Advertisement

“ஹலோ யாரு?”, என்று கேட்டான் விக்ரம்.

“விக்ரம், நான் பிரபா பேசுறேன் டா”

“பிரபாவா? எப்படி இருக்க? என் நம்பர் எப்படி கிடைச்சது?”

“ஸ்கூல் வாட்சப் குருப்ல இருந்துச்சு டா”

“சரி, என்ன இந்த நேரம் கால் பண்ணிருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா?”

“ஒரு முக்கியமான விஷயம் பேசணும் விக்ரம்? எங்க இருக்க?”

“நான் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கேன். நைட் ஷிப்ட்”

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் டா”

“சொல்லு மச்சான்”

“நீ இப்ப பேங்க்லூர் ஹாஸ்பிட்டல்ல தானே வேலை பாக்குற?”

“ஆமா டா”

“அங்க கைனக்கலாஜிஸ்ட் டாக்டருக்கு ஏதாவது வேக்கண்ட் இருக்கா?”

“இருக்கு டா. ஏன்? என்ன விஷயம்?”, என்று கேட்க நடந்ததை சுருக்கமாக சொன்னவன் அர்ச்சனாவுக்காக வேலை கேட்டான்.

“எக்ஸ்பீரியஸ் இருக்குல்ல? அப்படின்னா கண்டிப்பா வேலை இருக்கு டா. உடனே அனுப்பி வை. இங்க தங்கவும் குவாட்ரஸ் இருக்கு. நான் பாத்துக்குறேன் தங்கச்சியை”

“சரி டா. ஆனா நீ என்னோட பிரண்டுன்னு அவளுக்கு தெரிய கூடாது”

“நாம பிரண்ட்ஸ்ன்னு நீ வெளிய சொல்லிறாத? ஸ்கூல் முடிஞ்ச உடனே டச்சே இல்லை. யார் போன் பண்ணினாலும் எடுக்கவே மாட்டிக்கியாம். நம்ம நட்டு சொல்லிட்டு இருந்தான். உன் கல்யாணத்துக்கு கூட கூப்பிடலைல்ல?”

“இப்ப அதுவா விக்ரம் முக்கியம்? இன்னொரு நாள் இதுக்கு வந்து அடி வேணும்னாலும் கொடு டா”

“சரி சரி, நீ தங்கச்சியை வரச் சொல்லு டா”

“அவ இப்ப அவளோட ஃபிரண்ட் காயத்ரி வீட்ல இருக்கா. அவ ஹஸ்பண்ட் கிட்ட தான் ஹெல்ப் கேட்டுருக்கா. நான் அவர் கிட்ட உன் நம்பர் கொடுக்குறேன். அவர் மூலமா உன் உதவி அவளுக்கு கிடைச்ச மாதிரி இருக்கட்டும்”

“சரி டா நான் பாத்துக்குறேன். அப்படியே என்ன பிரச்சனைன்னு தங்கச்சி கிட்ட விசாரிக்கப் பாக்குறேன்”

“சரி டா, ரொம்ப தேங்க்ஸ்”, என்று சொல்லி போனை வைத்த பிரபாகரன் மீனாட்சியிடம் சொல்லி காயத்ரியிடம் விக்ரம் எண்ணைக் கொடுத்தான். அதைக் குறித்துக் கொண்ட கிருஷ்ணன் விக்ரமிடமும் தனியே பேசி அர்ச்சனாவை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னான்.

“அர்ச்சனா இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லையே? ஏன் அப்படி பண்ணினா?”, என்று கேட்டாள் மீனாட்சி.

“தெரியலை அத்தை. என்ன நடந்துருக்கும்? அம்மா ஏதாவது சொல்லிருப்பாங்களோ?”, என்று பிரபா கேட்டுக் கொண்டிருக்கும் போது “என்ன பிரபா நீ இங்க இருக்க? உன்னை எழுப்ப உன் ரூமுக்கு தான் போய்கிட்டு இருக்கேன்? காலைலே உன் பொண்டாட்டியைப் பாக்க வந்துட்டியா? ஆமா எங்க அர்ச்சனா?”, என்று கேட்ட படி வந்தார் சக்கரவர்த்தி.

அவரைக் கண்டதும் மகள் செய்த வேலையால் மீனாட்சி குற்ற உணர்வுடன் தலை குனிய “அது வந்து பா”, என்று தடுமாறினான் பிரபாகரன்.

இருவர் முகமுமே சரியில்லாததைக் கண்டு “என்ன பிரபா?”, என்று கேட்டார்.

“அர்ச்சனா இங்க இல்லை பா”

“இல்லைன்னா…”

“இந்த கல்யாணம் வேண்டாம்னு எழுதி வச்சிட்டு இங்க இருந்து போயிட்டா பா”

“என்ன? நீ என்ன சொல்ற பிரபா?”

