Advertisement

அத்தியாயம் 10 

என்னைச் சுடும் பனியும் நீயே

எந்தன் தாகம் தீர்க்கும் நதியும் நீயே!!!

அன்று இரவுக்காக காத்திருந்தாள் அர்ச்சனா. இது வரை எவ்வளவோ யோசித்தும் விட்டாள். இரவு எட்டு மணிக்கு மீனாட்சி அவளை உணவு உண்ண அழைக்க “எனக்கு பசியில்லை மா”, என்று மறுத்தாள்.

“என்ன ஆர்ச்சு அர்ச்சனா? உன் முகமே சரி இல்லை”

“கல்யாண டென்ஷன் மா. உன்னை விட்டு இருக்கணும்ல? நீ எப்படி தனியா இருப்ப?”, என்று கேட்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் வந்தது.

“இதுல என்ன டா இருக்கு? நீ ஹேப்பியா இருப்பல்ல? எனக்கு அது போதும். எதுக்கும் கலங்க கூடாது சரியா? நீ எப்பவும் கம்பீரமா தைரியமா இருக்கணும்னு தான் அம்மா உன்னைக் கஷ்டப் பட்டு இந்த அளவுக்கு வளத்துருக்கேன். என் வளப்பு தப்பா போகக் கூடாது”, என்று சொல்ல “சரி மா”, என்றாள்.

“சரி நான் போய் உனக்கு பால் எடுத்துட்டு வரேன். வெறும் வயித்தோடு படுக்க கூடாது”, என்று சொல்லிச் சென்றாள். இன்னும் அன்னையையும் சிறிது நாட்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்று கஷ்டமாக இருந்தது.

இரவு பத்து மணிக்கு பிரபாகரன் அவளை அழைத்தான். அவன் அழைப்பைக் கண்டதும் அவளுக்குள் புது ரத்தம் பாய்ந்தது போல இருந்தது.

அம்மா இருந்ததால் அதை எடுத்து அமைதியாக “சொல்லுங்க பிரபா”, என்றாள்.

“என்ன டி பண்ணுற?’,. என்று அவன் மோகத்துடன் கேட்க அவள் கிளர்ந்து போனாள்.

“படுக்கப் போறேன்”

“கொஞ்ச நேரம் வாயேன். பேசிட்டு இருக்கலாம். நான் அத்தைக் கிட்ட கேக்கவா?”, என்று அவன் கேட்க அவளுக்கும் அவனை கடைசியாக பார்க்க வேண்டும் போல இருந்தது, அதனால் அன்னையைப் பார்த்தாள்.

“என்ன அர்ச்சனா மாப்பிள்ளை கூப்பிடுறாரா?”

“ஆமா மா”

“என்னன்னு கேட்டுட்டு வா. சீக்கிரம் வந்துரு. நைட் தூங்கினா தான் நாளைக்கு பிரஷா இருப்ப?”

“சரி மா”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்றாள். இன்று தான் அவனைப் பார்ப்பது கடைசி என்பதால் சந்தோசமாகவே அவனைக் காணச் சென்றாள்.

அவன் அருகே சென்றதும் அவள் கண்கள் அவனையே அள்ளிப் பருகுவதை போல பார்த்தது. அவள் பார்வையில் அவன் மயங்கிப் போனான்.

அவள் பார்வையில் இருந்த அழைப்பில் வேகமாக அவள் அருகே வந்தவன் அவளையே இமைக்காமல் பார்த்தான். அவன் பார்வையைக் கண்டு தலை குனிந்து கொண்டாள்.

உல்லாசம் நிரம்பிய மனதுடன் “பார்வை எல்லாம் பயங்கரமா இருந்துச்சு. பக்கத்துல வந்ததும் தலை குனிஞ்சிருச்சு”, என்று கேட்டான்.

“அது சும்மா”, என்று அவள் முணுமுணுக்க அவளுடைய உதடுகளின் மீது அவன் பார்வை சென்றது.

ஆனாலும் அவளிடம் எதுவோ வித்தியாசம் தெரிய “என்ன அர்ச்சனா ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டான்.

