இரவு பதினொரு மணி… தன்னுடைய தோழி காயத்ரியின் வீட்டில் இருந்து கிளம்பி கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தாள் அர்ச்சனா. காயத்ரியின் கணவன் கிருஷ்ணன் தான் அவளை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டுச் சென்றான்.
காலையில் இருந்து எதுவும் சாப்பிடாதததால் வயிறு பசியில் ஓலமிட்டது. ஆனால் உணவை உண்ண அவளுக்கு மனதில்லை. பேங்க்ளூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடம் வந்து சேர்ந்தவள் அடுத்தாக கிளம்ப இருக்கும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள். அவளை இரண்டு ஜோடி கண்கள் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் அறிய வில்லை.
சிறிது நேரத்தில் பஸ் கிளம்பியது. அவள் அருகில் யாரும் அமராததால் நன்றாக அமர்ந்து சீட்டில் சாய்ந்தாள். ஜில்லென்று மோதிய காற்றில் அவள் தலை முடிகள் லேசாக பறந்தது. அந்த இதமான தென்றலை அனுபவிக்க முடியாமல் அவள் மனம் எதிர் காலத்தை எண்ணி வேதனை கொண்டது.
அவள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் ‘பிரபா பிரபா’ என்று ஓலமிட்டது. அவளை பெண்ணென்று உணர்த்தியது அவன் தான். அவனை எண்ணி அவள் மனம் ஊமையாக அழுதது. வாழ்நாள் முழுக்க அவன் கைக்குள் இருக்க வேண்டும் என்ற கனவு தகர்ந்து விட்டது.
இன்று காலையில் அவளுக்கும் பிரபாகரனுக்கும் திருமணம் நடக்க இருந்தது. அது மட்டும் நடந்திருந்தால் இப்போது அவளுக்கு அவனுடன் முதலிரவு நடந்து கொண்டிருக்கும். ஆனால் அவள் தான் அவனை வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்து விட்டாளே? அவனை எண்ணி அவள் கண்கள் கலங்கியது. கண்ணீரை கைக்குட்டையை வைத்து துடைத்துக் கொண்டாள். இனி அவன் அவளுக்கு இல்லை என்று அவள் மனம் ஊமையாக அழுதது.
மனம் மட்டும் அல்ல. அவள் உடலும் களைத்துப் போய் இருந்தது. ஓய்வுக்காக அவள் உடல் கெஞ்சியது. முந்தைய நாள் இரவு முழுவதும் அழுகையில் கரைந்தவள் இன்று பகல் முழுவதும் அழுது கொண்டு தான் இருந்திருக்கிறாள்.
உடலில் அலுப்பு இருந்தாலும், சில நேரம் மனதில் அமைதி இருந்தால் உடல் வலி பெரியதாக தெரியாது. ஆனால் அவளோ மனதிலும் பெரிய வலியை சுமந்து கொண்டு அல்லவா வந்திருக்கிறாள்.
இனி அவனுக்கும் அவளுக்கும் ஒன்றுமே இல்லை என்று ஆகி விட்டது. இந்நேரம் அவனுக்கு வினோதினியுடன் திருமணம் ஆகி இருக்கும். அவளுடன் இப்போது முதலிரவு கொண்டாடிக் கொண்டிருப்பான் என்று எண்ணி காதல் கொண்ட அவள் மனது துடித்தது.
“விட்டுக் கொடுத்துட்டு தானே வந்த? அப்புறம் எதுக்கு புலம்பிக்கிட்டு இருக்க?”, என்று கேள்வி கேட்டது அவள் மனசாட்சி. ஆம் அவள் தான் அவனை வேண்டாம் என்று விட்டுக் கொடுத்து விட்டு வந்திருக்கிறாள். ஆனாலும் அவனை அவளால் மறக்க முடிய வில்லை.
பிரபா என்று அவள் மனம் கதறியது. அவன் பிரபாகரன். அவள் மனதில் முதன்முதலில் காதல் என்ற விதையை விதைத்தவன், திருமணம் என்ற கனவை அவளுக்குள் நட்டு வைத்தவன். இன்று மலராகி அவன் கரத்தால் தாலி வாங்கும் நிலை வந்த பிறகு அவனை வேண்டாம் என்று விட்டுக் கொடுத்து விட்டு வந்திருக்கிறாள்.
இனி அவனை நினைக்க கூடாது என்று எண்ணி கண்களை மூடிக் கொண்டாள். மற்றவர்கள் போல தூங்க முயன்றாள். இனி அவள் வாழ்க்கையில் தூக்கம் என்பது அவ்வளவு எளிதானதா என்ன? மூடிய இமைகளுக்குள் அவன் முகமே வந்தது.
டிரைவர் பேருந்தின் உள் விளக்கை அணைக்க அவள் கண்கள் கண்ணீர் மழையை நிம்மதியாக பொழிந்தது. அழும் போது யாரும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் அது கூட ஒரு வரம் என்று அந்த நிமிடம் உணர்ந்தாள். என்ன தான் அவள் செய்தது சரி என்று ஒரு மனம் சொன்னாலும் அவள் உள் மனதில் ஒரு ஓரத்தில் நீ செய்தது சரி தானா என்ற கேள்வி எழுந்து அவளை இம்ஸித்துக் கொண்டிருந்தது.
