Advertisement

“சார், நான் செக்யூரிட்டி மாரியப்பன் பேசுறேன்”

“என்ன மாரியப்பன் இந்த நேரம்?”

“சார், சின்னம்மா ஒரு மணிக்கு ஆஸ்பத்திரில ஒரு எமர்ஜென்சி கேஸ்னு சொல்லிட்டு போனாங்க. ஒரு மணி நேரத்துல வந்துருவேன்னு தான் சொன்னாங்க. ஆனா இன்னும் வரலை. உங்க கிட்ட எதுவும் சொன்னாங்களா?”, என்று கேட்டதும் பிரபாகரன் தூக்கம் தூரம் ஓடியது. அவசரமாக எழுந்து அமர்ந்தவன் “நீங்க யாரைச் சொல்றீங்க?”, என்று அதிர்ச்சியாக கேட்டான்.

“அதான் சார் அர்ச்சனா அம்மா. அவங்க தான் போனாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம். ஆனா அவங்க இன்னும் வரலை”

“எப்படி போனா மாரியப்பன்?”, என்று படபடப்பாக கேட்டான்.

“ஆஸ்பத்திரில இருந்து கார் வந்து தெரு முனைல நிக்குதுன்னு சொன்னாங்க சார். நான் உங்களைக் கூப்பிடவான்னு கேட்டேன். ஆனா அவங்க தூங்கட்டும், நான் ஒரு மணி நேரத்துல திரும்பி வந்துருவேன்னு சொல்லிட்டு போனாங்க. இன்னும் காணும்னதும் கொஞ்சம் பதட்டமாகிருச்சு”

“சரி நான் பாத்துக்குறேன்”, என்று சொல்லி போனை வைத்தவன் அவளை அழைத்தான்.  போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ஒரு வேளை மாரியப்பன் கண் அசந்த நேரம் அர்ச்சனா வீட்டுக்கு வந்திருப்பாளோ என்று எண்ணி அவளின் அறைக்குச் சென்றான்.

வீடே உறக்கத்தில் தான் இருந்தது. அவனுக்கு தான் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. அவளைக் கண்ணால் காணும் வரைக்கும் அவன் நெஞ்சம் அவன் வசம் இருக்காது என்று புரிந்தது.

அறைக் கதவை தட்டும் போதே அது திறந்து கொண்டது. இருட்டாக இருந்ததால் உள்ளே ஒன்றுமே தெரிய வில்லை. அதனால் வெளியே நின்று கொண்டே கதவைத் தட்டினான்.

கதவைத் தட்டியதும் எழுந்த மீனாட்சி விளக்கைப் போட்டு விட்டு வாசலைப் பார்த்தாள். அங்கே பிரபாகரன் நிக்கவும் வேகமாக எழுந்து வந்தவள் “என்ன மாப்பிள்ளை இந்த நேரம்?”, என்று கேட்டாள்.

“அர்ச்சனா எங்க அத்தை?”

“அர்ச்சனா தூங்கு….”, என்று சொல்லிக் கொண்டே கட்டிலைத் திரும்பிப் பார்த்த மீனாட்சி திகைத்து விட்டாள்.

“அர்ச்சனா எங்க? பாத்ரூம் போயிருக்காளோ?”, என்று தனக்கு தானே பேசிய படி பாத்ரூம் போய் பார்க்க அங்கேயும் அவள் இல்லை.

“அர்ச்சனாவைக் காணும் மாப்பிள்ளை. இவ்வளவு சீக்கிரம் எங்க போனா? ஒரு வேளை சீக்கிரம் எழுந்து தோட்டத்துக்கு போயிருக்காளோ? நான் போய்ப் கூட்டிட்டு வரேன்”, என்று வெகுளியாக சொன்னாள்.

“அத்தை ஒரு நிமிஷம், உள்ள வாங்க”, என்று சொல்லி அறைக்குள் வந்தவன் கட்டிலில் அமர்ந்து “இங்க உக்காருங்க. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நீங்க டென்ஷன் ஆகாம நான் சொல்றதைக் கேக்கணும்”, என்றான்.

சற்று பதட்டத்துடன் அமர்ந்த மீனாட்சி “என்ன மாப்பிள்ளை?”, என்று கேட்டான்.

“நேத்து நைட் அர்ச்சனா எதுவும் உங்க கிட்ட சொன்னாளா?”