“கல்யாணத்தை நினைச்சு கொஞ்சம் டென்ஷன்”

“இதுல என்ன டி இருக்கு? நான் தானே தாலி கட்டப் போறேன்? அப்புறம் என்ன? நாளைக்கு இந்நேரம் நமக்கு பர்ஸ்ட் நைட், அதைப் பத்தி யோசியேன்”, என்று சொல்ல அவள் முகம் சிவந்து போனாள்.

அவளிடம் தெரிந்த பெண்மை அவனை அவள் பக்கம் காந்தமாக இழுத்தது. அவள் வேண்டும் என்ற தாப உணர்வு அவனுக்குள் எழுந்தது.

அவளைத் தொட்டு அணைக்க வேண்டும், அவளை முத்தமிட வேண்டும், அவள் கூந்தல் காட்டில் முகம் புதைக்க வேண்டும் என்று பல ஆசைகள் அவனுக்குள் எழுந்தது. ரோஜா வண்ண சில்க் சேலை அவளுக்கு அழகாக பொருந்தி இருந்தது, தலைக்கு குளித்திருப்பாள் போல? கொஞ்ச முடியை மட்டும் கிளிப்பில் அடக்கி மற்றதை விரித்துப் போட்டிருந்தாள். உடைக்கு ஏற்றார் போல மின்னிய நகைகள் அவள் அழகை இன்னும் மெருகூட்டியது.

“இன்னும் கொஞ்ச மணி நேரம் தான் டி இருக்கு நம்ம கல்யாணத்துக்கு. பர்ஸ்ட் நைட் பத்தி பேசினதும் எனக்கு உன்னைக் இறுக கட்டிக்கணும் போல இருக்கு டி”, என்று சொன்னதும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். ஆனந்தமாக அதிர்ந்து போனான் அவள் செய்கையில்.

அவன் நெஞ்சில் முகம் புதைத்தவள் எதுவுமே பேச வில்லை. இப்போது விலகினால் இன்னும் இந்த இதம் கிடைக்கவே கிடைக்காது என்று அவள் மூளை அவளுக்கு அறிவுறுத்த அதை இழக்க அவள் தயாராக இல்லை.

அவளை தன்னிடம் இருந்து விலக்கி அவளை முத்தமிட அவன் முயற்சி செய்தும் அவனால் முடியாமல் போக அவளை இறுக அணைத்த படியே நின்றான்.

அவளது அமைதி அவனை பாதிக்க “என்ன ஆச்சு டி?”, என்று கேட்டான்.

அவன் நெஞ்சில் முகம் புதைத்த படியே ஒண்ணும் இல்லை என்னும் விதமாக தலையசைத்தாள். “ஏன் ஒரு மாதிரி இருக்க அர்ச்சனா? யாரும் எதுவும் சொன்னாங்களா?”

“இல்லை”, என்ற தலையசைப்பு மட்டுமே அவளிடம்.

“சரி நேரம் ஆச்சு. நீ கிளம்பு. நீ வரலைன்னு அத்தை கவலைப் பட்டுட்டே இருப்பாங்க”, என்று சொல்லி அவளை விலக்கி நிறுத்தினான்.

அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே இரண்டு அடி எடுத்து வைத்து நடந்தவள் மீண்டும் ஓடி வந்து அவனை இறுக கட்டிக் கொண்டு அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.

அவள் முத்தத்தில் இது வரை இருந்த கட்டுப்பாடு உடைய அவன் உதடுகளும் அவள் முகமெங்கும் பதிந்தது. அவள் உடல் எங்கும் உணர்வுகள் பெருகி படர்ந்து அவை அவனுக்குள்ளும் கடத்தப் பட்டது போலும்?

அவள் ஆவேசமாக அவனை தழுவியிருக்க அவள் ஆவேசத்தில் கிறங்கியவன் அவள் இதழோடு இதழ் பதித்தான். மறுப்பு சொல்லாமல் அவன் கைகளுக்குள் பதுமை என நின்றாள்.

