“என்ன சொல்ற? அவன் உன் மாமா பையன் பிரபா. அது மட்டுமில்லாம அவன் இப்ப உன் தங்கச்சி புருஷன். அவனை ஏன் வர வேண்டாம்னு சொல்ற?”
“இல்லைப்பா… அது வந்து…. வேணுவால கம்பெனில சில புகைச்சல் உருவாகுற மாதிரி தோணுது”
“என்ன பிரபா சொல்ற?”
“ரெண்டு லேபர்ஸ்க் குள்ள பிரச்சனைன்னு தீர்த்து வைக்கப் போனா அந்த பிரச்சனையை ஆரம்பிச்சது வேணு தான்னு தெரிய வருது. அப்புறம் கேண்டீன்ல சாப்பாடு சரியில்லைன்னு பிரச்சனை பண்ணுறாங்க. அதை சரி செய்ய கிளம்பினா அதை ஆரம்பிச்சதும் வேணுன்னு சொல்றாங்க. லேபர்ஸ் கிட்ட பேசுற மாதிரி பேசி அவங்களை தூண்டி விடுறான்னு எனக்கு தோணுது பா. வீட்டு மாப்பிள்ளைன்னால என்னால எதுவும் வெளிப்படையா கேக்க முடியலை. ஆனா உங்க கிட்ட தகவல் சொல்லணும்னு தோணுச்சு. அது மட்டும் இல்லாம அத்தைக்காகவும் அவனை என்னால ஒண்ணும் சொல்ல முடியலை”
“அப்படி எல்லாம் இல்லை பிரபா. வேணு ரொம்ப நல்ல பையன். பொறுப்பான பையன் கூட. இப்ப கூட பாரு, அகிலன் இன்னும் எந்திக்கவே இல்லை. ஆனா வேணு உனக்கு முன்னாடியே ஆபீஸ் போய்ட்டான். தொழிலாளர்கள் ஏதாவது பொறாமைல அவனைப் பத்தி உன் கிட்ட தப்பா சொல்லிருக்காங்க. நம்ம வீட்டு மாப்பிள்ளையை நாமளே விட்டுக் கொடுக்க கூடாது பிரபா”
“நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம் பா. இனி இந்த விசயத்துல நான் தலையிட மாட்டேன். அவனால ஏதாவது பிரச்சனை வந்தா நீங்களே பேஸ் பண்ணிக்கோங்க. நான் வரேன் பா”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். மகன் சென்றதும் சக்கரவர்த்தி யோசனையில் ஆழ்த்தார்.
என்ன தான் அவருக்கு மருமகன் மீது நம்பிக்கை இருந்தாலும் அதை விட பல மடங்கு நம்பிக்கை மகன் மேல் அவருக்கு உண்டு. பிரபாகரன் எதையும் தீர விசாரிக்காமல் மற்றவர்கள் மீது பழி போட மாட்டான். ஆனால் அவனே அப்படிச் சொல்லவும் அவருக்கு குழப்பமாக இருந்தது. “வேணுவை இன்னும் தீவிரமா கண்காணிக்கணும்”, என்று எண்ணிக் கொண்டார்.
அலுவலகம் வந்த பிரபாகரன் கண்ணில் பட்டது, சேரில் சாய்ந்து அமர்ந்து காலை டேபிள் மீது வைத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்த வேணு தான். அவனைக் கண்டதும் சிறு எரிச்சல் அவனுக்குள் எழுந்தது.
“வீட்ல சீக்கிரம் எழுந்து நல்ல பிள்ளை மாதிரி ஆபீஸ் வந்துட்டு இங்க வந்து தூங்குறதைப் பாரு. இந்த அப்பா வேற இவனை அப்படி நம்புறாங்க”, என்று எரிச்சலுடன் எண்ணியவன் வேணு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க முடிவு எடுத்தான்.
ஏனென்றால் கண் முன் நிற்கும் எதிரியை நம்மால் எப்படி வேண்டும் என்றாலும் வெற்றி கொள்ள முடியும். ஆனால் நம்முடன் இருக்கும் துரோகியை அப்படி இனம் கண்டறிவது முடியாதே. ஒரு பெருமூச்சொடு தன்னுடைய அறைக்கு சென்று அன்றைய வேலைகளை ஆரம்பித்தான்.
தன்னுடைய பி.ஏவை அழைத்தான். “சார்”, என்ற படி உள்ளே வந்தான் மூர்த்தி.
“நேத்து எக்ஸ்போர்ட் பண்ணின நண்டு லோட் போய் சேந்துருச்சுன்னு கன்பர்மேசன் வந்துச்சா மூர்த்தி?”