கையைத் திருப்பி மணியைப் பார்த்தாள். ஒரு மணி என்று அது காட்டியது. பேருந்தில் இருந்த அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவளும் உறங்க முயன்றாள். அதே நேரம் அவளுடைய நாயகன் பிரபாகரன் தன்னுடைய அறையில் இருந்த பால்கனியில் வந்து நின்று கொண்டு நிலாவை உற்றுப் பார்த்தான்.
அந்த நிலாவைப் பார்க்கும் போது அவனுக்கு அர்ச்சனாவைப் பார்ப்பது போலவே இருந்தது. அவளை எண்ணி, இன்று காலையில் இருந்து நடந்த நிகழ்வுகளை எண்ணி அவனுக்கு எரிச்சலாக வந்தது. இப்போது அவள் எங்கே இருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும். அவள் எங்கே சென்று கொண்டிருக்கிறாள் என்று கூட தெரியும்? அவள் பின்னேயே சென்று அவளை இழுத்து வர வேண்டும் போல வெறியே வந்தது. ஆனால் அதைச் செய்ய அவனுக்கு மனதில்லை.
“ஏன் டி இப்படி பண்ணின? உனக்கு என்னைப் பிடிக்கலையா? இதை என்னை நம்பச் சொல்றியா? இன்னைக்கு என்னைப் பிடிக்கலைன்னு நீ எழுதி வச்சிட்டுப் போனது உண்மைன்னா இத்தனை நாளும் நீ என் கூட பழகினது பொய்யா டி? உன் கண்ணுல நான் பாத்த காதல் பொய்யா? ஏன் என்னை ஏமாத்தின? வேற யாரையோ விரும்புறேன்னு எழுதி வச்சிட்டு போயிருக்கியே? நேத்து நைட் நீ என் கூட இருந்தப்ப எனக்கு அப்படி தெரியலையே டி? என்ன இருந்தாலும் நீ செஞ்சது துரோகம். நீ இல்லைன்னா நான் என்ன ஆவேன்னு கூட யோசிக்காம என்னை விட்டுட்டு போனல்ல? உனக்கு இருக்கு டி ஒரு நாள்?”, என்று கோபத்துடன் எண்ணிக் கொண்டான்.
அவள் மீது கோபம் கொள்ள நினைத்தாலும் அவனால் அது முடிய வில்லை. “எப்படி டி என்னை விட்டுப் போக உனக்கு மனசு வந்துச்சு? பெரிய இவளாட்டம் லட்டர் எழுதி வச்சிட்டு போயிருக்க? அதை என்னோட முகத்தை பாத்து நீ ஏன் நேத்து சொல்லலை? நீ கொடுத்த அந்த கடைசி முத்தத்துக்கு அர்த்தம் என்ன? இந்த நாளை அவ்வளவு ஆசையா எதிர் பார்த்துட்டு இருந்த என்னோட கனவுகளை கொன்னுட்டல்ல? அதுக்கு உன்னைப் பழி வாங்காம விட மாட்டேன். நான் பிரபாகரன் டி. என்னையே கலங்கடிச்ச உன்னை அவ்வளவு சாதாரணமா விட்டுருவேனா?”, என்று கோபம் கொண்டான்.
“ஆனா ஒண்ணு மட்டும் எனக்கு புரியலை? நீ ஏன் நேத்து நைட் என்னைப் பிடிக்கலைன்னு சொல்லலை? லட்டர் எழுதி வச்சிட்டு போயிருக்கேன்னா உன்னால என்னோட முகத்தை பாத்து சொல்ல முடியாது அப்படி தானே? ஒரு வேளை யாருக்காகவாது நீ என்னை விட்டுக் கொடுத்துட்டு போனியா? ஆனா அதுக்கு வாய்ப்பே இல்லை. என் வாழ்க்கைல வந்த முதல் பொண்ணும் நீ தான் கடைசி பொண்ணும் நீ தான். உன்னை யாரும் மிரட்டினாங்களா என்னை விட்டுப் போகணும்னு? அம்மா எதுவும் சொன்னாங்களா? அப்படி ஒரு வேளை இப்படி எல்லாம் நடந்துருந்தா கூட உண்மையான லவ் இருந்திருந்தா என்னை விட்டு போயிருக்க மாட்டல்ல? ஆனா நீ போய்ட்டன்னா உன் கிட்ட இருந்தது லவ்வே இல்லை டி. யாராலயும் காதலை விட்டுக் கொடுக்க முடியாது. உன்னை நம்பினதை நான் இப்ப பாவமா நினைக்கிறேன்”, என்று எண்ணிக் கொண்டான்.
அவள் மேல் முழுதாக கோபம் கொள்ளவும் முடியாமல் மன்னிக்கவும் முடியாமல் விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் போராடிக் கொண்டிருந்தான் அந்த காதலன். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்தது பல வருட காதல் எல்லாம் கிடையாது. ஒரு மாதத்துக்கு முன்பு தான் அவளைப் பார்த்தான்.