அவன் அவளை தன்னுடன் சேர்த்து அணைத்து தரையில் சரிய விருப்பத்துடன் அவனுடன் சரிந்தாள் அர்ச்சனா. அவனது கைகள் முதல் முறையாக அவள் மேல் பரவிப் படர கண்களை மூடி அவன் தொடுகையை அனுமதித்தாள்.

அவனது விரல்கள் அவள் உடலில் அத்து மீற அவள் கரங்கள் அவன் கழுத்தை வளைத்துக் கொண்டது. அவளது சரணாகதியில் அவளது காதலில் பிரமித்து விட்டான். இப்போது அவன் அவளை என்ன செய்தாலும் அவள் தடுக்க மாட்டாள் என்று புரிந்தது.

ஆனால் அது அவளுக்கு அவன் கெடுதல் செய்தது போல ஆகி விடும் என்பதால் அவளை விட்டு விலக முயன்றான். ஆனால் அவளோ அவனை விட மறுக்க “ஏய் விடு டி, நான் ரொம்ப பாவம். ரொம்ப ரொம்ப நல்ல பையன். அதை நாளைக்கு வரைக்கும் காப்பாத்தணும்”, என்று சிரிப்புடன் சொல்ல அவளும் விலகி அமர்ந்தாள்.

கலைந்திருந்த உடையை அவள் சரி செய்ய, கலைந்திருந்த அவளது முடியை அவன் சரி செய்தான்.

“உன் மனசுல என்ன குழப்பம் இருக்குனு தெரியலை அர்ச்சனா. ஒரு வேளை அம்மா உன் கிட்ட சரியா பேசுறது இல்லைனு கவலைப் படுறியான்னு தெரியலை. எல்லாமே போகப் போக சரியாகும். என்ன நடந்தாலும் நான் உன் கூட இருப்பேன். அதை மட்டும் நம்பு சரியா?”, என்று கேட்க சரி என்னும் விதமாய் தலையசைத்தாள்.

“இப்ப போய் தூங்கு”, என்று சொல்லி அவன் அனுப்பி வைக்க அவளும் அவனைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள். சிறிது நேரத்துக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை எண்ணிய படி அவனும் அறைக்கு சென்று படுத்து விட்டான்.

அர்ச்சனா அறைக்கு வரும் போது மீனாட்சி விழித்து தான் இருந்தாள். மகளைக் கண்டதும் “நேரம் ஆச்சு பாப்பா. படுத்து தூங்கு”, என்று சொல்ல “சரி மா”, என்று சொல்லி படுத்து விட்டாள். சிறிது நேரத்தில் மீனாட்சி உறங்கி விட்டாள். ஆனால் அர்ச்சனாவால் உறங்க முடிய வில்லை.

பிரபாகரனை வினோதினிக்காக விட்டுக் கொடுக்க அவள் முடிவு எடுத்து விட்டாலும் அவள் மனது பயங்கரமாக வலித்தது. அந்த வலியே சொன்னது அவள் அவன் மீது வைத்த காதலை.

சரியாக இரவு ஒரு மணிக்கு அவளது போன் அடித்தது. அதை அவள் எடுத்ததும் “அர்ச்சனா நான் கிருஷ்ணன் பேசுறேன்”, என்றான். அவன் தான் காயத்ரியின் கணவன்.

“சொல்லுங்கண்ணா”

“இந்த வீட்டுத் தெருமுனைல தான் காரோட நிக்குறேன். வேற கார் அரெஞ்ச் பண்ணுறது சேஃப் இல்லை. அதான் நானே வந்தேன்”

“தேங்க்ஸ் அண்ணா. ஒரு பத்து நிமிசத்துல வந்துறேன்”

“ஒரு நிமிஷம் யோசிச்சிக்கோயேன் மா. பெரிய அளவுல ஏற்பாடு செஞ்ச கல்யாணம்….”

“எல்லாம் யோசிச்சிட்டேன் அண்ணா. எனக்கு இது தான் சரின்னு படுது”

“நீ விவரம் தெரியாதவ இல்லை… சரி வா.. நான் வெயிட் பண்ணுறேன்”, என்று சொல்லி போனை வைத்தான்.