“யெஸ் சார். வேணு சார் கிட்ட நான் தகவல் கொடுத்துட்டேன்”
“குட், அப்புறம் இன்னொரு விஷயம் மூர்த்தி. ஆஃபிஸ்ல என்ன நடந்தாலும் நீங்க வேணு கிட்ட தானே ரிப்போர்ட் பண்ணுறீங்க?”
“ஆமா சார்”
“அது அப்படியே இருக்கட்டும். ஆனா என்ன நடந்தாலும் எனக்கும் ஒரு தடவை இன்பார்ம் பண்ணிருங்க சரியா?”
“முதல்ல உங்க கிட்ட தானே சார் பண்ணிட்டு இருந்தோம்? நீங்க தான் முக்கியமான விஷயம் மட்டும் என் கிட்ட சொன்னாப் போதும்னு சொன்னீங்க”
“ஆமா சொன்னேன். ஆனா இப்ப எல்லாத்துலயும் கொஞ்சம் கவனமா இருக்கணும்னு தோணுது”
“ஓகே சார், நான் உங்களுக்கும் இன்பார்ம் பண்ணிறேன்”
“சரி நான் சைட்டுக்கு போறேன். அப்புறம் வேணு நல்லா தூங்கிட்டு இருக்கார். கொஞ்சம் எழுப்பி விடுங்க மூர்த்தி. அப்பவாது வேலையைப் பாக்குறாரான்னு பாப்போம். அப்புறம் அவர் மேலயும் ஒரு கண்ணு வச்சிக்கோங்க”
“அன்னைக்கு கேண்டீன்ல சண்டை வந்ததுல இருந்து நீங்க அவர் மேல கண்ணு வைக்க சொன்னீங்கல்ல? நானும் பாத்துட்டு தான் சார் இருக்கேன்”
“குட், நான் வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். மூர்த்தி எரிச்சலுடன் வேணு கோபாலை எழுப்பச் சென்றான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேணு, மூர்த்தி எழுப்பியதும் “என்ன?”, என்று எரிச்சலுடன் கேட்டான்.
“கொஞ்சம் வேலையைப் பாக்கணுமாம். சார் சொல்லச் சொன்னாங்க”
“பிரபா ஆபீஸ் வந்துட்டானா?”, என்று வேணு கேட்க “அவ்வளவு பெரிய மனுஷர் இவனை அவர் இவர்னு சொல்றார். ஆனா இவன் அவன் இவன்னு சொல்றதைப் பாரு”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “சார் அப்பவே வந்துட்டாங்க. இப்ப சைட் விசிட்க்கு கிளம்பிட்டாங்க”, என்று சொல்லி விட்டுச் சென்றான் மூர்த்தி.
“நாம தூங்குறதை இந்த பிரபா பாத்துட்டான் போலயே? ஏதாவது பண்ணுவானோ? என்ன பண்ணிற முடியும் அவனால? நான் அந்த வீட்டு மாப்பிள்ளையாக்கும்”, என்று எண்ணிக் கொண்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான். ஒரு பைல் எடுக்க வந்த மூர்த்தி அதைக் கண்டு தலையில் அடித்த படி சென்றான்.
மகன் பேசியதை பற்றிக் எண்ணிக் கொண்டே வீட்டுக்குள் சென்ற சக்கரவர்த்தி மனைவி அருகில் அமர்ந்து கொண்டார். “என்னங்க ஒரு மாதிரி இருக்கீங்க?”, என்று கேட்டாள் யசோதா.
“ஒண்ணும் இல்லை யசோ. சரி நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க?”, என்று யசோதா மற்றும் சீதாவிடம் கேட்டார்.
“அண்ணா, பிரபா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்ல? நீங்க உடனே நல்ல பொண்ணா பாருங்க”, என்றாள் சீதா.
“ஆமாங்க, நம்ம பிரபா கல்யாணத்தை வர்ஷினி கல்யாணத்தை விட கிராண்டா பண்ணனும். நல்ல பொண்ணா பாக்கணும்”, என்றாள் யசோதா.
“சரி மா, தரகரைப் போய்ப் பாக்குறேன். வினோ கிளம்பிட்டாளா மா? அவளை காலேஜ்ல விட்டுட்டு நான் தரகரைப் பாத்துட்டு வரேன்”, என்று சக்கரவர்த்தி சொல்ல “இதோ கிளம்பிட்டு இருக்காண்ணா. இப்ப வரச் சொல்றேன்”, என்று சொல்லி அவர்களின் அறைக்கு சென்றாள் சீதா.