“என் கிட்டயா? இல்லையே? உங்க கூட பேசிட்டு வந்ததும் படுத்துட்டா? நானும் தூங்கிட்டேன்”

“அத்தை நான் சொல்லப் போறதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை”

“சொல்லுங்க மாப்பிள்ளை. எனக்கு பதட்டமா இருக்கு. அர்ச்ச்னாவுக்கு…. அவளுக்கு ஒண்ணும் இல்லை தானே? எனக்கு அவளை விட்டா வேற யாருமே இல்லை மாப்பிள்ளை“

“உண்மையிலே அவளுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கும் தெரியலை அத்தை. ஒரு மணிக்கு ஆஸ்பத்திரி போறேன் அவசர கேஸ்ன்னு செக்யூரிட்டி கிட்ட சொல்லிட்டு போயிருக்கா. அதுவும் ஒரு மணி நேரத்துல வந்துருவேன்னு சொல்லிருக்கா. இப்ப வரைக்கும் வரலைன்னதும் அவர் எனக்கு சொன்னார். அவள் போனும் ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது”

“அவசர கேசா? அப்படி எல்லாம் இருக்காதே? அவ தான் ரெண்டு வாரத்துக்கு லீவ் எழுதிக் கொடுத்துட்டாளே? அதுமட்டுமில்லாம விடிஞ்சா கல்யாணத்தை வச்சிட்டு எப்படி போவா? எனக்கு பயமா இருக்கு மாப்பிள்ளை”

“பதறாதீங்க அத்தை. நான் திருப்பி ஒரு தடவை கூப்பிடுறேன்”, என்று சொல்லி போன் போட அப்போதும் அப்படித் தான் வந்தது. மீனாட்சியின் போனில் இருந்து பண்ணும் போதும் அப்படித் தான் வந்தது.

அப்போது இருவர் கண்ணிலும் டேபிள் மீதிருந்த லட்டர் பட அதை எடுத்துப் படித்தான் பிரபாகரன்.

“எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. எனக்கு பிரபாவைப் பிடிக்கலை. நான் வேறொருவரை விரும்புறேன். அதனால் அவரோட போறேன். என்னை யாரும் தேட வேண்டாம். சாரி பிரபா வேற ஒரு நல்ல பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க. அம்மா நீயும் என்னை மன்னிச்சிரு. இப்படிக்கு அர்ச்சனா”, என்று முடித்திருந்தாள்.

படித்தவன் அதிர்ந்து தான் போனான். அவன் கண்களில் ஒரு துளி கண்ணீர் வந்தது. ஏதோ ஏமாற்றமாக அவமானமாக ஒரு புறம் இருந்ததென்றால் அதில் இருந்த விஷயத்தை அவனால் நம்ப முடியாத குழப்பம் ஒரு புறம். அவன் இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்கவே இல்லை.

மீனாட்சியும் அதை வாங்கிப் படித்து விட்டு “என்ன மாப்பிள்ளை இது? இதை என்னால நம்பவே முடியலை. அவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அப்புறம் என் பொண்ணு வேற யாரையும் லவ் பண்ணலை. ஆனா இது அர்ச்சனா கையெழுத்து தான். எங்கயோ தப்பு நடந்துருக்கு”, என்றாள்.

“எனக்கும் அப்படி தான் தோணுது அத்தை. நான் அவளை நம்புறேன். ஆனா அவளா ஏன் கிளம்பி போனான்னு தெரியலை? யாராவது மிரட்டினாங்களான்னு கூட தெரியலை. முதல்ல அர்ச்சனாவை கண்டு பிடிக்கணும்? ஆனா எப்படின்னு தெரியலை. எங்க போனான்னு தெரியாம எப்படி தேடுறது?”

“ஒரு நிமிஷம் மாப்பிள்ளை”, என்று சொன்ன மீனாட்சி காயத்ரியை அழைத்தாள். அப்போது “என்ன டி பிரச்சனை? எதுக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்ன?”, என்று அர்ச்சனாவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் காயத்ரி. ஆனால் அவளோ உண்மையைச் சொல்ல முடியாமல் திணறிய படி அழுது கொண்டிருக்க “எல்லாம் அப்புறம் பேசிக்கலாம் காயு. அவ முதல்ல கொஞ்ச நேரம் தூங்கட்டும்”, என்றான் கிருஷ்ணன்.

“நான் சென்னைல இருக்க கூடாது. வேற ஊருக்கு போகணும்”, என்றாள் அர்ச்சனா.

“எனக்கு மதியம் வரைக்கும் டைம் கொடு அர்ச்சனா. கண்டிப்பா உனக்கு நல்ல வேலையா வாங்கித் தரேன். ரெண்டு இடத்துல கேட்டுருக்கேன். இன்னைக்கு சொல்றேன்னு சொல்லிருக்காங்க”, என்றான். சரி என்று சொன்னவள் “காயு, அம்மா கால் பண்ணினா எடுக்காத”, என்று சொன்னாள்.

“சரி டி, நீ கொஞ்ச நேரம் தூங்கு”, என்று சொல்லி விட்டு தங்களின் அறைக்கு சென்றாள் காயத்ரி. அப்போது தான் அவளது போன் அடிக்க எடுத்துப் பார்த்தாள். அழைப்பது மீனாட்சி என்றதும் கணவனிடம் என்ன செய்ய என்று கேட்டாள்.