அவன் போனை வைத்ததும் அவசரமாக எழுந்தவள் பதுங்கி பதுங்கி பாத்ரூம் சென்று ஒரு சுடிதாரைப் போட்டுக் கொண்டு அன்னை எழும்பாதவாறு அறையை விட்டு வெளியே வந்து கேட் அருகே வந்து விட்டாள்.

வீட்டில் இருக்கும் யாரும் அவளைப் பார்க்க வில்லை என்றாலும் செக்யூரிட்டி அவளைப் பார்த்து விட்டான்.

அவளை அந்த நேரத்தில் கண்டு திகைத்து “என்ன மா இந்த நேரத்துல?”, என்று கேட்டான்.

“ஹாஸ்பிட்டல்ல ஒரு எமர்ஜென்சி கேஸ் அண்ணா. கண்டிப்பா போகணும்”

“அப்படியா மா? நான் சாரைக் கூப்பிடவா?”

“வேண்டாம் அவர் தூங்கட்டும். நான் ஒரு மணி நேரத்துல வந்துருவேன்”

“இந்நேரம் எப்படி போவீங்க? கார் வேணும்ல? ஆட்டோ கூட கிடைக்காதே?”

“ஹாஸ்பிட்டல் கார் தெரு முனைல நிக்குது”

“சரி மா, போயிட்டு வாங்க. காலைல கல்யாணம். கவனமா போங்க”,. என்று சொல்லியே அவளை அனுப்பினான்.

சிறிது தூரம் நடந்து அந்த பெரிய வீட்டை நிமிர்ந்து பார்த்தாள். சீரியல் விளக்குகளால் அந்த வீடே ஜொலித்தது. வீட்டின் வெளியே இருந்த கட்டவுட்டில் பிரபா மற்றும் அர்ச்சனா இருவரும் அவ்வளவு அழகாக இருந்தார்கள்.

அவனுடைய புகைப்படத்தைப் பார்த்து “சாரி பிரபா. நான் செய்யுறது தப்பு தான். ஆனா வினோதினி ஏதாவது பண்ணிக்கிட்டா என்னால என்னையே மன்னிக்க முடியாது. உங்க மேல உள்ள காதலை விட அவ உயிர் எனக்கு முக்கியமா படுது”, என்று மனதுக்குள் சொன்னவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

கிருஷ்ணன் அருகில் சென்று “சாரிண்ணா உங்களையும் சிரமப் படுத்திட்டேன்”, என்றாள்.

“விடு மா, உன் முகத்தைப் பாத்தாலே தெரியுது. இதை நீ முழு மனசா செய்யலைன்னு. சரி கார்ல ஏறு. கிளம்பலாம்”

“சரிண்ணா, முதல்ல எங்க வீட்டுக்கு போங்க. என் செர்டிபிகேட்ஸ் எடுக்கணும்”, என்று சொல்ல அவள் வீட்டை நோக்கி கார் பறந்தது.

தன்னுடைய வீட்டுக்குச் சென்ற அர்ச்சனா தனக்கு தேவையான பொருள்கள் தன்னுடைய செர்டிபிகேட்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு கிருஷ்ணன் வீட்டுக்கு சென்ற போது ஆதிகாலை நான்கு மணி. உள்ளே வந்தவளை காயத்ரி அணைத்துக் கொண்டாள்.

காலை நான்கு மணி ஆனதும் அவ்வளவு நேரம் வரைக்கும் அவள் வருவாள் வருவாள் என்று காத்திருந்த செக்யூரிட்டி அவள் வராததால் சிறிது பயத்துடன் பிரபாகரனை அழைத்தான்.

ஒன்பது முதல் பத்து மணி தான் முகூர்த்த நேரம் என்பதால் பிரபாகரன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அதனால் காலையில் போன் அடிக்கவும் தூக்க கலக்கத்தில் அதை எடுத்து “ஹலோ”, என்றான்.

Advertisement