Advertisement

அவர்கள் வந்ததும் வீட்டில் இருந்த மற்றவர்கள் அனைவரும் வாசல் வந்து வரவேற்றார்கள். யசோதா பொதுவாக “வாங்க”, என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டாள். அவளால் இன்னும் அர்ச்சனாவை மருகமகளாக முழு மனதாக அங்கீகரிக்க முடிய வில்லை. ஆனால் மஞ்சுளா மற்றும் அஞ்சலியிடம் நன்றாக பேசினாள். அதை தான் மீனாட்சி மற்றும் அர்ச்சனாவால் தாங்க முடிய வில்லை.

சீதா தான் அர்ச்சனாவுக்கு அன்புடன் ஆரத்தி எடுத்து வரவேற்றாள். கூடவே வினோதினியை அருகில் அழைத்து “இவ தான் என் பொண்ணு”, என்று சொல்லி அறிமுகமும் செய்து வைத்தாள். கூடவே மகளிடம் “வினோ, அக்காவை உள்ள அழைச்சிட்டு போ”, என்று சொன்னாள்.

வினோதினியும் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மனதை மாற்றி இருந்ததால் “வாங்க அக்கா”, என்று சொல்லி வரவேற்றாள். பிரபாகரனின் மீது இருந்த காதல் நிஜம் என்றாலும் அதை மறைத்து வைப்பது தான் நல்லது என்று அவளுக்கு தோன்றியது.

இது வரை யாருக்கும் தெரியாமல் இருந்தது இனிமேலும் தெரியாமல் போகட்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

அவள் அன்பாக உரிமையாக அக்கா என்று சொல்லி அழைத்தது அர்ச்சனாவுக்கு பிடித்திருந்தது. “தேங்க்ஸ்”, என்ற படி அவளுடன் நடந்தாள்.

“எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க?”

“நீ அக்கான்னு கூப்பிட்டல்ல? அதான்”, என்று அர்ச்சனா சொல்ல அவளை வியப்பாக பார்த்தாள்.

“என்ன பாக்குற வினோ? உன்னைப் பத்தி பிரபா நிறைய சொல்லிருக்காங்க. என் கிட்ட முதல் தடவை உன்னைப் பத்தி பேசும் போதே எங்க வீட்ல உனக்கு ஒரு தங்கச்சி இருக்கான்னு சொல்லி தான் சொன்னாங்க. ஆனா நீ என் கிட்ட எப்படி பழகுவேன்னு பயந்துருக்கேன். ஆனா நீ அக்கான்னு சொன்னதும் சந்தோஷமாகிருச்சு”, என்று சொல்ல அவள் அன்பில் வினோதினியும் உருகிப் போனாள்.

“எப்பவும் நீங்க எனக்கு அக்கா தான்”, என்று சொன்ன வினோதினி அவளைக் கட்டிக் கொள்ள அப்போது அங்கே வந்த வேணுகோபால் பார்த்து விட்டான். இருவரும் சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு “என் கூட பிறந்தவ என்ன அதுக்குள்ள இவ கூட இந்த ஒட்டு ஒட்டுறா?”, என்று எரிச்சலுடன் பார்த்தான்.

அவனைக் கண்ட வினோதினி “அண்ணா இங்க வா வா”, என்று அழைத்தாள். வேண்டா வெறுப்பாக அவர்கள் அருகே சென்றான்.

“அக்கா இவன் தான் என்னோட அண்ணன். இனி உங்களுக்கும் அண்ணன்”, என்று அறிமுகப் படுத்தினாள்.

அர்ச்சனா அவனைக் கண்டு புன்னகைக்க பதிலுக்கு சிரித்த வேணு “வா மா, அன்னைக்கு பாத்தப்ப எதுவும் பேச முடியலை”, என்று சொன்னான்.

“எனக்கு புரியுது அண்ணா”, என்று சிரித்தாள் அர்ச்சனா.

“சரி நீங்க பேசிட்டு இருங்க. வினோ, தங்கச்சிக்கு ஏதாவது ஜூஸ் போட்டுக் கொடுக்கச் சொல்லு”, என்று வேறு சொல்லி விட்டுச் சென்றான். அவன் காரியவாதி. இப்போது அவன் நடித்தது கூட பின்னால் ஏதாவது ஆதாயம் வரலாம் என்ற நம்பிக்கையில் தான். ஆனால் அர்ச்சனா உண்மையிலே வினோதினி மற்றும் வேணுகோபாலை நம்பினாள்.

அதற்கு பின் அர்ச்சனாவின் நேரம் எல்லாம் வினோதினியுடனே சென்றது. வினோதினி அர்ச்சனாவை விட்டு அங்கே இங்கே நகரவே இல்லை. பிரபாகரன் திருமணம் செய்யப் போகும் பெண்ணின் மீது எழுந்த கோபமும் பொறாமையும் அர்ச்சனாவிடம் பேசிய பிறகு வினோதினிக்கு எழ வில்லை. அதனால் அர்ச்சனாவிடம் நல்ல விதமாகவே பேசி பழகினாள்.

சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த பிரபாகரன் உடனே அவளைத் தேடி தான் வந்தான். “ஹாய்?”, என்ற படி அவன் உள்ளே வர இரண்டு பெண்களும் எழுந்து கொண்டார்கள். அவனைக் கண்டதும் வினோதினி அமைதியாக “ஹாய் பிரபா”, என்றாள் அர்ச்சனா.

“அக்காவும் தங்கச்சியும் இண்ட்ரோடியுஸ் ஆகியாச்சா? எங்க வீட்டு வாலு என்ன சொல்றா?”, என்று கேட்ட படி அன்புடன் வினோதினியின் தலையை வருடி விட்டான். அந்த செய்கையில் வந்த கண்ணீரை அடக்கிக் கொண்ட வினோதினி “அத்தான் அக்கா சூப்பர் தெரியுமா? இவங்க தான் உங்களுக்கு பெஸ்ட் மேட்ச். இவங்க கூட பேசிட்டு இருந்தா நேரம் போறதே தெரியலை. அதை தான் சொல்லிட்டு இருந்தேன்”, என்றாள்.

“நீ மட்டும் என்னவாம்? எனக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு புது ஆள் கிட்ட பேசுறோம் அப்படின்னு எல்லாம் தோணவே இல்லை”, என்று சொன்னாள் அர்ச்சனா.

“சரி சரி நீங்க மாத்தி மாத்தி நீங்களே கொஞ்சிக்கோங்க. நான் அத்தை மாமாவை பாத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

மாலை நிச்சயதார்த்தத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். பிரபாகரனின் உறவினர்கள் அனைவரும் வந்திருந்ததால் அந்த மாளிகையே கோலாகலமாக இருந்தது. அவளது நண்பர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.

அர்ச்சனாவுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. அவளுக்கான நிச்சயதார்த்த சேலையை யசோதா தான் எடுத்தாள். வேண்டா வெறுப்பாக எடுத்தாலும் அந்த கலர் அர்ச்சனாவுக்கு நன்றாக பொருந்தி இருந்தது.

அலங்காரம் முடிந்ததும் மணமக்கள் இருவரையும் மனையில் அமர வைத்தார்கள். யாருக்கும் தெரியாமல் அவள் அவனை ஓரப் பார்வையால் கண்ட போது அவனோ கிறக்கத்துடன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் தன்னுடைய பார்வையை அவளை விட்டுத் திருப்ப முடிய வில்லை.

ஏற்கனவே அவள் அழகில் அவனுக்கு மயக்கம் உண்டு தான். ஆனால் இன்று அலங்காரத்தில் அவள் அழகு பன்மடங்கு பெருகியது போல இருந்தது.

தனக்கு ஏற்ற இணை தான் என்று அவன் மனம் சந்தோசத்தில் விம்மியது. அவள் கூந்தலில் சூடி இருந்த மல்லிகையின் மணம் அவன் நாசியை நிரப்ப மாலையை சரி செய்வது போல சற்று தள்ளி அவளை நெருங்கி அமர்ந்தான்.

அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க அவனது உரிமையான பார்வையில் அவளுக்கு மூச்சடைத்தது. அவன் பார்வையின் வேகம் தாங்க முடியாமல் அவள் பார்வை தாழ்ந்தது. அவளது வெட்கமும், முகச் சிவப்பும் கண்டு தான் ஒரு ஆண்மகனாக இருப்பதில் கர்வம் கொண்டான். இந்த உணர்வுகள் எல்லாம் அவளால் அவனுக்கு உண்டானவை அல்லவா?

அவன் கையில் மாலையைக் கொடுத்து அவளுக்கு அணிவிக்கச் சொல்ல மாலையை போட அவளை இன்னும் நெருங்கினான். அவளோ தலை நிமிரவே இல்லை.

அவளை நெருங்கி மாலையை போட்டவன் “கொல்ற டி… சத்தியமா நான் நானா இல்லை. தனியா சிக்கிறாத”, என்றான். அவன் பேச்சின் வீரியம் தங்க முடியாமல் உதட்டைக் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டாள்.

அவள் கரத்தில் மாலையைக் கொடுத்து அவனுக்கு போடச் சொல்ல அவள் போடும் போது “மாலைக்கு பதிலா ஒரு முத்தம் கொடுக்கலாம்ல?”, என்று ஏக்கமாக கேட்டான்.

“கடவுளே, சுத்தி இத்தனை பேரை வச்சிக்கிட்டு படுத்துறானே?”,. என்று எண்ணி பழைய படி அமர்ந்து கொண்டாள். இருவர் கையிலும் நிச்சாதார்த்த மோதிரத்தைக் கொடுத்து மாற்றி மாற்றி போடச் சொன்னார்கள். அதற்கு பின் பெரியவர்கள் அனைவரும் மணமக்களை ஆசீர்வதித்தார்கள்.

