக்கு ஒரு வரனைப் பாத்துக் கொடுத்துட்டு நான் அர்ச்சனாவைப் போய்ப் பாக்குறேன்”

“வரனை எதுக்கு வெளியே தேடுறீங்க மாப்பிள்ளை? வினோதினி நல்ல பொண்ணு. அவளுக்கு விக்ரம் தம்பியைப் பாக்கலாம் தானே? அந்த தம்பிக்கும் நல்ல சம்பந்தமா அமையலைன்னு பத்மா அக்கா புலம்பிட்டே இருக்காங்க. ரெண்டு பேருக்கும் பேசலாமே?”

“சூப்பர் அத்தை ரொம்ப நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க. விக்ரம்க்கு வினோதினி பொருத்தமா இருப்பா. நான் வீட்ல பேசிட்டு விக்ரம் அம்மா கிட்ட பேசுறேன். மாப்பிள்ளை பாக்க போற சாக்குல உங்க பொண்ணையும் பாத்துட்டு அவளைக் கூட்டிட்டு வரேன் போதுமா?”

“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை”

“நீங்க கவலைப் படாம இருங்க அத்தை. எல்லாம் நான் பாத்துக்குறேன்”, என்று சொல்லி போனை வைத்தான்.

சொன்னது போல வீட்டுக்கு சென்றதும் நேராக சீதாவிடம் சென்று விக்ரமின் புகைபடத்தைக் காட்டினான். சீதா பையன் நல்லா இருக்கான் என்று சொல்லவே அப்பா விடம் காட்டினான். வேறு ஒருவருக்கும், விக்ரம் வீட்டில் சம்மதம் சொல்லும் வரை தெரிவிக்க கூடாது என்று சொல்லி விட்டான். யசோதாவுக்கு கூட தெரியக் கூடாது என்று சொல்லி விட்டான். அவர்களும் சரி என்று சொல்லவே உடனே விக்ரமை அழைத்தான்.

“சொல்லு டா பிரபா”

“அர்ச்சனா எங்க டா?”

“அவ வீட்ல இருக்கா. இன்னும் எத்தனை நாள் பிரபா அவளுக்கு இந்த தண்டனை? அம்மா கூடவும் என் கூடவும் பேசும் போது நல்லா இருக்கா. அடுத்து அமைதியா ஆகிறா. சரியா சாப்பிடுறது இல்லை. இங்க வந்ததுக்கு இப்ப மெலிஞ்சிட்டா. எனக்கு என்னமோ இப்பவும் அவ மனசுல நீ தான் இருக்கேன்னு தோணுது. அவ வேற யாரையும் விரும்பலை டா. நீ வந்து பேசேன்”

“ஹிம் பேசுறேன். சரி நீ எப்ப கல்யாண சாப்பாடு போடப் போற?”

“போடணும் டா. நானும் கல்யாணம் பண்ணனும் தான் நினைக்கிறேன். ஆனா பொண்ணு சரியா அமைய மாட்டிக்கு. அம்மாக்கு எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசை. வயசு ஆகிருச்சுல்ல? மேட்ரிமோனில பதிவு பண்ணி வைக்கணும்னு பாக்குறேன்”

“அதெல்லாம் வேண்டாம். எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கு. உனக்கு பாக்கலாமா?”

“யாரு டா?”

“போட்டோ அனுப்புறேன். பிடிச்சிருக்கான்னு சொல்லு. நான் அம்மா கிட்ட பேசுறேன்”, என்று சொல்லி வினோதினியின் புகைப்படத்தை அனுப்பினான்.

பார்த்ததும் விக்ரமுக்கு அவளைப் பிடித்திருந்தது. உடனே பிரபாகரனை அழைத்தவன் “பொண்ணு பிடிச்சிருக்கு டா. யார் என்னன்னு விவரம் சொல்லு”, என்றான்.

“பேர் வினோதினி. வயசு இருபத்தி ஒன்னு. இன்ஜினியரிங் முடிச்சிருக்கா”

“எனக்கு ஓகே தான் டா. ஆனா அவங்க வீட்ல பிடிக்குமா?”

“உனக்கு பிடிச்சிருகான்னு மட்டும் சொல்லு. மத்த படி நான் பாத்துக்குறேன்”

“பிடிச்சிருக்கு டா”

“நீயே சொல்லிட்ட? அம்மா சொல்ல வேண்டாமா?”

“எனக்கு பிடிச்சிருந்தா போதும்னு அம்மா சொல்லிட்டாங்க டா. நான் தான் எனக்கு பொண்ணு பாத்துட்டு இருக்கேன். நான் சொன்னா அம்மா சரின்னு சொல்லிருவாங்க”

“அப்புறம் என்ன? டும் டும் டும் தான். வினோதினி என் மாமா பொண்ணு தான் டா. எங்க வீட்ல தான் இருக்கா. அவ அண்ணனுக்கு தான் வர்ஷினியை கொடுத்துருக்கு”

“எனக்கு என்ன தெரியும்? உன் தங்கச்சி கல்யாணத்துக்கு என்னை கூப்பிட்டியா? இல்லை உன் கல்யாணத்துக்கு தான் கூப்பிட்டியா?”

“சாரி டா. கல்யாண டென்ஷன் வேற. எல்லாமே நான் தான் பாக்க வேண்டியது இருந்தது. நிறைய பேரை மிஸ் பண்ணிட்டேன். கடைசில கல்யாணமும் மிஸ் ஆகிருச்சு”

“எதுவும் மிஸ் ஆகலை. இன்னும் உன் மிஸ்ஸஸ் உனக்காக தான் வெயிட்டிங்”

“சரி டா நான் நேர்ல வரேன். நானே அம்மா கிட்ட பேசிக்கிறேன். நீ எதுவும் காட்டிக்க வேண்டாம்”

“சரி பிரபா. அப்புறம் ஒரு விஷயம்”

“என்ன?”

“வினோதினிக்கு என்னைப் பிடிக்கும் தானே?”

“ஹா ஹா, கட்டாயம் பிடிக்கும் டா. உனக்கும் காதல் வைரஸ் அட்டாக் ஆகிருச்சு போல?”

“சே சே கல்யாணம் முடியுற வரைக்கும் யாரையும் நான் லவ் பண்ணுறதா இல்லைப்பா”, என்று சொன்னாலும் ஏனோ வினோதினியை விடக் கூடாது என்று அவன் உள்மனது சொல்லியது.

Advertisement