அங்கே வினோதினி அப்போது தான் குளித்து முடித்து தலை பின்னிக் கொண்டிருந்தாள். “நீ இன்னும் கிளம்பலையா டி? நீ எப்ப தலை சீவி எப்ப சாப்பிட்டு கிளம்ப? அண்ணா கிளம்பிட்டாங்க டி. சரி நீ தலை சீவு. நான் நாலு இட்லி எடுத்துட்டு வந்து ஊட்டி விடுறேன்”, என்று சொல்லி சீதா அங்கிருந்து செல்லப் போக “எனக்கு ஒண்ணும் வேண்டாம், போ மா. உன் இட்லியை நீயே கொட்டிக்க”, என்று எரிச்சலுடன் சொன்னாள் வினோதினி.
அப்போது தான் மகள் முகத்தைப் பார்த்தாள். அவள் முகமோ கோபத்தில் சிவந்து இருந்தது. என்னவென்று புரியாமல் “என்ன டி? காலைலே இவ்வளவு கோபம்?”, என்று கேட்டாள் சீதா.
“நீங்க பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். நீ எதுக்கு இப்ப பெரியத்தான் கல்யாணம் பத்தி பேசின? அவங்க சுதந்திரமா இருக்குறது உனக்கு பொறுக்கலையா?”, என்று எரிச்சலுடன் கேட்டாள்.
“பெரிய மனுஷி மாதிரி பேசாத வினோ. எது எது எப்ப செய்யணும்னு எங்களுக்கு தெரியும்? அவனுக்கு கல்யாண வயசு வந்துருச்சு. அதான் பேசினோம்? இதுல என்ன தப்பிருக்கு”
“அத்தானுக்கு இருபத்தி ஒன்பது வயசு தானே ஆகுது? அதுக்குள்ள எதுக்கு அத்தானுக்கு கல்யாணம்?”
“உன் அண்ணனுக்கு அதை விட கம்மி தானே? அவனுக்கு பண்ணி வைக்கலையா? அப்புறம் பிரபாவே சரின்னு சொல்லிட்டான். உனக்கு என்ன? பேசாம காலேஜ் கிளம்புற வேலையைப் பாரு. நம்மளை நல்லா வாழ வச்சிக்கிட்டு இருக்குற குடும்பம் நல்லா இருக்கணும். நானே பிரபா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான்னு சந்தோசத்துல இருக்கேன். அபசகுனம் மாதிரி பேசாத”, என்று மகளை கடிந்து கொண்டு அங்கிருந்து சென்றாள் சீதா.
காலை உணவை உண்ணாமல் சக்கரவர்த்தியுடன் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றாள் வினோதினி. போகும் போது சக்கரவர்த்தி அவள் படிப்பைப் பற்றி ஏதேதோ கேட்கும் போது பதில் கொடுத்தாலும் அவள் மனம் பிரபாகரனிடமே சென்றது.
“அத்தானுக்கு கல்யாணமா? கடவுளே அத்தான் எனக்கு வேணும். நீ தான் என் காதலை சேத்து வைக்கணும்”, என்று மனதில் எண்ணிக் கொண்டாள். சிறு வயதில் இருந்து அவளுக்கு பிரபாகரனைப் பிடிக்கும். அகிலனாவது அவளுடன் எப்போதும் வம்பிழுத்து சண்டை போடுவான். ஆனால் பிரபாகரன் எப்போதும் அவளிடம் அன்பாகவே இருப்பான். அந்த பாசம் அவனுக்கு அப்படியே இருந்தாலும் அவள் மனதில் காதலை விதைத்தது.
வீட்டினரும் சில நேரம் பிரபாகரன் மற்றும் வினோதினி திருமணம் பற்றி பேசினார்கள் தான். அவள் இப்போது கல்லூரி முடித்திருந்தால் நிச்சயம் அவளையே பிரபாகரனுக்கு பார்த்திருப்பார்கள். அவள் கல்லூரி கடைசி வருடம் படித்துக் கொண்டிருப்பதால் தான் அவளை பிரபாகரனுக்கு பார்க்க வில்லை. அது மட்டுமில்லாமல் அகிலனுக்கு அவளைக் கட்டி வைக்க வேண்டும் என்ற எண்ணம் சக்கரவர்த்தி மற்றும் யசோதா மனதில் இருக்கிறது.
இது தெரியாத வினோதினிக்கு பிரபாகரன் மீது சிறு வயதில் இருந்தே காதல் உண்டு. ஹீரோ போன்ற தோற்றத்தில் இருக்கும் அவனை அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். ஆனால் இது வேறு யாருக்கும் தெரியாது. அவளுடைய தோழிகளிடம் கூட பிரபாகரனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அளந்து விட்டிருக்கிறாள்.