எல்லாம் முடிந்து அனைவரும் சாப்பிடச் சென்றார்கள். தோட்டதில் உணவு உண்ண ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பிரபாகரன் அவனுடைய நண்பர்களைப் பார்க்க வினோதினி தான் அர்ச்சனாவுடன் இருந்தாள். அது போல மீனாட்சி அருகிலே சீதா இருந்தாள். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போனது.

ஆனால் அஞ்சலியும் மஞ்சுளாவும் எப்போதும் யசோதாவுடனே இருந்தார்கள். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அகிலனின் பார்வை அஞ்சலியை வட்டம் இட்டது தான். ஏனோ அவனுக்கு அவளைப் பார்த்ததுமே பிடித்து விட்டது. அவள் இருக்கும் இடத்திலே சுற்றிக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடிந்ததும் சொந்தங்கள் அனைவரும் விடை பெற்றனர். நெருங்கிய சொந்தம் மட்டும் இருந்தார்கள். இரவு வந்ததும் அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றனர்.

தன்னுடைய மேக்கப்பைக் கலைத்து விட்டு முகம் கழுவி அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. அப்போது அவளது போன் ஒளிர்ந்தது. எடுத்துப் பார்த்தாள். “பொண்டாட்டி, என்ன டி பண்ணுற?”, என்ற குறுஞ்செய்தியில் அவள் முகம் மலர்ந்தது.

“சும்மா தான் இருக்கேன்”, என்று பதில் அனுப்பினாள். உடனே அவளை அழைத்தவன் “அத்தை எங்க?”, என்று கேட்டான்.

“சீதா அம்மா கூட பேசிட்டு இருக்காங்க”

“அப்ப நீ மட்டும் ஏன் தனியா இருக்க? வினோ உன் கூட இல்லையா?”

“இவ்வளவு நேரம் இருந்தா. இப்ப தான் தூங்கப் போறேன்னு சொல்லிப் போனா”

“உனக்கு போர் அடிக்கா?”

“ஆமா”

“அப்படின்னா என் கூட வந்து பேசிட்டு இருக்கலாம்ல?”

“என்ன விளையாடுறீங்களா? நாம எப்படி இப்ப பேச முடியும்? வீடு முழுக்க ஆட்கள் இருக்காங்க”

“அதனால என்ன? நமக்கு தான் நிச்சயம் ஆகிருச்சே? பேசினா என்னவாம்?”

“இப்ப பேசிட்டு தானே இருக்கோம்?”

“அது உனக்கு புரியாது. நேர்ல பேசுறது வேற? போன்ல பேசுறது வேற. சரி டிரஸ் மாத்திட்டியா?”

“ஆமா”

“சரி வை கூப்பிடுறேன்“, என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

“அதுக்குள்ள எதுக்கு வைக்கணுமாம்? கொஞ்ச நேரம் பேசலாம்ல?”, என்று அவள் மனது சிணுங்கியது. அவனுடனான தனிமைக்காக அவள் மணம் ஏங்கியது.

அப்போது உள்ளே வந்த மீனாட்சி “பாப்பா”, என்று அழைத்தாள்.

“என்ன மா?”

“மாப்பிள்ளை உன் கிட்ட ஏதோ பேசணுமாம்? மொட்டை மாடில நிக்குறார். என்னன்னு கேட்டுட்டு வா”, என்று சொல்ல திகைத்துப் போனாள்.

“அம்மா நான்…. இந்நேரம்”, என்று தயங்கினாள்.

“போயிட்டு வா டா”

“இப்ப போனா எல்லாரும் என்ன நினைப்பாங்க?”

“யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க. அவங்க சொந்தக்காரங்க எல்லாம் கீழ இருக்காங்க. உன் அப்பா கூட தூங்க போய்ட்டார். மாப்பிள்ளை தானே கூப்பிட்டார்? என்னன்னு கேட்டுட்டு தூக்கம் வரலைன்னா கொஞ்சம் நேரம் பேசிட்டு வா”

“சரி மா”, என்று சொல்லி விட்டு சந்தோசத்துடன் சென்றாள். அவள் மொட்டை மாடிக்கு சென்ற போது அவன் கைப் பிடிச் சுவரில் சாய்ந்து நின்றிருந்தான். அவனைக் கண்டு புன்னகைத்தவள் அடுத்த நொடி ஓடி வந்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

அவள் வருவாள் என்று அவனுக்கு தெரியும். வந்து எதற்காக அம்மாவிடம் அனுமதி கேட்டீர்கள், எல்லாரும் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க என்று சண்டை போடுவாள் என்று தான் நினைத்திருந்தான். ஆனால் இப்படி ஒரு அதிரடியான செய்கையை அவன் எதிர் பார்க்க வில்லை. அவளிடம் பேச வந்த வார்த்தைகள் அனைத்தும் அவள் செய்கையில் அவனுக்கு மறந்தே போனது.

Advertisement