அவள் அவனுக்காக அவனுடைய அப்பா பார்த்த பெண். அதைப் போல தான் அவளுக்கும் வீட்டில் நிச்சயித்த திருமணம் தான். ஆனால் முதல் பார்வையிலே இருவருக்குமே பிடித்து விட்டது. அடுத்த ஒரு மாதத்தில் பகிரப் பட்டது தான் இந்த காதல்.
அதையும் இல்லை என்று சொல்லி விட்டு சரியாக திருமண நாளின் போது ஓடிச் சென்றிருக்கிறாள். இதை என்னவென்று எடுக்க? அவளைப் பற்றிய நினைவுகளை அசை போட்டான். அதே நேரம் அவளும் அவனைப் பற்றிய நினைவுகளை தான் எண்ணிக் கொண்டிருந்தாள்.
சக்கரவர்த்தி மற்றும் யசோதா தம்பதியின் மூத்த மகன் தான் பிரபாகரன். இன்னும் நான்கு மாதத்தில் அவனுக்கு முப்பது வயது பிறக்க இருக்கிறது. சக்கரவர்த்தி குடும்பத்தின் ஆணிவேர் பிரபாகரன் தான். பிரபாகரன் சொன்னால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் கேட்பார்கள். கடல் உணவுகளை எக்ஸ்போர்ட்ஸ் செய்வது தான் அவர்களது தொழில்.
சென்னையில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தவன். அதற்கு பின் அமெரிக்காவில் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து விட்டு திரும்பி வந்ததில் இருந்து சக்கரவர்த்திக்கு ஓய்வு கொடுத்து விட்டு அவன் தான் எல்லாம் பார்த்துக் கொள்கிறான்.
பரம்பரைத் தொழிலை முழுவதுமாக மகனிடம் ஒப்படைக்கிறோமே என்ற பயம் சிறிது சக்கரவர்த்திக்கு இருந்தது தான். ஆனால் சரியாக நான்கு மாதத்தில் அந்த பயம் அவரை விட்டுச் சென்றிருந்தது.
பிரபாகரன் அவ்வளவு அழகாக நிர்வாகம் செய்தான். அதற்கு பின் அவனைப் பற்றிய எந்த கவலையும் அவருக்கு இல்லை. கடந்த பல வருடங்களில் அவன் திறமையைக் கண்டு அவரே பல முறை வியந்திருக்கிறார்.
ஆறடி உயரத்தில் இருக்கும் அவனின் அழகு பார்ப்பவரை நிச்சயம் வியந்து பார்க்க வைக்கும். அலையலையான கேசமும், பிடிவாதமான கண்களும், அழுத்தமான உதடுகளும், கூர்மையான நாசியும் அதற்கு மேல் அமைந்த அளவான மீசையும் அவனை ஆணழகனாக காட்டியது.
அளவான சாப்பாடும், அதற்கேற்ப உடற்பயிற்சியும் அவன் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருந்தது. பிஸ்னஸ் உலகில் இந்த சின்ன வயதில் தனித்து தெரிபவன்.
அவன் கலகலவென்று வாயடிக்கும் ரகம் இல்லை என்றாலும் ரொம்பவும் அமைதி என்று கிடையாது. வீட்டில் இருப்பவர்களிடம் சகஜமாக பேசுவான். அதே நேரம் கலகலவென்று இருக்க மாட்டான். வெளி ஆட்களிடம் அளந்து தான் பேசுவான். அவனுக்கு சிரிக்க தெரியும் என்று வெளி ஆட்கள் யாருக்குமே தெரியாது.
எப்போதும் அமைதியாக இருந்தாலும் அவன் முகத்தில் இருக்கும் அழுத்தமே அவனுக்கு சிறு கம்பீரத்தைக் கொடுக்கும். இவன் சிறிது பேசி விட மாட்டானா என்று பலர் ஏங்கத் தான் செய்வார்கள். வேலை வேலை என்று ஓடிக் கொண்டே இருப்பான். படிக்கும் போது நண்பர்கள் இருந்தாலும் இப்போது வேலையில் கவனம் வைத்தவுடன் யாருடனும் அதிகம் பேசுவதில்லை.
சிறு வயதில் இருந்தே அவனைக் கண்டால் அனைவருக்கும் பிரம்மிப்பு தான் வரும். பெரியவர்களை மதிக்க மாட்டான் என்று இல்லை. ஆனால் அவனுக்கு என்ன வேண்டுமோ அதை கேட்டு வாங்கிக் கொள்வான். பெரியவர்கள் மறுத்தாலும் எடுத்துச் சொன்னாலும் அவன் பிடிவாதமே கடைசியில் வெல்லும்.
அவன் வளர வளர அவன் திறமையும், சரியான முடிவுகளை எடுக்கும் திறனும், அவனது திறமையும் சேர்த்து தான் வளர்ந்தது. கல்லூரியில் படிக்கும் போது பெண்களை சைட் அடித்திருந்தாலும் இது வரை காதல் என்று எந்த பெண்ணும் அவன் மனதை கவர்ந்ததில்லை.