“உண்மையைத் தான் சொல்றேன் பா”

“என்ன மீனாட்சி இதெல்லாம்?”

“எனக்கும் ஒண்ணும் புரியலை அண்ணா. இந்த பிள்ளை இப்படி பண்ணுவான்னு நான் எதிர் பார்க்கவே இல்லை”, என்று தலையில் அடித்து அழுதாள் மீனாட்சி.

அடுத்த அரை மணி நேரத்தில் மொத்தக் குடும்பமே அங்கே கூடியது.

அர்ச்சனா வீட்டை விட்டு போய் விட்டாள் என்று தெரிந்ததில் அனைவரின் முகமுமே மலர்ந்து தான் இருந்தது. வேணுவோ சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தான்.

“நான் அப்பவே சொன்னேன், இவ சரியில்லை வேண்டாம்னு. யார் என் பேச்சைக் கேட்டா? இப்ப குடும்ப மானமே போச்சு”, என்று சொன்னாள் யசோதா.

“என் பொண்ணு அப்படிப் பட்டவ இல்லை சம்பந்தி அம்மா”, என்றாள் மீனாட்சி.

“நடிக்காத. பொண்ணு வளத்து வச்சிருக்கா பாரு. நீ சரி இல்லை. அதான் உன் புருசனும் உன்னை விட்டு போய்ட்டான் போல? நீ வளத்த பொண்ணு வேற எப்படி இருப்பா? ச்சீ மானங்கெட்ட ஜென்மங்க”, என்று சொல்ல “அம்மா வாயை மூடுங்க”, என்று கத்தினான் பிரபாகரன்.

மீனாட்சி கண்களில் கண்ணீர் வந்தது. சொக்கலிங்கமும் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக நின்றார். அர்ச்சனா இப்படி செய்வாள் என்று அவர் எதிர் பார்க்கவே இல்லை.

“அம்மா இதுக்கு மேல எதுவும் பேசக் கூடாது. எனக்கு என்னமோ இந்த வீட்ல இருக்குற யாரோ தான் அர்ச்சனா இங்க இருந்து போறதுக்கு காரணமா இருக்கும்னு தோணுது”, என்று சொன்ன பிரபா வேணுவைப் பார்க்க அவனோ முகத்தை சாதாரணமாக வைத்திருந்தான்.

“என்ன எவளோ ஒருத்திக்காக நம்ம வீட்ல இருக்குறவங்களையே சந்தேகப் படுவியா பிரபா?”

“சந்தேகப் படலை. உறுதியா சொல்றேன். நம்ம வீட்டு ஆளுங்க தான் காரணம்”

“சரி அதை விடு. இன்னும் கொஞ்ச நேரத்துல உன் கல்யாணம். சொந்தக்காரங்க எல்லாம் வந்துருவாங்க. உன் கல்யாணம் இன்னைக்கு நடக்கணும் பிரபா. நம்ம வினோவை கல்யாணம் பண்ணிக்கோ”, என்று யசோதா சொல்ல வினோதினி முகம் மலர்ந்தது.

வேணுவுக்கு யசோதா சொன்னதைக் கேட்டு திக்கென்று இருந்தது. அவன் எதுவோ சொல்ல வருவதற்குள் “என்ன பேசுறீங்க நீங்க? அதெல்லாம் வேண்டாம்”, என்று உறுதியாக மறுத்தான் பிரபாகரன். அதில் வினோதினி முகம் கூம்பியது.

“அஞ்சலி, இது நல்ல சந்தர்பம். நான் உன் அப்பா கிட்ட உன்னைக் பிரபாகரனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கச் சொல்லப் போறேன். நீ கேட்டா சரின்னு சொல்லிரு”, என்று மகளின் காதில் சொன்னாள் மஞ்சுளா.

“அம்மா லூசு மாதிரி பேசாத. நீ அகிலன் கூட தானே பேச சொன்ன? இப்ப இப்படிச் சொல்ற? நான் அகிலனை விரும்புறேன் மா. இனி இப்படி பேசாதே”

“ஏய் மூத்தவனை கல்யாணம் பண்ணினா தான் கெத்தா இருக்கலாம் டி”

“ஒருத்தனை விரும்பிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ண என்னால முடியாது. பேசாம இரு, இல்லை கொன்னுருவேன் சொல்லிட்டேன்”, என்று சொல்ல மஞ்சுளா வாயை மூடிக் கொண்டாள்.

“அப்பா, நான் ஒண்ணு சொன்னா கேப்பீங்களா?”, என்று கேட்டான் பிரபாகரன்.