வினோதினியைக் கல்லூரியில் இறக்கி விட்டுவிட்டு “பாத்துப் போ டா”, என்றார் சக்கரவர்த்தி.
“சரி மாமா… அப்புறம்….”
“என்ன வினோ, எதுவும் வேணுமா? மாமா கிட்ட கேக்க என்ன தயக்கம்? எங்களுக்கு வர்ஷினி வேற நீ வேற இல்லை. கேளு டா”
“பண்ண வேண்டிய நேரத்துல எல்லாத்தையும் சரியா பண்ணனும் வினோ. நீ படிச்சு முடிச்சதும் உனக்கும் கல்யாணம் தான். சரி நான் வரேன்”, என்று சொல்லி விட்டு தரகரைப் பார்க்கச் சென்றார் சக்கரவர்த்தி. போகும் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வினோதினி.
அன்று முழுவதும் கடுப்புடனே இருந்தாள். அவளது தோழி என்னவென்று விசாரிக்க ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள். அவளை எப்படித் தேற்ற என்று அவளது தோழிக்கு புரியவே இல்லை. சரி அழுது மனம் தேறட்டும் என்று விட்டுவிட்டாள். ஆனால் வினோதினியால் தான் அந்த விஷயத்தை அவ்வளவு எளிதில் விட முடிய வில்லை.
அதே நேரம் “அம்மா டிபன் ரெடியா?”, என்று கேட்ட படி அறைக்குள் இருந்து வெளியே வந்தாள் அர்ச்சனா. மகளைக் கண்டதும் மீனாட்சி கண்கள் பனித்தது. பாசமாக மகளைப் பார்த்து விட்டு “ரெடியா இருக்கு பாப்பா. வா உக்காந்து சாப்பிடு”, என்று சொல்லி அவளுக்கு பரிமாறினாள்.
“நீயும் என் கூடவே உக்காந்து சாப்பிடேன் மா”, என்று சொன்னவள் வெண்பொங்கலை உள்ளே தள்ளினாள். அது வழுக்கிக் கொண்டு உள்ளே போனது.
“நான் அப்புறம் சாப்பிடுறேன் அர்ச்சனா. உனக்கு நேரம் ஆச்சு பாரு. நீ சாப்பிடு”
“சரி மா”
“எல்லாம் எடுத்து வச்சிட்டியா?”
“கோர்ட் மட்டும் எடுத்து வைக்கலை மா”
“சரி நீ சாப்பிடு. நான் எடுத்து வைக்கிறேன்”, என்று சொன்ன மீனாட்சி அவளது அறைக்குள் சென்று அர்ச்சனாவின் கேண்ட் பேக், அவளது வெண்ணிற கோர்ட் எல்லாம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
மகள் உண்டு முடித்ததும் அதை எல்லாம் அவள் கையில் கொடுக்க “நான் கிளம்புறேன் மா”, என்று சொல்லி அதை வாங்கிக் கொண்டு கிளம்பினாள் அர்ச்சனா.
அவள் தன்னுடைய ஸ்கூட்டியை எடுக்க “பாத்து போகணும் பாப்பா. கவனம். ஆஸ்பத்திரி போயிட்டு ஒரு கால் பண்ணி சொல்லிரு என்ன?”, என்றாள் மீனாட்சி.
“மறப்பேனா அம்மா? கண்டிப்பா கால் பண்ணுறேன். அப்புறம் வண்டியை பாத்து தான் ஓட்டுவேன். எனக்காக இல்லைன்னாலும் உனக்காக மெதுவா தான் போவேன். போதுமா?”, என்று புன்னகைக்க மீனாட்சியும் புன்னகை முகமாக வழி அனுப்பினாள்.
மகள் சென்றதும் வீட்டுக்குள் வந்தாள் மீனாட்சி. அப்போது அவளது போன் அடித்தது. அதை எடுத்துப் பார்த்தாள். சொக்கலிங்கம் என்று வந்தது. ஒரு பெருமூச்சுடன் அதை எடுத்து “சொல்லுங்க”, என்றாள்.
“நம்ம அர்ச்சனாவோட போட்டோ இருந்தா எனக்கு அனுப்பி வை மீனாட்சி. ஏற்கனவே இருந்தது டெலீட் ஆகிருச்சு. எப்படின்னு தெரியலை”, என்றார் சொக்கலிங்கம்.
அது எப்படி டெலீட் ஆகியிருக்கும் என்ற உண்மை தெரிந்த மீனாட்சி “இதோ அனுப்புறேன்”, என்று சொல்லி போனை வைத்து விட்டு மகளின் புகைப்படத்தை அனுப்பி வைத்து விட்டு கோவிலுக்கு கிளம்பினாள்.