“பேசு, நிலைமையைச் சொல்லு. என்னைக்குன்னாலும் தெரியணும். அந்த அம்மாவோட மனசையும் நாம பாக்கணும். மகளைக் காணும்னு பதறுவாங்கல்ல? அர்ச்சனா நல்லா இருக்கான்னு சொல்லு. ஆனா எங்க இருக்கான்னு சொல்ல வேண்டாம்”, என்று கிருஷ்ணன் சொன்னதும் “சரிங்க”, என்று சொல்லி போனை எடுத்தாள் காயத்ரி.

எடுத்ததும் “அர்ச்சனா எங்க காயத்ரி?”, என்று அழுத்தமாக கேட்டாள் மீனாட்சி.

“அம்மா அது வந்து…”, என்று அவள் தயங்க “எனக்கு தெரியும் காயத்ரி. அவ உன் கிட்ட சொல்லாம எதையும் செய்ய மாட்டா. அவ உன் வீட்ல தான் இருக்காளா?”, என்று கேட்டாள்.

“ஆமா மா”

“சரி உன் வீட்டு அட்ரஸ் அனுப்பு. நான் அங்க வரேன்”

“இல்ல மா, வேண்டாம்”

“அவ சொல்லக் கூடாதுன்னு சொன்னனாளா?”

“அது வந்து மா…”

“சரி அவளுக்கு என்ன பிரச்சனை? இன்னும் கொஞ்ச நேரத்துல அவளுக்கு கல்யாணம். ஆனா ஏன் இப்படி பண்ணினா?”

“அவ கல்யாணம் வேண்டாம்னு சொல்றா மா”

“எதுக்காம்? மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு லட்டர் எழுதி வச்சிட்டு போயிருக்கா”, என்று மீனாட்சி கேட்க பிரபாகரன் கண்கள் கோபத்தில் சிவந்தது.

“என்ன வேலை டி பண்ணி வச்சிருக்க? உனக்கு இருக்கு டி”, என்று கொலை வெறியுடன் நினைத்துக் கொண்டான்.

“இல்லை மா. அவளுக்கு பிரபா சாரை ரொம்ப பிடிக்கும். ஆனா என்ன காரணம்னு தெரியலை. கொஞ்சம் பொறுமையா இருக்கலாம் மா. இப்ப அவ வேற ஏதாவது ஊருக்கு வேலைக்கு போகணும்னு சொல்றா. கொஞ்ச நாள் போகட்டும். அப்புறம் தெளிவா கேக்கலாம். ரொம்ப உடைஞ்சு போய் இருக்கா மா. என்னால கூட அவ கிட்ட கோபமா பேச முடியலை. இது நான் பாக்காத அர்ச்சனா மா. அதான் சொல்றேன்”

“சரி வை கூப்பிடுறேன்”, என்று சொல்லி போனை வைத்த மீனாட்சி “என்னை மன்னிச்சிருங்க மாப்பிள்ளை. என் பொண்ணால உங்களுக்கு தான் கஷ்டம். ஆனா என்னால உறுதியா சொல்ல முடியும். அவளுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்”, என்றாள்.

“எனக்கு புரியுது அத்தை. இப்ப என்ன செய்ய?”

“காயத்ரி கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்போம்னு சொல்றா. நீங்க அவளைத் தப்பா நினைக்கிறீங்களா?”

“எவ்வளவு நாள் ஆனாலும் அவ தான் எனக்கு மனைவி. அவளை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் அத்தை”

“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். அவ என்ன தான் பண்ணுறான்னு பாப்போம்”

“சரிங்க அத்தை. எனக்கும் அவ என்னை வேண்டாம்னு சொன்னது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. அது நூறு சதவீதம் உண்மை இல்லைன்னாலும் அவ என்னை அவாய்ட் பண்ண வலி கொஞ்சம் இருக்கு அத்தை. அதனால அவளே என்னை தேடி வர வரைக்கும் நான் காத்துட்டு இருப்பேன். ஆனா அவ இப்ப எங்க போகப் போறா? வேற எங்கயாவது வேலைக்கு போனா அங்க இருந்து சொல்லாம கொள்ளாம வேற எங்கயாவது போயிரக் கூடாது. அவ நம்ம கட்டுபாட்டுக்குள்ள இருக்கணும் அத்தை”

“ஆமா மாப்பிள்ளை நீங்க சொல்றது சரி தான். அவ பாதுகாப்பும் முக்கியம். உங்களுக்கு தெரிஞ்ச இடத்துல அவளுக்கு ஒரு வேலை வாங்கித் தர முடியுமா மாப்பிளை?”

“கண்டிப்பா முடியும் அத்தை. ஒரு நிமிஷம் இருங்க”, என்று சொன்ன பிரபாகரன் தன்னுடைய பள்ளித் தோழனின் எண்ணைத் தேடி அவனுக்கு அழைத்தான்.

Advertisement