“சொல்லு பா”

“இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம சொந்தக்காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சிருவாங்க. வந்தவங்க யாரும் ஏமாற்றத்தோட போக கூடாது. அது மட்டுமில்லாம உங்களுக்கும் மாமாவுக்கும் இருக்குற நட்பும் கெட்டுப் போக கூடாது. அதனால….”

“அதனால என்ன பிரபா?”

“அகில்க்கும் அஞ்சலிக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணுங்க”, என்று சொல்ல அனைவரின் முகமுமே மலர்ந்தது. வேணு முகம் இருண்டது. அப்ப வினோதினி வாழ்க்கை என்று கவலைப் பட்டவன் அதை கெடுக்க எண்ணி “அது எப்படி மச்சான் உங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணின மேடைல அகில் உக்காருவான்? அண்ணனுக்கு முன்னாடி கல்யாணம் பண்ண அவனுக்கு எப்படி மனசு வரும்?”, என்று கேட்டான் வேணுகோபால்.

“ஆமா அண்ணா. வேணு அத்தான் சொல்றது சரி தான். எனக்கு அஞ்சலியைக் கல்யாணம் பண்ணுறது சந்தோஷம் தான். ஆனா முதல்ல உன் கல்யாணம் முடியட்டும்”, என்றான் அகில்.

“என்னை விடு அகில். இப்ப நம்ம குடும்ப மானம் தான் முக்கியம். உன் கல்யாணம் நடக்கட்டும். நான் சொன்னா கேப்ப தானே?”, என்று கேட்க அகில் ஆம் என்னும் விதமாய் தலையசைத்தான்.

“குட். அப்புறம் என்ன? எல்லாரும் அகில் கல்யாணத்துக்கு தயாராகுங்க”, என்றான் பிரபா.

“எனக்கு அகில் கல்யாணம் நடக்குறது சந்தோஷம் தான். ஆனா உன் கல்யாணமும் நடக்கணும் பிரபா. அந்த கேடுகெட்டவ ஓடிப் போனான்னு வெளிய தெரிஞ்சா உன் கல்யாணம் பாதிக்கப் படும் பிரபா”, என்றாள் யசோதா.

“அம்மா இன்னொரு தடவை அர்ச்சனாவை அப்படிச் சொல்லாதீங்க சொல்லிட்டேன்”

“என்ன தம்பி இப்படிச் சொல்றீங்க? சமபந்தி அம்மா சொல்றதுல என்ன தப்பிருக்கு? அவ இப்படி ஓடிப் போனா அவளை எல்லாரும் நல்லவன்னா சொல்லுவாங்க? என்ன சொல்ல? எல்லாம் வளத்தவங்களைச் சொல்லணும்?”, என்று மஞ்சுளா ஜாடையாக மீனாட்சியைச் சொன்னாள்.

“மஞ்சு வாயை மூடு. இருக்குற பிரச்சனைல நீ வேற?”, என்றார் சொக்கலிங்கம்.

“என்னை எதுக்கு அதட்டுறீங்க? நீங்க தானே எப்பவும் என் மூத்த பொண்டாட்டி மாதிரி பிள்ளை வளக்கணும்னு சொல்லுவீங்க? இப்ப அந்த வளப்பை பாத்தீங்க தானே? இப்ப உங்க மானத்தைக் காப்பாத்தப் போறது என் பொண்ணு தான்”, என்று மஞ்சுளா சொல்ல அவளை எதிர்த்து பேச முடியாமல் கடுப்பான சொக்கலிங்கம் மீனாட்சி புறம் திரும்பி “என்ன மீனாட்சி இதெல்லாம்? அவ வேற யாரையும் லவ் பண்ணிருந்தா என் கிட்ட சொல்லிருக்கலாம்ல? நான் கல்யாணம் பண்ணி வச்சிருப்பேனே? இப்ப பிரபா மாப்பிள்ளை நிலைமை என்ன ஆகும்? இப்படியா பிள்ளை வளப்ப?”, என்று கேட்டு விட்டார்.

மற்றவர்கள் மகளைப் பற்றி பேசும் போது கண்ணீருடன் அமைதியாக நின்ற மீனாட்சி சொக்கலிங்கமே அப்படிச் சொல்லவும் கொதிப்படைந்தாள். “என் பொண்ணைப் பத்தி எனக்கு தெரியும்? அவ மனசுல யாரும் இல்லை. அவளைப் பத்தி தப்பா பேசாதீங்க. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன். அவ வேற ஒருத்தனை லவ் பண்ணுறான்னு நீங்க கண்டீங்களா?”, என்று கேட்டு கணவனை முறைத்தாள்.

காதல் தொடரும்…..

Advertisement